Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
விளையாட்டென்றால் விளையாட்டா?

கெட்டிக்காரர்களும்... கோட்டிக்காரர்களும்...!?!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

“அதிர்ஷ்டம் ஆட்டம் போடும்போது, கோட்டிக்காரப் பயலுவளும், கோட்டை கட்டுவாம்லே!” என்பார் என் பாட்டனார். கிரிக்கெட்டில் இந்தியா வாங்காத அடிகள் இல்லை. படாத அவமானங்கள் இல்லை என்கிற நிலைமாறி, இன்று இந்திய அணி தொட்டதெல்லாம், துலங்குவதைப் பார்க்கும் போது எனக்கு இந்த வரிகள் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. என்றாலும், ஒரு மாற்றம் செய்யலாம். கோட்டிக்காரர்கள் என்பதை கெட்டிக்காரர்கள் என்று மாற்றிக்கொள்ளலாம்.

Dravid and Sachin இலங்கையை ‘பூ’என்று ஊதினார்கள் “இலங்கைதானே, வருது பார் தென்னாப்பிரிக்கா, அப்போ பார்க்கலாம்” என்றார்கள். பார்த்தார்கள், பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால் ஒருநாள் போட்டி ஆட்டத்தில் நாம் விட்டதை பிடித்தோம்.

இதற்கிடையில் ஓசைப்படாமல் இரண்டு காரியங்கள் நடந்தன. கொழும்பில் நடந்த 19 வயதுக்குட்பட்டோரின் உலகக் கோப்பை கிரிக்கெட்டின், இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்து, விருதை தட்டிச் சென்றது. இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய, பியூஸ் சாவ்லாவுக்கும், ஆர்.வி.சிங்குக்கும் உடனே அங்கீகாரம். பிரதான இந்திய அணியில் ஆடும் சந்தர்ப்பம் அவர்களைத் தேடி வந்தது. உயர்மட்டத்தில் அவர்கள் எப்படி விளையாடுவார்கள்? தேர்வாளர்கள் அவசரப்பட்டு விட்டார்களா என்கிற கேள்விகளுக்கு, காலம் பதில் சொல்லும்.

அது எப்படியோ புரியாத காரணங்களுக்காக, இந்திய அணியில் தேவையில்லாமல் தொடர்ந்த, அகர்கர் போன்ற ‘அதிகப் பற்றுகள்’ தூக்கி எறியப்பட, காரணமாக இருந்த இவர்களை வாழ்த்தி வரவேற்கலாம்.

இங்கிலாந்தின் வரவே சரியாக அமையவில்லை. அணித்தலைவர் வோணும், அவருக்கு பதில் அணித் தலைவராக வேண்டிய திரிஸ்கோத்திக்கும் நாடு திரும்ப, மனைவியின் மகப்பேற்றின் போது உடனிருக்க நினைத்து, நாடு திரும்ப எண்ணிய ஃபிளின்டோப் மீது, அணியை வழி நடத்தும் பொறுப்பு வந்து விழுந்தது. எடுத்த எடுப்பிலேயே வாரியத்தலைவர் அணியிடம் எட்டு விக்கெட் தோல்வி.

முதுகெலும்பை முறித்தவர் முனாஃப் பட்டேல். ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, ‘நான் ஒருத்தன் இருக்கிறேன்’என்றார். தேர்வாளர்களும் புரிந்து கொண்டார்கள். முதல் டெஸ்டிலேயே ஏழு விக்கெட்டுகள், அதிலும் சரியான நேரத்தில் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். அறுவடையை கும்ளே பார்த்துக் கொண்டார்.

பலகாலம் உதாசினப்படுத்தப் பட்டிருந்த, வசீம் ஜாஃபர் தன் வரவை ஒரு சதம் மூலம் அறிவித்தார். கைஃப் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது சரி என்று நிரூபித்தார். பொறுப்புடன் பெற்ற 90 ரன்களுடன். என்றாலும், தொடர்ந்து மோசமாக ஆடிவந்த சேவாக்கை, அணியில் வைத்திருப்பதற்காக இவரை தூக்கினார்கள். அதற்காக தேர்வாளர்களை வேண்டுமானால் ‘கோட்டிக்காரர்கள்’ என்று சொல்லலாம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்திய அணியில் வசீம் ஜாஃபர், இர்ஃபான் பத்தான், முனாஃப் பட்டேல், முகம்மது கைஃப், எப்படி இருந்திருக்கும்? இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை, இதைவிட வேறு எந்த செய்தியாவது அவ்வளவு உரத்துக் கூவி இருக்க முடியுமா? அதுமட்டுமல்ல, இரண்டு உத்திரப் பிரதேசக்காரர்கள், இந்தியாவுக்காக களமிறங்கும் சாதனையும் நிகழ்த்தப்பட்டிருக்கும். உத்திரப் பிரதேசம் ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியதில் கைஃப் போக, பியூஸ் சாவ்லாவின் பங்கும் கணிசமானது.

இந்த இடத்தில் இன்னொரு சுவையான செய்தி. காஷ்மீரை சேர்ந்த இளைஞன் ஆபித் நபி, தெருக்களில் ஆடிக்கொண்டிருந்த பையன். முதன் முதலில் காஷ்மீர் மாநில அணிக்கு ஆடத் தேர்வு செய்யப்பட்டான். பிறகு வடபுலத்துக்கு ஆடினான். இந்திய இளைஞர் அணியில் சிறப்பான இடம். பெங்களுர் கிரிக்கெட் அகாடமியிலும், சென்னை எம்.ஆர்.எஃப் அறக்கட்டளை பயிற்சி நிலையத்திலும், வேகப்பந்து வீச்சில் ஆஸ்த்ரேலிய பிதாமகன் டென்னிஸ் வில்லியிடம் பயிற்சி. ஆகவே விஷயம் நிச்சயம் இந்திய பயிற்சியாளர் கிரேக் சப்பலின் காதுகளுக்குப் போயிருக்கும். மொஹாலியில் நமது அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, டிராவிடமிருந்தும், சப்பலிடமிருந்தும் அழைப்பு வந்தது. ஆகவே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஜாஹிர் கான், இர்ஃபான் பத்தான், முனாஃப் பட்டேல், வரிசையில் இன்னொரு ஆபித நபி ரெடி. இத்தகைய திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு முன்னால், அகர்கர் போன்றவர்கள் தங்களை வேகப்பந்து வீச்சாளர் என்று சொல்லிக் கொள்வதே கேவலம். அப்படிப்பட்டவர்களை தேர்வு செய்வது அதைவிட கேவலம்.

சச்சின் டெண்டுல்கர், 131 டெஸ்டுகளில் ஆடிய கபில்தேவின் சாதனையை சமன் செய்தார். ராகுல் டிராவிட் ஒன்பது தடவைகள், 90களில் ஆட்டமிழந்து ஆஸ்த்ரேலியா ஸ்லேட்டரின் சாதனையினை சமன் செய்தார். நல்லவேளை இவர் கவாஸ்கர் இல்லை. சாதனைப் பிரியரான அந்தப் புண்ணியவான் இந்தச் சாதனையை முறியடிப்பதற்காக இன்னொரு முறை 90களில் ஆட்டமிழந்திருப்பார். சிகரம், அனில் கும்ளே 500 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தது. அந்த இலக்கை முதலில் தொட்டவர் மேற்கு இந்திய தீவுகளின் கோர்ட்னி வால்ஷ். பிறகு அவரை இலங்கையின் முத்தையா முரளிதரன் கடந்தார். ஆஸ்த்ரேலியா ஷேர்ன் வார்னே முரளியை முந்தினார். பிறகு ஆஸ்த்ரேலியாவின் கிளன் மெக்ராத் நான் ஒருவனும் இருக்கிறேன் என்றார். இவர்களோடு கும்ளேயும் சேர ‘ஐவராகி’ விட்டார்கள். முத்தையா முரளிதரனுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஷேர்ன் வார்னே 659 விக்கெட்டுகளை கைப்பற்றி உச்சாணிக் கொம்பில் ஏறி இருக்க, அவரை விரட்டிக் கொண்டு போகும் முரளி 600 என்கிற இலக்கை தொட்டுவிட்டார். அது மட்டுமல்ல, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி ஆட்டங்களையும் சேர்த்து, 1000 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்கிற பெருமை முரளிக்கு மட்டுமே உண்டு.

தாங்களும் மத-இன-நிற பேதங்களைக் கடந்தவர்கள் என்பதை, இங்கிலாந்து அணியும் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. இப்போதைய ஆட்டங்களை வர்ணிப்பவர்களில் ஒருவரான, நாஸிர் ஹுசைன் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கி இருக்கிறார். அவர் சென்னையில் பிறந்தவர். இப்போது ஒருநாள் போட்டி ஆட்டத்துக்காக, அறிவிக்கப்பட்ட அணியில், கபீர் அலி, உவைஸ்ஷா, மஹ்மூது, விக்ரம் சோலங்கி என்கிற நான்கு ஆசிய வம்சாவழியினர் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். இதில் மூவர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள். இப்போது டெஸ்ட் போட்டி ஆட்டங்களின் பங்கு பெறும் ருமான்டி பனேசர் இன்னொரு வம்சா வழியினர், அதுவும் சீக்கியர்.

தென் ஆப்ரிக்காவில் ஜோஹன்ஸ்பர்கில் நடந்த, ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய, அணித்தலைவர் பான்டிங்கின், சதத்துடன் 400 ஓட்டங்களைப் பெற்று, 400 என்கிற இலக்கை கடந்த முதல் அணி என்கிற பேற்றை ஆஸ்திரேலியா பெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா, ஹெர்சல் கிப்சின் சதத்தடன், வெற்றி இலக்கான 435 ரன்களை, ஒரு பந்து மீதமிருக்கும்போது கடந்து ஆட்டத்தை மட்டுமல்ல, தொடரையும் வென்று பெருமை ஈட்டியது. இந்த ஆட்டத்தில் இன்னொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டது. 29 சிக்சர்கள் மற்றும் 87 பவுண்டரிகள்.

1996ல் இலங்கை கண்டியில் வைத்து நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி ஆட்டத்தில், கென்யாவிற்கு எதிராக பெற்ற 398 தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இரண்டு விஷயங்கள் என்று நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதில். இரண்டாவது விஷயம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஹாக்கி டெஸ்ட் போட்டி, இந்தியாவில் நடந்த மூன்று போட்டிகளிலும், பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தானில் நடந்த மூன்றில் இரண்டு சமன், ஒன்றில் இந்தியா வெற்றி. ஆக இந்தியத் தொடரை பாகிஸ்தானும், பாகிஸ்தான் தொடரை இந்தியாவும் கைப்பற்றின என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஆறு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 3-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றதாகக் கணக்குச் சொல்லுகிறார்கள். இது பரவாயில்லை, போகட்டும்.

ஆனால் நம்மைவிட சிறிய நாடான அதிலும் மிகவும் ஏழை நாடான ஏமனிடம், நம்முடைய உதைப்பந்தாட்ட அணி பெற்ற மோசமான தோல்விதான் கேவலத்தின் உச்சம். நம் உதைப்பந்தாட்ட அணி என்றுதான் உருப்படுமோ? எல்லாவற்றுக்கும் திருஷ்டி பரிகாரம் வேண்டும் என்பார்கள். நம் விளையாட்டுத் துறைக்கு இந்திய உதை பந்தாட்ட அணி ஒரு திருஷ்டி பரிகாரமாக இருந்து விட்டுப் போகட்டும். அப்படி ஆறுதல் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com