Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
நூல் அறிமுகம்
நெருக்கடி பற்றிய அற்புதக் கையேடு
எஸ்.வி.வேணுகோபாலன்


உலகமயம் நெருக்கடி இந்தியா எதிர்காலம்?
பேரா. வெங்கடேஷ் பா. ஆத்ரேயா, தமிழில் : ஆர். ரகுநாதன்
பாரதி புத்தகாலயம், பக்.32 ரூ. 10

டிமெட்ரி உல்ப்_மாரீஸ் என்ற அந்தச் சிறுவனுக்கு பத்து வயது. வாஷிங்டன் நகரின் வடமேற்குப் பகுதியிலுள்ள துவக்கப் பள்ளி மாணவனான அவன், ‘எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுங்க’ என்று பள்ளியில் இருக்கும் ஆலோசகரிடம் (கவுன்சிலிங் செய்பவர்) கேட்டிருக்கிறான். இப்போது அண்டை வீட்டில் நாணயங்களை எண்ணிக் கொடுக்கும் வேலையை ஒரு மணி நேரத்திற்கு 5 டாலர் என்ற கூலிக்குச் செய்து வருகிறான் என்று அவனது அம்மா அபேபி உல்ப் தெரிவித்திருக்கிறார்.

34 வயதாகும் தாய் அபேபிக்கு வேலை போய் ஓராண்டு ஆகிறது. அவரிகளிடமிருந்து தனித்து வாழும் தனது தந்தைக்கும் வேலை போய்விட்டதை அறிந்ததும், நிலைமையின் அதிர்ச்சியில் தான் டிமெட்ரி கவுன்சிலரிடம் போய் வேலை பற்றிக் கேட்டிருக்கிறான். அந்த வயதுப் பையனுக்கு வேலை-யளிக்க அமெரிக்கச் சட்டத்தில் இடமில்லையென்று அந்த ஆலோசகர் விளக்கியிருக்கிறார். நெருக்கடி பற்றியெல்லாம் அவனுக்கு அதிகம் புரிந்திருக்க-வில்லை என்று சொல்லும் அவனது தாய், டிமெட்ரி தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்ததில் வேலை இழந்து வருவோர் குறித்த புள்ளி விவரங்களை கவனித்ததையும், தனக்கு நெருக்கமான இரண்டு பேர் அதில் சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டதையும் சொல்கிற விஷயம் உண்மையில் சோகமானது.

டிமெட்ரி மட்டுமல்ல, அந்த வயதுக் குழந்தைகள் பலரும் தத்தமது குடும்பச் சூழலை பாதிக்கும் நெருக்கடி பற்றி பதட்டமடைந்து வருகின்றனர் என்கிறார் கத்தோலிக்கப் பல்கலைக்கழக சமூக சேவைப் பள்ளியின் பேராசிரியர் வென்டி ப்ளோம். வீழ்ச்சியடையும் பொருளாதாரம் குழந்தைகளது வாழ்வுத்தரத்தையும், அவர்கள் நடத்தப்படும் விதத்தையும் படுமோசமாக மாற்றும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த ஏகாதிபத்திய உலகமய பொருளாதாரச் சனியனைத்தான் நம்மூர் அறிவுஜீவிகள் சிலர் மனித முகத்தோடு அமல்படுத்துவதாகச் சொல்லித் திரிந்தார்கள். நிதி மூலதனச் சூறாவளி எல்லாவித உறவுகளையும் ஈவிரக்கமின்றி பிய்த்துப் போட்டு விடுகிறது. மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட கற்பிதங்களின் மடியில் ஊறுகிற நச்சுப் பொய்கைதான் சுதந்திர சந்தைப் பொருளாதாரம். அதன் பலிபீடத்தில் அடுக்கப்படுகின்றன சமூக நலன்களும், தேசங்களின் இறையாண்மையும்.

ஓராண்டுக் காலத்தில் அமெரிக்காவில் மட்டும் இருபத்தி சொச்சம் வங்கிகள் வீழ்ச்சி அடைந்தது, உலகின் தலைமை இன்சூரன்ஸ் நிறுவனம் இன்று சூடம் கொளுத்தி தேங்காய் உடைக்-கப்பட்டு [அமெரிக்க இன்சூரன்ஸ் குரூப் (ஏ.ஐ.ஜி)] தலைக்குப்புற விழுந்தது. ஏதோ தற்காலிகத் தடுமாற்றம் அடிப்படை முதலா-ளித்துவக் கோட்பாடுகளுக்குக் குந்தக-மில்லை என்று வியாக்கியா-னங்கள் தரப்படும் நேரம் இது. இந்தியாவுக்கு யாதொரு ஆபத்துமில்லை. அன்னை சோனியா காந்தியின் அருள், மன்மோகன் சிங்கின் திறம், ப. சிதம்பரனாரின் சூட்சுமம் எல்லாம் சேர்ந்து காப்பாற்றி விட்டது என்று தேர்தல் மேடையில் கதா காலட்சேபம் நடக்கிறது.

உண்மை நிலை என்ன? இந்தப் பொருளாதார நிலைகுலைவின் வரலாறு என்ன? முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் இன்றைய நிலை எந்தப் புள்ளியில் நிற்கிறது? எதிர்காலம் என்ன என்ற கேள்விகளுக்கு பொருளாதாரப் பேராசிரியரும், சிறந்த சொற்பொழிவாளருமான வெங்கடேஷ் ஆத்ரேயா ஒரு சிறிய விளக்க நூலை தமிழ் வாசக உலகிற்கு வழங்கி-யுள்ளது. மிகுந்த உற்சாகம் அளிக்கிறது.

‘உலகமய நெருக்கடி இந்தியாவின் எதிர்காலம்’ என்ற இந்தச் சிறு நூல் நுட்பமான தத்துவார்த்த ஆய்வினைச் செறிவாகப் படைக்கிறது.

பின்னோக்கி இருபதாம் நூற்றாண்டின் துவக்க கால உலகு பற்றிய ஒரு சின்னநடை பயிலும் ஆசிரியர், 1929 ‘மகா நெருக்கடி’ பற்றிய பின்புலத்-தோடு எழிலுறப் பேசுகிறார் புத்தகத்தில். பொருளா-தாரத்தில் அரசின் தலையீடு இருக்க வேண்டுமா-? வேண்டாமா? என்பது குறித்த பழைய விவாதங்களை ஆத்ரேயா அபாரமாக நினைவூட்டுகிறார்.

முதலாளித்துவத்திற்கு அளவான வேலையின்மை அவசியம் என்பதை கவித்துவமாக நிறுவும் நூலாசிரியர், மேலை நாடுகளில் காருண்யமான சமூக நல திட்டங்களுக்கு அவர்களது சோசலிசம் மீதான அச்சமே காரணம் என்பதை அருமையாக எடுத்துரைக்கிறார்.

நிதி மூலதனம் உலக நாடுகளுக்கிடையேயான எல்லைகளை உடைப்பது பற்றி அடையாளப்படுத்-தும் ஆத்ரேயா, வர்த்தக முறைகள், பங்குச் சந்தை முத-லீடு, வரி வசூல் ஏற்பாடு என பல்வேறு அம்சங்-களை எளிதாக விளக்குகிறார்.

அதுமட்டுமல்ல. அறிவியல் வளர்ச்சி, இயந்திரங்-களைப் பெருக்குதலை அடுத்து திறன் சாரா தொழிலாளிகள் பட்டாளம் உருவாக்கப்பட்டிருக்-கிறது. இப்போதைய நெருக்கடி அத்தனை சீக்கிரம் தீராது என்கிற போது, மக்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்பதில் முதலாளித்துவ அரசுகளுக்கு ஒரு கூறு கிடையாது. அதைவிட மூலதனக்காரர்களின் துணியை இஸ்திரி போட்டு சேவை செய்து அவர்களது உடை கசங்காமல் பார்த்துக் கொள்வதில்தான் அவற்றுக்கு கரிசனம் பொங்கி வழிகிறது.

இந்த அராஜக, வேலைகளை, மூலதனத்தின் வெறியாட்டங்களை நூலாசிரியர் துல்லியமான புள்ளி விவரங்களுடன் எளிமையாக விளக்குகிறார்.

பணப்புழக்கம், மக்களின் வாங்கும் சக்தி இவற்றில் ஏற்பட்டுள்ள சரிமானம், விவசாயத்தின் வேர்கள் அழிக்கப்பட்டிருப்பது, பொது விநியோக சீர்குலைவு என எல்லாப் பகுதி மக்களும் பாதிப்புற்றிருப்பதை ஆத்ரேயா பிசிறின்றிப் பட்டியலிடுகிறார். நெருக்கடி தீர்வுக்கு சீனஅரசின் மாற்றுப் பார்வையையும் தொட்டுக் காட்டியுள்ளார்.

இன்றைய சூழல் குறித்த விஷயஞானம் தேடுவோருக்கு உரியச் செய்திகளை உள்ளடக்கிய இந்த நூல் மேற்கொண்டு ஆழமான தத்துவ தரிசனம் நோக்கிய வேட்கையையும் ஊட்டுகிறது.

ஒரே மூச்சில் பேசிச் செல்லும் நூலை அத்தியாயங்-களாக விவாதப் பொருள்களின் அடிப்படையில் பகுத்திருந்தால் வாசிப்புக்கு இன்னும் ஊக்கம் பிறக்கும். மக்கள் சீனம் நெருக்கடியைச் சந்திப்பது குறித்த கூடுதல் விவரங்கள் தந்திருக்கலாம். மிக மிகச் சில இடங்களில் நெருடுவதைத் தவிர ரகுநாதனின் மொழிபெயர்ப்பு தெளிவாக அமைந்துள்ளது. பரவலாக சமூகத் தொண்டர்கள் கையேடாக ஏந்திக் செல்லத்தக்க நூல் இது.

‘மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிப்பவர்கள்’ என்று இடதுசாரிகள் விமர்சிக்கப்-பட்ட காலம் ஒன்று இருந்தது. வால் ஸ்ட்ரீட் சரிவு, தூரத்து ஜப்பானிய மக்களை சாலைவாசிகளாக மாற்றியுள்ள நெருக்கடியை இடதுசாரி சிந்தனை-யாளர்களே இன்று விளக்க முடிகிறது. வீட்டின் மீது கடன் வாங்கி, வீட்டையே இழந்து காருக்குள் குடியிருக்கும் அமெரிக்கக் குடிமகன்கள் மூன்றாவது உலக நாட்டு மக்களுக்கு எத்தனையோ செய்தி சொல்கின்றனர். ஓட்டல்களின் சுடுநீரால் தண்டிக்-கப்படும் நம்மூர் குழந்தைத் தொழிலாளிகளின் விடுதலைப் பற்றிச் சிந்திப்போருக்கு வடமேற்கு வாஷிங்டன் சிறுவன் டிமெட்ரி உல்ப் விடுக்கிற செய்தியைப் போல!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com