Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
நூல் அறிமுகம்
‘அடையாள’மாகும் நூலகம்
பேரா. வீ. அரசு


சென்னை நூலகங்கள், தொகுப்பு : சிவகுமார், சிவகணேஷ்,
பாரதி புத்தகாலயம், ரூ.60 பக். 144

1981இல் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்-பட்டது. இரு தேசிய இனங்களிடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், ஒரு தேசிய இனத்துக்குரிய நூலகம் ஏன் எரிக்கப்படவேண்டும்? இந்த நிகழ்வு, தேசிய இன அடையாளம் என்பதில் நூலகம் பெறும் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நூலகம் என்ன செய்துவிடப்-போகிறது? அதன்மேல் ஏன் கோபம்? ஆகிய வினாக்களை நாம் எழுப்பும்-போது, மனித சமூகம் உருவாக்கியுள்ள அறிவார்ந்த செயல்பாடுகள் குறித்தப் புரிதல் மற்றும் அதன் அரசியல் முக்கியத்துவம் ஆகியவை தொடர்பான புரிதலைப் பெறமுடியும்.

வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்தின் பெருநகரங்களிலும் மிகப் பிரம்மாண்டமான நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (எ.டு. பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகம்,- லண்டன்) அந்நாடுகளின் பண்பாட்டு அடையாளச் சின்னமாக அவை கருதப்-படுகின்றன. அதற்கான பிரம்மாண்டமான கட்டடங்கள், சிறந்த நிர்வாக முறை ஆகியவற்றை நாம் காணமுடிகிறது.

மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம், பல மாடிக் கட்டடங்-களோடு மிகப் பிரம்மாண்டமாக இருப்பதைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. பிரிட்டீஷ் அருங்காட்சியக நூலகத்தின் தரையடிக் கீழ் நூலகம் மிகப்பெரிய ஒன்றாக, ஒரு தொன்மமாகக் கூறப்படுகிறது.

மேற்குறித்த செய்திகளோடு தமிழ்ச் சூழலில் நூலகங்கள் எவ்வகையில் செயல்படுகின்றன? என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இதன் முதல் முயற்சியாகத் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நகரில் செயல்படும் நூலகங்கள் குறித்த அறிமுகத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர். சென்னையில் உள்ள நூலகங்களின் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இத்தொகுப்பு உதவக்கூடும்.

1920களில் சென்னை நகரத்தில் நூலக அமைப்பு-முறை சார்ந்து நூலகங்கள் உருவாக்கப்பட்டன. இதில் பேரா. எஸ். ஆர். ரங்கநாதன் (1892_1972) அவர்களின் பங்களிப்பு முதன்மையானது. இவரே யாழ்ப்பாண நூலக உருவாக்கத்திலும் பங்கு வகித்துள்ளார். இவரே, தமிழ்ச்சூழலில் நூலகச் செயல்பாடுகள் நவீன அறிவியல் வளர்ச்சியை உள்வாங்கிச் செயல்படுவதற்கான அடிப்படைகளை உருவாக்கியவர். இவரைத் ‘தமிழ் நூலகப் பண்பாட்-டின் தந்தை’ என்று அழைப்பது மிகையன்று. இவரது முறையியல் சார்ந்து பல்கலைக்கழகம் சார்ந்த நூலகங்கள் மற்றும் அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் செயல்படும் நூலகங்கள் உருவாயின. அவை தனக்கென தனித்த அடையாளங்-களுடன் செயல்படு-கின்றனவா? என்பது கேள்விக்குறி. அரசு சார்ந்து செயல்-படும் நிறுவனங்களில் உருப்-பெறும் மெத்தனம் சார்ந்த தற்பிடிப்பற்ற மனநிலைச் சிக்கல்களால், இந்நிறுவனங்கள் சிரத்தை-யான செயல்பாடுகள் இன்றி இருப்பது மூன்றாம் உலகநாடுகளின் பொதுவிதி. இப்பின்புலத்தில் அரசு சார்ந்த நூலகங்கள், அரிய தரவுகளின் களஞ்சியங்-களாகச் செயல்படுவதில்லை. ஆனால் தனிமனிதர்கள் அல்லது தனிப்பட்ட நிறுவனங்கள் நடத்தும் நூலகங்கள் மேற்குறித்த அரசு சார்ந்த நூலகங்களிலிருந்து வேறுபட்டுச் செயல்படுகின்றன. சென்னை நகர நூலகங்களை இக்-கண்ணோட்டத்தில் அணுக முடியும். சென்னை நகரத்தில் செயல்படும் அரசு சாரா நூலகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் அடையாள-மிருப்பதை நாம் உணர முடியும்.

இத்தொகுப்பில் முதல்நிலையில் கூறப்பட்டுள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மிக அதிகமான சமசுகிருதச் சுவடிகளைக் கொண்டது. பன்மொழிச் சுவடிகள் மிகுதியாக இடம் பெற்றிருக்கும் நூலகம் இது. மெக்கென்சி என்ற பிரித்தானிய அலுவலரின் ஆர்வம் சார்ந்து உருவானது இந்நூலகம். அவர் சேர்த்தவையும் பின்னர் வந்த பிரித்தானிய அலுவலர்கள் சிலர் சேகரித்தவையும் இடம்-பெற்றுள்ள இந்நூலகம், சமசுகிருதம், தமிழ் ஆகிய மொழிகளின் மூலத் தரவுகளின் கொள்கலமாக இருக்கிறது. இந்நூலகத்தின் மூலம் 17ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தமிழ் நூல் மற்றும் சமசுகிருத நூல் உருவாக்கப் பின்புலத்தை அறிய-முடிகிறது. இக்காலங்களில் செயல்பட்ட எழுத்தறிவு பெற்றவர்களின் செயல்பாடுகள் எவை-யெவை? என்பதை அறியமுடிகிறது. இச்சேகரிப்பு இல்லா-விடில் தமிழ்ச்சூழலில் உருவான கணிதமுறை, கப்பல் கட்டுதல் போன்ற தொழில் நுட்பம், சித்தவைத்திய முறைகள், ஆயுர்வேத மருத்துவ-முறைகள் ஆகியவை தொடர்பான விவரங்களை நாம் அறிய இயலாத சூழல் உருவாகியிருக்கும். இந்நூலகம் நமது பாரம்பரிய அறிவின் முதுசமாக இருக்கிறது. அதுவே அந்நூல-கத்தின் அடையாளமாகவும் உருப்பெற்றுள்ளது.

இந்தியாவில் உருவான ‘தியாசபி’ என்ற கோட்பாட்டின் அடையாளமே அடையாறு நூலகம் என்று அறியப்படும் ‘தியாசபிகல் சொஸைட்டி நூலகம்’ ஆகும். கீழ்த்திசைச் சுவடி நூலகத்தைப் போலவே, அரிய மூலத் தரவுகளின் சேகரிப்புத் தளமாக இந்நூலகம் அமைந்துள்ளது. பல்மத இணைப்பு சார்ந்த கோட்பாடு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ‘சமரச சன்மார்க்கம்’ என்று உருப்பெற்றது. இதன் ஒரு வடிவமே தியாசபிகல் சொசைட்டி. தனித்தனி சமய உரையாடல்களின் இணைப்பாக அமைந்த ‘பல்சமய உரையாடல்’ எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவீன தன்மையை உணர விரும்பும் வரலாற்று மாணவனின் தரவுக்-களமாக, அடையாறு நூலகம் அமைந்திருக்கிறது. இந்நூலக அடையாளத்தை இவ்விதம் நாம் கண்டெடுக்க முடிகிறது. இவ்வகையான சமய உரையாடல்களின் இன்னொரு தளமாக மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தின் நூலகம் அமைகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி தமிழ்ச்சூழலில் செயல்பட்ட அறிஞர்கள் பலர் சுவடிகள் மற்றும் அச்சு நூல்களை சேகரித்தனர்; இவற்றைத் தங்களது ஆய்வுகளுக்காக பயன்படுத்திக்-கொண்டனர். இவர்களது மறைவுக்குப் பின் அவற்றை அடிப்படை-யாகக் கொண்ட நூலகங்களை உருவாக்-குவது என்பது தமிழ்ச் சூழலில் நிகழ்ந்திருக்கிறது. இவ்வகையில் அமைந்த நூலகங்கள் உ.வே.சா. நூலகமும் மறைமலையடிகள் நூலகமும் ஆகும்.

மறைமலையடிகள் நூலக உருவாக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை உருவாக்கிய திரு. சுப்பையா பிள்ளை ஆவார். அவரைத் தொடர்ந்து அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசாமி அவர்களும் மறைமலையடிகள் நூலகத்திற்-கான நூல் சேகரிப்பில் முதன்மையாக செயல்பட்டவராவார். சைவ மறுமலர்ச்சி, தனித்தமிழ் இயக்கம், பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆகிய கருத்துநிலைகளில் செயல்பட்-டோரின் அடையாளமாக மறைமலையடிகள் நூலகத்தைக் காணமுடியும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி தமிழ்ச்சூழலில் உருவான சைவ மரபு சார்ந்த புலமைப் பாரம்பரியம் பல புலமையாளர்களை உருவாக்கியது. ஆறுமுகநாவலர் தொடக்கம் திரு.வி.க. வரை உருவான சைவப் புலமைசார் அறிவாளிகளின் ஆக்கங்களை முதன்மையாகக் கொண்ட மூலமாக மறைமலையடிகள் நூலகம் உருப்பெற்றது.

தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட சைவப் பாரம்பரியத்தின் தரவுக் களமாக மறைமலையடிகள் நூலகத்தை நாம் காணமுடியும். பிற்காலங்களில் பல்கலைக்கழக ஆய்வுகள் தொடர்பான நூல்களும் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன. மறைமலையடிகள் நூலகத்திற்கு உள்ள அடையாளத்தின் இன்னொரு வடிவமாகத் தமிழ்ப் பதிப்பு முன்னோடிகளில் மிக முக்கியப் பங்காற்றிய உ.வே.சா. பெயரில் அமைந்த நூலகம் செயல்படுகிறது. உ.வே.சா. தம் காலத்தில் சேகரித்த சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்நூலகம் உருவாக்கப்-பட்டுள்ளது. இந்நூலகம் உ.வே.சா. என்ற மனிதர் செயல்பட்ட முறைமைகளைப் புரிந்து கொள்ளும் அருங்காட்சியக-மாகவும் செயல்படுகிறது. உ.வே.சா. என்ற மனிதரின் நினைவைப் போற்றும் இந்நூலகம் தமிழ்ப் பதிப்பு மரபின் அடையாளமாக இருக்கிறது.

தமிழ்ச்சூழலில் உருவான பல்வேறு சமூக இயக்கங்களின் கருத்து-நிலைகளை அடிப்படையாகக் கொண்டு உருப்பெற்ற நூலகங்களாக சிங்காரவேலர் நினைவு நூலகம், பெரியார் பகுத்தறிவு நூலகம், பேராசிரியர் ஆய்வக நூல் நிலையம், காரல் மார்க்ஸ் நூலகம், க. திருநாவுக்கரசு நூலகம் ஆகியவற்றை அடையாளப்படுத்தலாம். திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகியவை தமிழ்ச் சூழலில் உருவாகி வளர்ந்த வரலாற்றின் அடையாளங்க-ளாகவே இந்-நூலகங்கள் உள்ளன. குறிப்பிட்ட அரசியல், பொருளாதார கருத்து-நிலைகளின் உருவாக்கம், வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றை அறிய விரும்பும் மாணவனுக்கு இந்நூலகங்கள் அரிய தரவுக் களங்களாக உள்ளன. தமிழ்ச் சூழலின் புலமைப் பாரம்பரியத்தில் உருவான கருத்துநிலை சார்ந்த இயக்கங்களும் அவை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களும் விரிவான ஆய்வுப் பரப்பிற்கு உரியதாகும். இவ்வாய்வை மேற்கொள்வதற்கு மேற்குறித்த நூலகங்களே நமக்குத் துணையாக இருக்கின்றன. கருத்துநிலை சார்ந்த இயக்கங்களின் மூலங்கள் அடங்கிய இந்நூலகங்கள் தமிழகத்தின் அடையாளத்தை அறிய உதவும் களங்களாகும்.

தமிழகத்தில் உருவான தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் தமிழியல் ஆய்வு ஆகியவை சார்ந்த நூலகங்களே தொல்பொருள் ஆய்வுத்துறை நூலகமும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகமும் ஆகும். இந்நூலகங்கள் குறிப்பிட்ட ஆய்வு நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் குறிப்பிட்ட துறை தொடர்பான நூல் சேகரிப்பில் இவை சிறப்பாக அமைந்துள்ளன. இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு இந்நூலகங்கள் பெரிதும் உதவுகின்றன.

பல்வேறு அடையாளங்களைக் கொண்ட சென்னை நகர நூலகங்கள் குறித்த நம் உரையாட-லுக்குள் தனித்த இடத்தைப் பெறுவதாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைக் கருதமுடியும். அந்நூலகத்தினர் பயன்படுத்தும் சொற்றொடர் இந்நூலகம் ‘தமிழ்க் கலாசாரத்தின் அடையாளம்’ என்பதாகும். பெரியவர் ரோஜாமுத்தையா அவர்கள் 1950கள் தொடங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் மிகக் கடுமையான உழைப்பில் உருவாக்கியது இந்நூலகமாகும். ரோஜா முத்தையா அவர்களுக்குத் தான் சேகரிக்கும் நூல்களைப் பற்றிய தெளிவான கண்ணோட்டம் இருந்தது. இதனை அவர் உருவாக்கி வைத்துள்ள நூற்பட்டியல் மூலம் அறிந்து கொள்ள-முடியும். நூலகங்கள் வெகுசனப் பண்பாடு சார்ந்த அச்சுப் பதிவுகளைப் பெரிதும் சேகரிப்பதில்லை. சிறு நூல்கள், அறிக்கைகள் முதலான ஆவணங்களை நூலகத்தில் பாதுகாப்பது என்பது எதார்த்தத்தில் மிகவும் சிக்கலானது. ஆனால், இவ்வகையான பிரதிகளைச் சேகரித்துப் பாதுகாத்துள்ள ஒரே நூலகம் ரோஜா முத்தையா நூலகமாகும். ஆய்வாளர்-களுக்கு எவையெல்லாம் கிடைக்க இயலாதவை என்று கருதுகிறோமோ அவையெல்லாம் கிடைக்கக்-கூடிய நூலகமாக இதனைக் கருதலாம். வெகுசனப் பண்பாடு குறித்த ஆய்வு என்பது அண்மைக்காலமாக மிகுந்த கவனத்திற்குரியதாக உருப்பெற்று வருகிறது. மானுடவியல் போன்ற துறைகளில் செயல்படுவோ-ருக்-கான ஆய்வுப் பிரதி-களாக சிறு அறிக்கைகள், சிறுவெளியீடுகள், அழைப்-பிதழ்கள் ஆகிய பிற அமை-கின்றன. தமிழ்ச் சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி செயல்பட்ட வெகுசனப் பண்பாட்டின் பல்வேறு பதிவுகளை உள்ளடக்கி-யதாக ரோஜாமுத்தையா நூலகம் செயல்படுவதால் இந்நூலகத்தைத் தமிழ் ‘வெகுசனப் பண்பாட்டின் அடையாளம்’ என்று கூறுவது பொருத்தமானது.

தமிழகத்தின் தலைநகர-மான சென்னையில் தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தின் அடையாளமாக அமைந்-துள்ள இந்நூலகங்கள் குறித்த அறிமுகக் குறிப்பு-களைத் திரட்டிய தமிழ் இலக்கியத்துறை ஆய்வாளர்-களைப் பெரிதும் பாராட்டு-கிறேன். வரும் காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்கள் தொடர்-பான விரிவான பதிவை செய்வதற்கு இத்-தொகுப்பு முதல் படியாக அமையும் என்று நம்பு-கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com