Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
ஒளி தரும் நிறங்கள்
மேலாண்மைபொன்னுச்சாமி


நிறங்களின் உலகம், தேனி சீருடையான்,
வெளியீடு : அகரம், தஞ்சாவூர், ரூ. 150 பக். 304

தமிழ் நாவலிலக்கியம் செழிக்கத் துவங்கி-யிருக்கிறது. முற்றிலும் எதிர்பார்த்திருக்கவே செய்யாத, சமூகத்தின் இண்டு இடுக்குகளின் இருட்டை-யெல்லாம் அள்ளிக் கொண்டு, இலக்கிய உலகம் பார்த்திருக்காத வாழ்வை கலாபூர்வமாகத் தரத்-துவங்கியிருக்கிறது, தமிழ் நாவலிலக்கியம்.

குறவர்குடிகளாகவும், துப்புரவுத் தொழிலாளர்க-ளாகவும் மலத்தையள்ளி, மலத்தில் புதைந்து சாதிய அடுக்குகளின் அடியில் கிடக்கிற மக்களின் துயர வாழ்க்கையையும், பண்பாட்டுக் கூறுகளையும் அந்தக் குடியிலேயே பறந்து வளர்ந்த பாண்டிக் கண்ணன் ‘சலவான்’ என்ற நாவலாக வழங்கியிருந்தார். விருதுநகர், திருமங்கலம் என்று இரண்டே களத்தில் செயல்பட்டாலும் அடித்தட்டு மக்களின் கல்யாணம், இழவு, வாழ்வியல் பண்பாட்டு நுட்பங்களையெல்லாம் அள்ளி வழங்கியிருந்த அந்த நாவல், அரசியல் ஒடுக்குமுறையையும், ஆதிக்க சக்திகளின் காமவெறிக் கூத்தாட்ட வெறித்தனத்தையும் உணர்த்தியிருந்தது.

வாசக நெஞ்சில் சப்பென்று அறைந்து அதிர்வை-யும் கலக்கத்தையும் ஏற்படுத்திய அந்த நாவல், மிகவும் முக்கியத்துவமிக்க இலக்கியப் பீறிடல். அதுபோல தேனி சீருடையான் எழுதிய ‘நிறங்களின் உலகம்’ என்ற புதிய நாவல்.

கடைபோன்ற நாவல் மூலமாக புகழ்பெற்ற படைப்பாளியான தேனிச்சீருடையான், “நிறங்களின் உலகம்’’ என்ற நாவலை வழங்கியதன் மூலம் மிகவும் கவனிப்புக்குரிய முக்கிய எழுத்தாளராகிறார். இந்த நாவலின் சமர்ப்பணத்தை முதலில் வாசித்தாக வேண்டும். நாவலின் குணத்தை உணர்த்தக் கூடியது, சமர்ப்பணவரிகள். ‘வறுமைக்கு எதிராகப் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துப் பார்வை இழந்த அப்பாவிகளுக்கும்’

பாண்டிக்கு பாதியில் கண்பார்வை மங்கி ஒரேயடியாக இருண்டு விடுகிறது. பார்வை பறிபோன பாண்டியனின் அனுபவ உலகமாக விரிவடைகிற நாவல், வாசகர்களை மிகுந்த அலைக்கழிப்புக்கு ஆளாக்குகிறது. கலங்க அடிக்கிறது. பாண்டியின் அம்மா படுகிறபாடுகள், அவர்களது வறுமை, அய்யா-வின் குடிப்பழக்கமும், சேர்மானமும் வேறு, பாண்டி-யின் பால்ய வயதின் வறுமை, மிகக்கொடியதாக இருக்கிறது. கற்றறிந்து எழுதுகிறதைவிட பட்டறிந்த-வனின் எழுத்து உயிர்ப்புமிக்க அழகியலாக சுடர்-விட்டு பிராகாசிக்கும் என்பதை அப்படியே உணர முடிகிறது.

வறுமையையே பார்த்திராதவர் இந்த நாவல் வாசிப்புக்காளானால்... வறுமைத்தீக்குள் நுழைந்து திரும்பிய உணர்-வுக்காளாவர். அந்த வறுமை-யின் அவலச்-சித்திரிப்பு, அத்தனை சத்தியவலி-மையாக இருக்கிறது.

வறுமைதான் மங்குகிற கண் பார்வையை ஒரேயடியாக பறிக்கிறது. மருத்துவம் பார்க்க விடாமல் தடுக்கிறது. உடுக்கை-யடித்து கோழிகளை உருட்டுகிற குறிகாரனிடம் அலைய வைக்கிறது. வறுமையாலும் அறியாமை-யாலும் கண்பார்வையிழந்த பாண்டிக்கு மாமா... ஒருவழி காட்டி. முழுப் பொறுப்பேற்று... பாண்டியை அழைத்துச் சென்று, சென்னை பூந்தமல்லியிலுள்ள கண்பார்வையற்றோருக்கான பள்ளியிலும் விடுதியிலும் சேர்க்கிறார்.

பார்வையற்ற பாண்டியின் பஸ்பயணத்துடன் கதை துவங்குகிறது. பாண்டியின் கண்ணில்லாத பிற நலன்களின் வழியாக உணரப்படுகிற அனுபவங்க-ளாக... சம்பவக் கோர்வைகளாக நாவல் பரந்து விரிந்து அகன்று படர்கிறது.

பார்வையற்றோர் பள்ளி _ விடுதி என்கிற முற்றிலும் புதிய இருண்ட உலகத்தை... நிறங்களாக உணர்வுகள் உள்ளுக்குள் கடக்கிற அனுபவத்தை இந்த நாவல் விவரிக்கிறது. விளாதிமீன் கெரலொன்கோ எழுதிய “கண் தெரியாத இசைஞன்’’ என்ற ருஷ்ய நாவலை வாசித்தறியாத அனைத்துத் தமிழ்வாசகர்-களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்துக்கும் இந்த நாவல், பார்த்தறியாத வினோதமான அவல உலகம். எத்தனை அதலபாதாளமான ஆழ்பள்ளங்களில் வீழ்ந்து கிடக்கிறவனும் கூட வாழ்வின் கரைதேடி புரண்டு உருண்டு சலனப்பட்டு பயணப்படுகிற உயிரின் நியதியை இந்நாவல் வாசக அனுபவமாக்குகிறது.

பார்வை இழந்தபின்னும் கூட ஒரு வாழ்வுக்கான தேடலுடன் கனவுடன் பகீரதயத்தனிப்பு செய்கிற இவர்களின் முயற்சிகளும், முனைப்புகளும், முட்டி-மோதுகிற அனுபவங்களும், உணர்வுத் தெளிவு-களுமாக... பயணப்படுகிற நாவல்.

பத்மநாதன், பாண்டுரங்கன் இருவரும் மறக்க முடியாத சோக அவலப் பின்புலங்களைக் கொண்ட-வர்கள். வெள்ளத்தால் கொண்டு செல்லப்பட்ட கன்னியம்மா இவருக்குள் திறந்து வைத்த இலக்கிய உலகம். தனுஷ்கோடியை கடல்விழுங்கிய அந்தக் காலம். இந்தி எதிர்ப்புப் போராட்டமாக எழுகிற எழுச்சி, ஆட்சி மாற்றத்துக்கும் ஆங்கில மோகத்-துக்கும் வழி திறக்கிறதே தவிர, தமிழ் வளர்ச்சிக்கான வழியாக இல்லை என்கிற தமிழக வரலாற்று நிகழ்வுகள், இந்நாவலில் ஓர் அரசியல்கல்வியாகவே ஒளிர்கிறது.

பார்வையற்றோர் பள்ளி _ விடுதியிலும்... இருண்ட உலகத்துக்குள்ளும் ஓர் இருட்டு மூலையைப்போல... ஒழுக்கப் பிறழ்வாகிறவர்கள். ஜக்குபாயிடம் போகிறவர்... சினிமா விடுதிக்குப் போகிறவர்... நாட்டுச் சாராயம் வகைவகையாக விரிகிற நாவல்பயணத்-துக்குள் தினுசு தினுசான சமூகப் பழக்கங்களும், குணசித்திரங்களும், வாழ்க்கையும், சமூகமும் எல்லா இடங்களிலும் தனக்கான குணங்களுடன் தான் இயங்குகின்றன என்பதை உணர்த்துகிறது. பாண்டு-ரங்கன் மூலமாக வெண்மணி நிகழ்வும், பிரின்ஸிபால் வழியாக தெலுங்கானா நிலப்போராட்டமும் போகிற போக்கில் தீக்கற்றைகளாக வந்து விழுகின்றன.

தேனி சீருடையான் பால்யகாலத்தில் பார்வையை பறிகொடுத்து, பார்வையற்றோர் பள்ளியில் பயின்று... வறுமையின் கொடுமையை அனுபவித்துக் கொண்டே கற்றவர். அவரது சுய அனுபவமே நாவலாக விரிவதால் எளிய மொழிநடையின் யதார்த்தமே மிக உயிர்ப்பான அழகியல் பெருஞ்சுடராக ஒளிர்கிறது.

பார்வையில்லாதவனின் மனஉலகமும், நிறங்களால் உள்ளுக்குள் ஊடுருகிற புறஉலகமும் என்கிற யதார்த்தமும், இவரது மொழிநடையில் பரிபூர்ணமாக பீறிடுகிறது. படைப்புணர்வு, வாசக உணர்வாக இடம் பெயர்வதில் மொழிநடையின் எளிமையும், நம்பகத்தன்மையும் பேருதவி செய்கின்றன.

வெற்றிகரமான மாணவனாக நிறைவு பெறுகிற கல்வியும், தோல்விகரமான எதிர்காலமுமாக நாவல் முடிகிறது. இது முடிகிற நாவலல்ல. இப்படியே முடிந்தால், நம்பிக்கையின் வேரறுக்கிற சோர்வும் விரக்தியும் வருகிறது. இந்த முடிவு, உண்மையுமல்ல.

ஏனெனில், பார்வை பெற்று, தொழிலிலும், வாழ்விலும், இலக்கியப் படைப்பிலும் வெற்றி பெற்றிருக்கிற தேனி சீருடையான், நம்பிக்கைத் தருகிற ஒளிச் சுடராக நம்முன் வாழ்ந்து கொண்டிருக்கிற போது அவரது நாவல் மட்டும் நம்பிக்கையின் வேரறுக்கிற விரக்தியில் முடிவது சரியாகாது.

இது நாவலின் முடிவல்ல. ஒரு பாகத்தின் முடிவாக மட்டுமே கருதவேண்டும். ‘நிறங்களின் உலகம்’ என்ற நாவலின் மறுபாகத்தில் தேனி சீருடையானின் சமகாலம் வரைக்கும் சித்திரிக்கப்பட வேண்டும். அந்த முழுமை, வாழ்வின் உண்மையையும், நம்பிக்கையும் தரும். இப்போது வந்திருக்கிற நாவல், தமிழுக்கு முன் எப்போதும் கண்டிருக்க முடியாத _ முற்றிலும் புதிய உலக இருட்டையும் ஒளியையும் உணர்த்துகிற மிகச்சிறந்த இலக்கியக் கொடையாகும்.

இந்த நாவலில் போற்றி புகழ்ந்து கொண்டாடத் தக்க பலப்பல சிறப்புகள் பரவலாக இருக்கின்றன. வாசிக்கிற எவருக்கும் முற்றிலும் புதிய அனுபவத்தை சொந்தமாக்குகிற வலிமைமிக்க படைப்பு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com