Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மே 2009
கட்டுரை
தஞ்சை வட்டார புனைகதை வாசிப்பு
சோலை சுந்தர பெருமாள்


சங்ககாலம் தொடங்கி இன்றைய நவீன இலக்கியக்கால நெடுகிலும் தமிழுக்கும் _ மொழிக்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை செய்துள்ள, செய்து வரும் இலக்கியவாதிகளைப் பெற்றுள்ளது தஞ்சை மண் என்று சொன்னால் மிகையில்லை. இப்படியான ஒரு முடிவுக்கு நாம் சட்டென்று வந்து விடக் கூடாது. தஞ்சை மண் என்று சொன்னால் அன்றைக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தது. இம்மண்ணைத் திணைப்பிரிவில் உள்ளடக்கினால் பெரும்பான்மையாக மருதநிலமும் சிறுபான்மை நெய்தலும் அடங்கும்.

நிலஉடைமை என்பது குறிப்பிட்ட சிலரின் கையில் மட்டுமே இருந்தது. இவர்கள் சமூகத்தில் உயர்சாதியினராக இருந்தனர். பெரும்பாலும் பிராமண நிலஉடைமையாகவே இருந்தது. ஓரிருவர் சூத்திரராக இருந்தாலும் அச்சாதி சமூகத்தில் தலைமையிடத்தில் மகாசனங்களாகத் தான் இருந்தார்கள். இப்படி இருந்தாலும் இவர்களது நிலஉடைமை அது சார்ந்த வேலைப்பிரிவினையிலும் பிராமண நிலஉடைமை கைகொண்டுள்ள வேலைப்பிரிவினைக்கு உட்பட்டே வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலஉடைமையாளர்கள் வர்ணகோட்பாட்டின் வழியே அதிகார மையங்களாக இருந்தார்கள். அவர்களை அண்டிப் பிழைக்கும் மற்ற-வர்கள் பண்ணை அடிமைகளாக இருந்தார்கள். இவர்களின் வழித் தோன்றல்களுக்கு கல்வி மறுக்கப்-பட்டு இருந்தது. இப்படி பொத்தாம் பொதுவான பண்ணை அடிமைகள், அவர்கள் ஆற்றும் வேளாண் பணிகளில் அடுக்குகளுக்கு ஏற்ப அடிமை சேவகம் செய்பவர்களாகவே இருந்தார்கள். அதன் புறத்-தோற்றம் சாதி அடுக்குகளாகத் தெரியும். இந்தப் பணிகளை நிறைவேற்ற மதங்களும் கோயில்களும் தலைமை ஏற்றன. அவை சாதி அடுக்குகளில் கலப்பு ஏற்பட்டு விடாமல் கவனமாக காத்துக் கொண்டு இருந்தன.

இதனால் நிலஉடைமைச் சமூகம், சிந்தாமல் சிதறாமல் பெரும் தொகையான உழைப்பாளி மக்களின் உழைப்பைச் சுரண்டி உண்டு களித்து, நிலஉடைமை சமூகத்தினர் மகிழ்ந்து கிளர்ச்சி அடையவே கலை இலக்கியங்களை அவர்களின் சார்பு நிலை இலக்கிய-வாதிகளால் படைக்கப்பட்டது. நிலஉடைமை சமூகத்தின் தேவையை நிறைவு செய்யச் செய்யும் ஒரு கலைவடிவமாக ‘கதை’ அமைந்து விட்டது. அதே நேரத்தில் பண்ணை அடிமைகளான உழைப்பாளி மக்களின் உள்ளுக்குள்ளேயே ஆதி பொதுஉடைமை சமூகத்தில் இருந்தே வாய்மொழி கதைச் சொல் மரபு இருந்தது. இந்தக் கதையாடல்களில் அவர்களின் மிதிபடும் வாழ்வும், கிளர்ச்சி அடையும் தருணங்களும் பண்பாட்டு தளத்தின் வழி, கதைகளில் ஊடாடின. நிலஉடைமைச் சமூகம் தங்களுக்கான வாழிடமாக அமைத்துக் கொண்ட ஐந்துகட்டு, ஆறுகட்டு வைத்துக் கட்டப்பட்ட வீடுகள் பிரமாண்டமானதாக இருந்தன. அவ்வீடுகளில் அமைக்கப்பட்டு இருக்கும் பெரும் முற்றங்களில் வேலைப்பாடுகளுடன் கூடிய குளிர்ச்சி தரும் மரங்களில் செய்யப்பட்ட ஊஞ்சல்-களில் வாழ்வின் சுகதருணங்களை கொண்டாடி-னார்கள். பண்ணை அடிமை உழைப்பாளிகளும் பண்ணை உழைப்பாளிகளும் ஊரில் தாழ்ந்த நிலங்களுள் கட்டப்பட்ட ஓலைக்குடிசைகளுக்குள் வாழ்ந்தார்கள். அக்குடிசைகளுக்கு இடையே உள்ள புளியமரங்களிலும் வேப்பமரங்களிலும் வைக்கோல் ஆக்கைகளினால் கட்டப்பட்ட உறிகளே ஊஞ்சல்க-ளாயின. இந்த ஊஞ்சல் விளையாட்டுக் கூட புளிச்ச ஏப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள அல்ல. பசியின் ஏப்பத்தை தனித்துக் கொள்ளவே வடிகாலாக அமைந்தன.

இப்படியானவர்களின் கதைச் சொல்லலின் தேவையை நாம் உற்று நோக்கினால் அவர்களின் வாழ்வின் மிதிபடல்கள் விளங்கும். நான் நாட்டுப்புற கதைகளை சேகரம் செய்ய சென்றபோது தொன்னூறு வயதைக் கடந்த மூதாட்டி, ‘நாங்க சந்தோசப்பட்டு வேலைவெட்டியில்லாமலா எங்க புள்ளைகளுக்கு கதைச் சொல்லிக்கிட்டு இருந்தோம்? இல்லய்யா. எங்க புள்ளைங்களுக்கு வயிறு நிறைய சோறு போட முடியாம அல்லாடும் போது அதுகளை ஆற்றிவிட்டு தூங்க வைக்கத் தாங்கய்யா கதை சொல்லிக்கிட்டு இருக்கோம்...’ என்று கண்ணீர் வழிய சொன்னார். நான் அதிர்ந்து போனேன். அந்தக்கதைத் தொகுப்பி-லேயே பதிவும் செய்திருக்கிறேன்.

கதைச்சொல்லல் என்பதே சொல்லப்படுகிற கதைச்சொல்லியின் சமூகம் பண்பாட்டுத் தளத்துக்குள் ஊடுருவி கலை வடிவம் கொள்கின்றது என்று கொண்டால் கதைச் சொல்லியின் மொழி ஆளுமையை வடிவக்காத்திரத்தையும் உள்ளடக்க நுட்பத்தையும் தீர்மானித்து விடுகிறது. படைப்பி-னுள்ளேயே சமூகம் அடித்தளமாகவும் அதன் மேல்கட்டுமானம் பண்பாட்டு விரிவுமாக அமைந்து விடும். அந்தப் படைப்பின் இருதளங்களிலும் மொழியானது ஒரு கருவி என்னும் அடிப்படையில் அடித்தளத்திலும் இலக்கியத்தில் மேல் கட்டுமான-மாகவும் வேலை செய்கிறது. அடித்தளமாக இருக்கும் சமூகம் தனக்கான பண்பாட்டை காலப்பண்புக்கும் இடப்பண்புக்கும் ஆன ஊடாடத்தின் வழியே வளர்த்துக் கொள்கிறது. மேல்கட்டுமானமான பண்பாடு _ அரசியல் நகர்விலும் வளர்ச்சியிலும் சமூ-கத்தின் ஆளும்வர்க்க அதிகாரத்தை வெளிப்படுத்து-கின்றது.

சங்ககாலத்து சமூக கலைவடிவமான கூத்து மொழியை முழுமையான நிலஉடைமை சமூகத்தின் அதிகாரமையமாக திகழ்ந்த அரண்மனைகளும் கோவில்களும் தனக்கானதாக வரித்துக் கொண்டு அந்தக் கூத்துக்களின் கூறுகளை வளர்த்து சதிராட்ட-மாக வெளிப்படுத்திக் கொண்டன. நிலஉடைமை சமூகம் வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவ சமூகமாக முகிழ்க்கும் போது அப்படி முழுமுதலாளித்-துவமாக ஆகா நேரத்தில் அதிகாரமையமாக இருந்த பிராமணம் தனக்கான கலைவடிவமாக சதிரை, பரதமாக படைத்துக் கொண்டு, சபாக்களையும் பொது மேடைகளையும் கைப்பற்றிக் கொண்டது. மேடையில் நிகழ்த்தப்படும் பரதத்தைக் கொண்டு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதன் பண்பாட்டுத் தளத்தை விரிவுப்படுத்தி அதிகார மையத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் வழியே கூத்துக்கும் சதிருக்கும் நீசமூலம் பூசி விட்டது. பரதம், ‘பிராமணியக் கொடை’ என்று வரலாற்றுப் பக்கங்-களில் திட்டமிட்டு ஏற்றப்பட்டது. அது போலவே 1990கள் வரையிலும் மௌனி, பிச்சமூர்த்தி, ஜானகிராமன் க.நா.சு வகையறாக்கள் பயன்படுத்திய படைப்பு மொழியே தஞ்சை மண்ணின் மக்கள் மொழியாக வரலாற்றுப் பக்கங்களில் ஏற்றி வைத்துக் கொண்டார்கள்.

1879இல் தமிழில் வெளிவந்த முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ முதலாக மாதவய்யாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ ஈறாக ஆறுநாவல்கள் வெளிவந்திருப்பது நன்கு தெரிந்தும் கும்பகோணம் இஞ்சிக்குடி நடேச சாஸ்திரியார் தனது நாவலான ‘தீனதயாளு(1900) தான் தமிழில் வெளிவந்துள்ள முதல் நாவல் என்று அவராலேயே கூறப்படுகிறது. இவர் நிலைப்பாட்டைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை தெரியவரும். அதாவது அவரே மேலைநாட்டினர் எழுதி வந்த துப்பறியும் தொனியில் 1894இல் ‘தன்வான்’ என்ற நாவலை வெளியிட்டுள்ளார். இவர் வழியிலேயே வந்த மாயூரம் எஸ்.ஏ. ராமசாமி ஐயர் மர்மங்கள், மார்வேடங்கள், எதிர்பாராத சந்திப்புகள் முதலிய அம்சங்களுடன் நடப்பியல் சூழ்நிலையோடு கிட்டத்தட்ட 12 நாவல்கள் எழுதியுள்ளார். இதே காலத்தில் சமகால சமுதாயத்தின் ஊழல்களையே முக்கியக் கருப்பொருளாக வைத்து எழுதியவர்களில் முதன்மையானவர் நாகை கோபாலகிருட்டிணப்-பிள்ளை ஆவார். இவர் எழுதிய ‘தனபாலன்’ குறிப்பிடத்தக்க நாவலாகும்.

இந்தச் சூழலில் தமிழ் நாவல்களில் கொச்சை மொழியும் சமஸ்கிருத சொற்களையும் பயன்படுத்து-வது முறையல்ல என்று குரல் கொடுத்த மறைமலை-யடிகள் ஓர் ஆங்கில நாவலைத் தழுவி ‘குமுதவல்லி’ யைச் செந்தமிழ் நடையிலேயே எழுதியுள்ளார். இந்த தழுவல் நாவல் தமிழுக்குப் பெரிதாக பங்களிப்புச் செய்யவில்லை என்று கூறுபவர்கள் கூட இவரின் ‘கோகிலாம்பால் கடிதம்’ நவீனத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். 1936லேயே மயிலாடுதுறை மூவலூர் ராமாமிர்தம்மாள் எழுதிய ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை வெளியிட்டுள்ளார். இந்நாவல் சமூகம் சார்ந்து பெண்குரலை வெளிப்படுத்த என்று எழுதப்-பட்ட அந்த நாவல் ஆணுக்கே உயர்ந்த இடத்தைக் கொடுக்கப்பட்டு எழுதப்பட்ட தொனி அதில் வெளிப்-பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி-யிருக்கிறது. மேலும் அந்நாவலிலேயே சதிராட்டத்-துக்கு எதிரான குரலும் பதிவாகியிருக்கிறது என்பதும் கவனத்துக்குரியது.

1920ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கில நாவல்-களைத் தழுவி எழுதி வந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஒரு புதிய முயற்சிக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். இவர் எழுதிய நாவல்கள் தழுவு-வதாக இருந்தாலும் தமிழ்நாட்டு இடப்பெயர் மக்கள் பெயர்களை வைத்து தமிழில் சுயப்படைப்புகள் போல எழுதப்பட்டுள்ளன. அதனால் பரந்துபட்ட வாசக உலகத்தை அவரால் கைப்பற்ற முடிந்தது. நாற்பத்து ஏழு தடிமம் ஆன நாவல்களை எழுதிக் குவித்திருக்-கிறார். இன்னும் சொல்லப்போனால் ‘கண்டமேனிக்கு கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்தது இந்த வடுவூரார் தான்’ என்று க.நா.சு குறிப்பிட்டு இருக்கிறார் என்று ‘தமிழ் நாவல்களில் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆய்வு நூலை எழுதிய சிட்டிசிவ-பாதசுந்தரம் கூற்றின்படியே இதுவரையிலும் சொல்லப்பட்ட எழுத்தாளர்களை வரிசைப்படுத்தப்-பட்டுள்ளது. இந்த மேற்கண்ட ஆசிரியர்களால் நாவல் போக்கில் திருப்புமுனையை ஏற்படுத்த முடியவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த கா.சி. வேங்கடரமணியின் ‘முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்’ ஆகிய நாவல்கள் இக்காலக்கட்டத்தில் வந்த மிக முக்கியமான படைப்புகளாகப் போற்றுகின்றனர். தஞ்சை மண்ணின் கிராம வாழ்க்கையையும் பண்பாட்டையும் எழுதியவர் இவரே என்ற குரல்கள் எழுந்துள்ளன. முருகன் ஓர் உழவன் நாவலை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதி பின்னர் தேவைகருதி அவரே தமிழில் எழுதியிருக்கிறார். இவர் காந்திய சிந்தனையில் ஈடுபாடு கொண்டவர். கூடவே அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சபை, ஆன்மிகம், ஆகியவற்றின் மீதும் தீவிர நம்பிக்கையும் பற்றும் கொண்டவர். இவரின் மற்றொரு நாவலாக ‘தேசபக்தன் கந்தன்’ என்ற நாவலில் விடுதலைப் போராட்டத்தில் உயர்வர்க்கத்தினர் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதை பிரமிப்போடு படைப்-பாக்கியிருக்கிறார். இவர் வாழ்ந்த ஊருக்கு பக்கத்தி-லேயே உப்பனாறு பாலம் உடைக்கப்பட்டதும் விவசாயப் பண்ணை அடிமைகளாக வாழ்ந்த உழைப்பாளிகள் ஆங்கில அரசின் அடக்கு முறையை எதிர்த்து காங்கிரஸ் இயக்கக் கொடியை புளிய-மரத்தின் உச்சியில் ஏற்றினார்கள், என்ற காரணத்-திற்காக கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டார்கள் என்பது வரலாறு. அது பற்றி இந்த நாவலில் பச்சாதாப வரிகள் கூட இடம் பெறவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘...அவருடைய இரு நாவல்களும் அழுத்தமான பிரசார நாவல்களாக உள்ளன. ஒரு கோட்பாட்டின் நடைமுறைச் சிக்கல்கள் பலவிருக்கும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அதன் வெற்றியைக் கனவு கண்டு மகிழ்வது கோட்பாட்டின் மேல் ஈடுபாடு கொண்ட-வர்களது இயல்பு. கனவு கண்டு மகிழும் கற்பனா-வாதத் தன்மை வேங்கடரமணியின் இருநாவல்களிலும் காணப்படுகிறது...’ (பெருமாள் முருகன், தமிழ் இனி 2000) இப்படியான வகைப்பாடுகளைத் தாண்டி இந்த இரண்டு நாவல்களும் கற்பனாவாதத்தன்மை கொண்-டதாக இருந்தாலும் நாவல் படைப்பிலக்கியத்திற்குள் அவர்கள் கோட்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளும் மேதமையை நுட்பமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்து திருப்புமுனையை தந்துள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. அதாவது சங்க இலக்கியங்-களில் தொடங்கிய கூத்து மரபானது நிலஉடைமை சமூகத்தில் சதிராட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது போல சங்கரரின் அத்வைத கோட்பாட்டை படைப்புக்குள் நேர்த்தியாக கொண்டு வந்து வெற்றிப் பெற அவருக்குக் கைக் கொடுத்தது அந்த இரண்டு அம்சங்கள். காந்தியக் கொள்கைகளை கட்டமைப்பது போல ஒரு போக்கு காட்டிவிட்டு பிரம்மஞானத்தை புனைவுக்குள் கொண்டு வந்த இவரின் படைப்புகளில் வேளாண்மக்களின் வாழ்க்கை பற்றி குறிப்பிடத்தக்க அளவுக்கு பதிவுகள் உள்ளன என்றாலும் அசலான கிராம வாழ்க்கை இல்லை.

வ.ரா. என்று அழைக்கப்பட்ட வ. ராமசாமி அய்யங்கார், வேங்கடரமணி நாவலில் வெற்றிப்பெற்ற அளவில் இவர் வெற்றிப் பெறவில்லை என்ற மதிப்பீட்டைச் சொல்லும்போது, ‘இவர் எழுத்தில் பிரச்சார நோக்கம் அதிகமாக இருந்தாலும் ஒரு கவர்ச்சியும் இருந்ததை யாரும் தவிர்க்க முடியாது...’ என்று க.நா.சு. சொல்லி இருக்கிறார். இதற்கு காரணம் வ.ரா. சமகாலத்துப் படைப்பாளிகளிடம் காணக்-கிடைக்காத சமூகத்தோடு இணக்கமாக வாழ்வது என்ற கொள்கையை இலக்கியப் பதிவுகளில் செய்தார். இவரிடம் மிகவும் நெருக்கமாவும் கொள்கையில் ஒன்றுபட்டு இருந்த தி.ஜா. ரங்கநாதன், ரசிகன் போன்றவர்களிடம் கிண்டல் தொனி மிகுந்திருந்தது.

ந. பிச்சமூர்த்தி, வேதாந்தத் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இத்தத்துவத்திற்குள் உள்ளடங்காத சிறுகதையை இவர் படைக்கவில்லை. கவித்துவம் மிக்க நடை கொண்ட இவரின் கதைகள், சிறுகதை இலக்கணத்தை பயில இலக்கியமாக இருக்கின்றன என்று சொல்ல முடியும்.

ஆதிசங்கரரின் தத்துவத்தில் மூழ்கிக்கிடந்த கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தியின் பக்கத்து வீட்டுக்காரர். இலக்கியத்தில் உணர்ச்சியின் விவரிப்பே முதன்மையானது என்பது அவர்களது முடிவு. ஆண் பெண் உறவு குறித்தான நுட்பமான வாழ்வை தனித்தன்மையோடு படைப்புகளாகச் செய்தார் கு.ப.ரா. ‘இவர்களை விட என்னால் நல்ல சிறுகதைகளை எழுத முடியும் என்று சொல்லிய செம்பங்குடியில் பிறந்த மௌனி படைப்புக்குள் இறங்கினார். வேதாந்தியான இவரின் படைப்புகள் பூடகமானவை. சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் என்ற பதிவுகளும் இருக்கின்றன.

க.நா.சு சுத்தமான தஞ்சாவூர்க்காரர் என்று குறிப்பிட்டுப் பேசுவதை கேட்டுயிருக்கிறேன். தமிழ் சூழலில் கலை கலைக்காகவே என்ற முழக்கத்தை முன் வைத்தவர் இவர். நாவல், சிறுகதை, மொழி-பெயர்ப்பு, விமர்சனம் என்கிற பன்முகத்தன்மை மிக்கவர். இவர் கேழ்வரகில் நெய்வடிகிறது என்று சொல்லுவார். ‘இருக்கும் இருக்கும்’ என்று தலையாட்டியவர்களும் தலையாட்டிக் கொண்டு இருப்பவர்களும் உண்டு. இவரின் தமிழ்நாவல்கள் பதினைந்து என்றாலும் ‘பொய்தேவு, அசுரகணம்’ இவ்விரண்டும் குறிப்பிடத்தக்கன. ‘பொய்தேவு ஒவ்வொரு கணமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக. கடவுளர்களாக ஆக்கி அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது...’ இப்படி பிரமிள் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் வாழ்க்கை பொய்யாய் பழங்கதையாய் போன கதை சோமு பண்டாரமான கதையாகிப்போகிறது.

வெகுசன எழுத்துக்கள் பொதுவாய் இயல் தன்மைக் கொண்டவை. இதழ் ஆசிரியராகவும் தொடர்கதை எழுத்தாளராகவும் பரிணாமம் பெற்றவர் கல்கி. இயல் தன்மையான எழுத்துக்கள் வாசகனை இறுக்கமாக கவ்விக் கொள்ளும், அப்படியான எழுத்து கல்கிக்கு வெகுவாய் வாய்க்கப்பட்டு இருந்தது. இது இவருக்கு இன்று வரை பெரும் புகழைத் தேடிக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றது. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், இவை இரண்டும் அவருக்கு அபரிமிதமான வெற்றியைக் குவித்திருக்கிறது. அவருடைய வாசகர்களிடம் தலைமுறை மாற்றம் நடந்த பின்னரும் பெருத்த ஆதரவைப் பார்க்கும் போது இன்றைய வரைக்கும் அவருக்கு இணையாக இயல் எழுத்தில் எழுதியவர்கள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இப்படி யாருக்கும் அமையாது போனதுதான் ஏன் என்று மட்டுப்படவில்லை. அவர் தொட்டு இருக்கும் வரலாற்று மனிதர்களையும் புவியியலையும் தீவிர வாசிப்புக்கு உரியப் படைப்பாக யாராவது செய்தால் கல்கி பெற்று இருக்கிற இடத்தின் எல்லை மாறுபடு-கிறதா என்று பார்க்கும்போது தான் நாம் முடிவுக்கு வரமுடியும்.

திருத்துறைப்பூண்டியில் பிறந்து விடுதலைப்-போரில் பங்கு கொண்ட கலைஞன் ஆர்.வெங்கட்ராமனை செல்லமாக ஆர்.வி. என்று அழைக்கப்படுவதுண்டு. இவரது படைப்புகளில் தான் முதல் முதலில் தஞ்சை மண்ணும் மக்களும் இடம் பெற்றார்கள் என்றே சொல்ல வேண்டும். இவர் கதைகள் நடப்பியல் நெறியோடு கிராமிய மணம் கமழும். ‘அணையா விளக்கு, திரைக்குப்பின்னால்’ இந்த இரு நாவல்களும் குறிப்பிடத்தக்கன. சமூக அக்கறையோடு குழந்தை-களுக்கான கதைகளை எழுதி அதில் அரிய சாதனை-களைப் படைத்திருக்கும் ஆர்.வி. ஆசிரியர் பொறுப்-பேற்று நடத்திய குழந்தைகளுக்கான ‘கண்ணன்’ இதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. ஆர்.வி.யின் தாக்கம் தி. ஜானகிராமனிடம் அதிகம் உண்டு’ என்பார் மது. ச. விமலாந்தன். ஆனால், இதை அப்படியே ஏற்காமல் எதிர்-நிலை நின்ற தாக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜானகிராமன் என்றாலே தஞ்சையின் முகம் என்ற போர்வையை அவர் மீது போர்த்தியது கொடுமை-யிலும் கொடுமை. ‘அவர் வரைந்து காட்டிய பெண்கள் மேல் மட்டுமே அவ்வளவு ருசி ஏறிக்கிடக்கும். ஏன் சார்/அப்படியானப் பெண்கள் தஞ்சாவூரில் இருக்காளா? அப்படிக்கூட இருப்பாளா என்ன?’ என்று தன்னை கேட்பவர்கள் ஏராளம் என்று தஞ்சை ப்ரகாஷ் குறிப்பிட்டு இருப்பதை நாம் ஓரம் கட்டிவிட முடியாது. அதற்கு சாட்சியாக நிற்கும் படைப்புகள், ‘அம்மா வந்தாள், மோகமுள்’ இன்னபிறவும் உண்டு. இவரது தமிழ் நடை ரசவாதம் மிக்கது என்பதை நேர்மையாக நாம் ஏற்க வேண்டும் தான். இதற்கும் காரணம் இருக்கிறது. சதிர் ஆட்டக் கலையை பரதமாக மாற்றி அமைத்து போல இது நாள் வரையிலும் அறியப்பட்ட சதிர் மொழியை பரதத்-தன்மைக்கு மாற்றிடும் ரசவாதம் அவரிடம் இருந்தது. இதுவே தஞ்சைத் தமிழ் என்று அரங்கேற்றம் செய்யப்பட்டது. காலத்திலும் ஏற்றம் பெற்றுவிட்டது. ‘...ஜானகிராமனின் சாதனை ஒண்ணு இருக்கு. ரொம்ப அடக்கமா வாசிச்சாலும் அவர் வாத்தியம் என்னமோ தனிதான். தமிழ் எழுத்துக்கு அது தனிச் சுகமான சாதனையைத் தந்திருக்கிறதை யாராலும் மறுக்க முடியாது...’ இப்படி பதிவு செய்திருப்பவர் வேறு யாருமல்ல. ஜானகிராமனின் மறுபிரதியாக அவரின் உள்ளும் புறமானதையும் கூடவே இருந்து அறிந்து சுகம் கண்ட தஞ்சை ப்ரகாஷ்தான்.

ஜானகிராமனின் பரம்பரை என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட எழுத்தாளர்கள் உண்டு தான். அதுபோல சொல்லிக் கொள்ளாதவர் கரிச்சான்குஞ்சு. அவரோ தன்னை கு.ப.ரா.வின் சீடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஜானகி-ராமனும் கு.ப.ராவின் சீடர் தான் என்பதை யாரும் மறுத்ததில்லை. மணிக்கொடியின் கடைசிக் கொழுந்து என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் எம்.வி. வெங்கட்ராம். கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி இவர்களின் ஊக்கத்தில் எழுதத் தொடங்கியவர் என்றாலும் இவரது ‘வேள்வித்தீ’ நாவல் முன் சொல்லப்பட்டவர்-களிடம் இருந்து வேறுபட்ட படைப்பா-கிறது. கும்பகோணம் சௌராஷ்டிர சமூகத்தின் சித்திரிப்பை அசலாகக் கொண்டது. இவரின் ‘காதுகள்’ நாவல் சிந்துபாத் கதை போன்றது என்பதும் உண்மை.

இலக்கியச் சங்கம் தோற்றுவித்த இளைஞர்கள் திட்டமிட்டு மௌனியின் உத்தியைப் பின்பற்ற முனைந்தார்கள். சா. கந்தசாமி, ந. முத்துச்சாமி இந்த இருவரும் அதன் வழியைப்பின் பற்றியவர்கள். ந. முத்துசாமி சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க சாதனை-களைச் செய்து கொண்டு இருக்கும் போது நவீன நாடகத்தின் பக்கம் திரும்பி விட்டார். சா. கந்த-சாமியோ சாயாவனம் நாவல் மூலம் இலக்கியப் பக்கங்களை தன் பக்கம் திருப்பிக் கொண்டு விட்டார்.

இம்மண்ணில் இவ்வளவு எழுத்தாளர்கள் சாதித்திருக்கிறார்கள் என்று வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் ரு.ப. சேது அம்மாளைத் தவிர வேறு யாரையும் அடையாப்படுத்த முடியவில்லை என்பதை பார்க்கும்போதே வைதீக ஆட்சியை நாம் கண்டு கொள்ள முடியும்.

இலக்கியக்காரராக மட்டுமல்லாமல் ‘தஞ்சை யுவர் மெஸ்’ என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி மேற்சொன்ன இலக்கியக்காரர்களுடன் நெருக்கமாக பழகிய ப்ரகாஷ் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவர் மேற்சொன்னப்படைப்பாளிகளின் படைப்புகளை சிலாகித்துக் கொண்டு இருந்தாலும் அப்படியான-வர்கள் வெங்கட்சாமிநாதனைத் தவிர மற்றவர்கள் யாரும் ப்ரகாஷ் படைப்புகள் குறித்து கிசுகிசுப்புக் கூட செய்ததாக பதிவுகள் கிடைக்கப் பெறவில்லை. ப்ரகாஷ் படைப்புகளில் மேற்படியானவர்களின் சாயல் அதிகம் வீசவில்லை. அதே சமயம் உள்ளடக்கம் அப்படியானதாக இருந்தாலும் ப்ரகாஷின் நடை கூத்து மொழியாகவும் இல்லாமல் சதிர் மொழியாக-வும் இல்லாமல் இடைப்பட்ட மொழியாக அமைந்து போனது. ‘கள்ளம், கரமுண்டார் வீடு, மீனின் சிறகுகள் போன்ற நாவல்கள் குறிப்பிடத்தக்க-தான படைப்புகள். ஜானகிராமன் வரைந்து காட்டியப் பெண்கள் போலவே ப்ரகாஷ் வரைந்து காட்டியப் பெண்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ‘ப்ரகாஷ் வரைந்து காட்டும் பெண்கள் தஞ்சாவூரில் இருக்கிறார்களா? என்று என்னிடம் கேட்டவர்கள் நிறைய உண்டு. எழுத்தாளர் கந்தர்வ-னும் இந்தக் கேள்வியை ‘இந்தியா டுடே’ இதழில் கேட்டிருந்தார்.

க.நா.சு. ஜானகிராமன், ப்ரகாஷ் வகையறாக்களோடு நெருக்கம் கொண்டு இருந்தவர் சி.எம். முத்து. இவர் இயல்பிலேயே பாமரமனிதர். இவருடைய படைப்பு-களில் தான் மேற்கு தஞ்சையின் மக்களையும் அதுவும் குறிப்பாகக் கள்ளர் சமூகமக்களையும் அவர்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியலையும் பார்க்க முடிந்தது. கூடவே அம்மக்களிடம் புழக்கத்தில் இருந்த கூத்து மொழி, படைப்புகளில் வெளிப்பட்டது. இவ்வ-ளவு இருந்தும் கலைகலைக்காகவே என்ற குரலை அவர் சொல்லாவிட்டாலும் அவர் படைப்பு-களில் தூக்கலாக இருந்தன. அதனால் வர்க்க சமூகத்தை அவரால் வெளிப்படுத்த முடியாமல் போனது. அவர் இறுதியாக எழுதி வெளிவந்த ‘வேரடி மண்’ நாவல் அவருடைய முந்தைய ஆளுமையை திசை திருப்பி விட்டது சோகமே என்று தான் சொல்ல வேண்டி-யிருக்கிறது. அத்தோடு மௌனம் காத்து வருகிறார்.

இடும்பாவனத்தில் பிறந்து வளர்ந்த சு. தமிழ்ச் செல்வியின் படைப்புகளில் நெய்தல் நில வாழ்க்கை அறியமுடியும். அவ்வகையில் குறிப்பிடத்தக்க அளம், மாணிக்கம், ஆறுகாட்டுத் துறை போன்ற நாவல்கள் உண்டு.

தஞ்சை மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்கள் சமூகம் நிலஉடைமையாளர்களையே அண்டிக்கிடக்க வேண்டி நிர்ப்பந்தம் இருந்தது. சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்ட-வர்கள் பண்ணை அடிமைகளாக மிருகங்களைப் போல நடத்தப்பட்டும் வந்திருக்கிறார்கள். அடக்கி ஆள்பவர்களுக்கு மதமும் கோவில்களும் பக்கத் துணையாக நின்றன. ஒடுக்கப்படுபவர்கள் ஆளும் வர்க்கத்தார்களால் மிதிபடும்போது முக்கி முணுகி எதிர் குரல்கள் எழுப்பாமல் இல்லை. அக்குரல்களிள் குரல்வளையை ஒடுக்கி நெறிக்க முடியாதபோது தந்திரமாக சமரசம் செய்து கொள்ளப்பட்டது. திரும்ப-வும் அந்தச் சமரச வலைக்குள்ளேயே சிக்க வைத்து விடும் தந்திரத்தை புரோகிதர்கள் வழியே நடத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. இதற்கு உதாரணம் வேதாகமம் செல்லமாக கிள்ளிவிடும் திருநாளைப்-போவர் என்று அழைக்கப்படும் நந்தன் தான்.

சமூகம் முன் நோக்கி வளர்ந்து எழும்போது அதன் தேவைக்கு ஏற்ப அச்சமூகமே திரட்சியை கூட்டிக் கொள்ளும். அப்படியான வகையில் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் இம்மண்ணில் வெடித்தெழுந்தன. அதன் தலைமை-களில் பெருவாரியான மக்கள் திரண்டு நின்றார்கள். நீண்ட தொடர் போராட்டங்கள் நடந்தன. சிறுசிறு சீர்திருத்தங்கள் நடந்தேறின. சவுக்கடியும் சாணிப்-பாலும் நிறுத்தப்பட்டன. சாதியடுக்குகளில் கீறல் விழத்தான் செய்தது. இதை ஆதிக்க வர்க்கம் விட்டு வைக்கவில்லை. அதை சிதைக்க வேண்டிய அத்தனை தந்திரங்களையும் மேற்கொண்டன. அதில் ஓரளவுக்கு அவர்களால் வெற்றியும் பெற முடிந்தது. நிலவுடை-மை-யும் முதலாளித்துவம் இம்மண்ணில் கைகோத்துக் கொண்டு நடத்திய கொடுமைகளையும் படுகொலை-களையும் சொல்லி மாளாது.

இப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்ற பண்பாட்டு அடுக்குகள், வாழிடங்கள், உறவுகள், அவர்களிடம் புழங்கிய மொழிகள் உண்டல்லவா? குறிப்பாக அம்மக்களிடம் கூத்து வழி மொழியே இருந்து வந்தது. அனைத்தையும் உயர்சமூகப் பண்பாட்டுத்தளம் தன் அதிகாரங்களைக் கொண்டு களைப்பித்தன. நவீன இலக்கியவாதிகள் இவற்றைக் காது கொடுத்துக் கேட்டார்களா? கண்கொண்டு பார்த்தார்களா? மானுடம் சிதைபடுதலுக்கு எதிர்குரல் தான் கொடுத்தார்களா? இதற்கு சாஸ்திரங்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டார்களே அந்த சாஸ்திரங்களை அறிவியல் கொண்டு விமர்சனம் செய்தார்களா? இருந்தால் அதற்கான இலக்கியப் பதிவுகள் எத்தனை? இப்படிக் கேள்வி எழுப்பிடும்-போது அது பிரசாரமாகிவிடும் என்ற போர்வையைப் போர்த்திவிட்டார்கள். அப்படியானால் வண்டி-வண்டியாக இம்மண்ணில் மலர்ந்த பக்திஇலக்கியங்கள் என்னவாம்? அபசாரம் என்றார்களே... அவை பிரசாரம் இல்லையா?

தஞ்சை மண் முழுவதும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் அரைப்படி கூடுதலாக கூலி உயர்வு கேட்டார்கள். மனிதனாக வாழும் உரிமைக்கு குரல் கொடுத்தார்கள். அதற்கு பொதுஉடைமை இயக்கம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. திராவிட இயக்கம் கேள்விகளை எழுப்பியது. போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை ஆளும் வர்க்க காவலர்களைக் கொண்டு அடித்து நொறுக்கிப் போட்டார்கள். சிறையில் அடைத்தார்கள். நூற்றுக்-கணக்கானவர்கள் சிறையில் மாண்டார்கள். பொது வுடைமை இயக்கத்தோடு ஒன்றிப்போன-வர்களை சிதைத்தார்கள். கீழவெண்மணியில் தீயிட்டு பொசுக்-கினார்கள். 44 மனித உயிர்கள் குஞ்சும் குளுவுமாய் எரிக்கப்பட்டனர்.

தில்லியில் இருந்து வந்த பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி படைப்பாக்க ஆய்வுகள் நடத்தினார். ஆய்வுகள் என்றால் ஒட்டு மொத்த சமூகத்திடம் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். செய்தாரா? என்ற கேள்வி எழுப்பிடும் போது இல்லை என்ற விடையே கிடைத்தது. ஆதிக்கச் சாதிக்காரர்-களிடமும் பெரும் நிலஉடைமையாளர்களிடம் வெளிப்பட்ட வாய் மொழியே அவருக்கு ஆவண-மாகியது. ‘குருதிப்புனல்’ நாவல் வெளிவந்தது. அந்தப் படைப்பாளியின் மனச்சரடு ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று நியாயம் பேச மறுத்தது. கீழவெண்-மணியில் நடந்த கொடிய செயல் தனித்த ஒரு நில உடைமையாளனின் ஆவேசம் என்பதாகவும் அந்த மனிதனின் நம்பகத் தன்மை மிருகத்தன செயல்பாட்-டிற்கு காரணம் என்று அறுதியிட்டு படைத்திருந்தார். அவரது மனச்சாய்வு அப்படியாக இருக்கும் போது அசலான வதைப்பட்ட வாழ்வை அவரிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்று என் மனக்கொதிப்பை ஆற்றிக் கொண்டேன். முன்னர் சொல்லப்பட்ட பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புகளில் அசலான தஞ்சை மண்ணையும் மக்களையும் தரிசிக்க முடியாது என்று மொட்டையடியாக சொல்ல என்னால் முடிந்தது. காரணம் அந்தப் படைப்பு-களுக்குள் என்னை ரசவாதப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனக்கும் அந்தப் படைப்புகளுக்கும் இடைவெளி அகண்டு கொண்டே போனது. இப்படியான படைப்புகள் தஞ்சை மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று என் மனம் கொத்தி எடுத்தது.

அப்படியாய் குற்றம் சுமத்துவதால் பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். 1995 வாக்கில் அதற்கான படைப்பு முயற்சியில் இறங்கினேன். தஞ்சை மண்ணையும் அதன் மக்கள் வதைபடும் வாழ்வையும் பண்பாட்டு அசைவுகளையும் படைப்புக்குள் இறக்க முடிந்தது. வாசகப்பரப்பிலும் வரவேற்பு இருந்தது. கூடவே இப்படி கூத்துமொழியை படைப்பு முச்சூடும் பயன்படுத்தினால் வாசிப்புத்தளம் குறுக்கப்பட்டு விடும் என்றும் அச்சப்படுத்தினார்கள் சிலர். தொடர்ந்தாற் போலவே கூத்து மொழியிலேயே ‘நஞ்சை மனிதர்கள்’ நாவலை எழுதினேன். அரிவாள் பிடிக்கு எடுத்தது கத்திப் பிடிக்குத் தேறியது.

குருதிப்புனல் நாவலுக்கு மாற்றாய் எழுத வேண்டும் என்ற உந்துதலுக்கு உள்ளானேன். நசுங்குதலுக்கு உள்ளாகிக்கிடக்கும் உழைப்பாளி மக்களோடு சிலகாலம் ஊடாடி வாழக் கற்றுக் கொண்டேன். அவர்களின் மிகவும் நுட்பமான கூத்துமொழி எனக்கு வசப்பட்டது. கீழவெண்மணி மக்களின் துயரப்படுகொலைக்குள் இருக்கும் நுண் அரசியலைப் புரிந்து கொண்டேன். அதன் களம் மிகவும் விரிவாக இருந்தது. புரிதல் என்னை வளைத்தது. ‘செந்நெல்’ நாவல் உயிர்சித்திரமாய் ஆனது-. எதிரும் புதிருமான கருத்துகள் கூத்து மொழிக்கு இருந்தாலும் அந்த மண்ணும் மக்களும் அவர்கள் வதைப்பட்ட வாழ்வும் சிதைப்பட்ட வரலாறும் சாட்சி பூர்வமாக உள்ளன என்றும் சமூக உணர்வும் பொறுப்பும் கொண்ட ஒரு ஜீவனாக செந்நெல் எழுதிய சோலை தோன்றுகிறார் என்ற அங்கீகரிப்பை தந்தார்கள். தொடர்ந்து எழுதும் போது தஞ்சை வண்டல் மண்ணில் முகிழ்த்த சுயப்படைப் புகள் என்று பேசப்பட்டன. இது வரையிலும் தஞ்சைமொழி என்பது பரதமொழியே என்ற அடை யாளங்கள் நொறுங்கி உதிர்ந்தன. கூத்துமொழியே வண்டல் மொழி என்ற அடையாளத்துடன் தனித்துவம் பெற்றது.

எந்த ஒரு மண்ணிலும் ஒரு படைப்பு பொங்கி பிரவாகிக்கும் போது அம்மண்ணின் மக்களின் வாழ்வு இலக்கியமாகி விடுகிறது. கூத்துமொழி, படைப்பின் வாசிப்பு, அனுபவத்தை உச்சப்படுத்தி தன்வசப்படுத்திக் கொண்டு விடுகிறது. இதில் இரண்டாம் கருத்துக்கு இடம் தருவது அம்மனையும் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்து விடும் என்று நான் நம்புகிறேன். சகல தரப்பினரும் அப்படியான படைப்புகளை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அவர்கள் மன நெகிழ்ச்கிக்கு சட்டென்று வந்தடைய முடியும் என்றும் உரக்கப் பதிவு செய்கிறேன்.

(24.02.2009 அன்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை ‘கல்கி’ அறக்கட்டளைச் சொற்பொழிவு கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்டது.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com