நேர்கானல்
புனைவின்வழி வரலாற்றைச் சொல்லும் போதே எழுத்தாளன் வெற்றி பெறுகிறான் சு.வெங்கடேசன்
கவிஞர். எழுத்தாளர். இயக்கவாதி, அரசியல்வாதி, களப்பணியாளர். ஆய்வாளர், பேச்சாளர்
இத்தனை முகங்களையும் உள்ளடக்கிய பன்முக ஆற்றல் பொருந்தியவர்
எழுத்தாளர் சு. வெங்கடேசன். அரசியலுக்கு வரவிரும்பாத எழுத்தாளர்கள் மத்தியில்
அரசியலில் இருந்து சிறந்த எழுத்தாளராகப் பரிணமித்திருப்பவர்.
பத்தாண்டு கால தீவிர உழைப்பின் பலனாக அவருடைய “காவல் கோட்டம்” நாவல்
சமீபத்தில் வெளியாகியுள்ளது. மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைப் பேசும்
இந்நாவலை மையப்படுத்தியும், அவருடைய சாதீய, மதவெறி, எதிர்ப்புணர்வை தாங்கிய
அரசியல் நடவடிக்கைகளை தொட்டுக் காட்டியும் இந் நேர்காணல் அமைந்துள்ளது.
இருபதாண்டு கால அரசியல்வாதியாக, எழுத்தாளராக சு. வெங்கடேசன் அறியப்பட்டிருந்தாலும்
இதுதான் அவரின் முதல் நேர்காணல் என்பது தமிழ்ச் சூழலில் அபூர்வமே.
ஒலிவாங்கிக் கிடைக்கும் போதெல்லாம் தங்களைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும்
எழுத்தாளர்களுக்கு மத்தியில் பேசாத அரசியல்வாதி அபூர்வமே.
முற்றிலும் கூச்சம் விலகாத மெல்லிய குரலில், சு.வெங்கடேசனுடன்
அவரது இல்லத்தில் நடந்த பகிர்வுகளின் தொகுப்பே இந்நேர்காணல்.
சந்திப்பு : அ. வெண்ணிலா
முதல் கேள்வி வழக்கமான கேள்வியே; ஆனால் படைப்பாளியின் வேரை அறிந்து கொள்வதற்கான அடிப்படைக் கேள்வி; படைப்பாளியாய் மாறுவதற்கான வாழ்க்கைப் பின்னணி என்ன?
எனக்கமைந்த பள்ளி வாழ்க்கை தான். ஏராளமான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் நான் பங்கேற்று என் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ளும் களமாக பள்ளி வாழ்க்கை அமைந்தது. என்னுடைய தமிழாசிரியர் மொழி அறிஞர். புலவர் இளங்குமரணர் என்னுடைய முதல் ஆதர்ச மனிதர். எட்டாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை அவரின் மாணவன் நான். பேச்சுப் போட்டிகளில் எல்லாம் அவர் எழுதிக் கொடுத்த உரையைப் பேசித்தான் பரிசு வாங்கி வருவேன். அவருடனேயே என்னுடைய பெரும்பான்மையான பொழுதுகள் கழியும்; மொழி - அவரின் உயிரோடு இரண்டற கலந்த உணர்வு. அந் நெருப்பை அவரிடமிருந்து நானும் கொஞ்சம் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டேன்.
அச்சிறு பொறியை ஊதி ஊதி பெரு நெருப்பாக வளர்த்ததும் அவர் உருவாக்கிய பாவாணர் ஆராய்ச்சி நிலையம் தான். பணி ஓய்விற்குப் பிறகு, திருநகரில், 40,000 நூல்களுடன் அவர் உருவாக்கிய நூலகம் எனக்குள் ஒரு பெருங் கனவை வித்திட்டது.
என்னை மட்டுமல்ல; அவரிடம் படித்த அப்பகுதி மாணவர்கள் ஏராளமானோரிடம் அவரின் தாக்கம் இருக்கும். தன்னுடைய மாணவர்களுக்கு அவரே முன்னின்று தமிழ் வழித் திருமணங்கள் நடத்தி வைப்பார். ஒர சீரிய தமிழ் உரைக்குப் பின் நடை-பெறும் எளிய திருமணங்கள் அவை. பாடப் புத்தகம் வழியாக மட்டும் தமிழை, இலக்கியத்தை அறிந்திருந்த எனக்கு பாடப் புத்தகத்திற்கு வெளியே தமிழ் எவ்வளவு சுவையூறியது என்பதை சுவைக்க வைத்த அவர் நான் பத்தாம் வகுப்பு முடிக்கும் பொழுது பணி ஓய்வுப் பெற்றார்.
பனிரெண்டாம் வகுப்பு விடுப்பில் “கலைமகள்” பத்திரிகை நாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். 1987 ன்னு நினைவு 118 பக்கங்கள் கொண்ட நாவல் ஒன்றை முதன்முதலில் எழுதினேன். அப்பொழுது துவங்கிய ஓட்டம். 89ல் என் முதல் கவிதைத் தொகுப்பு - “ஓட்டையில்லாத புல்லாங்குழல்”, 90ல் “திசையெல்லாம் சூரியன்” வெளிவந்தது. புலவர் தமிழ்க் கூத்தனுடன் ஏற்பட்ட உறவு இலக்கியமாகவும், இயக்கமாகவும் நான் வேரூன்ற துணை நின்றது. 89ல் எனக்கு மீராவுடன் ஏற்பட்ட அறிமுகம் என் இலக்கியப் பயணத்தை தீவிரப்படுத்தியது. “2, சிவன் கோயில் தெற்கு தெரு, சிவகங்கை” என் முகவரியாக எனக்குத் தோன்றியது. இளைஞர்களை, புதியவர்களை எழுத வைத்தல், உற்சாகப்படுத்துதல், வழிகாட்டுதல், அங்கீகரித்தலில் மீராவிற்கும் அன்னத்திற்கும் மிகப் பெரிய பங்குண்டு. மதுரையில் இருந்த “அன்னம்” புத்தகக் கடையே எனக்கு நவீன இலக்கிய உலகின் சாளரமாக இருந்தது. எம்.வி. வெங்கட்ராமையும், கிராவையும், அப்துல் ரகுமானையும், கோணங்கியையும் அங்குதான் கண்டறிந்தேன். இந்த உத்வேகத்தில் பட்டுக் கோட்டையின் வாழ்க்கை வரலாற்றை எழுத இரண்டாண்டுகள் உழைத்தேன். மீரா மிகுந்த ஆர்வத்-துடன் உற்சாகமூட்டி வந்தார். ஆனால், கடைசி வரை அதனை எழுத முடியாமல் போய்விட்டது.
பிறகு 93_96 - வரை செம்மலர் ஆசிரியர் குழுவில் பணி செய்தேன். 97ல் என்னுடைய பாசி வெளிச்சத்தில்” கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. 96_2000 வரை நான் ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் வாசிப்பின் வெறி கொண்டு தேடித் தேடி வாசித்தக் காலங்கள் அவை. குறிப்பாக நாவல்கள் இப்பொழுது போல் மறுபதிப்பு காண முடியாத நூல்களின் காலம் அது. ஒரு நாவல் என்றால், வேறு ஒரு ஊரில் இருக்கிற இன்னொரு நண்பன் வீட்டில் இன்னொரு நாவல் இருக்கும். உலகின் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாம் இன்னும் என்னிடம் “ஜெராக்ஸ் பைண்டிங்”ல் தான் உள்ளது. வாசிப்பின் அற்புதமான மனநிலை வாய்த்த காலங்கள் அவை. அச்சமயம் மதுரையில் இருந்த சமய வேலின் நட்பு எல்லாம் சேர்ந்து ரசனையான உணர்வுகளோடு கடந்த வருடங்கள்.
இந்த இடத்தில் நிறுத்திவிட்டு, என்னை முழுமைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால், புலவர். இளங்குமரனார் முதல் சமயவேல் வரையான மனிதர்கள் வழி நான் பயணித்த உலகம் என்பது என் பால்யத்தில் வடிவமைக்கப்பட்டது என்பதை உணருகிறேன். தாத்தா காங்கிரஸ்காரர், அப்பா திமுக ஆதரவாளர் என்ற அடையாளங்களைத் தாண்டி என் வீடு, எனக்குத் தந்தது என் இரு பாட்டிகளை. இரு வேறு துருவங்களாக என்னுடைய இரண்டு பாட்டிகளும் என் பால்யத்தை கதைகளின் வழியாக வசீகரித்தார்கள். எனக்குள் ஒரு அற்புதமான உலகை உருவாக்கினார்கள். ஒரு பாட்டி _ வைஷ்ணவமும் நாட்டுப்புறவியலும் கலந்த அபூர்வக்கலவை. அவர் சொல்லும் சாமிக் கதைகளும், ஆண்டாளின் கதைகளும் கற்பனை ரசம் சொட்டச் சொட்ட எனக்குள் இறங்கும். என்னுடைய இன்னொரு பாட்டி இதற்கு நேரெதிர். அவருக்கு நான்குப் பெண் குழந்தைகள். கணவனைப் பறி கொடுத்துவிட்டு, தன் நான்குப் பெண் குழந்தைகளுடன் சமூகத்தில் அவர் நடத்தியப் போராட்டம்... அவரிடமிருந்த ஆணுக்கு எதிரான இடம், கடவுளுக்கு எதிரான இடம்... இவையெல்லாம் என்னை அதிர வைக்கும். பெண்-ணுடைய அத்தனை சக்தியுடனும், கம்பீரத்துடனும் அவர் வாழ்வை எதிர் கொண்ட விதம் என்னை உலுக்கிப் பிசைந்தது. என் பால்யத்தில் உருவான வாழ்வியல் கதை உலகத்தின் வழியே தான் இன்னும் என் கதையுலகம் சுழன்று கொண்டுள்ளது.
ஒரு கட்சியின் முழு நேர ஊழியராக உங்களை நேர்ந்து கொள்ளும் துணிவு, உங்களுக்கு 20 வயதில் வாய்த்தது எப்படி?
இருபதுகளுக்கே உரிய துணிவும், துடிப்பும் ஒன்றிணைந்து எடுத்த முடிவு அது. தோளில் சேகுவாராவின் தோள் பையும், கண்ணில் பகத்சிங்கின் கனவும் மட்டுமே உயிர்த்திருந்தது. போர்க் கப்பல்கள் அரோராவும், கிரான்மாவும், தல்வாரும் லட்சியக் கடல் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணித்த-படியே இருந்த காலம். சொந்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு துளி கனவு கூட இல்லை. எதிர்காலம் குறித்த எந்தத் திட்டமிடலும் குறைந்தபட்சம் மங்கலான புள்ளியாகக் கூட என்னில் இல்லை. நான் கட்சிக்குள் வந்தபொழுது, சோசலிஸ ரஷ்யா நொறுங்கி விழுந்து கொண்டிருந்தது. உலக வரலாற்றின் மிகப் பெரிய பின்னடைவு நேரம். கிரேன் மூலம் லெனின் சிலைகள் தூக்கியெறியப்படுகிற பொழுது கூட என்னைப் போன்ற இளைஞர்களை கவர்ந்திழுத்த, வசீகரித்தத் தத்துவமாக மார்க்ஸியமும், பெருங் கணலை நெஞ்-சுக்குள் சுமக்கச் செய்த சோவியத் இலக்கியங்களும் இருந்தன. இரண்டாவது... 80களின் இறுதி மற்றும் 90களின் துவக்கக் கால வாழ்வு நுகர்வுக் கலாசாரத்-தின் பிடி இவ்வளவு இறுகாத ஒரு காலம். தத்துவங்களையும், கொள்கைகளையும் இலக்காக வரித்துக் கொள்வதற்கான நெகிழ்வும், இலகுத்தன்மை-யும் வாழ்வியலும் இருந்தன. திராவிடத்தையும், தேசியத்தையும், கம்யூனிஸத்தையும் வாழ்வாகக் கொண்டவர்கள் ஒரே அறையில் நண்பர்களாக வாழ முடிந்த நேரமது. மன்றங்களும், படிப்பகங்களும், வாசக சாலைகளும் அரசியல் அரங்குகளாக உயிர்ப்-புடன் செய்யப்பட்டன. அவற்றின் வழியாக நடை பயின்று வருகிற ஒருவன் இயல்பாக வந்து சேர வேண்டிய இடத்துக்குத்தான் நானும் வந்து சேர்ந்தேன்.
அரசியல் கட்சியின் ஊழியராக நீங்கள் இணைந்த பொழுது உங்களை குடும்பமும், குடும்பத்தை நீங்களும் எப்படி எதிர் கொண்டீர்கள்?
ராகுல்ஜி தனது ஊர் சுற்றிப் புராணத்தில், தந்தையின் அதட்டலான குரலைக் கேட்டோ, தாயின் கலங்கிய கண்களைக் கண்டோ ஒரு ஊர்சுற்றி பின்வாங்கக் கூடாது என்பார். இந்தச் சொல் அந்த நாட்களில் ஒரு மந்திரச் சொல் போல எனக்குள் இருந்தது. எனவே பெற்றோரை எளிதாக என்னால் தாண்டிச் செல்ல முடிந்தது. என்னால் கடக்க முடியாத மனிதராக இருந்தது எனது தாத்தாதான்.
அவர் 1948 முதல் 1995 வரை தீவிர கம்யூனிச எதிர்ப்பாளராக இருந்தார் நடுத்தரமான உயரம், வலிமையான உடல், 90 வயது வரை வாழ்ந்தார். சிவந்த அவரது வழுக்கைத் தலையில் இலங்கைத் தீவைப் போல ஒரு கருநிற வரைபடம் இருக்கும். இது என்ன தாத்தா தழும்பு என்று கேட்டால் போதும். ஆரம்பிக்கும் கம்யூனிச வசை, “கொலகாரப் பயலுகடா...” என்ற அந்தக் குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
தாத்தாவும் பாட்டியும் மதுரையில் உள்ள மெஜுரா கோட்ஸ் மில்லில் வேலை பார்த்தவர்கள். 1948ல் அம்மில்லில் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அவ்வேலை நிறுத்தத்தை உடைக்க நிர்வாக ஆதரவு சங்கம் முயற்சி செய்தது. சங்க உறுப்பினராக இருந்த அவரும் அதில் ஈடுபட்ட பொழுது கம்யூனிஸ்டுகளால் தாக்கப்பட்டு வைகை ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். கடுங் காயங்களோடு தப்பி உயிர் பிழைத்துள்ளார். போராட்டம் முடிந்து ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. தொழிலாளிகளுக்-கென தனிக் காலனி, அங்கிருந்து வேலைக்கு வர தனி ரயில் என பல சிறப்புகள் அந்த ஒப்பந்தத்தில் இருந்தன. நிர்வாக ஆதரவு சங்கத்தைச் சார்ந்த 604 பேருக்கு காலனியில் வீடு கிடைத்தது. அதில் 4ஆம் நம்பர் வீடு தாத்தாவுக்கு கிடைத்தது தற்செயல் அல்ல.
அந்த வீட்டில் தான் என் அப்பா பிறந்தார். அடுத்த தலைமுறையில் நாங்கள் பிறந்தோம். வழுக்கையில் இருந்த இலங்கைத் தீவைப் போன்ற அந்த கருநிற வரைபடத்தில் இருந்து கம்யூனிச வசை தலைமுறைகளைத் தாண்டி கசிந்து கொண்டே-யிருந்தது.
அவர் தாக்கப்பட்ட 48ஆம் ஆண்டு போராட்டத்-தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். தமிழக தொழிலாளி வர்க்க வரலாற்றில் அப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொழுது அந்த கருநிற வரைபடத்தின் அர்த்தம் வேறொன்றாக எனக்குத் தோன்றியது. எனக்குத் தெரிந்தது தாத்தாவிற்கு தெரியாமல் இருக்கிறதே என்று அவர் மீது எனக்கு அனுதாபமும் அக்கறையும் வந்தது.
நான் கட்சியில் சேர்ந்தபொழுது எனக்குள் இருந்த மிகப்பெரும் பயம் அவர் குறித்துத்தான். அவருக்கு மிகவும் பிடித்த பேரன் நான். என்னைப் பற்றி அவருக்குத் தெரிய வந்த பொழுது. அந்த இடத்தை நான் இழந்தேன். என் வாழ்வில் நான் இழந்த மிக முக்கிய இடமது.
50 வருடத்திற்குப் பிறகும் கூட அவரது மனதை வெல்ல முடியாதது பெரும் துக்கமெனக் கிடந்தது. அவரை பெரும் சவாலாக நினைத்து என்னை நிலைநிறுத்தவும், அங்கீகரிக்கவும் போராடினேன். “இனி இவனை ஒன்றும் செய்ய முடியாது” என்ற நிலை வந்தபின் அவர் மௌனமானார். அவரது வசை வேறு மொழிக்கு மாறியிருக்கலாம். அல்லது அவருக்குள் ஏற்பட்ட மாற்றத்தின் அறிகுறியாக அது இருந்திருக்கலாம் ஆனால் அவரது இறுதி நாட்களில் என்னை நடத்திய விதத்தில் இருந்து அவருக்குள் சில மாற்றங்கள் நிகழ்ந்ததை உணர்ந்தேன்.
குடும்பத்தை எளிதாக தாண்டி வந்தாலும் என் சுமைகளை என் குடும்பம்தான் தூக்கிச் சுமந்தது. என் அம்மாவும், அப்பாவும், அண்ணனும், மனைவியும், மதினியும், தங்கைகளும் இல்லையென்றால் நான் இல்லை. என் வாழ்வுக்கான விலையை அவர்கள் தான் இன்றுவரை கொடுத்து வருகின்றனர்.
“கொம்புகள்” போன்ற எளிய, வலிமையான அரசியல் கவிதைகளை எழுதியுள்ளீர்கள். பாரதி, பாரதிதாசன் துவங்கி இன்குலாப், கந்தர்வன் போன்றவர்கள் வரை நீண்ட சமூக அரசியலை எழுதிய கவிஞர்களின் கண்ணி விடுபட்டதேன்?
விடுபட்டு விட்டது என்று சொல்லி விட முடியாது. அந்தக் கண்ணி எல்லாக் காலத்தாலும் பலஹீனமானதாகத்தான் இருந்துள்ளது. வானம்பாடி-கள் காலத்தை தவிர. அதன்பின் இன்குலாப், கந்தர்வன், தணிகைச்செல்வன், பழமலய் போன்ற-வர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்துள்ளனர். இப்பொழுது ஆதவன் தீட்சண்யா, ஹெச்.ஜி. ரசூல், என்.டி. ராஜ்குமார், மாலதி மைத்ரி, அ வெண்ணிலா குட்டி ரேவதி, ஸ்ரீரசா ஆகியோரின் கவிதைகள் ஒப்பீட்டளவில் சமூக அரசியல் உரக்கப் பேசுகின்றன.
திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நேரடியாக களத்தில் நின்று எதிர்த்த அனுபவம்.
கட்சியில் முழு நேர ஊழியராகி களப்பணிக்கு வந்தபின் நான் எதிர்கொண்ட முதல் பெரும் போராட்டம் அது. சங்க காலம் முதல் பாடல் பெற்ற இடம் திருப்பரங்குன்றம். மலையடி வார முருகன் கோயிலும், மலைக்கு மேல் தர்காவும் ஒன்றாக அமைந்திருக்கும் அம்மலை பிரச்சனைக்குரிய இடமாக இந்துத்துவா சக்திகளால் மாற்றப்பட்டது. 92ல் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் அப்பிரச்சனை தீவிரமாக்கப்பட்டது. நான்கு பகுதிகளாக உள்ள மலையில் இரண்டு பகுதி முருகன் கோயிலுக்கும், இரண்டு பகுதி பள்ளி வாசலுக்கும் உரியது. ஆனால் நான்கு பகுதியும் எங்களுக்குரியது.
ஒற்றைப் பாறையிலான அம்மலையின் அழகை ஆண்டுக்கணக்கில் இரவுகளின் வழியே சகித்துக் கிடந்தவர்கள் நாங்கள். எங்களோடு சேர்ந்து இரவிலும், பகலிலும் அம்மலையேறாத இலக்கிய-வாதிகள் மிகக் குறைவே. மீரா, கந்தர்வன் துவங்கி கோணங்கி. எஸ். இராமகிருஷ்ணன் வரை எல்லோரும் மலையெங்கும் எங்களோடு சேர்ந்து அலைந்து திரிந்துள்ளனர்.
சோவியத் இலக்கியங்களைப் படித்து விட்டு மலை முழுக்க சாம்பல் நிற பனிப் போர்வையை போர்த்தி வைத்திருந்தோம். முதல் ஆசிரியனில் வரும் பாப்புலார் மரம் மலையின் தென் ஓரத்தில் நின்று கொண்-டிருக்கும். சந்திரிகை பொய்கை மலை உச்சியில் உள்ளங்கையில் நீரைத் தேக்கிய படி எங்களுக்காக காத்திருக்கும். ஒரு பௌர்ணமி நள்ளிரவில் செங்குத்துப்பாறை ஒன்றின் மேல் மல்லாக்கப் படுத்தபடி கா.சீ. சிவக்குமார் “நிலா நாற்பது, பாடிக் கொண்டிருப்பான். படியற்ற வழியில் தனது கனத்த உடலைக் கொண்டு ஏற முடியாமல் கோணங்கி வார்த்தைகளைப் போட்டு பாறைகளை உடைக்க முயற்சி செய்வார். மூச்சிரைக்க ஏறிவரும் கந்தர்வன் பறந்து கடக்கும் குருவியைப் பார்த்து வேர்வை மறந்து ரசிப்பார். இலக்கியமாகவும் இயக்கமாகவும் நாங்கள் தஞ்சமடைந்து கிடந்த குடிலென மலையிருந்தது.
இப்படியிருந்த மலையில் 92, 93ம் ஆண்டுகளில் இராம கோபாலன் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் இருந்த தர்காவின் அருகே ஏற்றப் போவதாக அறிவித்தார். எல்லாப் பிரச்சனையும் மொத்தமாகக் கூடி மலையடிவார தேரடி வீதிக்கு வந்து நின்றது. சுமார் பத்தாயிரம் போலீஸார் திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்டனர். பத்தடிக்கு ஒருவர் வீதம் மலை முழுக்க போலீஸார் நிறுத்தப்பட்டனர். மலையைச்-சுற்றி போலீஸ் வேலி அமைக்கப்பட்டது. யாரும் மலையில் கால் பதித்து விட முடியாது. எங்கும் காக்கிச் சட்டைகள், வயர்லஸ் சத்தம், மடக்கிப் பிடித்த துப்பாக்கிகள் என மொத்த மலையுமே லாக்கப்-பிற்குள் கொண்டு போய் வைக்கப்பட்டது போல் ஆனது.
எதை எதிர்த்துப் போராடுவது என திசை தெறியாமல் மூச்சு முட்டியது. 1947க்கு முன் அங்கு-தான் கார்த்திகை தீபம் போடப்பட்டது என்று பேராசிரியர் ஒருவரின் கட்டுரையை ஒரு பத்திரிகை பிரசுரிக்கிறது. இங்கு போட்டால் அது மோட்ச தீபம், அங்கு போட்டால்தான் அது கார்த்திகை தீபம் என்று ஒரு பத்திரிகை எழுதுகிறது. வரலாறு, சடங்கு, சமயம், அரசியல் என அனைத்து முனையிலும் இந்துத்துவா சக்திகள் முழுத் தெம்போடு தாக்குதல் தொடுத்-தார்கள்.
யாராக நின்று எதிர்கொள்வது. நாத்திகவாதி-யாகவா? கம்யூனிஸ்டாகவா? சமயச் சார்பற்றவ-னாகவா? சமய நம்பிக்கையாளனாகவா? எதுவும் பிடிபடவில்லை. மதச் சடங்குகளுக்கு எதிராக பேசிப் பழகிய நாக்கை சட்டென மடக்கித் திருப்ப முடிய-வில்லை. ஆனால் மக்களின் தேவை ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நாங்கள் தமுஎகசவின் சார்பில் ஊரையே திரட்டி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக குன்றக்குடி அடிகளாரிடம் பேசிய போது அவர் சொன்னார். “பட்டையும், கொட்டையும் போட்டி-ருக்கிற ஒருத்தன விடாதே. எல்லாத்தையும் சேரு” என்றார். “நாடகம் போடு, நான் வந்து நடிக்கிறேன்” என்றார். அவரின் அனுபவமும், அவருக்குள் இருந்த நெருப்பும் எங்களை வடிவமைத்தது. தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நீண்ட போராட்டம், எத்தனையோ அடிதடி, கலகம், நான் உள்ளிட்ட பல தோழர்களின் மீது கொலை-வெறித் தாக்குதல்கள். வழக்குகள் (சென்ற ஆண்டு-தான் வழக்கு முடிந்தது) என எல்லாம் சந்தித்து இன்று அந்த மண்ணில் அவர்களுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.
இப்பொழுதும் ஆண்டு தவறாமல் கார்த்திகை தீபத்தன்று ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியை சேர்ந்த பத்து, இருபது பேர் போராட்டம் நடத்தி கைதாகி-றார்கள். கோயிலைச் சுற்றி நடக்கும் எத்தனையோ சடங்குகளைப் போல அதுவும் ஒரு சடங்காக நடக்கிறது அவ்வளவுதான். ஆனால் அவர்களுக்குப் பயந்து மலையை யாரும் லாக்கப்பிற்குள் வைப்பதில்லை.
தமிழகத்தின் அவமானச் சின்னங்களாக இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் இன்றைய உத்தப்புரம் வரை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றுகிறீர்கள். அவ்வனுபவத்-தைப் பற்றி
உசிலம்பட்டி, செல்லம்பட்டி போன்ற பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராக நான் பணியாற்றிய நேரம். 2000-த்தின் துவக்கம். அப்பொழுது சில அரசியல் கட்சிகள் பாப்பாபட்டி, கீரிப்பட்டித் தேர்தலை நடத்த முடியாததற்கான காரணங்களை முழுமையையும் கணக்கில் எடுக்காமல் அக் கிராம மக்களின் மீது மட்டுமே முழுப் பழியையும் போட்டுக் கொண்டிருந்தனர். தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியை அடிப்படை-யாகக் கொண்ட சாதிய அணுகுமுறை. அரசு நிர்வாகத்தின் பங்கு. அந்தப் பகுதியில் செயல்பட்ட சாதிய அமைப்புகள் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துப் பேசவில்லை.
இப் பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் தொடர்ச்சியான தலையீடுகளை செய்தன. கிராம ஆதிக்கத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தின. சி.பி.எம். கீழ் மட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி-னோம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளின் இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் மாற்றப்படும் என்ற நிலை உருவானபோது. இவ்வூர்களுக்கு அதனை அமல்படுத்தக் கூடாது என போராட்டம் நடத்தினோம். திமுக அரசு மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தை ஏற்றது. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த த. உதயச்சந்திரன் அவர்களின் சமூக பார்வையுடன்கூடிய அக்கறை மிகுந்த தலையீட்டால் ஒரு நல்ல களச் சூழல் உருவானது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் 48 பேர் போட்டியில் குதித்தனர். கிராம ஆதிக்க முடிவுகள் சுக்கு நூறாக நொறுக்கப்-பட்டன. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் 19 பேரை களத்தில் நிறுத்தியது. வேறு எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. முந்தையக் காலங்களில் இப்பிரச்சனையில் தொடர் தலையீடு செய்து வந்த விடுதலை சிறுத்தைகள் கூட ஒரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை.
பெரும்பான்மையான இடங்களில் கிராம முடிவு படி நின்ற வேட்பாளரேவெற்றி பெற்றாலும் கூட வார்டுகளில் கிராமத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி நிறுத்திய வேட்பாளர்கள் கணிசமாக வெற்றி பெற்றனர். அதனால் பழைய வழக்கப்படி ராஜினாமா செய்தால் மார்க்சிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பினர்களிடம் தலைவர் பொறுப்பு போய்விடும். அது நிலமையை மேலும் மோசமாக்கும் என கருதி ராஜினாமா திட்டத்தை கைவிட்டு தேர்ந்தெடுக்கப்-பட்ட தலித்துகள் பதவியில் அமர அனுமதித்தனர்.
இந்நிலையை உருவாக்க 7_8 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிய இயக்கத் தோழர்களின் பணியை மிக விரிவாகச் சொல்ல முடியும். அவர்கள் பட்ட அவமானங்களும், எதிர்கொண்ட அச்சுறுத்தல்-களும் கணக்கிலடங்காதது. ஏராளமான தோழர்கள்... குறிப்பாக செல்லம்பட்டி தங்கராசு, உசிலம்பட்டி செல்லக்கண்ணு இவர்களின் செயல்பாடு தனி நூலாக எழுதுமளவு பரப்பைக் கொண்டது.
எவ்வளவு மோசமான கிராமமானாலும் சரி, சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்தினால் எளிய உழைப்பாளி மக்களை ஒரு புள்ளியில் இணைப்பதற்-கான வாய்ப்பற்றுப் போய் விடவில்லை என்பதைத் தான் இவ்வனுபவம் உணர்த்தியது.
உத்தப்புரம் வேறுவிதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. 15 அடி சுவரை இடித்து விட்டு அரசு படும் பாடு... அய்யோ பாவம், இடிபட்டு ஒவ்வொரு கல்லிடமும் நாங்கள் செய்தது தப்புதான் என்று கும்பிட்டு விழுவதற்குக் கூட அது தயாராக இருக்கிறது. அரசியல் கட்சிகளின் தொடர் குட்டிக் கர்ணங்களுக்கு மத்தியில் முற்றிலும் தனிமைப்படுத்தப்-பட்டுள்ள உத்தப்புரம் தலித்துகளும், மார்க்சிஸ்ட் கட்சியும் பிரச்சனையை தீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றன.
250 தலித் குடும்பங்களின் மீது காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் அதன் மீது இரு நீதிபதிகள் கமிஷன் விசாரணை. துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் சுரேஷ் பலி அதன்மீது ஒரு நீதிபதி கமிஷன் விசாரணை. எத்தனையோ பொய் வழக்குகள், திசை திருப்பங்கள் என இடிக்கப்பட்ட சுவர் கணக்கற்ற விலையை இன்றுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னும் கேட்கும். எவ்விலை கொடுத்தேனும் அவமானம் துடைப்போம். சுயமரியாதை மீட்போம்.
களத்தில் பிரச்சனையை சந்திக்கும் பொழுதுதான் எதுவொன்றின் ஆழத்தையும், வேகத்தையும் முழுமையாக உணர முடியுமென நினைக்கிறேன். அந்த வகையில் மதவெறிக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் களத்தில் நின்று போராடுகிற பொழுது முக்கியமான வேறுபாட்டை உணர முடிந்தது. மதவெறிக்கு இந்துத்வாவிற்கு எதிரான போராட்டத்தில் களத்தில் ஒரு விரிந்த அணியை உருவாக்க முடிகிறது. ஆனால் சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தில் களத்தில் பெரும்பாலும் தனித்து விடப்படுகிறோம். எந்த ஒரு அணிச் சேர்க்கையையும் உருவாக்க முடியவில்லை. சில நேரங்களில் நம் தோள்களே கூட நமக்கு கை கொடுக்காத நிலையும் ஏற்படுகிறது.
பிரச்சனைகளில் பங்கெடுக்கிற களப்பணியாளராக-வும், அதனைப் பதிவு செய்கிற எழுத்தாளராகவும் இருக்கிறீர்கள். இவ்விரு தளங்களில் செயல்-படுவதைப் பற்றி?
களப் பணியாளனுக்கு கிடைக்கும் அனுபவம் இணையற்றது. ஒரு பிரச்சனையில் தலையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் அந்தப் பிரச்சனை உச்சியை அடையும் போது உள்ளுக்குள் இருக்கும் வெக்கை நம்மை ஒரு போதும் எழுத அனுமதிக்காது. அந்த நேரத்தில் உட்கார்ந்து எழுதுவதைப் போல ஆடம்பரமான செயல் வேறெதுவும் இல்லை என்று தோன்றும்.
பிரச்சனைகள் எல்லாம் முடிந்து போதுமான இடைவெளி ஏற்பட்ட பின் எழுதலாம் என்று யோசித்தால் எல்லாம் முடிந்து விட்டது. இப்பொழுது எழுதி என்ன செய்ய என்று தோன்றும்.
பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போதே, மனரீதியாக அதிலிருந்து கொஞ்சம் விலகி நின்று எழுதினால் அந்த எழுத்துக்கு இருக்கும் வீரியமே தனி. ஆனால் களத்தில் நிற்பவர்களுக்கு பெரும்பாலும் அது வாய்க்காது. உடனிருப்பவர்களுக்குத்தான் அது சாத்தியம்.
எழுத்தும், அரசியலும், போராட்டமும் கலந்த அபூர்வக் கலவையாக உங்களின் வாழ்க்கைப் பயணம் உள்ளது. எழுத்தாளன் அரசியல்வாதி-யாக மாறும்-போது உருவாகும் உறுதியான போராட்டமும், நுட்பமான வலிமையும் மிகப் பெரிய பலம். ஆனால், எழுத்தாளர்களும், கலைஞர்-களும் அரசியலுக்குள் செல்ல பெரும் தயக்கம் காட்டுவதேன்? இப்பொழுது அரசியக்குள் நுழைந்திருக்கிற படைப்பாளிகளின் அரசியல் செயல்பாடு எப்படி உள்ளது?
பொதுவாக மத்தியதர வர்க்க மனோநிலையே பெரும்பாலும் கலைஞர்களின் மனோநிலையாக இருக்கிறது. தூசியும், கறையும், அழுக்கும் ஏறிய அரசியல், தனித்த, பரிசுத்த, மாசுபடாத தனது சுயம் என்ற மாயையை கலைக்காமல் தான் இருக்கிறார்கள்.
எல்லோரையும் கிண்டலடித்து, எதுவும் சரியில்லை என்பதால் இருக்கிற வசதியை இவர்கள் சுதந்திரம் என்று அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஏதாவது சரியாக இருக்காதா? அல்லது சரியாக இருக்கிற எதையாவது நாம் மேலும் வலுப்படுத்த மாட்டோமா? என்கிற தாக்கமோ, நோக்கமோ இல்லாதபொழுது இருக்கிறவர்களுக்கு எதிராக பேசுவதன் மூலம் தங்களது இருப்பை அடையாளப்-படுத்த முயலுகிறார்கள்.
இப்பொழுது அரசியலுக்குள் நுழைந்திருக்கிற படைப்பாளிகளைப் பற்றிக் கேட்கிறீர்கள். அவர்கள் கட்சிக்குள் நுழைந்திருக்கிறார்கள். அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று சட்டென சொல்லிவிட முடியாது.
சரி, உங்களின் 20ஆண்டு கால அரசியல் பயணத்தைப் போல உங்கள் இலக்கியப் பயணத்தின் மைல் கல் 'காவல்கோட்டம்' இன்றைக்கு எழுதும் எழுத்தாளர்-களுக்கு தன் வாசகர்கள் யார் என்ற தௌ¤வு கிடைப்பதில்லை. தன் படைப்புக்கான எதிர்வினை என்ன என்ற கேள்விக்கு பதில் இல்லை. சில விதிவிலக்கான படைப்புகளை தவிர்த்து. இச்-சூழலில் ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் துணிச்சல் எப்படி வந்தது? மற்றொருபுறம் நீங்கள் ஒரு சிறுகதை கூட எழுதாதவர், திடீரென்று இவ்வளவு பெரிய புனைவு எழுதியது எப்படி சாத்தியமானது?
எழுதத்துவங்கும் போதே இவ்வ-ளவு பெரிய நாவல் எழுதவேண்டும் என்ற திட்டமீடல் எல்லாம் கிடையாது. மதுரையின் காவல் அமைப்பைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இரண்டு ஆண்டுகள் அதற்கான தரவுகளை தேடிச் சேகரித்தேன். சரி, எழுதலாம் என்ற நம்பிக்கை கொண்டு உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது. நம்பிக்கையின்மைக்கான காரணங்கள் எவ்வளவு வலுவானது என்று. 'இது நம்மால் முடியாது' 'விட்டொழிந்தால் பரவாயில்லை' என்று பேனாவை மூடிவிட்டு மூன்று முறை வெளியேறியிருக்-கிறேன். வெளியேறிய எல்லாக் காலத்திலும் நான் கூடுதலாக மனரீதியாக அதற்குள் சிக்குண்டு கிடந்தேன். இறக்கிவைக்கவே முடியாமல் தூக்கிச்சுமக்கிற அவஸ்தை படைப்பாளிக்கு மட்டுமே விதிக்கப்-பட்டது. இதிலிருந்து வெளியேறி வருவதற்கு ஒரே வழி இதனை எழுதி முடிப்பதுதான் என்று உணர்ந்த பிறகு வெளியேறுவதற்கான தேடலை விட்டு விட்டு உள்ளே நுழைவதற்கான வழியைத் தேடினேன்.
இதன் பக்க அளவல்ல, கால அளவுதான் மீக பிரம்மாண்டமானது. அறுநூறு ஆண்டுகால வரலாற்றை பின்புலமாகக் கொண்ட ஒரு புனைவு. எவ்வளவு உழைப்பை கோரும் என யோசித்தாலே அந்தப்பக்கம் தலை வைத்து படுக்கும் தைரியம் கூட வராது. பின் எப்படி எழுத முடிந்ததென்றால், நான் நாவல் முடியும் இடமான 1920லிருந்துதான் நாவலை எழுதத் துவங்கினேன். நாவல் வளர வளர காலம் பின்னோக்கி நகர்ந்தது. ஒரு தூக்கணாங்குருவி மேலிருந்து கீழ்நோக்கி கூடுகட்டுவதைப் போல நான் எதிர்த்திசை என கருதப்படும் திசை நோக்கி எழுதிப்போனேன்.
பிரிட்டிசாரால் கூடலூர் மலையருகே உருவாக்கப்பட்ட கட்டாயக் குடியேற்ற முகாம் பற்றி அறிந்தபொழுது இதுவரை வரலாற்றில் படித்தறியாத விஷயமாக அது இருந்தது. அந்த முகாம் பற்றிய விவரங்களை ஆவணக்காப்பகங்களில் தேடினேன். முகாமீல் கொண்டுவந்து வைக்கப்பட்ட மனிதர்-களைத் தேடி ஓடினேன். அவர்கள் அந்த முகாமுக்கு அனுப்பப்பட்ட காரணத்தை ஆராய்ந்தேன். மதுரையின் காவல் உரிமையை கையில் வைத்திருந்த மக்கள் அதனை ஒழிக்க பிரிட்டிஷார் செய்த அடக்கு-முறையால் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர் எனத் தெரியவந்தது. மதுரையின் காவல் உரிமை இவர்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்காக நாயக்க வரலாற்றுக்குள் நுழைய வேண்டியிருந்தது. மதுரையை ஆண்ட நாயக்க வம்சாவளியின் வரலாற்றைப் புரிந்துகொள்ள விஜயநகரம் வரை செல்லவேண்டியிருந்தது. இந்தப் பயணம் மீக மீக சுவராஸ்யமானதொரு அனுபவம். புனைவின் வழியே வரலாற்றை ஊடரறுத்து பயணிக்கும்போது இரண்டு பக்கமும் காட்சிகள் சரிவதை பார்த்தபடியே நீங்கள் செல்வீர்கள். அந்த சரிவின் வழியே வாழ்வை கண்டெடுப்பதும், விசாரணைக்கு உட்படுத்துவதுமே கலைஞனின் வேலை. நான் நாவலில் கடைசியாக எழுதியது முதல் அத்தியாயமான மதுரா விஜயத்தைத்-தான். காலத்தை அதன் வழித்தடத்தில் பின்தொடர்ந்து சென்று உண்மையைத் தேடிய புனைவின் பயணமே இந் நாவல்.
இரண்டாவதாக, நீங்கள் கேட்டது சிறுகதை கூட எழுதாமல் எப்படி நாவல் எழுதினீர்கள் என்பது? சிறுகதையோ, கவிதையோ ஒரு நாவலுக்கான ஒத்திகை மைதானம் அல்ல. ஒவ்வொன்றும் தனித்தனி களம். ஒரு எழுத்தாளனின் படைப்பு மனம் முன்வைக்கும் கேள்விக்கான பதிலே அப்படைப்பு. அது சிறுகதையா? கவிதையா? நாவலா? என்பதை களத்தின் பரப்பே தீர்மானிக்கிறது.
உண்மையின் மீது நிலை நிறுத்தப்பட்ட புனைவாக உங்கள் நாவலை முன்நிறுத்துகிற¦ர்கள். உண்மை எது, புனைவு எது என பிரித்தறிய முடியா குழப்பத்தில் வாசகனை தள்ளிவிடும் பலகீனம் நாவலில் உள்ளதாக கூறப்படுகிறதே?
என்னைப்பொறுத்தவரை நாவலின் பலமே அதுதான். நாவலில் இருபகுதிகள் உள்ளன. முதல்பகுதியாக வருகிற முடியரசு முழுக்க முழுக்க வரலாற்று கதாபாத்திரங்கள். வரலாற்றின் மீது உருவாக்கப்பட்ட புனைவு. இரண்டாவதாக வருகிற குடியரசு புனைவின் மீது நிற்கும் வரலாறு.
இந்த இடத்தில் முக்கியமான கேள்வியன்றை-யும் நாம் எழுப்பவேண்டியுள்ளது. எது வரலாறு? வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய, தொகுத்த குறிப்புகளா? மையத்தில் இருந்து எழுதப்பட்ட வரலாறும், விளிம்பு நிலை மக்களின் வரலாறும் ஒன்றாகிவிடுமா? வரலாறு எழுதப்பட்டதன் அரசியல் என்ன? அதிகாரத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட மக்களின் வரலாற்றைக் கொண்டுதான் அதிகாரத்தின் வரலாற்றை எழுத முடியும். அப்படிப்பார்த்தால் இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் இனி எழுதப்படவேண்டிய வரலாறுகளே.
நான் ஒரே ஒரு கிராமத்தின் கதையைத்தான் எழுதியிருக்கிறேன். அக்கிராமம் சாம்ராஜ்யங்களின் வரலாற்றை எல்லாம் உள்விழுங்கி நிற்கிறது. சாம்ராஜ்யத்தின் கதையை தேடிப்போகிறவர்கள் வரலாற்று ஆசிரியர்களிடமே தஞ்சம் அடைய-வேண்டி-யிருக்கிறது. அருங்காட்சியகத்து எலும்புக்-கூடுகளை போலத்தான் அது. ஆனால் மக்களின் வரலாற்றை தேடிப்போகிறவர்கள் அதனை எங்கிருந்-தும் எடுக்கலாம். மண், மரம், செடி, கொடி, பட்டசாமீ, நட்ட கல் என எல்லாக் கதையும் வரலாற்றின் வடிவங்களே. வரலாற்றைப் பொறுத்தவரை சாம்ராஜ்யங்கள் கொடிய வறுமையிலும் வெகுமக்கள் பெரும் வளமையிலும் இருக்கிறார்கள். ஆவணங்கள், செப்பேடுகள், பதிவுகள் என எதுவும் இல்லாமல் மக்கள் தங்களின் வரலாற்றை நினைவுகளின் வழியேயும் கதைகளின் வழியேயும் தலைமுறை தலைமுறைக்கு மாற்றிக்கொண்டு வருகிறார்கள். காலத்தால் அழியாத சக்திமீக்க ஊடகத்தை மக்கள்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஒரே ஒரு சடச்சியின் கதையைத்தான் எழுதியிருக்-கிறேன். ஆனால் சாளுவ வம்சம், துளுவ வம்சம்... டெல்லி பேரரசு, விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்க வம்சாவழி, ஆற்காட்டு நவாப், கிழக்கிந்தியக் கம்பெனி என எல்லாம் ஆண்டு முடித்து இறந்தகாலமாகி வரலாற்றுக் குறிப்புகளின் வழியே புதையுண்டு விட்டது. ஆனால் இந்த காலப்பரப்பை எல்லாம் கடந்தும் சடச்சியை நினைவுகளின் வழியாகவும் கதைகளின் வழியாகவும் மக்கள் உயிர்கொண்டு வைத்திருக்கிறார்கள். இங்குதான் வரலாற்றின் அர்த்தத்தை நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. ஆள்வோர்கள் மறையாமல் நிற்கும் தடயமாக வரலாற்றைப் பார்க்கிறார்கள். ஆனால் மக்களோ வாழ்வுக்கான அடியுரமாக வரலாற்றைப் பார்க்கி-றார்கள். நான் அடி உரத்தை கை நிறைய அள்ளி பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
விளிம்பு நிலை கதையாடலான காவல்கோட்டத்-திற்குள் நாயக்க மன்னர்களின் அதிகார மாற்றம் குறித்த பதிவுகள் முரணாக உங்களுக்கு தோன்ற-வில்லையா?
நிச்சயமாக இல்லை. விளிம்புநிலை மனிதர்களான தாதனூர்காரர்களின் வரலாற்றை முழுமையாக புரிந்துகொள்ளத்தான் நாயக்க மன்னர்களின் வழியே நாவல் பயணிக்கவேண்டிய தேவை வந்தது.
பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து மதுரையின் அதிகார மையத்திற்கும், கோட்டையைச் சுற்றியிருந்த கீழ் மற்றும் மேல்நாட்டு கள்ளர்களுக்குமான உறவு குறித்து விரிவான ஆய்வுகள் வந்துள்ளன. அந்த ஆய்வுகள் பல உண்மைகளை நமக்குக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். திருமலை பின்னத்தேவன் செப்பேடு_திருமலை மன்னன் பின்னத்தேவனுக்கு கொடுத்தது, அதில் பின்னத்-தேவனுக்கு இரண்டு ஊர். பிள்ளை பெற்றால் சூட்டுவதற்கு இரண்டு பெயர், கும்பிடுவதற்கு இரண்டு சாமீ, கள்ளநாட்டில் நீதிபரிபாலனம் செய்யும் உரிமை என எல்லாம் கொடுத்து, வருடத்திற்கு அறுபது பொன்முடிப்பும் அரண்மனையிலிருந்து கொடுக்கப்-படுவதாக சொல்லப்படுகிறது. குமரி முனையிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான நிலப்பரப்பை ஆண்ட ஓர் அரசு, எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி வரி வசூல் செய்து ஆட்சி நடத்திய ஓர் அரசு. அரண்மனைக்கு சில மைல் தொலைவில் இருந்த கள்ளநாட்டிலிருந்து எந்த வரியும் வசூல் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல. அறுபது பொன்முடி அரண்மனையிலிருந்து கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
இது மைய அரசுக்கும் ஸ்தல அமைப்புக்கும் இருந்த உறவைக்காட்டுகிறது. கள்ளர்களை ஒடுக்க பல முயற்சி செய்த திருமலை மன்னன் தன் ஆயுளின் கடைசிக்காலத்தில் அதாவது மரணிப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன்புதான் (1665) இத்தகைய ஒரு சமரசத்திட்டத்திற்கு வந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.
மைய அரசு ஸ்தல அமைப்புடன் செய்துகொண்ட சமரச திட்டமே இச் செப்பேடு. இச் செப்பேடு ஏன் பின்னத்தேவனுக்கு அளிக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைத்தான் நாவல் பேசுகிறது. வரலாற்றின் அதிர்வு மீக்க புள்ளியைத்தான் நாவல் களமாகக் கொண்டுள்ளது. இப்புள்ளி நாயக்க அரச வரலாற்-றோடு இணைந்தது. இவ்விடத்தில் நான் நாயக்க அரசைப்பற்றிப் பேசாமல் ஹொய்சனர்களைப் பற்றியோ, மராட்டியர்களைப் பற்றியோவா பேசமுடியும்.
அது மட்டுமல்ல கள்ளர்களின் வரலாறு எவ்வகையில் பார்த்தாலும் மைய அரசான நாயக்க அரசோடு இரண்டறக்கலந்துள்ளது. ஸ்ருவர்ட்.எச். பிளாக்பெர்ன் போன்ற ஆய்வாளர்கள் எல்லாம் இக்காலம் குறித்து மீக விரிவாக எழுதியுள்ளனர்.
விளிம்புநிலை மக்களான தாதனூர்காரர்களின் வீச்சை அல்லது பலத்தை சொல்வதற்காகத்தான் மதுரை நாயக்க வரலாற்றின் சிலபகுதியை பேசியிருக்கிறேன். அப்பொழுதும் கூட நாயக்க மன்னர்களின் வழியாக பேசாமல் பாளையக்காரர்-களின் வழியில் பேசியிருக்கிறேன். தெலுங்கு சாதியின் விளிம்பு நிலை மக்களான சக்கிலியர்களின் வாழ்வை குறியீடாக உரக்கப் பேசும் வாய்ப்பாக அந்தக் களத்தையும் நான் கையாண்டுள்ளேன். தமீழ்ச்-சாதியோ, தெலுங்குச் சாதியோ எவ்வகையில் பார்த்தா-லும் இது விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்வியல் தொகுப்பே.
சாதிய மோதல்கள் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் இந் நாவல் சாதியத்தை முன்னிறுத்துவதாக புரிந்துகொள்ளப்படும். சாத்தியத்தை உள்ளடக்கி இருக்கிறதா?
உள்ளடக்கத்தில் நிச்சயமாக அப்படியில்லை. ஆனால் புரிந்துகொள்ளப்படுவது என்பதை பொத்தாம் பொதுவாக பேசமுடியாது. எனக்கு இப்படித்தான் அது புரிந்தது என்று ஒருவர் சொல்வாரோயானால் அது அவரின் தனிப்பட்ட அளவுகோல் சார்ந்தது. ஆனால் நாவலாசிரியன் என்ற முறையில் ஒரு விஷயத்தை என்னால் அழுத்தமாகச் சொல்ல முடியும். தமீழகத்தில் கோட்டை உள்ள எந்த நகரத்திற்கும் குடிக்காவல் இருந்திருக்காது. மதுரை மட்டுமே கோட்டையையும், குடிக்காவலையும் கொண்டிருந்தது. கோட்டையை அகற்றிய பிரிட்டிஷார் குடிக்காவலை அகற்ற முயற்சி செய்தனர். அது அவ்வளவு எளிதில் சாத்தியமாக-வில்லை. எனவே அக்காவலை கையில் வைத்திருந்த சாதியின் மீது குற்றப்பழங்குடியினர் சட்டத்தை முதன்முதலாக அமல்படுத்தினர். ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தாலே அவன் குற்றவாளி என்று சொல்லுகிற பிறப்பின் அடிப்படையிலான நவீன ஒடுக்குமுறை இது. இவ் ஒடுக்குமுறைக்கு எதிராக பேசுகிற போது அச்சாதியை மறைத்துவிட்டு எப்படிப் பேசமுடியும்.
இன்றைய கண்ணாடியை மாட்டிக்கொண்டு மட்டும் நேற்றைய வரலாற்றைப் பார்த்துவிட முடியாது. சரி. இதனைச் சொல்வதன் மூலம் இன்றைக்கு சாதி பெருமீதத்திற்கு தானே வலு சேர்க்கும் என்றும் சிலர் கேட்கின்றனர். நிச்சயம் இல்லை. கடந்த காலங்களில் இவ்வரலாறு எல்லாம் சொல்லப்படாததன் விளைவுதான் இன்றைய சூழல். இம்மக்களுக்கு எதிரான காலனிய அரசின் ஒடுக்கு-முறையும் அதற்கு எதிரான கிளர்ச்சியின் வரலாற்றை-யும் சொல்வதென்பது இன்றைய அதிகாரத்திற்கு எதிரான அரசியலோடு இணைந்தது. நேற்றைய வரலாற்றின் வழியேதான் இன்றைய தேவையை வந்தடைய முடியும். இந்த வரலாற்றைச் சொல்லாமல் விடுவதுதான் வெற்று சாதிய பெருமீதத்திற்கு துணைநிற்கும், வலு சேர்க்கும்.
சாதியைப் பற்றி எழுதினாலே அது சாதியத்திற்-குத்தான் துணைசெய்யும் என நினைப்பது மீக மேலோட்டமானதொரு பார்வை.
அமெரிக்கன் மீஷனரி சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லாம் தமீழ் அறிவுப்புலத்திற்கு முற்றிலும் புதிதாக இருக்கிறதே? இது குறித்து தமீழில் வேறு ஏதேனும் ஆய்வு இருக்கிறதா?
எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இனிமேல் யாராவது அதனைச் செய்தால் அது மீக பயனுள்ளதொரு காரியமாக இருக்கும். இந்தியாவில் அமெரிக்க மீஷனரிகளால் 1812ல் மராத்தி மீஷனும், 1816ல் இலங்கை மீஷனும், 1834ல் மெஜூரா மீஷனும் உருவாக்கப்பட்டது. மதுரையில் மீக நீண்ட காலம் சமூகப் பணியாற்றியது இம்மீஷனர்கள்.
மதுரையின் காலனி ஆட்சிக்கு எதிரான போராட்ட வரலாற்றைப் படிக்கும்பொழுது 1940களில் பிரிட்டிஷரால் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மாணவர்களில் அதிகமானோர் அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த-வர்களாக இருந்தனர். வெள்ளைக்கார நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் மற்ற கல்விச்சாலைகளைவிட கூடுதலான மாணவர்கள் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டது எப்படி என்று யோசிக்க தூண்டியது. விடுதலைப் போராட்ட வீரர் தோழர்.என்.சங்கரய்யா போன்றவர்கள் எல்லாம் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களாக இருந்த-பொழுது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே. அவரின் பேட்டியிலும், வேறு குறிப்பிலும் ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதை நான் படித்துள்ளேன். அக் கல்லூரி வளாகத்திற்குள் பிரிட்டிஷ் போல¦சாரால் நுழைய முடியாது. கல்லூரி நிர்வாகம் எக்காரணத்-தைக்கொண்டும் அதை அனுமதிக்காது. இது மாணவர்களுக்கு சாதகமாக இருந்தது என்பதுதான் அது. ஒரு வெள்ளைக்கார நிர்வாகம் எப்படி வெள்ளைக்கார போல¦சுக்கு எதிராக இருந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தளவிலேயே அது எனக்குள் இருந்துவந்தது.
பின்னர் மதுரை ரீகல் தியேட்டர் அருகில் உள்ள பழைய புத்தகக்கடை ஒன்றில் வழக்கம்போல புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்த பொழுது அமெரிக்கன் மெஜூரா மீஷனின் 150வது ஆண்டு-விழா மலர் ஒன்று கிடைத்தது. அப்புத்தகத்தில் மதுரையின் சமூக வரலாற்றில் அமெரிக்க மீஷனரிகள் ஆற்றிய பணிகள் எல்லாம் மீக சுருக்க-மாக எழுதப்பட்டிருந்தது. பசுமலை கல்வி வளாகம் முழுவதும் பால்ய காலத்தில் நான் விளையாடித் திரிந்ததுண்டு. இப்புத்தகம் அவ்வளாகத்தை வேறொன்றாக்கிவிட்டது. இம் மீஷனைப் பற்றி மேலும் அறிய ஆவல் கொண்டு தேடியபொழுது இது சம்பந்தமான ஆவணம் எதுவும் பசுமலையில் இல்லாதது மீகவும் சோர்வுக்கு உள்ளாக்கியது. மீஷனின் நூற்றாண்டு விழா மலர் ஒன்று 1934ல் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்து அது கிடைக்காத என பல ஆண்டுகள் முயற்சி செய்தேன். பொதுவாக எனது ஆய்வுக்கு இயக்கத் தோழர்கள் பலர் மீகவும் உதவியாக இருந்தனர். அவர்களில் ஒருவர் திருப்பரங்குன்றம் காவல்கார குடும்பத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ரவி. அவர் பசுமலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நூல்களை தேடி வருவதற்கு துணை நிற்பவர். அவர்தான் தான் கட்டிட வேலைபார்க்கும் வீடு ஒன்றிலிருந்து பசுமலையைப் பற்றிய மீகப் பழைய புத்தகம் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தார். 1934ம் ஆண்டு வெளி-யிடப்பட்ட நூற்றாண்டு விழா மலரை தேடிக்-கொண்டிருந்த எனக்கு 1909ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 75வது ஆண்டுவிழா மலர் கிடைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இணையற்றது.
சாதியத்திற்கு எதிராகவும், மூட நம்பிக்கைக்கு எதிராகவும், பார்ப்பனியத்திற்கு எதிராகவும் மீக உறுதிமீக்க பணியினை இம் மீஷன் ஆற்றியுள்ளது. இங்கிலாந்துகாரர்களின் மீது ஒரு இளக்காரமும் உள் அமுங்கி இருக்கும் ஒரு சிறு வெறுப்பும் இவர்களின் வரலாறு நெடுகிலும் பார்க்க முடிந்தது. அது காலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரலாற்றை பேச நினைத்த எனக்கு மீக பலமானதொரு வாய்ப்பாக அமைந்தது.
பாம்பன் கடவு முதல் தாது வருஷத்தில் நிகழ்ந்த லட்சக்கணக்கற்ற மரணங்கள் வரை அனைத்தும் காலனிய சுரண்டலின் இன்னொரு பக்கம். மறைந்-துள்ள இந்தப்பக்கத்தை உரக்கப்பேச அமெரிக்க மீஷனரிகளிடம்தான் நான் தஞ்சம் புகுந்துள்ளேன். அவர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இதற்கான இடம் இருந்தது.
இன்னொருபுறம், சமூகத்தின் பொது நீரோட்-டத்திற்குள் வராமல் வெளியில் இருந்த இனக்-குழுக்களைக் கண்டு காலனியவாதிகள் எப்பொழுதும் அஞ்சி நடுங்கி இருக்கின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கியோ அல்லது சமரசம் செய்தோ பொது நீரோட்டத்திற்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்தனர். அச்சமரச ஏற்பாட்டில் மீஷனரிகளின் பங்கு மீக முக்கியமானது. மீஷனரிகளின் சேவைக்குப்பின்னால் இருந்த இக்காலனிய அரசியலுக்கு விதிவிலக்குகள் யாருமீல்லை.
நீங்கள் டேவிட் சாம்ராஜா? அல்லது பொன்-னாங்கனா?
மீக ஆழமானதொரு வேரினைக் காண உச்சிக் கிளையிலிருந்து இறங்குவதைப் போன்றதொரு கேள்வி இது. நீங்கள் நுட்பமாக வாசிப்ப¦ர்களே-யானால் ஒரு விஷயத்தை புரிய முடியும். நான் பொன்னாங்கன் டேவிட் சாம்ராஜாக மாறியதைப்-பற்றி எழுதவில்லை. டேவிட் சாம்ராஜ் பொன்னாங்-கனாக மாறியதைப்பற்றித்தான் எழுதியுள்ளேன். இதற்குள் அடங்கியிருப்பது கருப்பனின் இடத்தை கர்த்தரால் இட்டு நிரப்ப முடியுமா? என்ற கேள்வி தான் அது.
நிறுவனமயப்படுத்தப்பட்ட மதத்திலிருக்கும் ஒருவனை இன்னொரு நிறுவனமயப்படுத்தப்பட்ட மதமான கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வது போல் எளிதல்ல. நிறுவனமயப்படுத்தப்பட்ட மதத்திற்குள் வராத பூர்வகுடி மற்றும் பழங்குடி மக்களை கிறிஸ்தவம் எனும் நிறுவனபடுத்தப்பட்ட மதத்திற்கு மத இழுப்பு செய்வது. ஏற்கனவே இருக்கும் ஒரு மதத்திற்கு மாற்றாக அவ்விடத்தில் கிறிஸ்தவம் எனும் புதியதொரு மதம் வைக்கப்பட்டால் அது பொருந்தி அமையும். ஆனால் மூதாதையர் வழிபாட்டைமட்டுமே கொண்ட இனக்குழுக்களின் முன்னோர் வழிபாட்டிற்கு மாற்றாக கிறிஸ்தவத்தை அவ்விடம் பொருத்துவது சுலபமான வேலையல்ல. ஏனென்றால் அங்கு நிகழ்வது கடவுள் வழிபாடல்ல. தனது பாட்டன், முப்பாட்டன் வழிபாடு, தனது பெரியாத்தா வழிபாடு. ரத்த உறவின் ஆதிவடிவமான அவ்விடத்தை அகற்றி தன்னை பொருத்திக்கொள்ள கிறிஸ்தவத்தால் எளிதில் முடியவில்லை.
சமஸ்கிருத மயபடுத்தப்படாத ஓர் இனக்குழுவில் தங்களால் வேகமாக நுழைய முடியும் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட ஒரு மதத்திற்குள் நுழைவது போல அது அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால் மாயைகளாலும் அருளாசியாலும் போர்த்தப்பட்ட ஒரு போர்வையை இவர்களுக்கு முன் யாரும் அவர்களின் மூலையின் மீது போர்த்தவில்லை. எனவே இவர்களின் பணி இன்னும் கூடுதலானது. அல்லது கடுமையானது. இந்த முரண்தான் டேவிட் சாம்ராஜாகவும், பொன்னாங்கனாவும் ஒற்றை உயிரை இரண்டாக பிளந்து போட்டுள்ளது.
பூர்வகுடி_கிறிஸ்தவ மத இழுப்பு சார்ந்த ஒரு நிகழ்வில் உள்ள கோட்பாட்டுப் போராட்டத்தைத்-தான் நான் வரைந்து காட்டியுள்ளேன். டேவிட் சாம்ராஜ் அவனது நியாயங்களின் மீதும், பொன்னாங்கன் அவனது நியாயங்களின் மீதும் நிற்கிறார்கள். மற்றபடி எந்த ஒன்றின் பக்கமும் நான் துளியளவும் சாயவில்லை. ஒரு வேளை என் மனதின் அடியாளத்தில் அச் சாய்மானம் நிகழ்ந்திருக்குமே-யானால் அது நிறுவனமயப்படுத்தப்பட்ட மதத்திற்குள்ளிலிருந்து டேவிட் சாம்ராஜ¤ன் மனதை வெளியில் இழுத்துவந்த பொன்னாங்கனின் மீதுதான் இருந்திருக்கும்.
களவை கொண்டாடுகிற மனநிலை சற்று தூக்கலாக இருப்பதாக கருதுகிற¦ர்களா?
நிச்சயமாக இல்லை. நான் களவை கொண்டாட-வில்லை. களவுக்கான சமூக வேர்களைச் சொல்லி உள்ளேன். களவில் தேர்ந்தவனை காவலுக்கு நியமீப்பது தமீழ் மண்ணில் நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் மரபு. நம்முடைய கிராமத்தில் இருக்கும் நடைமுறைகள், நாட்டுப்புறக்கதைகள், பழமொழிகள் என பலவழிகளிலும் இம்மரபை உறுதிப்படுத்த முடியும். மதுரைக்காஞ்சி, மதுரை நகர் காவலர்கள் களவில் தேர்ந்த அறிவுகொண்டவர்களாக இருந்ததைப் பற்றி பலவரிகள் பேசுகிறது.
காவல் பிடிக்க களவுதான் வழி. காவல் நிலைக்க களவுதான் வழி. காவல் உலைந்தால் களவுதான் வாழ வழி. எல்லா வகையிலும் காவலின் அடிப்படை களவு. காவல் பற்றிய ஒரு நாவலில் அதன் அடிப்படை-யைப் பற்றி பேசாமல் எப்படி இருக்க முடியும். இந்த நாவலில் எழுதப்பட்டுள்ளதைப்போல களவைப் பற்றிய நுட்பமான செய்திகள் பல மடங்கு இன்னும் எழுதப்படாமல் என்னிடம் உள்ளது. கதை எவ்வளவு அனுமதித்ததோ அந்த அளவே நான் எழுதியுள்ளேன்.
களவு வாசகனுக்கு மீகவும் ஆர்வமூட்டுகிற ஒன்று. எனவே அதன் மீது ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. நவீன தமீழ் இலக்கியத்தில் களவின் நுட்பங்கள் மீக மீக குறைவாகவே பதிவாகியுள்ளன. அதுவும் கூட சற்று தூக்கலாகத் தெரிவதற்கான காரணமாக இருக்கக்-கூடும்.
காவல்கோட்டம் நாவலில் வரும் அத்துணை பெண்களும், கங்காதேவி முதல் கழுவாயி வரை பெண்மையின் முழுசக்தியோடு மாபெரும் ஆளுமை-களாக வலம் வருகிறார்கள். பெண் மனதின் நுட்பத்தை வெளிப்படுத்தும் இடங்கள் தமீழுக்கு மீக புதுசு. இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?
நாவலின் பெண் பாத்திரப்புனைவு சக்தியுள்ள ஆளுமையாக உயிர்பெற்றதற்குக் காரணம் நான் எடுத்துக்கொண்ட இரண்டு இனக்குழுக்களின் வழியே அப்பெண்களை பதிவு செய்ததுதான். கொல்ல-வாருகள்-, பிரமலைக்கள்ளர்கள் இவ்விரு இனங்களிலும் பெண்களுக்குள்ள வலிமையான இடம். ஆணுக்கு நிகராகவும், ஆணை மீஞ்சிய ஆளுமையுடனும் உள்ள பெண்கள்-தெலுங்கு சாம்ராஜ்யங்களில் பெண் வகித்த பிரதான இடம், பெண்களுக்கென தனி ராணுவம் இவையெல்லாம் போர்க்குணம் மீக்க பெண் மரபின் அடையாளங்கள். தெலுங்கு சாதியில் குல தெய்வங்கள் அத்துணையும் பெண்களே. ஆண் குல தெய்வங்களே இல்லை. வீரமரணமடைந்த பெண்கள்தானே குலதெய்வங்-களாக ஆகியிருக்க முடியும். கள்ளர் இனப்பெண்-களும் சகல வலிமையுடன் வாழ்வை எதிர்-கொண்டவர்கள். ஆணுக்கு இணையாகக்கூட அல்ல. அதனை கடந்தும் சென்றவர்கள். சமஸ்கிருத வாழ்வு கலவாத இனக்குழுக்களில் பெண்ணின் இருப்பு சக்தி வாய்ந்தது. இவ்விரு இனக்குழுக்களும் அவ்வகையைச் சார்ந்தவையே. ஆதலால் ஆதி தாய்வழிச் சமூகத்தின் வீரியமீக்க பெண்களாக இக்குலப்பெண்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
மதுரை தன் வசீகரத்தையும், இருளையும் காவல்கோட்டம் எங்கும் விரவியபடி வாசகர்களுக்குள் கிடக்கிறதே, எழுதும் காலத்தில் உங்களுக்குள் ஊறிக்கிடந்த மதுரையை முற்றிலுமாக நாவலில் படைத்துவிட்டீர்களா?
எப்படி முடியும்? அது மதுரையாயிற்றே, ரகசியங்களின் வேர் முடிச்சிட்டுக்கிடக்கும் ஆதி நிலமாயிற்றே, எந்தத் தெருவில் நின்றாலும் ரெண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால நீளமானதாக அத்தெரு இருக்கிறது. வைகையின் மணல் துகள்கள் கதையென வந்து சேர்ந்தபடியே இருக்கிறது. ஒற்றைக் கன்னவாசல் கதையையே எழுதமுடியாமல் திணறிய ஒருவனைப்பார்த்து கேட்கக்கூடிய கேள்வியா இது.
மதுரையின் வரலாற்றைப் பொறுத்தவரை இதுவரை எழுதப்பட்டுள்ளது மீகக்குறைவே. அதுவும் மன்னர்களைப்பற்றிய கால ஆராய்ச்சிதான் பெரும்பகுதி நடந்துள்ளது. விரிவான தௌ¤வான வரலாறு இல்லை. மதுரையின் வரலாற்றுக்கு காவல்கோட்டம் மீக முக்கிய பங்களிப்பினை செய்துள்ளது. இதனைப்பற்றி வாசகர்களும், அறிஞர்களும், ஆய்வாளர்களும் என்ன கருத்தை முன்வைக்கிறார்கள் என்பதறிய காத்திருக்கிறேன். கொஞ்சகாலம் கழித்து நானே விரிவாக எழுதவும் எண்ணியுள்ளேன்.
களப்பணியில் நீங்கள் சந்தித்த நபர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
ஒருவர் இருவரா!எத்தனையோ பேர். புலவர் அரிச்சந்திரன் துவங்கி தோழர் தவுடன் வரை எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் இவர்களைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்கலாம்.
மதுரைக்கு வந்த கால்டுவெல் கோரிப்பாளையம் முஸ்லிம் ஒருவரை சந்தித்துள்ளார். கான்சாகிப்பை பற்றி அந்த நபரிடம் கேட்டபொழுது, கான்சாகிப்பின் வரலாறு, கடைசியில் நடந்தபோர், அதில் நிகழ்ந்த சூழ்ச்சிகள், கான்சாகிப்பின் இறுதி நிமீடம் எப்படி இருந்தது என அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லியுள்ளார். எழுதப்படிக்கத்தெரியாத அந்த மனிதர் வெள்ளை அதிகாரிகளின் டைரிக்குறிப்பை விட முக்கியத் தகவல்களையெல்லாம் சொல்லி-யதைக் கேட்டு, வியந்து- மீரண்டு போய் தான் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் என்ற நூலில் அதனை பதிவு செய்துள்ளார் கால்டுவெல்.
ரத்தமே கதையாகவும், வரலாறாகவும் சுழன்றுகொண்டிருக்கும் அவரைப்போன்ற மனிதர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன். உட்கார்ந்த இடத்தி-லிருந்தே கை நீட்டி இரண்டு மூன்று தலைமுறைக்கு பின்னால் இருப்பதை எடுத்துக்கொடுத்தபடி வெற்றிலையை மென்றுகொண்டிருப்பார்கள். நமது அறிவு மரபின் வரலாற்று தொடர்ச்சியே இம் மாமனிதர்கள். இன்று முதியோர் பென்சனுக்காக கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறார்கள். நமது கண்களில் ரத்தம் வழிகிறது.
இருபது ஆண்டுகாலமாக பேசிக்கொண்டும் எழுதிக்-கொண்டும் வரும் எஸ்.ராமகிருஷ்ணன் காவல் கோட்டம் குறித்து எழுதியதில் விவாதிப்பதற்கு ஒன்றுமீல்லையா?
ஒன்றுமே இல்லை என்று புறந்தள்ள நான் ராமகிருஷ்ணன் அல்ல. விவாதிப்பதற்கு அல்லது பொருட்படுத்துவதற்கு ஏதாவது உள்ளதா என்ற அக்கறையுடன்தான் நான் வாசித்தேன். இரண்டு விஷயங்கள் விவாதிப்பதற்கானதாக எனக்குப்பட்டது.
ஒன்று, ஒரு வரலாற்றுநாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதைப்பற்றி அவர் ஒரு மாதிரியை முன்வைக்கிறார். இது போல காவல்கோட்டம் இல்லையே என்று கேள்வியெழுப்புகிறார். அதுபோல காவல்கோட்டம் ஏன் இருக்கவேண்டும். ஒரு வரலாற்று நாவலை நூறுவிதத்திலும் எழுதலாம். அதற்கு என்ன அளவுகோல்? யார் அதை தீர்மானிப்பது. போரும் வாழ்வும் போலவும், அக்கினி நதியைப் போலவும்தான் வரலாற்று நாவல் இருக்கவேண்டுமென்பது எந்த மகாசபையில் முடிவுசெய்யப்பட்டது. நெப்போலியனை டால்ஸ்டாய் பார்த்தவிதமும், விக்டர் ஹ¤யூகோ பார்த்தவிதமும் ஒன்றா? போரும் வாழ்வும் நாவலில் வரலாறு கையாளப்பட்ட விதமும், சக்கரவர்த்தி ப¦ட்டர் நாவலில் வரலாறு கையாளப்பட்டவிதமும் ஒன்றா? வரலாற்றை புனைவு தனது உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாடும் ஆற்றல் கொண்டது. விளையாட்டின் வகைகள், உத்திகள், நுட்பங்கள், சாகசங்கள் எல்லாம் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரே களம், ஒரே அணுகுமுறை, ஒரே உத்தி ஆகியவற்றின் அடிப்படையிலான விளையாட்டுகளும் உண்டு. ஆனால் அது களத்தில் விளையாடுவதல்ல, கணினியில் விளையாடுவது. ராமகிருஷ்ணன் இரண்டாம் வகையை வைத்து முதல் வகையின் மீது கேள்வியெழுப்பியுள்ளார்.
விவாதிப்பதற்கான இரண்டாவது விஷயம் மீக நுட்பமானது ஒரு நாவலாசிரியனின் நண்பன் நாவல் எழுதிவிட்டால் நாவலாசிரியனாக கருதப்பட்ட-வனின் மனநிலை என்னவாகிறது என்பதைப்பற்றியது. இந்த ஆய்வுக்கு ஒரு பரிசோதனை எலியாகத்தான் அவர் எழுதியுள்ள கட்டுரை உள்ளது. அது பட்டிருக்கிற பாடு, அடைந்திருக்கிற அவஸ்தை, தாங்கிக்கொள்ள முடியாமல் மேலும் கீழும் குதித்து பல்லில் சிக்கியதை எல்லாம் கடித்து துப்பியிருப்பது என இவை எல்லாவற்றையும் வைத்து அந்த மனநிலையை ஆய்வுசெய்ய முடியும். ஜாடிக்குள் கூழாங்கல்லைப் போட்டவுடன் உள்ளே இருக்கும் திரவம் மேலேறி வருவதைப்போல எழுத்தாளனின் மனதுக்குள் இருக்கும் வக்கிரமும், காழ்ப்பும், குரோதமும் மேலேறி வர அருகில் இருப்பவன் ஒரு படைப்பை போடவேண்டியுள்ளது. இவ்விடத்தில் படைப்பு படைப்பாளியாக அறியப்பட்டவரிடம் என்னவாக வினையாற்றுகிறது என்பது முக்கியம். அத்தகையதொரு ஆய்வும், அதன் மீதான விவாதமும், தமீழ் இலக்கிய உலகுக்கு மீகவும் பயன்படும்.
நுட்பமான எழுத்தாளன் எப்போது வெற்றிபெற்ற பேச்சாளனாக இருந்ததில்லை, நீங்கள் பேச்சாளராக வெற்றிபெற்ற பிறகு நுட்பமான எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிற¦ர்களே! இப்போதும் உங்களுக்கு பேச்சில் உரிய இடத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
நுட்பமான எழுத்தாளன் எப்போதும் வெற்றிபெற்ற பேச்சாளனாக இருந்ததில்லை என சொல்லமுடியாது. இரண்டிலும் வெற்றிப் பெற்றவர் ஜெயகாந்தன். பேச்சின் வெற்றியை சுவைத்தவனால் எழுத்து கேட்கும் நிதானமான, பொறுமை மீகுந்த விலையை கொடுக்க முடியாது என்பது பொதுவிதிதான். ஆனால் விதிவிலக்குகளும் உண்டு.
பேச்சுதான் எனக்கு முன்னத்தி ஏர். ஏழாம் வகுப்பில் பாரதியார் நூற்றாண்டு விழாவுக்காக அய்யா இளங்குமரனார் எழுதிக்கொடுத்த அந்த நாலு பக்க உரையை இப்பொழுதும் என்னால் சொல்ல முடியும். அதன்பின் ஆறாண்டுகள் கழித்துத்தான் எழுத ஆரம்பித்தேன். எழுத்தும் பேச்சும் வெவ்வேறு வகையான மனநிலையையும், மொழியையும் கொண்ட செயல். எத்தனை ஆயிரம் கூட்டத்தில் பேசினாலும் மேடை ஏறும் முன் இருக்கும் பதற்றம் குறையாமல் இருப்பவனால்தான் நல்ல பேச்சாளனாக நீடிக்க முடியும்.
எனக்கு முன்பைவிட இப்போது பதற்றம் அதிகரித்துள்ளது.
அரசியல்வாதி, இயக்கவாதி சமரசங்களுக்கு உட்பட்டவன். எழுத்தாளன் சமரசங்களுக்கு அப்பாற்-பட்டவன். இரு ஆளுமைகளுடன் உள்ள நீங்கள் எப்படி?
சமரசம் செய்துகொள்ளாத மனிதர் யாரும் உண்டா? படைப்பாளி சமரசம் செய்துகொள்வதே இல்லையா? குடும்பத்தில், வேலைபார்க்கும் இடத்தில், நண்பர்களிடத்தில், தனித்தியங்கும்போது... எல்லா இடங்களும் சமரசங்களை கோரும் இடம்தானே. என் வீட்டுக்குள் உள்ள கட்டுப்பாடு எனக்கான சுதந்திரத்-திற்கு தடையல்ல. என்னுடைய இருபது ஆண்டுகால அரசியல் வாழ்வே பத்தாண்டுகால உழைப்புடன் கூடிய நாவலை உருவாக்க காரணமாக அமைந்தது. கற்றுக்கொள்வதில் தீராத் தாகம் இருக்கும்பொழுது எழுத்தும் இயக்கமும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்குமே தவிர தடை செய்யாது.
அமைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது. அது எழுத்தாளனை காவு வாங்கிவிடும் என்பதெல்லாம் வெற்றுக்கூச்சல். அமைப்புக்கு வெளியே இருந்து கொண்டு ஆண்டுக்கணக்கில் எழுதாமல் இருக்கி-றார்களே. அவர்களையெல்லால் எது காவு வாங்கியது? குலசாமீக்கு படையல் இடுவது போலத்தான். சில சாமீகளுக்கு தேங்காய், வாழைப்பழம் போதும். சிலருக்கு சுருட்டு, கஞ்சா வேண்டும். துடியான சாமீகளுக்கு ஆடு, மாடு வெட்ட வேண்டும். அப்பொழுதுதான் அதன் மனம் இரங்கும். அதைப்போலத்தான் எழுத்தும். என்ன ஒரே வித்தியாசம் தேங்காய் பழம் எல்லாம் இங்கு கதைக்கு ஆகாது. தன்னையே வெட்டி தட்டில் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் எழுத்தின் மனம் இற ங்கும். இதைச் செய்ய முடியாததற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக அமைப்பும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வளவுதான்.
படைப்புகள்
கவிதைத் தொகுதி
பாசி வெளிச்சத்தில் 1997
ஓட்டையில்லாத புல்லாங்குழல் 1989
திசையெல்லாம் சூரியன் 1990
ஆதிப் புதிர் 2000
கட்டுரைத் தொகுதி
கலாச்சாரத்தின் அரசியல் 2001
ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை 2004
சிறு வெளியீடுகள்
மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள் - 2003.
மனிதர்கள், நாடுகள், உலகங்கள் -2003 (ஜா.மாதவராஜுடன் இணைந்து)
கருப்புக் கேட்கிறான் கெடா எங்கே? -2003
உ.வே.சா. சமயம் கடந்த தமிழ் 2005
நாவல்
காவல் கோட்டம் - 2008.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|