Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மார்ச் 2009
கட்டுரை
அகிலம் புகழும் அமிதவ் கோஷ்
- சிவ. வீர. வியட்நாம்

உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுள் மனிதநேயமிக்க, மானுடவியல் கற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ். இவருடைய எழுத்துப் பணிக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாதமி விருதையும் பல்வேறு சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

Amitav Ghosh எழுத்தாளர்கள் விக்ரம் சேத், சசி தரூர், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா, குஜராத் கலவரத்தை எதிர்த்து பதவியைத் துறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்ஷ் மாந்தர், ஆகியோருடன் தில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ஒன்றாகக் கல்வி கற்றவர் அமிதவ் கோஷ். இவர் பிறந்தது மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில். ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்து முடித்த பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சமூக மானுடவியலில் (Social Anthropology) முனைவர் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து நாளிதழ்களில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த இவர் பின்னர் அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணி புரிந்தார். தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி டெபோரா பேக்கரும் ஓர் எழுத்தாளர்தான். இவருடைய சமீபத்திய நாவல் சீ ஆஃப் பாப்பிஸ் (Sea of Poppies) இந்த ஆண்டு புக்கர் பரிசுத் தேர்வுக்குழுவிற்குச் சென்று, அரவிந்த் அடிகாவின் தி ஒய்ட் டைகரால் (The White Tiger) ஓரம் கட்டப்பட்டது.

புக்கர் பரிசு அறிவிக்கப்படுதற்கு முன்பு, இரண்டு இந்தியர்களுள் யாரோ ஒருவருக்குத்தான் அந்தப் பரிசு என்று வெளிப்படையாகப் பேசப்பட்டது. இவர் இதுவரை 7 நாவல்களும், 4 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். இவருடைய புத்தகங்கள் சாமானிய வாசகர்களைக் கவருபவை அல்ல. சற்றுக் கனமானவைதான். பின்காலனியாதிக்க வாழ்க்கையை வரலாற்றுப் பார்வையிலும், சமூகவியல் பார்வையிலும், மானுடவியல் பார்வையிலும் விளக்குபவர் அமிதவ் கோஷ். எவ்வளவு தூரம் சென்று வாழ்ந்தாலும் இந்திய வாழ்க்கையின் ஏக்கம் மனதில் அசைபோடுவதை இவர் கதாபாத்திரங்கள் மூலம் நாம் அறியலாம்.

முதலில் இவருடைய கட்டுரைகளை எடுத்துக்கொள்வோம். தற்கால இந்தியாவைப் பாதித்த சம்பவங்களை மானுடவியல் ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் உலகிற்கு வெளிப்படுத்துபவன இவரது கட்டுரைகள். இவருடைய மனதை அதிகமாக உலுக்கியப் பேரிடர்கள் இரண்டு, ஒன்று சுனாமி பேரலைகள். இன்னொன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட அக்கிரமம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணம் என்ன, நியாயமான காரணமா, பாபர் உண்மையிலே அந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டினரா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு, தி மேன் பிஹைண்ட் தி மாஸ்க் (The Man behind the Mosque) என்ற புத்தகம். இது, பாபரின் சுயசரிதையான பாபர்நாமாவை முழுமையாக ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டது.

பாபர் என்கிற தனிமனிதனின் ஒப்புயர்வற்ற குணத்தை இந்தப் புத்தகம் பறைசாற்றுகிறது. பாபர் மதப்பற்று உள்ள முஸ்லிம் மன்னன்தானே தவிர, மதச் சகிப்புத்தன்மையற்றவன் அல்ல என்கிறார் அமிதவ் கோஷ். இந்துக் கோயில்கள் கட்டுவதற்கு நிதி அளித்து உதவியிருக்கிறார் பாபர். சீக்கிய மதகுருவான குருநானக்கைப் பாபர் கண்டபோது, அவருடைய காலில் விழுந்து வணங்கினார். ஒரு முஸ்லிம் மன்னன் சீக்கிய மதகுருவின் காலில் விழுகிறாரே என்று அனைவரும் வினவினர். அதற்கு பாபர் சொன்ன பதில், “எந்த மதத்தைச் சார்ந்தாலும் மகான் என்பவன் மாமனிதன்தான், குருநானக்கின் முகத்தில் நான் கடவுளைக் காண்கிறேன்’ என்பதுதான். இதற்கு ஆதாரங்கள் அவருடைய சுயசரிதையில் இடம்பெற்றுள்ளன. அவருடைய வாழ்க்கையில் ஒரு நாள் கூட போரிடாமல் இருந்ததில்லை. போரும் நயவஞ்சகமும் சூழ்ந்த வாழ்க்கை பாபருடையது, அவர் தன் 13ஆம் வயதிலிருந்தே போரிடத் துவங்கிவிட்டார். எனினும் மனிதாபிமானத்திலும், மதச்சார்பின்மையிலும் உயர்ந்த மனிதன் பாபர்.

அரசக் குடும்பத்தின் சூழ்ச்சி காரணமாக பிறந்த ஊரைவிட்டு, வேற்று நாட்டை ஆக்கிரமித்து இங்கு வாழ்ந்த வாழ்க்கை பாபருக்கு பிடித்தமானதல்ல. ஆக்ராவின் வெயிலில் காய்ந்தபோது, ஆப்கானிஸ்தானத்தின் குளிரை எண்ணி ஏங்கியிருக்கிறார் அந்த மாமன்னர். தான் இறந்த பிறகு தன்னுடைய சமாதி காபூலில்தான் அமைக்கப்படவேண்டும் என்று ஆணையிட்டார் பாபர். அதன்படி, ஆக்ராவில் அவர் இயற்கை எய்தினாலும், அவருடைய உடல் புதைக்கப்பட்டது காபூலில்தான்.

இதுமட்டுமல்ல, முகாலய மன்னர்களின் ஆதரவு இல்லையென்றால், சைவமும் வைணமும் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களை அடுக்கி வைக்கிறார் அமிதவ் கோஷ். இராமாயணம் இந்தியில் துளசி தாசரால் மொழிபெயர்க்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துளசி தாசர் வாழ்ந்தது அக்பரின் ஆட்சியில். அக்பரால் பல பரிசுகள் பெற்றவர் துளசி தாசர். சைதன்ய மகாபிரபு கிருஷ்ண லீலையை எழுதி பிரபலப்படுத்தியதும் அக்பரின் ஆட்சியில்தான். இந்து மதத்தை ஆதரிப்பதன் சாட்சியாக, 35 கோயில்கள் கட்டுவதற்கான நிலம், வருவாய் ஆகியவற்றை அக்பர் கொடையாக அளித்ததன் வரலாற்றுச் சான்றுகளை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார் அமிதவ் கோஷ்.

இந்து மதத்தையும், சைவ, வைணவ நம்பிக்கைகளையும் தகர்த்தெறிய வேண்டுமென்றோ, அவமதிக்க வேண்டுமென்றோ, பாபரோ அல்லது அக்பரோ நினைத்திருந்தால், இந்தியாவில் இந்து மதம் இல்லாமலே போயிருக்கும். ஏனென்றால் அவர்களை எதிர்க்கும் சக்தி அப்போது யாருக்கும் கிடையாது. ஆனால் அவர்கள் மதச்சகிப்புத்தன்மையுடைய மாமன்னர்களாக இருந்ததால்தான் இந்து மதம் வளர்ந்தது. இதை உணராமல் பாபரின் பெயரால் இருந்த மசூதியை இடித்தது இந்தியாவின் அழிக்க முடியாத வரலாற்றுக் குற்றம் என்கிறார் அமிதவ் கோஷ்.

சுனாமி பேரலைகள் இந்தியாவை அலைக்கழித்த பொழுது, அமிதவ் கோஷ் அந்தமான் தீவுகளுக்குச் சென்று அங்கிருந்து மீட்பு நடவடிக்கைகளைக் கவனித்தார். எக்கச் சக்கமான உதவிப் பொருட்கள் அரசிடமிருந்தும் தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் வந்து குவிந்தாலும், நிர்வாகக் கட்டமைப்பு சீராக இல்லாததால், உரியவர்களுக்கு அவைப் போய்ச் சேரவில்லை என்கிறார் அமிதவ் கோஷ். போர்ட் பிளேயரைத் தவிர மற்ற தீவுகளில் எந்த விதமான உதவியும் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்களை உதவிக் குழுக்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் மனம் நொந்து தான் கண்ட, கேட்ட, வேதனைகளையெல்லாம் தொகுத்து, ‘அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில்’ (In Andaman and Nicobar islands) என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார்.

பன்னெடுங்காலமாகவே இந்தியாவிற்கும் எகிப்துக்கும் வாணிக உறவு இருந்தது. அன்று வாசனைத் திரவியங்களுக்காக கடல் கடந்து வாணிகம் செய்தனர். வாசனைத் திரவியங்கள் மிகுந்த நாட்டை காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தினர். ஆனால் தற்காலத்தில் இயற்கை எரிவாயுவும் பெட்ரோலும் முக்கியமானத் தேவையாகிவிட்டதால், பெட்ரோலுக்காக தேசம் விட்டு தேசம் போர் புரிய வருகின்றன ஏகாதிபத்திய சக்திகள் என்கிறார் அமிதவ் கோஷ். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியாவிற்கும் எகிப்துக்கும் உள்ள உறவை, மனித உறவுகளை ‘தி இமாம் அண்ட் தி இந்தியன்’ (The Imam and the Indian) என்னும் கட்டுரைக் களஞ்சியத்தில் 78 கட்டுரைகள் மூலம் விளக்குகிறார்.

பர்மா ஜனநாயக இயக்கத்தின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங்சான் சுகீயை மையமாக வைத்து, ‘அட் லார்ஜ் இன் பர்மா’ (At large in Burma) என்னும் கட்டுரை நூலை எழுதியுள்ளார். உலக நாடுகளிடமிருந்து பர்மா எவ்வாறு தனித்துப் போயிருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். கம்போடியா நாட்டின் பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாற்றை ‘டான்சிங் இன் கம்போடியா’ (Dancing in Cambodia) என்ற நூல் விவரிக்கிறது.

இவருடைய நாவல்கள் கதை சொல்லி நாவல்களாக இருந்தாலும், மானுடவியல் ஆய்வே அவற்றில் மேலோங்கி நிற்கின்றன. ‘தி சர்கிள் ஆஃப் ரீசன்’ (The Circle of Reason), ‘தி ஷேடோ லைன்ஸ்’ (The Shadow Lines), ‘தி கல்கத்தா குரோமோசோம்’ (The Culcutta Chromosome), ‘தி கிளாஸ் பேலஸ்’ (The Glass Palace), ‘தி ஹங்ரி டைட்’ (The Hungry Tide), ‘சீ ஆஃப் பாபிஸ்’ (Sea of Poppies) ஆகியவை இவரெழுதிய நாவல்கள்.

இவருடைய முதல் நாவலான ‘தி சர்கிள் ஆஃப் ரீசன்’, கதாநாயகன் ஒரு திறமையான நெசவாளி. ஆனால் இவனைத் தீவிரவாதியென்று சந்தேகித்து கழுகுக் கண்களுடன் துரத்துகின்றனர் காவலர்கள். இதனால் அவன் வங்கத்திலிருந்து தப்பி பம்பாய்க்குச் சென்று, பாரசீக வளைகுடா மூலம் வட ஆப்பிரிக்காவிற்குச் செல்கிறான். இந்த ஓட்டத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள், அப்பகுதிகளின் வரலாறுகள் ஆகியவற்றைச் சொல்கிறார்.

இவரது இரண்டாவது நாவலான, ‘தி ஷேடோ லைன்ஸ்’, கல்கத்தாவிலும், டாக்காவிலும் வாழ்கிற ஒரு குடும்பத்தைப் பற்றியதாகும். இவர்களுக்கு இலண்டனில் உள்ள மற்றொரு குடும்பத்துடன் தொடர்பு உண்டு. இந்தக் கல்கத்தா குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் இலண்டன் என்றால் எப்படி இருக்கும் என்ற கனவுகளிலேயே வளர்கிறான். பெரியவனானதும் இலண்டன் செல்கிறான். உண்மையான இலண்டன் எப்படி உள்ளது என்பதுதான் கதை.

‘தி கல்கத்தா குரோமோசாம்’ என்கிற நாவல் ஒரு திகில் நாவலைப் போன்று எழுதப்பட்டுள்ளது. இந்த நாவலில் மூன்று பேர் தொலைந்து போகிறார்கள். கல்கத்தாவில் மலேரியா நோய் பரவுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வரும் முருகன் தொலைந்து போகிறார். இவருடைய நண்பரான ஓர் எகிப்திய எழுத்தர் அந்தர். இவரைத் தேடி வந்து தொலைந்து போகிறார். ஒரு எழுத்தாளரைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பத்திரிகையாளர் ஊர்மிலாராயும் கல்கத்தாவில் அந்த நேரத்தில் தொலைந்து போகிறார். இந்த மூவரைப் பற்றிய கதையை திகில் கதை பாணியில் வரலாற்று நோக்கோடு எழுதியிருக்கிறார்.

‘தி கிளாஸ் பேலஸ்’ என்னும் நாவலில் பர்மாவின் யுத்தத்தில் வாழ்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையை விவரிக்கிறார். யுத்தம் ஒரு தனிமனிதனை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை இந்த நாவலில் காணலாம். காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட மக்களின் ஆசைகள், தோல்விகள், கலக்கங்கள் ஆகியவை தெளிவாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

‘தி ஹங்ரி டைட்’ என்னும் நாவலில் சுந்தரவனக் காடுகள், அங்கு வாழும் மக்கள் அப்பகுதியின் வரலாறு ஆகியவற்றை எடுத்துரைக்கிறார். தற்போது வெளிவந்துள்ள ‘சீ ஆஃப் பாபிஸ்’, அந்தக் காலத்தில் வலம் வந்த இபிஸ் என்னும் ஒர் அடிமைக் கப்பலின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. அபினுக்காக நாடுகளுக்குள் எப்படியெல்லாம் போராட்டங்கள் நடந்தன என்பதை முதன்மையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இபிஸ் என்றால் நாரை என்று பொருள். நாரை நீரின் மேல் நடக்கும் தன்மை கொண்டது. அதைப் போல நீரின் மேல் பயணம் செய்வதால் இந்தக் கப்பலுக்கு இபிஸ் என்று பெயர். நீரின் மேல் பயணம் செய்த பல்வேறு நாட்டு மக்களின் கதையே ‘சீ ஆஃப் பாப்பிஸ்’.

இந்தக் கப்பலில் மாலுமிகள், திருட்டுக் கப்பலில் பயணம் செய்பவர்கள், கூலிகள், குற்றவாளிகள், காலனியாதிக்கத்தால் தூக்கியெறியப்பட்ட ராஜ்யம் இழந்த ராஜாக்கள், குடும்பத்தை இழந்த கிராமவாசிகள், ஆங்கிலேய அபின் வியாபாரி உள்ளிட்ட பலர் பயணிக்கின்றனர். தங்களுடைய நாடு, மத, மொழி இன பேதங்களைக் கடந்து சக பயணிகளாகத் தங்களை இவர்கள் எப்படி மாற்றிக்கொண்டுள்ளார்கள் என்பதுதான் கதை. இந்தக் கதையின் மூலம் ஒட்டுமொத்த கீழை நாடுகளின் காலனியாதிக்க வரலாற்றை எடுத்துரைக்கிறார். இதைப்போன்று இன்னும் இரண்டு நூல்கள் எழுதத் திட்டமிட்டுள்ளார்.

இவருடைய எல்லா நாவல்களுமே பல்வேறு நாடுகளையும் அந்நாட்டு வாழ்க்கை, வரலாறு, மானுடவியல், பயணம், புலம் பெயர்தல், போர், காலனியாதிக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய நாவல்கள்தான். இவற்றிற்கென்று ஒரு சர்வதேச பரிமாணம் உண்டு. சர்வதேச வாசகர்களும் அதிகம்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தான் எழுதுவது குறித்து ஒரு நோக்கம் இருக்கம், “நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் மௌனத்துடன் எனக்குள்ள போராட்டம்தான். அரசியல் மாற்றங்களால், போர் வெறியினால். வன்முறைச் சம்பவங்களால் எவ்வளவோ சாமானிய மக்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர். வீடு, வாசல், ஊர், உற்றார் உறவினர் அனைத்தையும் இழந்து அவர்களுடைய வாழ்க்கையே அவல நிலையை அடைய வேண்டியுள்ளது. போர் நடைபெற்ற காலத்தை வரலாறு சொல்கிறது. ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை யார் சொல்வது? அப்படிப்பட்ட மக்களின் மனதில் கொதித்துக் கொண்டிருக்கும், வெளிப்படுத்த இயலாமல் அமிழ்ந்து போன போராட்டத்தை என் எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்துவதுதான் என் இலட்சியம். இலக்கியம் ஒரு கூரான ஆயுதம். எத்தனையோ மனிதர்களை கத்தியில்லாமல் இரத்தம் இல்லாமல் போராடத் தூண்டும் ஆயுதம். எனவேதான், எல்லா அடிப்படைவாத, மதவாத அரசுகளும் முற்போக்கு இலக்கியத்தை அழிக்க முற்படுகின்றன. ஆனால் எத்தனை வன்முறைகள் நடைபெற்றாலும் மனிதர்கள் அழியலாம். எழுத்து அழியாது. இலக்கியம் என்றும் வாழும்’ என்கிறார்.

வரலாற்றில் அடிப்படைவாத. மதவாத இனவெறி அரசுகள், எப்படியெல்லாம் சாமானிய மக்களை சின்னாபின்னப்படுத்தியுள்ளன என்பதை அறிந்துகொள்ள இவரின் நூல்களைக் வாசிப்பதன் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com