Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மார்ச் 2009
நாடக விழா
செம்மூதாய்
- எம்.ஏ.சுசீலா

Drama புதுதில்லியிலுள்ள தேசிய நாடகப்பள்ளியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் ‘தேசிய நாடக விழா’வின் 11ஆம் ஆண்டு நிகழ்வுக்காகத் தெரிவு செய்யப்பட்ட பன்மொழி நாடகங்கள், சங்கீத நாடக அகாதமியின் பல்வேறு அரங்குகளில், இவ்வாண்டு ஜனவரிமாதம், நாடக ஆர்வலர்களின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டன. அவற்றுள் தமிழிலிருந்து தேர்வான இரு நாடக ஆக்கங்களில் ஒன்றான முருகபூபதியின் ‘செம்மூதாய்’ நாடகம், ஜனவரி 12 அன்று மாலை ஆறு மணி அளவில் ‘மேகதூத்’ திறந்த வெளிக்கலையரங்கில் நிகழ்த்தப்பட்டது.

இந்நாடகத்தை எழுதி, இயக்கிய முருகபூபதியும், மணல்மாகுபடி என்னும் சிற்றூரைச் சேர்ந்த அவரது குழுவினரும்_தங்கள் படைப்பில் முன்வைக்க எடுத்துக்கொண்ட கருப்பொருளாலும், அதைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லக் கையாண்ட வீரியமான உடல்மொழியாலும் காலத்தை நம் கண் முன்பு உறையச் செய்து விட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

மனிதனின் இருப்பியல் களங்கள், வாழ்வியல் சூழல்கள், அவனாலேயே சுரண்டலுக்கும், சூறையாடலுக்கும் ஆளாகிவிட்ட பிறகு, அவனது இருப்பே அர்த்தமற்றதாகவும், வறண்டதாகவும், சிக்கல்கள் நிரம்பிய கேள்விக்குறியாகவும் மாறிப்போகும் யதார்த்தமான அவலமே இப்படைப்பின் உள்ளீடு. மண்வளம், நீர்வளம், பசுமைக் காடுகள் என இயற்கை இயல்பாக அமைத்துக் கொடுத்த எல்லாவற்றையுமே அன்றாட அற்புதத் தேவைகளுக்காகவும், சுயநலத் தேடல்களுக்காவும் பலியாக்கிக் காவு கொடுத்துவிடும் மனித இனம், பிறகு அதற்காகக் கையற்றுத் தவிக்கிறது; கூடடையும் பறவைகளின் ஒலி கேட்கத் துடிக்கிறது; இளைப்பாற நிகழ் கொடுக்கும் மரங்களைக் காணாமல், ஒப்பாரிவைத்து ஓலமிடுகிறது. இயற்கைச் சூழலை இயல்பான மனித நேயத்தை சக உயிரியாகப் பெண்ணைக் கருதும் சிந்தனையை இன்னும் இவை போன்ற சகலத்தையும் துறந்துவிட்டு ஆதிக்கக்கருத்தியல்களை மட்டுமே வளர்த்துக் கொண்டு, அழிவின் ஆயுதமான போரை வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்ளும் மனித வாழ்வு, தவிர்க்க முடியாத அவலங்களோடு தப்பிக்க முடியாத ஒரு தண்டனையாக முடிந்து போவதென்பது, ஒரு வகையில் காவிய நீதியாகவே அமைந்து விடுகிறது என்பதைப் பல தளங்களிலிருந்தும் இந்நாடகம் பூடகமாக உணர்த்திக் காட்டியது. தனித்துவமிழந்து வெற்று எண்களாகக் குறுகிப் போகும் மனிதர்கள், தங்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் காட்சியே நாடகத்தின் உச்ச கட்டம். மழைக்காலங்களில் மட்டும் ஜீவித்து விட்டுப் பிறகு காணாமல் போய்விடும் ‘செம்மூதாய்’ என்னும் அற்ப உயிரினம், இந்நாடகத்தில் பலவற்றையும் சுட்டும் அடிப்படையான ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது.

நமது மரபில் காலம் காலமாகப் பலவகைப் படிமங்களையும் உணர்த்துவதற்குப் பயன்பட்டு வரும் தாய்த்தொன்மம், இப்படைப்பிலும் குறிப்பான பங்கு வகிக்கிறது. தமிழக நாட்டுப்புற வெளியில்_அங்கு கையாளப்படும் சடங்குகளில்_பெண்கள், தெய்வங்களாக, தேவதாசிகளாக, குறிசொல்லிகளாக, மருத்துவச்சிகளாக, தாய் வழிச் சமூகத்தின் தொல் எச்சங்களாக.... என்று பல வகைகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். பெண் என்ற ஒரு மனித உயிர் இத்தனை வேடங்களையும் மாறி, மாறித் தரிப்பதும் கூட இவ்வகை நாடக ஆக்கத்திற்கு ஓர் உந்துதலை வழங்கியிருக்கிறது. பெண்ணின் உடலுக்குள், ஒரே நேரத்தில் பத்து ஆவிகள் கூடக் குடியேற முடியும் என்பதும், அவற்றின் பத்து வேறுபாடான குரல்களைக் கண நேரத்திற்குள் அவளால் மாற்றி, மாற்றி ஒலிக்க முடியும் என்பதும் நாட்டாரியல் சார்ந்த ஒரு நம்பிக்கை. நடிப்பை நிகழ்த்தும் ஓர் உடலுக்குள்ளும் கூட அவ்வாறான சடங்குகளின் சாயல் எஞ்சியிருக்கிறது என்பதைக் கருதுகோளாகக் கொண்டு, ஒரு பாத்திரத்தின் உடல்மொழியிலிருந்து வேறுபட்ட பல பரிமாணங்களை வெளிப்படச் செய்யும் முனைப்பு, இந்நாடக நிகழ்வின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.

ஒரே உடல் புழுவாகவும், பூச்சியாகவும், மீனாகவும், மனிதனாகவும், மனிதப்பறவையாகவும் பரிணாமம் கொள்ளும் அற்புதத்தை நாடகத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களுமே தங்களது அபாரமான நடிப்புத் திறமையாலும் குறிப்பாகக் கடுமையான பயிற்சியால் கைவரப்பெற்ற அசாத்தியமான தங்கள் உடல் மொழிகளாலும் அங்க அசைவுகளாலும் அருமையாகச் சித்திரித்துக் காட்டினர்.

தொடர்ச்சியான கதைப்பின்னல், உரையாடல் போன்ற சம்பிரதாயமான நாடகப்போக்கு எதுவுமற்ற இப்படைப்பின் வெற்றிக்குத் திறந்த வெளி அரங்கின் சுதந்திரச் சூழலும், மிகப்பொருத்தமான ஒளி அமைப்புக்களும், நாட்டுப்புற இசைக்கருவிகளின் துணையோடு கூடிய பின்னணி இசையும் பெரிதும் துணை புரிந்தன.

இன்றைய நவீன வீதி நாடக ஆக்கங்கள் பலவும் நாட்டுப்புறக் கலை மரபுகளிலிருந்து தங்கள் வடிவங்களை மீட்டெடுத்துக் கொண்டு வருவது உண்மைதான் என்றபோதும், முருகபூபதியின் நாடகங்கள், நகர்மயமாதல் காரணமாக வழக்கொழிந்து வரும் பல சடங்குகளை கிராமப்பகுதிகளிலேகூடக் காண்பதற்கு அரிதான ஆதிவாசிகள் மட்டுமே கையாளும் சடங்குகளையும்கூட மீட்டெடுத்து, நாடகம் என்னும் நிகழ்கலை வடிவத்தின் வழியாக அவற்றுக்கு வேறு வகையில் புத்துயிர் அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன; பூபதியின் இதற்கு முந்தைய சில நாடகங்களும் கூட, நகர நாகரிகங்களின் கறை படியாத அடர் காடுகளையும் அங்குள்ள காட்டுவாசிகளின் சடங்குகளையும் பின்புலமாகக் கொண்டவைதான்.

வரலாறும், இலக்கியமும் வாய் பேசாது மௌனிக்கும் இடங்களே பெரும்பாலும் முருகபூபதியின் கதைக்களங்கள்; நகர்சாரா மக்களின் வாழ்வியல் களங்களும், சடங்குகளுமே அவரது படைப்புக்களில் முதன்மை தந்து முன்னிறுத்தப்படுபவை. நவீன நாடக அரங்கியலில் புதுமொழி ஒன்று உருப்பெறுவதற்கு இவ்வகையான படைப்புகள் அடித்தளம் அமைத்து வருகின்றன என்று துணிந்து கூற முடியும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com