Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மார்ச் 2009
கட்டுரை
ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்
- கவிஞர் புவியரசு

கவிதை மனிதனின் ஆத்ம வெளிப்பாடு. ஓர் இனத்தினது மொழியின் இதயம். அது காலங்கள்தோறும் புதுப்புது கோலங்கள் புனைந்து, மொழியரங்க மேடையில் நாட்டியம் புரியும். கவிதை கலைகளின் அரசி. மிகச் சிலரே கவிதை கைவரப்பெற்றவர்கள். அவர்களே, ஒரு மொழியின் போற்றுதலுக்குரிய பெருமக்களாய் என்றும் திகழ்ந்து வருகின்றனர். கவிதை காலத்தை வெல்வதால், கவிஞர்கள் காலமாகிவிட்டாலும், காலமே ஆகிவிடுகின்றனர். எவ்வளவுதான் சாகசங்கள் புரிந்தாலும், விசாலமான தளங்களைப் பெற்றிருந்தாலும், மற்ற கலைகளால் கவிதையை வெல்ல இதுவரை முடியவில்லை.

Mohanarangan நமது தாய்த்தமிழின் நெடிய படைப்பு வரலாற்றைக் கொண்டு திகழ்பவர் முத்தமிழ்க் கவிஞர், முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன் அவர்கள். தமிழை உயிர்க்குயிராய் நேசிக்கும் மிகச் சிலரில் முக்கியமானவர் இப்பெருமகனார். ‘தமிழன்னையின் கோயில் வாசலில் படியாய்க் கிடக்கவும்’ தயங்காத உள்ளம் இவருடையது. இவரது படைப்பு, கவிதைகளையும் தாண்டி,. மறைந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சான்றோரின் அரிய நூல்களை மறுபதிப்புச் செய்து, நமது கருவூலத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தமிழின் பேறு.

‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்பது பாவேந்தர் வாக்கு. இதன் விளக்கம் நமது ஆலந்தூரார் கவித்துவ உள்ளம் படைத்தவர். ‘கடலோரம் ஆடுகின்ற நண்டின் கால்களில் கவிதையைக் கண்டெடுத்தவர்’. தன்னைத்தானே விலைபேசி விற்கும் மானிடச் சந்தை நடுவே இன்றைய மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இங்கே இப்போது விலைபோகாதிருப்பவர்கள் மிகச் சிலரே. இலட்சியத் தாகமும், மனித நேசமும், தமிழின் மீது பாசமும் கொண்டு இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் மிகச் சிலரில் ஒருவரான ஆலந்தூரார் தமிழகத்தின் சொத்து. இவர் நினைத்திருந்தால் சோதிட நூல்களும், வாஸ்துப் புரட்டுகளும் வெளியிட்டு வசதியாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால், இவர் கொள்கைக் கொம்பைப் பற்றியிருக்கிறார். அதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார். இந்த இலட்சிய இருத்தலே இவரின் மாண்பு.

‘கவிதை ரொட்டியாக இருக்க வேண்டும்’ என்று மகாகவி பாப்லோ நெரூடா சொன்னார். இது கேட்டுப் ‘பரிசுத்தக் கலைவாதிகள்’ பரிகசித்தனர். பரிகசித்தவர்கள் காணாமற் போனார்கள். மானிடம் பாடிய நெரூடா மங்காப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

கவிதை கனவுச் சாராயமன்று; அரபு நாடுகளின் அத்தர் அன்று; அந்திமாலைப் பொழுதின் ஆனந்த பானமன்று; அது கனல். அது எரிமலை. அது பிரளயம். அது பூகம்பம். பழைமைகளை அடியோடு புரட்டிப் போடும் புரட்சி. அந்தப் புரட்சிக்குத் தாகம் கொண்டு தவமிருப்பவர் ஆலந்தூரார். அதற்காகப் போராடும் போராளி இவர்.

போராடுவோம் ஒன்றாய்ப்
போராடுவோம்
தீராத வறுமைக்குத்
தீ வைக்கப் போராடுவோம்
வாராத இன்பங்கள்
வரவேற்க நாம் ஓடுவோம்!

என்பது கவிஞரின் இசை முழக்கம். இது போர்க்களப் பாடல். இது வானொலி வழியாக இலட்சக் கணக்கான செவிகளில் பாய்ந்தது. இதை எனது அருமை நண்பர் தாராபுரம் சுந்தரராஜன் பாடியதில் எனக்குப் பெருமை.

கவிதை இப்படித் தெளிவாக, அனைவருக்கும் விளங்குவதாக அமைய வேண்டும். ‘கவிதை வீட்டுக்கு வீடு ஒரு விளக்கை எடுத்துச் செல்லவில்லையானால், ஏழைகளுக்கு அதன் பொருள் என்னவென்று விளங்கவில்லையானால், அதை விட்டொழிப்பது உத்தமம்’ என்கிறார் பாலஸ்தீனக் கவிஞர் மொகமத் தர்வீஸ். பிறகு, கவிதை என்னவாக இருக்க வேண்டும்?

‘உழைப்பாளி கை சிற்றுளியாக
தீவிரவாதியின் கையெறி குண்டாக
உழவர்களின் கைக் கலப்பையாக
ஒரு சட்டையாக
ஒரு கதவாக
ஒரு சாவியாக
கவிதை ஆக வேண்டும்’

என்கிறார் அந்தப் பாலஸ்தீனக் கவிஞர். அப்படி ஆகியிருக்கிறது ஆலந்தூரார் கவிதை.

“உங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞன் என்னை
ஒருமூலையில் ஒதுக்கி வைத்த போதும்
உங்களுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருப்பேன்.
ஒருபரிசும் அளிக்காத போதும்’

என்கிறார் கவிஞர்

“கால் முளைத்த கவிதைகளைப் படைத்து வைப்பேன்
கண்டிப்பாய் உங்களிடம் வந்து சேரும்!’

என்கிறார் கவிஞர். வழித்தடத்தில் இடையூறுகள், தடங்கல்கள், தடைகள், புறக்கணிப்புகள், புறந்தள்ளல்கள் நேருமாயின், இவரது கால் முளைத்த கவிதைகளுக்குச் சிறகுகள் முளைத்து விடும்! சொந்தச் சொப்பனங்களை எரித்துத் தீக்காய்பவன் கவிஞன். அந்தச் சூட்டில் பிறப்பன அவன் கவிதைகள். அவை, கவிஞர் சிற்பி சொல்வது போல, ‘வேதனை எழுதி விம்மலை எழுதி விதிக்கொரு முடிவெழுதிக் கொண்டிருக்கும்!

நிகழ்காலச் சமுதாயச் சீர்கேடுகளை அங்கதச் சுவை மிளிர அழகாகச் சொல்கிறார். ‘அரசியல்வாதி’ என்ற அருமையான கவிதையில்.

பிழைக்கத் தெரிந்து பெரியவன் ஆனேன்!
விழாக்கள் எடுத்தார்! விளம்பரம் கொடுத்தார்!
எங்கே பதவி இலைகள் விழுமோ
அங்கே பாய்வேன்! பாய்வேன்! பாய்வேன்!

என்று பேசுகிறது இவர் கவிதை. பாவேந்தரின் ‘எச்சில் சோறே’ என்ற சொல் நினைவிற்கு வருகிறது.

நிகழ்கால மனிதனுக்கு என்ன நேர்ந்தது. ஏன் இவன் சுயமுகம் மறைத்து முகமூடிகளை வேளைக்கு ஒன்றாய் அணிந்து கொண்டு உலா வருகிறான் வெட்கமில்லாமல்? மனித நேயம் என்னவாயிற்று? ‘மனிதனுக்கே இல்லையென்றால் மனித நேயம் வனவிலங்கின் குகைகளிலா கிடைக்கக் கூடும்’ என்று கேட்கிறார் கவிஞர்.

“சிந்தித்தேன்! சிந்தித்தேன்! உலக மக்கள்
சிந்தையிலே ஒளியில்லை! பலரை இங்கே
சந்திக்கும் போதெல்லாம் இருட்டுக் குள்ளே
தலைகுனிந்து நிற்பதிலே மகிழ்ச்சி என்பார்!

இதுதான் இன்றைய நிலை. இவற்றையெல்லாம் கூர்ந்து பார்த்துணரும் பார்வை பெற்றவர் மோகனரங்கனார். அந்தத் தெளிந்த பார்வையில் பிறந்தவையே இவரது பாடல்களும், கவிதைகளும். ‘பார்வை கிடைத்த வேளையிலே ஒரு பாட்டுப் பிறந்தது நாவினிலே’ என்று இவர் பாடியது பொருந்தும்.

புத்துலகம் அமைக்க வேண்டி, புதுவாழ்வு பெற வேண்டி, எல்லார்க்கும் ஏற்றம் மிகும் வாழ்க்கை அமைய வேண்டி, ‘முத்தெடுக்கும் வேளையிது முன்னேறி வா மகனே!’ என்று இளைய தலைமுறையை அழைக்கிறார் கவிஞர்.

“ஏ, பிட்சுக்களே! எல்லாம் எல்லாம் எரிந்து கொண்டிருக்கின்றன. காண்பவனும், காணும் பொருள்களும், கண்களும்’ என்று சொன்னார் கௌதம புத்தர். “எரிகிறது, எரிகிறது, எரிகிறது’ என்று எழுதினார் டி.எஸ். எலியட், தமது ‘பாழ்நிலம்’ என்ற கவிதையில். “தர்மத்திண்ட நிறம் கறுப்பாணு’ என்று மனம் நொந்து எழுதினார் கேரளக் கவிஞர் சுகிதகுமாரி.

வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கிறது. அதை ஆழமாகப் பார்க்கும் மேலோர் மனம் நொந்து புலம்புகிறது, என்றாலும் வாழ்க்கை ஆறு வற்றாது ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. நம்பிக்கை கொண்டு முன்னேறிச் செல்வதன்றி வேறு வழியில்லை. கவிஞரின் வாக்கு நமக்கு ஊன்றுகோலாய் உதவுகின்றது.

தென்றல் ஓர்நாள் சீறிடும் புயலாய்
மின்னல் வீசி மிடுக்கை ஒழிக்கும்
அறுபடும் அறுபடும் அண்டம் நடுங்கிட
அறுபடும் தம்பி! பொறுபொறு நம்பி!

என்பது கவி வாக்கு. சத்திய வாக்கு.

இதயக் கதவினை மூடி விடாதே
இளைத்தவர் ஆயிரம் ஏங்கி வந்தாலும்
உதவும் மனத்தை உதறி விடாதே
உலகமே உன்னை எதிர்த்துவந் தாலும்

என்பது ஆலந்தூரார் அருமைத் தமிழர்க்கு அளித்திடும் அரிய செய்தி.

தமிழ் கற்று, தமிழில் தோய்ந்து, தமிழ்ப்பணியாற்றித் தமிழாய் வாழ்ந்து வரும் கவி வித்தகர் மோகனரங்கப் பெருமகனார் நீடு வாழ்க!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com