Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மார்ச் 2009
நூல் அறிமுகம்
பேச்சின் திருத்திய ஆவணம்
க.அய்யப்பன்

படைப்பு/படைப்பாளி/வாசகன் எனும் நிலையைத் தாண்டியதொரு களன் நேர்காணலில் இடம்பெறுவது அதன் இயல்பு. நேர்காணல் கொடுப்பவர், எடுப்பவர் ஆகிய இருவருக்குமான புலமைச் செயல்பாட்டின் இணைவு நேர்காணலில் முக்கியமாகிறது. திட்டமிடுதல் என்பதும் அதில் நடக்கிறது. இப்படியான நேர்காணலை எடுப்பது பின் அதனைத் தொகுத்து நூலாக ஆக்குவது என்பதும் முக்கியமான ஒன்றே. அந்த வகையில் முத்தையா வெள்ளையன் தான் சிறுபத்திரிகையில் ஈடுபட்டது தொடங்கி, தன்னால் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் அனைத்தையும் தொகுத்து ‘அது_இது_எது!’ எனும் தலைப்பிட்டு நூலாகத் தந்திருக்கிறார்.

தினமணி சிறுவர்மலரின் இறுதிப் பக்கம் வழி வெகுவாக அறியப்பட்ட முத்தையா வெள்ளையன் இத்தொகுப்பின் மூலம் தன்னுடைய வேறொரு செயல்பாட்டை அடையாளப்படுத்தியிருக்கிறார். 150 பக்கங்களைக் கொண்ட ‘அது_இது_எது’ எனும் தொகுப்பு ஒன்பது ஆளுமைகளின் நேர்காணலைக் கொண்டுள்ளது. நேர்காணல் அனைத்தும் முத்தையாவால் எடுக்கப்பட்டவை. தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் அப்படியான பத்திரிகை வெளிவருவதற்கு மூல ஊக்கியாக செயல்படும் பலரின் உழைப்பு பெயர் அளவில் கூட நிற்காமல் போவது சோகம்தான். அப்படியான சோகத்தின் விளைச்சலாக தொகுப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாமரை, புரட்சிப்பாதை உங்கள் நூலகம் முதலிய இதழ்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பாகவும் அமைகிறது. 2003 தொடங்கி 2008 வரையிலான ஐந்தாண்டு கால உழைப்பு இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது. ராமாநுஜம் அவர்களின் முன்னுரையில் தொடங்கி மாத்தளை சோமு, ச.அ. டேவிட், அ. வெண்ணிலா, ஆஷாபாரதி, கார்த்திகேசு சிவத்தம்பி, மௌனகுரு, சுப. வீரபாண்டியன், யூமாவாசுகி, ஆ. சிவசுப்பிரமணியன், சிந்தாமணி ஆகிய ஆளுமைகளின் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு துறையில் ஈடுபாடுடைய ஆளுமைகளை முத்தையா அவர்கள் எதிர்கொண்டுள்ள விதம் சுவாரசியமானவை. ”நேர்காணல் எடுப்பவர் தன்னை நிறுத்திக் கொள்வதற்கு அல்லாமல் பதில் கொடுப்பவரின் சிந்தனையோட்டத்தை, கருத்து உலகத்தை, நிலைபாட்டை முன்னிறுத்துவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். தகவல் திரட்டு மட்டுமே ஒரு நேர்காணல் ஆக முடியாது.’ என்கிற ராமாநுஜத்தின் கூற்று இத்தொகுப்பை வாசிக்கும்பொழுது சாத்தியமாகியுள்ளதை அறியமுடியும்.

அறிவுசார் தளத்தினர், புலம்பெயர் அறிஞர்கள், பெண் அறிஞர்கள், அரவாணி, உழைப்பாளி என பல்வேறு நிலைசார் ஆளுமைகளின் உள்ளார்ந்த பல உண்மைப் பேச்சுகளை வெளிக்கொணர்ந்து பதிவு செய்திருக்கிறார் முத்தையா. ஆஷாபாரதி அவர்களிடம் கேட்கப்பட்ட வினாக்களைத் தொகுத்துக் காணும் போது நூலின் ஆழமான புரிதல் அறியவரும். “அரவாணிகள் என்பவர் யார்? பாலியல் திரிபு என்றால் என்ன? இது உணர்வு ரீதியான மாற்றம்தானே... உளவியல் சிகிச்சையால் சரிபடுத்த முடியாதா? அலிக்கும், அரவாணிக்கும் வித்தியாசம் இருக்குன்னு சொல்றாங்க?, இல்ல... அலிகளோட வரலாற்றைப் பார்த்திங்கனா அந்தக் காலத்திலே அரசனின் அரண்மனையில் அந்தப்புரத்தைக் காவல் காக்க அலிகள் உருவாக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறதே, அரவாணிகளுக்குள் சாதி, மதம் கிடையாது. ஆனால் அரவாணி என்ற பெயர் மதம் சார்ந்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே..... ஹிஜீரா என்ற வார்த்தை என்று கூறுகின்றனரே, பொதுவாக வாழ்க்கை முறை எப்படி? மேலைநாடுகளின் வாழ்நிலை சூழல் எப்படி உள்ளது? இங்கு எப்படி?

உங்களுக்கு வாக்கு செலுத்தும் உரிமை உண்டா? அரவாணிகளைப் பொறுத்தவரை எல்லோரிடமும் சேர்ந்து படிக்குற சூழல் இல்லை. அதுக்கு என்ன செய்கிறார்கள்? சகமனிதனுடைய அங்கீகாரத்துக்கு இதுவரைக்கும் என்ன முயற்சி செய்திருக்கீங்க? அரவாணிகள் திருமணம் செய்து கொள்கின்றனரா? குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ள முடியுமா? நீங்க அரவாணியா உணர்ந்த காலத்திற்கும் இப்ப உள்ள காலத்திற்கும் வித்தியாசம் ஏற்பட்டிருக்கா! அரவாணிகளிடம் குழு என்பது தலைவராகவும், மற்றவர்களை அடிமைகளாகவும் கூறப்படுகிறதே... அரவாணிகள் அதிகமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்களே..., அரவாணிகள் சங்கம் பற்றி, அரவாணிகளுக்கென்று சடங்குகள் உள்ளனவா, ஆண்பார்வை, பெண்பார்வை மாதிரி அரவாணிகள் பார்வை உண்டா? அரவாணிகளுக்கென்று மொழி இருப்பதாகக் கூறப்படுகிறதே... அரவாணிகள் இலக்கியம், சினிமா பற்றி.... அருண்மொழி கூட படம் எடுத்தாரே, வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீங்களா?’ முதலிய வினாக்களின் வழி முத்தையா உரையாடியிருக்கிறார்.

மிக எளிமையான ஆழமான வினாக்களாக அமையும் இவை பேட்டி கொடுப்பவரின் பேச்சுக்கு இணங்கவும் திடீர் என பேச்சுக்குச் சம்மந்தமே இல்லாத வினாவினைக் கேட்பதும் முக்கிய ஆளுமையாக இருக்கிறது. தமிழ்ச் சூழலில் அரவாணிகள், அலிகள் என்பவர்கள் குறித்த புரிதலில் ஆண்தன்மையில் இருந்து பெண் தன்மைக்கு மாறுவதே. ஆனால் தொல்காப்பியர் பால்திரிபை ஆண் பெண் தன்மைபெறுவது, பெண் ஆண் தன்மை பெறுவது எனக் குறிப்பிடுகிறார். அதற்கு உரையாசிரியர்கள் பலவிளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இப்போது ஆண்_பெண்ணாக திரிபடைவது மட்டுமே மேலெடுக்கப்பட்டிருக்கிறது.

நேர்காணல் ஓர் ஆவணம். எழுத்து வழியோ பிற ஏதோ ஒன்றினையோ அறியப்பட்ட ஒருவரை முழுக்க முழுக்கப் பேச்சின் வழி அறிய வைப்பது நேர்காணல். இதில் பேச்சுமொழி என்பது முக்கியம். “வா புள்ள பொணம் எரிக்கணும்னு ஏ ஆளு கூப்பிட்டுச்சு, அதுக்கு நான் எனக்கு பொணம் எல்லாம் எரிக்கத் தெரியாதுன்னு சொன்னேன். அதுக்கு நீ ஒண்ணும் எரிக்க வேண்டாம். எப்படி எரிக்கிறோம்னு பாத்துக்க. அப்புறம் பழகிடும்னு சொன்னுச்சு....’ (ப.147) என்கிற சிந்தாமணி அவர்களின் பேச்சில் மொழியின் வடிவம் கவனிக்கத்தக்கது. இப்படியான நேர்காணல்கள் அவசியமான ஒன்று. இவை ஓர் ஆவணமாகவே அறியத்தக்கவை.

அது இது எது!
நேர்காணல்கள் : முத்தையா வெள்ளையன்,
கருப்பு பிரதிகள், பக். 152, ரூ. 65



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com