Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
நேர்காணல்
எழுத எழுத தீராத வாழ்க்கை
பாண்டியக்கண்ணன்


அழுக்கையும், வெக்கையையும் உறிஞ்சி வாழ்க்கையின் நொடிகளைத் துரத்திக் கொண்டிருக்கும் மலக்குழி மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்த “சலவான்’’ நாவலின் எழுத்தாளர் பாண்டியக்கண்ணன். தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவர் முன் வைத்த உரையாடல் இது.

சினிமாக் கனவில் சுழலும் மனதுடன் இயங்கிய மனிதனை நவீன இலக்கியத்-தின்பால் திருப்பிய தற்செயல் நிகழ்வு-களை மிகுந்த நேர்மையோடு பதிவு செய்திருக்கிறார். விருதுநகரில் வெயில் வடிந்து கொண்டிருந்த மாலையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நிகழ்ந்த உரையாட-லின் சிறு பகுதியை புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உரையாடியவர் : ம. மணிமாறன்
உதவி : ம. மாரிமுத்து

Pandiyakkannan உரையாடலை உங்களின் பூர்வீகத்திலிருந்து துவங்கலாமா?

மூதாதையரின் தோள் மீது ஏறி நின்று வாழ்வைப் பார்க்கிற வாய்ப்பெல்லாம் எனக்கு கிடையாது. சொந்த ஊர் திருமங்கலம் அருகில் உள்ள கட்டாரம்பட்டி. என்னுடைய தாத்தா திருமங்கலம் காவல் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தார். அது ஒரு வேலையல்ல. ஏற்பாடு. மீத நேரங்களில் சுத்துப்பட்டி கிராமங்களின் கண்மாய்க்-கரைதான் அவரின் வீடு. பன்றிகளை அதன் கரைகளில் மேய்த்தபடி இருப்பார். அவருடைய பட்டியில் குறவர்களின் பன்றியும் இருக்கும். மறவர்களின் பன்றியும் இருக்கும். கூலிக்கு ஆடு மேய்ப்பது போல பன்றிகளை கூலிக்கு மேய்ப்பதே அவரின் தொழில்.

மலமும், பன்றியும் பிறரின் மூக்கைப் பொத்த செய்ததை பார்க்க சகிக்காத என்னுடைய அப்பா அருகில் உள்ள விருதுநகருக்கு வந்து சேர்ந்தார். ஊருக்கு கிழக்கே கடைசியில் இருக்கும் முத்துராமன்-பட்டி ரயில்வே கேட்டே அவருடைய வீடானது. அது 1950ஆக இருக்கலாம். விருதுநகரில் காங்கிரஸ் கொடிகட்டி பறந்த காலம். திமுகவிற்கு பெயர் சொல்லக் கூட ஆளில்-லாத நேரம். குட்டை ரத்தினம், ரி.றி.ஷி. பாண்டியன் இவர்களுடன் என் அப்பாவும் கட்சியின் கடைசித் தொண்டனாக இருந்தார்.

விருதுநகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கட்சியின் கொள்கைகளை விளக்கி நாடகம் போடுவதே அவருடைய கட்சிப் பணி. உதயசூரியன் மன்றத்திலிருந்து கிளம்பிய அந்த நாடகக் குழுவிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் வரை கலைகுழுவிற்கு வேலை இருந்தது. திமுக அரசு அமைந்தவுடன் எங்கள் அப்பாவிற்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு கட்சித் தலைவர்கள் விருதுநகர் முனிசிபாலிடியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலையில் சேர்த்தார்கள். இதற்கு சாதியைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

அழுக்கும், நாற்றமும் திருமங்கலத்தில் இருந்து துரத்தி வந்து எங்க அப்பாவை விருதுநகர் முனிசிபாலிடியில் தள்ளியது. துப்புரவுத் தொழிலாளி-யாக. அழிக்க முடியாத சாதி அடையாளத்தோடு எங்களின் வாழ்க்கை தொடர்கிறது இதுநாள் வரை விருதுநகரில்.

வாழ்நாள் முழுவதும் சாதி அடையாளத்தோடு தான் நீங்கள் எதிர் கொள்ளப்பட்டீர்களா?

நிச்சயமாக. நான் விருதுநகர் அரசுப்பள்ளியில் தான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நாடகம் போடுகிறவனாக அறியப்பட்டேன். என்னுடைய நண்பர்களின் உதவியுடன் தெருவில் நடக்கும் கோவில் திருவிழாக்களுக்கு நாடகம் எழுதுவேன். அப்படித்தான் முழுக்க இடைச் சாதியினர் மட்டும் குடியிருக்கும் மணிநகரம் எனும் தெருவில் நண்பர்களுடன் சேர்ந்து நாடகம் போடுவது என்று முடிவானது.

நான் நாடகம் எழுதி, ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னை நாடகத்தில் இருந்து நீக்கினார்கள். வேற தெருவைச் சேர்ந்தவன் என்பது வெளியில் சொன்ன காரணமாக இருக்க, தோட்டி மகன் தெருவில வந்து நாடகம் போடுவ? என்பதைவிட சாதியப் பார்வைதான் நிஜமான காரணம். இங்கு எல்லோரும் அவரவரின் சாதி அடையாளத்தோடு தான் பார்க்கப்படுகிறோம் என்பது கசப்பான உண்மைதான்.

இலக்கியம், எழுத்தும் எனும் மந்திரச் சூழலுக்குள் வந்து சேர்ந்தது எப்படி?

நாடகம் போடுகிறவனாக இருந்த என்னை, என்னுடைய நண்பர்கள் சினிமாக் கனவிற்குள் தள்ளிவிட்டார்கள். “காதல் கீதம்’’ _ எனும் சினிமாக் கதையை தயார் செய்து டி. ராஜேந்திரைப் போய் பார்த்து கதை சொன்னேன். எங்கள் குடும்பத்தோடு திமுகவிற்கு உறவு இருந்ததே இதற்கு காரணம். வெறும் 4000 ரூபாய் ரொக்கத்தில் என்னுடைய சினிமா கனவு தகர்ந்து போனது.

அப்போது எனக்காக தன் கைவளையல்களையும், நகையையும் கழட்டி தந்தவர் அப்போதைய என்னுடைய தோழியும் இந்நாளையை என்னுடைய மனைவியுமான சுமதி. நகையுடன் மெட்ராஸிற்கு பஸ் ஏறியவன் திருச்சியில் இறங்கி விட்டேன்.

தற்செயல் நிகழ்வுகளே வாழ்வின் மிக முக்கியமான தருணங்களாகின்றன. ஊர் திரும்பியவன் வீட்டின் பொருளாதாரத் தேவைகளுக்காக வேலை தேடத் துவங்கினேன். திமுகவில் இருந்த வி.பி. ராசன் முன் முயற்சியால் அரசுப் பணியில் சேர்ந்தேன். சுகாதாரத் துறையில் மோட்டார் பணிமனையில் பணி செய்கிறேன். எங்களுடைய தலைமுறையில் அரசுப்பணியில் சேர்ந்த முதல் ஆள் நான் என்று சொல்ல முடியாது.

எங்கள் குடும்பத்தில் பிறக்கும்போதே நாங்கள் துப்புரவுத் தொழிலாளியாகத் தானே பிறக்கிறோம். இப்படி வேண்டும் என்றால் சொல்லலாம். துப்புரவுத் தொழிலாளி அல்லாத அரசுப்பணியில் சேர்ந்த முதல் ஆளாக நான்தான் இருந்தேன்.

நவீன இலக்கியத் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

என்னுடைய பணியிடத்தில் முத்துமகரந்தனைச் சந்திக்காமல் இருந்தால் நான் வெறும் சினிமாக் கிறுக்கனாகவே போயிருப்பேன். எனக்கு முதலில் சினிமா சார்ந்த புத்தகங்களைத் தரத் துவங்கினார். “சினிமாக் கோட்பாடு’’ _ பேலபெலஸ் எழுதியது, ரித்விக்கட்டாக்கின் சிறிய புத்தகம் எனத் துவங்கி என்னை நவீன இலக்கியத்தை வாசிக்கும் வாசக-னாக்கினார்.

ஒரு புத்தகம் போதும் ஒரு மனிதனை வேறு ஒன்றாக்கி விடும். அப்படி என்னை உருமாற்றிய புத்தகம் “நீலகண்ட பறவையைத் தேடி’’ எனும் வங்க நாவல். அதை வாசித்த நாட்கள் இந்நிமிடம் அளக்கும் வரை சேகரமாகியிருக்கிறது. பின்னாளில் காப்காவின் “விசாரணை’’ வரை எல்லா நவீன இலக்கியப் பிரதிகளும் எனக்கு முத்து மகரந்தன் வழியாகவே வந்து சேர்ந்தது.

நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகங்கள் அதற்கு முன்பு வரை அறிந்து வைத்திருந்த சகலமும் குப்பை என்கிற உணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து நான் என்னை தீவிர வாசகனாக அடையாளப்படுத்திக் கொண்டு வாசித்த நாட்கள் மிக முக்கியமானவை.

தற்செயல் நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்டது மனித வாழ்க்கை என்கிறீர்கள். அப்படி ஏதாவது வாசகர் களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியவை?

சகலமும் தற்செயல் நிகழ்வுதான். நான் நாகர்கோயிலுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதும் அப்படித்தான். அங்கு சுந்தர ராமசாமியைச் சந்தித்த-தும் கூட அப்படித்தான். நான் படித்த நவீன இலக்கியப் பிரதிகளில் பலவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியின் சுந்தரவிலாஸ் நூலகத்தில் இருந்து படிக்க கிடைத்தவைதான். டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்’’ புத்துயிர்ப்பு, பா. விசாலத்தின் “மெல்லக் கணவாய்’’ என தினமும் படித்துக் கொண்டும், சமயம் கிடைக்கும் போது சுந்தர ராமசாமியின் அதிகாலை நடையின் போது படித்தவற்றில் இருந்து எதையாவது பேசிக் கொண்டேயிருப்பேன். முழுக்க இலக்கிய சூழலுக்குள் இருந்த நாட்கள் நான் நாகர்கோயிலில் இருந்த நாட்கள்தான். ஆனால் துளியும் சம்மதமில்-லாமல் தான் என்னுடைய பிறந்த ஊரான விருதுநகரைவிட்டு நாகர்கோயிலுக்கு வந்து சேர்ந்தேன்.

நாகர்கோயிலில் வைத்துத்தான் நவீன இலக்கியவாதிகள் பலரையும் பார்த்திருக்கிறேன். என்னுடைய பயணங்களில் எல்லாம் ஒரு வழிகாட்டியைப் போல என்னுடனே பயணித்துக் கொண்டிருந்தார் கவிஞர். முத்துமகரந்தன்.

தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த உங்களுக்கு எழுத வேண்டும் என்கிற மனநிலை எப்படி ஏற்பட்டது?

நாகர்கோயிலில் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் எழுத்தாளர் “ஜி. நாகராஜ-னின்’’ படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நடத்தினார். நவீன இலக்கிய-வாதிகள் சகலரும் வந்திருந்தனர். நாகராஜனின் படைப்புகள் குறித்து துவங்கிய விவாதம் ஒரு கூரான கத்தியாக மரணத்திற்குள் இறங்கியது. “மரணம்’’ எனும் ஒற்றைச் சொல் சுற்றிச் சுழன்றது அரங்கில்.

நாடகக் கலைஞர் முருகபூபதி ஒரு கேள்வியை முன் வைத்தார். மரண வீடுகள் துக்கத்தின் அடையாளமாகி இருக்கின்றன. தமிழ் வாழ்வில் மரணத்தைக் கொண்-டாடிக் கழிக்கிறப் பதிவுகள் இல்லையே என்றார்.

இங்கிருந்தே என்னுடைய “சலவான்’’ நாவல் துவங்கியது. நான் முதன் முதலில் எழுதியது சலவான் நாவலுக்குள் வருகிற “ராஜாஜி தெருவின் மரண வீட்டைத்தான்’’. குடியும், கறிச்சோறும், சண்டையும் கொண்-டாட்டமும் என கடந்த எங்கள் வாழ்வின் அசலான பகுதிகள் நான் சிறுவனாக இருந்த நாட்களில் நிகழ்ந்தவை தான்.

என்னுடைய கண் ரெப்பைக்குள் சேகரமாயிருந்த நிகழ்வுகளை வார்த்தை-களுக்குள் அடுக்கினேன். வார்த்தைகளுக்குள் சிக்க மறுக்கும் சத்தியமானது எங்களுடைய வாழ்க்கை என்பதை நான் எழுதிக் கொண்-டிருக்கும் போதே உணரத் துவங்கினேன்.

எழுதத் துவங்கிய நீங்கள் எல்லோரையும் போல நீங்கள் சந்தித்த மனிதர்கள், அவர்களின் காதல் வாழ்க்கை என எழுதியிருக்கலாமே? ஏன் “சலவானை’’த் தேர்ந்தெடுத்தீர்கள்?

எழுத்து இரண்டாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒன்று எழுத்தாளனுக்குள். மற்றொன்று அவனுக்கு வெளியே. நான் எனக்குள் இருந்து எழுத்தை தேர்ந்-தெடுத்தேன்.

இலக்கியப் பிரதிகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எங்களின் வாழ்க்கையை யார் பதிவு செய்வார்கள். நான் தான் பதிவு செய்ய முடியும் என்பதால் என் நாவல் நிகழும் களமாக என்னுடைய மக்களின் நிலத்தையே தேர்வு செய்தேன். கேட்க கொஞ்சம் குமட்டலாகத் தான் இருக்கும். கரிசல் மண்ணில் எங்களுக்கு எல்லாம் மஞ்சள் நிறம்தான். துர்நாற்றம் தான் எங்கள் சுவாசிக்கும் காற்று. நீங்கள் மூக்கைப் பொத்த வேண்டாம் அதுதான் உண்மை.

சலவான் நாவலில் மலக்குழியை சுத்தம் செய்வது குறித்து இவ்வளவு விலாவாரி யாக விவரிக்க வேண்டுமா?

ஏன் படிக்க சிரமமாக இருக்கிறதா? குமட்டல் வருகிறதோ? படிக்கவே மற்றவர்கள் சிரமப்படும் வாழ்க்கைதான் எங்கள் மக்களுக்கு சாதியின் பெயரால் விதிக்கப்பட்டிருக்கிறது. சுத்தமான வெள்ளை இலக்கியப் பிரதிகளில் கொஞ்சம் மலம் நாற்றம் அடிக்கட்டுமே. என்ன குடியா முழுகிவிடப் போகிறது.

நாவலைப் படித்த தலித்தல்லாத வாசகர்கள் கண்ணீருடன் அந்தப் பக்கங்களைக் கடந்ததாக என்னிடம் கூறினார்கள். இந்த இலக்கியப் பிரதி அதன் வேலையை சரியாக செய்துவிட்டது என்றே நான் கருதுகிறேன்.

தலித் இலக்கியம் தலித்தல்லாத வாசகர்களிடம் கருணையையும் இரக்கத்தையும் கோர வேண்டும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக இல்லை. மலத்தையும், புறக்கணிப்பை-யும் சுமந்த மனிதர்கள் இவர்கள். சலவானில் ஆதிக்க சாதித் திமிரை எதிர்த்து “மகா யுத்தம்’’ நடத்துகிறார்களே? என்னைப் பொறுத்த வரை இது இதிகாசத்திற்கும் மேல் என்று கருதுகிறேன்.

எங்களுடைய இதிகாச நாயகர்களான பாண்டி-யையும், மாரியையும் மலமும், ரத்தமுமாக பதிவு செய்திருக்கிறேன்.

இது நாங்கள் நடத்திய குருஷேத்திர யுத்தம். களப்பலிகளாக நாங்களே ஆனோம். அடி வாங்கி, மிதிபட்டு கிடந்த எங்களின் முதுகெலும்பிற்கு உரம் ஊட்டுகிற இந்தக் கதைகள் வழிவழியாக எங்களின் குடும்பங்களுக்குள் அடைகாக்கப்பட்டு வந்தது.

கதையின் சரடைப் பிடித்திழுத்து வந்து தமிழ் இலக்கிய வெளிக்குள் மிதக்க விட்டிருக்கிறேன். இந்தக் கதைகள் யாரிடமும் இரக்கம் வேண்டி நிற்பவையல்ல. “மரவன் சண்டைய, குறவன் சண்டைய பாத்திருவோம் வாடா’’ என்பது எங்கள் பகுதியின் சொல் வழக்கிற்கான வரலாற்றுச் சாட்சியம்.

இனி எழுதப்படும் இலக்கியம் அனைத்தும் செவிவழிக் கதைகளாக மனித மனங்களில் தங்கிக் கிடக்கிற எழுதப்படாத வரலாறே இருக்கும் என்று கருதுகிறேன். அத்தகைய எளிய மக்களின் வாழ்வின் துயரம் படிந்த, வீரமிகுந்த கதையாடல்களை “சலவானில்’’ நான் பார்த்தேன்.

நாவல் எழுதி முடித்த பிறகு உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

ஒரு சின்ன திருத்தம். எழுதி முடிக்கவில்லை. யாராலும் எழுதி முடிக்க முடியாதது எங்கள் மக்களின் வாழ்க்கை. அதன் ஒரு சிறு துளியை நான் முன் வைத்திருக்கிறேன். நாளை வேறு யாரோ ஒரு எழுத்தாளன் எழுதக் கூடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com