Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
அறிவியல் அறிஞர்கள்
நோபல் பரிசு அவலங்கள்
இரா.நடராசன்


‘ழீன் பால் சார்த்தர் என்று கையப்ப மிடுவதும்... நோபல் பரிசு பெற்ற ழின்பால் சார்த்தர் என்று கையப்ப மிடுவதும் இரண்டும் ஒன்றல்ல... எந்தச் சூழலிலும் ஒரு எழுத்தாளன் தான் ஒரு நிறுவனமாக்கப்படுவதை மறுக்க வேண்டும். அது எவ்வளவு கவுரவ-மானதாக இருந்தாலும் சரி...’

_ழீன் பால் சார்த்தர்
(நோபலை _ மறுத்தபோது)

‘இந்த பரிசு... என்னை மேலும் அந்நிய-னாக்கிவிட்டது’ _
ஆல்பர்ட் காம்யு (நோபலை _ பெற்றபோது)

In Recognition Of Your Powerful And Significant Wrigings In support of HUMANI TARIAN IDEALS the nobel foundation of STOCKHOLM on BEHALE OF THE SWEDISH ACADEMY is pleased to inform you that you have today been voted this years NOBEL PRIZE IN LITERATURE PULSTOP THE PRIZE WILL BE A GOLD MEDALLION and A CHEQUE FOR SIXTY THOUSAND THREE HUNDRED DOLLARS PULSTOP the award ceremony will take place in stock HOLK ON DECEMBER TENTH PULSTOP details follow pulstop heariest congratulations pulstop.

உங்களைத் தேடி இப்படி ஒரு மின் அஞ்சலோ தந்தியோ வீடுதேடி வந்தால் நீங்கள் இலக்கியத்-துக்கான நோபல் பரிசு பெற்று இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 1901_லிருந்து சுமார் நூறு பேருக்கு இந்த மாதிரி தந்தி வந்துள்ளது. இன்று உலக மக்கள் தொகையில் பாதிக்கும் கொஞ்சம் கம்மி... எது என்கிறீர்களா... எழுத்தாளர்கள் எண்ணிக்கை. சமீபத்திய புள்ளி விவரப்படி பார்த்தால் உலகில் மூலை முடுக்கில் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு ஆயிரத்துக்குமேல் எழுத்தாளர்கள் பிறக்கிறார்கள். ஆனால், நோபல்பரிசு மொத்தமே இதுவரை சுமார் நூறுபேருக்குதான் கிடைத்திருக்கிறது என்றால் அந்த பரிசின் முக்கியத்துவமும் தனித்துவமும் புரியும்.

உலக அழிவு உபகரணங்களில் முதன்மையானதாக டைனமைட்டை கண்டுபிடித்து அதன் உரிமத்தை விற்று பிறகு உலகில் தயாரிக்கப்பட்ட டைனமைட்-டின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் 14 கிராம் பங்கு தொகை பெற்று சம்பாதித்த ஒரு சொத்து. சர் ஆல்பிரட் நோபல் தன் சொத்துக்கு (அவருக்கு வாரிசு இல்லை... ஏனெனில் அவர் திருமணம் செய்து கொள்ள-வில்லை) ஒரு கமிட்-டியை நிறுவி அதை சரியான விதத்தில் முதலீடு செய்ய வைத்து... அதில் வரும் லாபத்தை அந்தந்த ஆண்டில் மனித இனம் மேன்மையுறுவதற்காக நிகழ்த்தப்படும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பெரிய பணமுடிப்பு பரிசாக அங்கீகரிக்கும் திட்டத்தை தனது வீட்டு வேலைக்கார அம்மையாரின் யோசனைப்படி முன்மொழிந்தார். குற்ற உணர்வுதான் காரணம். 1896_ல் அவர் இறந்து-போனார். முதல் நோபல் பரிசு வழங்கப்படுவதை கூட அவர் காணவில்லை. இத்தாலியில் சான்ரெமோ இவர் பிறந்த ஊர். பலரும் நினைப்பது போல சுவீடனுமல்ல. நார்வேயும் அல்ல.

Alfred Nobel பணக்கார சீமான்... தன் பெயர் நிலைநாட்ட செய்த வேலை என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், கீழ்கண்ட இரண்டு விஷயங்களை நாம் பரிசீலிக்க வேண்டும். ஒன்று... நோபலை விடவும் பணக்கார சீமான்கள் உலகில் இல்லையா என்ன? பில்கேட்ஸ் பற்றி சமீபத்திய எஸ்.எம்.எஸ். வாசித்திருப்பீர்கள். நாளைக்கே எல்லா சம்பாத்தியத்தையும் முற்றிலும் நிறுத்திவிட்டு நாளன்றுக்கு ஒரு லட்சம் அவர் செலவு செய்ய ஆரம்பித்தால் அவரது முழு சொத்தையும் செலவு செய்து முடிக்க 496 வருடம் ஆகுமாம். பில்கேட்ஸீக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று இதுவரை ஏழுமுறை பரிந்துரைக்-கப்பட்டுள்ளது. அவருக்கு இதுமாதிரி பரிசு ஏற்படுத்தும் எண்ணம் வரவில்லையே. அப்புறம் இந்த ரௌலிங் இப்போது எலிசபத் மகாரணியை விட பணக்காரர். நோபல் பரிசு வழங்கப்பட்டால் அவர் நோபல் ஃபவுண்டடேஷனை விட ஏழு மடங்கு பணக்காரர் ஆகிவிடுவார்... ரௌலிங் பரிசு எதுவும் ஏற்படுத்தி உலக மாமனிதர்களை அங்கீகரித்து விடவில்லையே... இப்படி எல்லாம் நோபலுக்கு ஆதரவு திரட்டலாம்தான்... ஆனால்... கீழ்கண்டவைகளை பரிசீலிக்கவும்.

இன்று நோபல் பரிசு இந்த அளவிற்கு பெரும் பெயர் பெற்று சிறப்புற்று விளங்குகிறதென்றால்... அதற்கு ஆல்பிரட் நோபல் மட்டுமே காரணமல்ல. ஸ்டாக்ஹோம்தான் நோபல் பரிசின் தலைநகரம். அங்கே ஒவ்வொரு வருடமும் பரிசுக்கானவரை தேர்வு செய்யவும் பரிசை வழங்கவும் இருக்கும் இடம் ஸ்டோர்டாகட் தேவாலயம் மற்றும் போர்சாலம் அரண்மனை. அது 1773_ல் கட்டப்பட்டது. சுவீடனின் மாமன்னன் மூன்றாம் கஸ்டாவாஸ்தான் உண்மையான கதாநாயகன் என்கிறார்கள். கொடிய ராஜாங்கம்.... ரத்தம் தோய்ந்த அரசு... ஏழைகள் பட்டினி கிடக்க தன் செல்வச் செழிப்பை இறுமாந்தபடி வாழ்ந்த ஒரு ரத்தக்காட்டேரிதான் மன்னன் கஸ்டாவாஸ். ஆனால் இன்றைய ஸ்வீடீஸ் அகாடமியை 1786_ல் தோற்றுவித்தது அவன்தான். கூடவே தன் முழு அரண்மனை மற்றும் அனைத்-தையுமே கலாசார, இலக்கிய கலை வடிவங்களாக்க திறந்துவிட்டவன். 1792_ல் பொது மக்கள் முன் கொலை செய்யப்பட்டவன். இன்று அங்கே அவனது கொலு மண்டபத்தில்தான் நோபல் சடங்கு வருடாவருடம் நடக்கிறது. எல்லா மகாராஜாவும் இம்மை அரசர்கள்தான்?... விதிவிலக்கு ஏது?

மாமன்னர் மூன்றாம் கஸ்டாவிஸின் ஸ்வீடீஷ் அகாடமி என்பது அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் கொண்ட 18 பேர் கொண்ட அறிவுசால் பாசறையாக இருந்தது. இன்றும் அதே நடைமுறைதான். இதுவரை வழங்கப்பட்ட நோபல் இலக்கிய பரிசின் சர்ச்சையை காணும்முன் உங்கள் பெயரை நோபலுக்கு தேர்வு செய்யும்முன் நடப்பது என்ன என்பதை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் இதை தொடர்ந்து வாசிக்கவும். இதெல்லாம் தேவையா என்று நினைப்பவர்கள் இரண்டு பாராவுக்கு பிறகு வாசிக்கவும்.

1914 வரை இலக்கியத்துக்கான நோபல் பரிசை தேர்ந்தெடுக்க என்று பிரத்யேகமான அரங்கம் இல்லாமல் இருந்தது. வாடகை அறைகள், நோபல் கமிட்டி செயலரின் வீடு இப்படி... 1914_ல் அந்த 18 பேர் தேர்வுக்குழு கஸ்டாவாஸ் கொலுமண்டபத்தில் கூடுவதை வழக்கமாக்கிக் கொண்டது. இந்த வருட நோபல் பரிசுக்கான பெயர்களை பிப்ரவரியிலேயே (திசம்பரில்தான் தருவார்கள்) முதல் பலசுற்று முடிந்து பெற்று விடுகிறார்கள். உங்களுக்கு நோபல் இலக்கிய பரிசு கிடைக்க வேண்டுமானால் அதை ஏற்கனவே அப்பரிசை பெற்றவர்கள் முன்மொழிய வேண்டும். அல்லது அந்த 10 ஸ்வீடிஷ் அகாடமி நபர்கள் முன்மொழியலாம். அவ்விதம் முன்மொழி-யப்பட்ட புத்தகங்களை 18 பேரில் நால்வர் அணி வாசிக்கும். அவர்களுக்கு ஸ்வீடீஷ் மொழி தெரியும். அதைத் தவிர 18 பேரில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் ஸ்பானிஸ் தெரிந்தவர் உண்டு. பிறமொழி இலக்கியம் பரிந்துரையானால் சிறப்பு மொழி அறிஞர்களை கொண்டு ஸ்வீடிஷ் மொழியில் நூலை மொழிபெயர்த்து விடுகிறார்கள். ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை ஆங்கிலத்தில் படித்திருந்து... ஒரே புத்தகம் போதாது என்று மொழி அறிஞர் துணை கொண்டு மேலும் 100 கவிதைகளை வங்காளம் _ ஆங்கிலம் _ ஸ்வீடிஷ் என வரவழைத்து வாசித்து 18 பேருக்கும் கொடுத்தார்கள்.

ஒரு வருடத்திற்கு 45 முதல் 60- வரை பரிந்துரைகள் வரும். பிப்ரவரியில் அவற்றை பரிசீலித்து நால்வர் குழு நியமிக்கப்பட்டு அவை வாசிக்கப்படும். பிறகு மற்றவர்களுக்கும் தேவையென்றால் வாசிக்க தருகிறார்கள். 18 பேரும் கலந்து பரிசுக்குரியவரை தேர்வு செய்ய நவம்பர் மாதம் மறுபடி கூடுகிறார்கள். நால்வர்குழு தலைவர் குழுவின் பரிந்துரையை ஒரு அறிக்கையை ரகசியமாக சமர்ப்பிக்கிறார். 45_61 பரிந்துரைகளை அந்த நால்வர் குழு இரண்டு _ நான்கு பேராக சுருக்கிவிடுகிறது. இந்த நால்வர் சார்ந்தே உங்களுக்கு நோபல் கிடைப்பதும் கிடைக்காததும். அந்த இரண்டு அல்லது நான்கு பேரின் வாழ்க்கை கதை வெளிவந்த புத்தகம் அவர்களது பின்புலம்... செய்த இலக்கிய பணி _ இப்படி தனித்தனியே வாசித்து பிறகு ஓட்டெடுப்பு 18 பேருக்குள் நடக்கும். இந்த 18 பேரும் நிரந்தர உறுப்பினர்கள். அவர்கள் இறந்தால் வேறு நபரை இப்போதும் ஸ்வீடனின் மன்னர்தான் நியமிக்கிறார்.

நோபல் பரிசு பெற்றவர்களைவிட பெறாத மாமனிதர்களை இலக்கிய ஜாம்பவான்கள் லியோ டால்ஸ்டாய், மார்க்ட்வைன், சுப்ரமணிய பாரதி, மக்ஸீம்கார்க்கி, இப்ஸன் என் ஸ்டிரிங்பர்க். இப்படி பலரது பகிஷ்கரிப்புதான் வரலாற்று செய்தியாக நம் முன் நிற்கிறது. அசிங்கமான ஒரு அரசியல் வாடை இன்னமும்கூட விடாமல் நோபல் பரிசை சுற்றி துர்நாற்றமாக வீசுவதை நாம் பார்க்கிறோம்.... முதலில் மாபெரும் இலக்கியவாதியும் தன் காலத்தின் தலைசிறந்த நாவலாசிரியருமான எமிலி ஸோலோ-தான் முதல் நோபல் பரிசை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரைவிட்டால் லியோ டால்ஸ்டாய். ஆனால், இருவருமே கடைசிவரை பெறவில்லை. அதற்கு டாக்டர் காரஸ் டேவிட் ஆஃப் விர்ஸன் என்கிற ஒரு ஆள்தான் காரணம் என்றால் பலரும் இன்று நம்பக்கூட மாட்டார்கள். முதல் நோபல் பரிசு கல்வி புருத்தோனுக்கு வழங்கப்பட்ட போது உலகம் அதிர்ச்சி அடைந்தது. அதிகம் யார் என்றே வெளியில் தெரியாத பிரெஞ்சு கவிஞர் அவர்... அந்த ஆண்டு டால்ஸ்டாய்க்கு வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்வீடனில் போராட்டம் நடந்ததும், நாற்பது ஐம்பது ஸ்வீடிஷ் கலைஞர்கள், எழுத்தாளர்கள் அகாடமி வரை ஊர்வலம் சென்று டால்ஸ்டாய்க்கு நோபல் என்று மனுகூட கொடுத்-தார்கள் என்பதும் இங்கே பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், 1901_ல் ஆல்பிரட் நோபல் இறந்து ஐந்தாண்டுகளே ஆகி இருந்தது. எமிலி ஸோலாவின் நாநா நாவல் மோசமானது என்று நோபல் தனது நண்பர் ஒருவருக்கே கடிதம் எழுதியதை காரணம் காட்டிய 18 பேரில் ஒருவரான அந்த டாக்டர் விர்ஸனால் சோலாவுக்கு அந்த ஆண்டு விருது வழங்கவிடவில்லை. இத்தனைக்கும் எட்டுபேர் ஆதரவு இருந்தது. உண்மையில் அந்த வருடம் டால்ஸ்டாயின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. 1902_ல் டால்ஸ்டாயை அகாடமி உறுப்பினர் ஒருவரும் முதல் நோபல் கவிஞரான புருத்தோனும் பரிந்துரைத்து இருந்தும் அவருக்கு வழங்கப்பட-வில்லை. மறுபடியும் டாக்டர் விர்ஸன் களத்தில் இறங்கினார். போரும் அமைதியும் நல்ல நாவல்தான். ஆனால், டால்ஸ்டாயின் அதன் பிறகான எழுத்து மனித நாகரிகத்தை நக்கல் செய்வதுடன் ஆபத்தான-தாகவும் இருக்கிறது என்று தொடங்கி ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் மேற்கொள்களுடன் அவர் ஒன்றரை மணிநேரம் டால்ஸ்டாய் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து டால்ஸ்டாயை வீழ்த்தி விட்டார்... அதன் பிறகு எட்டாண்டுகள் டால்ஸ்டாய் வாழ்ந்திருந்தும் அவரது பெயரை நோபல் குழு பேசவிடாமல் டாக்டர் விர்ஸன் தனது ஆளுமையால் தடுத்தார் என்பது யாருமே மறுக்க முடியாத வரலா-று.

இப்ஸன் தலைசிறந்த நாடக மேதை என்பதை இன்று உலகம் ஏற்கிறது. ஆனால் இப்ஸனுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டபோது அதை டாக்டர் விர்ஸன் நக்கலடித்ததோடு இப்ஸனின் Peer Gynt, The Master Builder ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து.... ப்ஜார்ன்ஸன் எனும் எழுத்தாளரை _ நார்வே எழுத்தாளரை முன் மொழிந்தார். ப்ஜார்ன்ஸன், ஆல்பிரட் நோபலின் நேரடி நண்பர். அவருக்கு பரிசு _ இப்ஸனுக்கு மறுக்கப்-பட்டு _ வழங்கப்பட்டது. ஆண்டு 1903. இப்படியான ஆதிக்கம் 1908 வரை தொடர்ந்தது. ஸ்டிரிங் பர்க்கின் நாடகங்களை விர்ஸன்... அவருக்கு நோபல் பரிசு தர சம்மதிக்க முடியாது என்று கூறியபோது 18 பேர் குழுவுக்கு 1905_ல் கடும் கோபம் வந்ததோடு டாக்டர் விர்ஸனுக்கு எதிராக மாபெரும் அறிஞர் நவீன நாடகக் கலையின் தந்தை ஸ்டிங்பர்க்கை தேர்வு செய்ய முடிவெடுத்ததால் டாக்டர் விர்ஸன் ஸ்வீடன் மன்னரிடம் ஸ்டிங்பர்க்கின் சொந்த வாழ்வைப் பற்றி தூற்றினார். பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். வேலை பார்த்த இடங்களில் எல்லாம் கல்தா... மூன்று முறை விவாகரத்து செய்தவர் என ஸ்டிங்பர்க்கை எடுத்துக்கூறியும் பரிசு கிட்டத்தட்ட அறிவிக்கப்படும் நிலையில் டாக்டர் விர்ஸன், ஸ்டிங்பர்க்கின் தற்போதைய போட்டி ஒன்றை நேரில் மன்னரிடம் சமர்ப்பித்து, நான்... வேண்டுமானால் நோபலுக்கு எதிரான விருதை பெறுவேன். நோபலை பெறமாட்டேன் என்று ஸ்டிங்பர்க் கூறி இருப்பதை காட்டி பரிசை நிறுத்தினார். டாக்டர் விர்ஸனின் இந்த அளவிலான ஆதிக்கம் 1901_ல் செல்மா லாகர் லாஃப் அம்மையாரை அவரது கடும் எதிர்ப்பையும் மீறி நோபல் குழு தேர்வு செய்ததோடு வீழ்த்தப்பட்டது. 1908 அதே அம்மையாருக்கு பரிசு கிடைக்காமல் போனதற்கும், அந்த ஆண்டு பரிசு ஜெர்மனிக்கு வெளியே அதிகம் தெரியாத ஜெர்மனியில் அதிகம் வாசிக்கப்படாத ருடொல்ப் யுக்கனுக்கு போனதும் அதே டாக்டர் விர்ஸனால்தான்.

பொதுவாக 1920 களில் கிருத்துவ கத்தோலிக்க வாடையை பரிசுக்குள் லேசாக வீச வைத்த பெருமை ஆர்ச் பிஷப் தந்தை நத்தன் ஷோதெர்டாமை சேரும். இலக்கியவாதியில்லை என்றாலும் ஸ்வீடிஷ் அகாதமியின் 18 அங்கத்தினரில் அவரும் ஒருவராக இருந்தார்... ஸ்பெயினின் பெரஸ் கால்போஸ்க்கு எதிராக ரொமெயின் ரொலாந்து 1916_ல் பரிசு பெற்றதிலிருந்து 1928_ல் ஹென்றி பெர்க்ஸன் நோபல் பெற்றதுவரை இந்தப் பிஷப்பின் ஆதிக்கத்தை பார்க்கிறோம்.

யுத்த ஆண்டுகளை நோபல் பரிசு எதிர்கொண்ட விதம் குறிப்பாக இலக்கிய நோபல் குழு எதிர்கொண்ட விதம் கேலிக்குரிய பல முன் உதாரணங்களை கொண்டது ஆகும். 1934_ல் பரிசு இத்தாலியின் எழுத்தாளர் பெனடெட்டோ கிராஸ்ஸ¨க்கு அறிவிக்கப்பட இருந்தது. அந்தச் சூழலில் இத்தாலி பாசிசவாதி முசோலினியின் கையில் இருந்ததை இங்கே சுட்டவேண்டியதில்லை. பெனடேட்டோ கிராஸ் பாசிச எதிர்ப்பாளர். தேர்வு அற்புதமானதும், மிகச் சரியானதும் ஆகும். ஆனால், பரிசு அறிவிக்கப்படவில்லை. முசோலினி இதை முன்னதாக அறிந்து கொண்டு சுவீடன் நாட்டு தூதர் மூலம் திட்டமிட்டு காய்நகர்த்தினான். கிராஸ் பரிசு பெறவில்லை. அதற்கு பதிலாக முசோலினி ஆதரவாளர் என பின் நாட்களில் அறியவரப்பட்ட லுக்வி பிரெண்டலோவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

1935_ல் நோபல் இலக்கிய குழு ஜெர்மன் மொழி எழுத்தாளர் காரல் வான் ஓஸிட்ஸ்கியின் பெயரை பரிசீலித்து ஹிட்லரின் கோபத்திற்கு (ஓஸிட்ஸ்கி கடும் ஹிட்லர் எதிர்ப்பாளர்) பயந்து நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காமல் தவிர்த்தது. ஆனால் அதே ஆண்டு நார்வேயில் கூடிய நோபல் அமைதி பரிசுக்குழு (அமைதி பரிசு மட்டும் நார்வேயில் தரப்படும்) ஒரு எழுத்தாளராக இருந்தும் அமைதிக்கான நோபல் பரிசை ஒஸிட்ஸ்கிக்கு பரிந்துரைத்தது... ஒஸிட்ஸீகி-யிடமிருந்து பதில் வரவில்லை. நோபல் பரிசு பெறுவது சட்டப்படி கடும் குற்றம் என்று ஹிட்லர் உடனடியாக சட்டம் கொண்டு வந்தான். அதே வருடம் மருத்துவ நோபல் குழுவும் மிக தைரியமாக அதை ஜெர்மன் மருத்துவ விஞ்ஞானி டொமாக்கிற்கு பரிந்துரைத்து தந்தியும் அனுப்பியது... இலக்கிய நோபல் குழு மட்டும் ஹிட்லர், முசோலினி என அஞ்சி கிட்டத்தட்ட கைப்பாவைகளானதை பார்க்கிறோம். ஒஸிட்ஸ்கியை ஜெர்மனியை விட்டு வெளியேறவிடாமல் அவர் புற்றுநோய்க்கு தானாகவே பலியாகும்படி செய்துவிட முயன்ற ஹிட்லர் டொமாக்கை பிடித்து சிறையில் அடைத்தான். அமைதிக்கான நோபல் குழு மீதும், மருத்துவ நோபல் குழு மீதும் கடும் ஆத்திரம் கொண்டு நார்வே ஸ்வீடனை ஆக்கிரமித்து ஒஸிட்ஸ்கிக்கு அமைதி நோபலை முன்மொ-ழிந்த நார்வே நாடாளு-மன்ற குழுவையே ஹிட்-லர் சிறை பிடித்ததும் வரலாறு ஆகும்.

பிறகு யுத்த நாட்-களில் நடுநிலை வகித்த நாட்டு பிரஜைகள் எழுத்தாளர்களைத் தேடி நோபல் இலக்கிய பரிசு வழங்கப்பட்டது. ஸ்காண்டிநேவிய எழுத்-தாளர்கள் அதிர்ஷ்ட கட்டைகளாக இருந்தார்கள். யுத்தம் உச்சத்திலிருந்து 1914, 1918 (முதல் உலகயுத்தம்) 1935 மற்றும் 1940 முதல் 1943 வரை (இரண்டாம் உலகயுத்தம்) இலக்கிய நோபல் வழங்கப்பட-வில்லை.

பொதுவாக நோபல் பரிசு என்பது ரஷ்யா-வுக்கும், கம்யூனிஸத்-திற்கும் எதிரானதாக ஏன் இருந்து வருகிறது என்பதற்கும், அமெரிக்க, ஐரோப்பிய ஆதர-வாகவே பரிசுகள் என உள்ளனவே என்பதற்கும் பதில் தேடுவது பெரும் அபத்தமாக உள்ளது. ரஷ்யாவை சேர்ந்த யாருமே முழுமையான நோபலை பெறவில்லை. இலக்கியம் தான் என்றில்லை. முதல் மருத்துவ நோபல் பாப்லோவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாலாண்டு தொடர்ந்து இருட்டடிப்பு. பிறகு உலக நெருக்கடி தாங்காமல் பகிர்ந்த ஒரு பரிசு பேருக்கு அறிவிப்பு... பிறகு மருத்துவ நோபலுக்கு எய்லிச், இயற்பியலில் ரஷ்யாவுக்கு ஒரே பரிசு மூன்று பேர் பகிர்ந்தனர். வேதியியல் ஒன்றே ஒன்று. நாம் ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளை குறிப்பாக பழைய சோவியத் பிளாக் சார்ந்து பேசினால் அந்த நாடு மரபியலிலும், மனித வாழ்க்கை நீட்டிப்பு மருத்துவ துறையிலும் செய்த அசூரசாதனைகள் நினைவுகூறத் தக்கவை. ஸ்புட்னிக் மூலம் உலக செயற்கை கோள் அறிவியலை தொடங்கிய நாடு. யூரி கெகேரினை விண்வெளிக்கு அனுப்பி நமது விண்வெளி யுகத்தை தொடங்கிய நாடு... மார்கோனிக்கு முன்னதாகவே பொப்பொவ் ரேடியோ அலைவரிசை தொடங்கிய நாடு.. 1911லேயே ட்போல்கோவ்ஸ்கி ராக்கெட்டுகளை சாத்தியமாக்கிய நாடு... இந்த நோபல் கமிட்டியை பொறுத்தவரை ரஷ்யா விஞ்ஞானிகளே இல்லாத நாடு!

இலக்கிய நோபல் ரஷ்யாவை பகிஷ்கரித்தது மட்டுமல்ல. ரஷ்யாவின் நட்பு நாடுகளையும் கூட பகிஷ்கரித்துள்ளதே உண்மை. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்திய நேருவுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்படாததற்கு அவர் ரஷ்யாவின் சிநேகிதர் என்பது மட்டும்தான் காரணம். இதுவரை அறிவியல் பரிசு கூட ஏதோ இப்போதும் அப்போதும் அங்கே எட்டியாவது பார்த்தது.

அமைதிக்கான நோபல் பரிசு ஒன்றைக்கூட ரஷ்யர்கள் பெறவில்லை. அந்த நூற்றி சொச்ச ஆண்டுகளில் ஜெர்மனிக்கு நான்கு, பிரான்சுக்கு எட்டு மீதியில் பதினேழு அமெரிக்கா... ரஷ்யா? ஒன்று கூட கிடையாது. அமைதி இப்படி அமைதி-யாக இருந்துவிட்டது என்றால்... நோபல் இலக்கியம்.

ரஷ்யர்கள் யாருக்கா-வது நோபல் வழங்கப்பட்-டது என்றால் அது ரஷ்யாவுக்கு எதிராக வழங்கப்பட்டது. முதல் அறுபது ஆண்டுகளில் இரண்டே இலக்கிய நோபல்... அந்த ஆண்டுகளில் அங்கிருந்து எழுதிய இலக்கிய அறிஞர்களான ஆண்டன் செக்காவ், அண்ரெயெவ், மாயகாவஸ்கி, சர்டிஷ் பாஷெவ், சிங்கிஸ் ஐத்மாதவ் யாருமே நோபல் இலக்கிய கமிட்டி கண்ணில் படவில்லை. மக்சீம் கார்க்கி 1936 வரை உயிருடன்தான் இருந்தார். அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டதும் இல்லை. ஆனால், அந்தத் தகுதி ஒரு புனினுக்கு திடீரென்று ஏற்பட்டது. இவான்புனின் பாரீசில் வாழ்ந்த கடும் இடதுசாரி எதிர்ப்பு தன்மை கொண்டிருந்த ரஷ்யாவுக்கு எதிரான வெள்ளை ரஷ்§ அகதி. லான்பெலோவின் ஹையவாத்தாவை மொழி பெயர்த்த விசுவாசி... வெளியில் சொல்லமுடிந்த வரலாற்றில் நிற்கும் எழுத்து என்று அவருடையது ஏதுமில்லை. அந்த 1931 இலக்கிய நோபல் பரிசு ரஷ்யாவுக்கு ரஷ்ய எழுத்தாளருக்கு என்ற அர்த்தம் எதுவுமில்லாத ரஷ்ய அரசுக்கு எதிரான பரிசாகவே இருந்தது.

அப்புறம் போரிஸ் பேஸ்டர்னாக், மாயகாவ்ஸ்கி-யின் அழைப்பை பெற்று புதிய எழுச்சி கவிதைகள் படைத்த அற்புத கவிஞன் பேஸ்டர்னாக். ஆனால், அக்கவிதைகளை வெளியிட்ட வரையில் பேஸ்டர்னாக்கிற்கு நோபல் வழங்கப்படவில்லை... பேஸ்டர்னாக் ஹிட்லரின் கொலை வெறிக்கு அஞ்ச வேண்டிய அவசியமற்ற ரஷ்ய யூத குடும்பம் ஒன்றில் பிறந்தவர். The Twin Clound (1914) கவிதை தொகுதி மூலம் ரஷ்யர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். 1932_ல் இரண்டாம் பிறப்பு வரை நான்கு அற்புதமான கவிதை தொகுதிகள்... 1945_ல் The Terrestrial Expanse கவிதை தொகுதி வரை அவரது ஆயிரக்கணக்கான கவிதைகளை நோபல் குழு கண்டுகொள்ளவில்லை. ஷேக்ஸ்பியர், கத்தே என்று ஆங்கில, ஜெர்மானிய எழுத்தாளர்களை ரஷ்ய மொழிக்கு பேஸ்டர்னாக் எடுத்து சென்றபோது கூட கண்டு கொள்ளாத அவர்கள், 1956_ல் ரஷ்ய புரட்சி பற்றி டாக்டர் ஷிவாகோ நாவலில் முன்னுக்கு முரணாக சிலவற்றை அவர் எழுதி வெளியிட்டபோது அதை 1957_ல் ஆங்கிலமாக்கி பல்வேறு மொழிகளில் வரவழைத்து தேடித்தேடி வாசித்து 1958 பரிசை அவருக்கு முன் மொழிந்தார்கள். அது தனக்கு வேண்டுமாயின் தான் தனது சொந்த மண்ணைவிட்டு வெளியேற வேண்டியதை கட்டாயமாக தன் மீது திணிக்கப்பட்டுள்ளதும், அப்படி தன்னையும் மண்ணையும் பிரிக்கும் பரிசு தேவையற்றது என்றும் கூறி பேஸ்டர்னாக் பரிசை மறுத்தார்.

பேஸ்டர்னாக் மட்டுமல்ல, இதே போன்ற ஒரு நிலை மிக்கையில் ஷோலோகோவிற்கும் ஏற்பட்டது. அப்பரிசை ஷோலோகோவிற்கு வழங்க காரணம் என்ன...? ஷோலோகோ அற்புதமான நாவலாசிரியர். அவரது டான்நதி அமைதியாக ஓடுகிறது. ( Quiet Flous the Don) ரஷ்யாவின் வெஷன்க்யா மாகாண மக்களின் வாழ்வை அற்புதமாக காட்டும் நாவல். 1940_ல் நாலாவது பாகம் வெளிவந்து முடிந்தது. அன்னை வயல் (Virgin soil) தங்கள் தந்தையர் நாட்டிற்காக அவர்கள் போராடுகிறார்கள். (They fight for their father land) ஆகியனவும் உலகில் 18 மொழிகளில் மொழிபெயர்ப்பாகி 1950_ல் உலக அளவில் மிக அதிகம் விற்பனையாகி பேசப்பட்ட மாபெரும் எழுத்தாளராக அவரை நிலை நாட்டியது... ஆனால் வழக்கம்போல மக்சீம் கார்க்கிக்கும் டால்ஸ்டாய்க்கும் காட்டிய அதே அமைதியை ஷோலக்கோவை நோக்கியும் நோபல் குழு காட்டியபோது 1964_ல் சுவீடிஷ் மொழியில் ஷோலகோவின் நாவல்கள் மொழிபெயர்ப்பாகி ஸ்வீடன் எழுத்தாளர்களின் நாவலை விட கூடுதலான கவனத்தை இளைஞர்கள் இடமிருந்து பெற்று... They Fought for their father land நாவலை பாடமாக வைக்க வேண்டுமென்று பல்கலைகழகங்கள் கோரிக்கை விடுக்குமளவுக்கு நிலைமை போனதால் அவருக்கு நோபல்! ஆனால், ஷோலகாவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெளிவாக தெரிந்ததால்... அவர் நோபல் கமிட்டிக்கு பதிலே எழுதவில்லை.

அடுத்தவர் அலெக்சாந்தர் சால் ஷெனிட்ஸின். ஓர் ஆசிரியையின் மகனாக 1918_ல் ரஷ்யாவின் இஸ்லோ வோல்க்சில் அவர் பிறந்தார். 1941_45ல் ஹிட்லரின் ஜெர்மன் படைகள் -ஊடுறுவியபோது தனது நாட்டு ராணுவத்தில் சேர்ந்து போரிட்ட வீரர். போரின் விளைவுகள் பயங்கரமாக இருந்தன. ஸ்டானியத்தால் மூன்று வருடங்கள் மத்திய ஆசியாவில் நாடு கடந்து வாழ்ந்த சால்ஷெனிட்ஸின், குருஷேவ் ஆட்சிக்கு வந்ததும் நாடு திரும்பினார். மற்றவர்களுக்கு நடந்ததைப் போலவே சால்ஷெனிட்-ஸின் விஷயத்திலும் நோபல் குழுவின் அணுகுமுறை இருந்தது... ரஷ்ய அரசு கேந்திரத்தை குறிவைப்பதுதான் அது. சால்ஷெனிட்ஸின் அற்புதமான எழுத்தாளர். இவான் டெனிகோவிச் வாழ்வில் ஒருநாள் (1963), முதல் வட்டம் (1965) கான்சர் வார்டு (1966) எல்லாம் அடிப்படை தீட்டப்பட்ட யுத்தகால அரசுகளின் ஒடுக்குமுறைகளை விவரிக்கும் சொற்சித்திரங்கள்... அரசு அவரை வேவு பார்த்தது.

ஆனால், நோபல் 197-0_ல் அவருக்காக அறிவிக்கப்பட்டபோது அது இந்த எழுத்துகளுக்காக வழங்கப்படவில்லை. சோவியத் சிறைகளை விவரித்த The Gulag Archipelage எனும் அவரது நாவல் தொகுதிக்கு _ அவரை மேற்கு ஜெர்மனிக்கு சோவியத்-துகள் நாடு கடத்திய பிறகு _ அவருக்கு அறிவிக்கப்-பட்டது. அப்போதும் அவர் அப்பரிசை அங்கே சுவீடன் தூதரகத்தில் பெற அனுமதிக்கப்பட்டார். ஆனால், தாகூர் நேரில் பெறாதபோது தூதரகம் வழியே வழங்கிய நோபல் குழு சால்ஷெனிட்ஸினுக்கு அவ்விதம் வழங்க மறுத்து அவர் நோபலை நேரில் வந்து பெறவேண்டுமென்று நிர்பந்தித்தார்கள்.. வெறுத்துபோன சால்ஷினிட்ஸின் பெற மறுத்து-விட்டார்... பிறகு அவர் ‘தப்பி’ சென்று அமெரிக்கா-வில் வசித்ததும் அங்கே நோபல் குழு சற்றும் எதிர்பாராத விதமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக விமர்சித்து எழுதியதும் மீதிக்கதை.

சரி... ஜார்ஜ் லூயி போர்ஹேஸ்ஸீக்கு பரிசு தரப்படாதது அவர் அர்ஜென்டினா, சிலி உட்பட பினோ ஷெட் போன்ற சர்வாதிகார அரசாங்கங்களின் நண்பராக இருந்ததால்தான் என்று கமிட்டி பகிங்கரமாக அறிவித்தது. கிரஹாம் கிரீன், நொபொகோவ் மற்றும் சால்பெல்லோ ஆகியோரின் பெயர் முன்மொழியப்பட்டிருந்த 1974ல் ஒரு பெரிய கேலிக்கூத்து நடந்தது. பரிசை சுவீடன் எழுத்தாளர்-களான ஐவிண்ட் ஜான்சன் மற்றும் ஹாரி மார்டின்ஸன் ஆகியோர் பகிர்ந்து கொள்வதாக அறிவித்தார்கள். இவர்கள் சுவீடிஷ் அகாடமியின் 18 பேரில் இருவர் மற்றவர்கள் முற்றிலும் ஒதுக்கப்-பட்ட சால்பெல்லோ 1976_ல் பரிசினை பெற்றார்.

இவை மட்டுமல்ல, காரல் காப்பகத்திக் பெயர் முன்மொழியப்பட்டபோது இன்னொரு சம்பவம் நடந்தது. அவரது பென் ஸ்வீப் நாவலின் முடிவை ஓரளவு மாற்றினால் பரிசு நிச்சயம் என அவரிடம் சூசகமாக தெரிவிக்கப்பட்டது. நாவல் அமெரிக்க கலாசாரத்தை ரொம்பவே கேலி செய்ததுதான் காரணம். இத்தனைக்கும் நோபல் குழுவிற்கு அமெரிக்கா மீதும் எந்த ஈர்ப்பு கிடையாது. ஹாடனுக்கு அவரது கவிதைகளை ஸ்வீடிஷ் மொழியில் மிக மோசமாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வாசிக்கப்பட்டதாலேயே பரிசு அருகில்வரை போயும் கிடைக்காமல் போனது.

பொதுவாக வில்லியம் ஃபாக்னர், நகீப் மாஹோஃப், நைஜீரிய கருப்பின எழுத்தாளர் வோல் சாயின்கா, சிலியின் பெண் கவி கப்ரியேலோ மிஸ்ட்ரால், ஜெர்மன் எழுத்தாளர் ஹென்றிச் போல், அமெரிக்க நீக்ரோ கவி டெரக்வால்காட், டானி மாரிஸன், ஆல்பர்ட் காம்யு, சாமுவேல் பெக்கட், கார்ஸியா மார்க்வெஸ், பாப்லோ நெருடா, மற்றும் நாடிகன் கார்டிமர் ஆகியோரின் நோபல் பரிசு தேர்வுகள் சர்ச்சை இல்லாதவை மட்டுமல்ல நோபல் மீது மரியாதையை நிலை நாட்டியவை. அமெரிக்கா-வில் வாழ்ந்த பியர்ல் பக்கை சீன எழுத்தாளர் எனக் கூறி கவுரவித்தது பெரிய அபத்தமாக அப்போது உணரப்பட்டது. ஆனால், மேற்கண்ட எழுத்தாளர்-களின் பரிசு ஒன்று அவர்களது ஆதரவு குரலையும் அவர்களுக்கு பரிசு தருவதை எதிர்த்து கிளம்பிய புயலை அடக்கவோ அல்லது அவர்களது அங்கீகார மறுப்பு நோபலின் அங்கீகார மறுப்பு ஆகிவிடும் என்பதற்-காகவுமே நடந்ததாக பல உலகளவு விமர்ச-கர்கள் கருத்து கூறு-கிறார்கள்.

Amartya Sen குழந்தைகள் இலக்கியம் என்கிற ஒரு பகுதி இன்றுவரை எந்த நோபல் அங்கீகாரமும் பெறவில்லை. இதுவரை பரிசு பெற்ற நூற்றி-யோரு பேரில் குழந்தைகள் இலக்கியத்-திற்காக யாருமே அங்கீகரிக்கப்பட வில்லை. அறிவியல் புனைகதை எழுத்தாளர் எச்.ஜி. வெல்ஸ் முன்மொழியப்பட்ட போது... ‘அவர் எழுத்தை படிக்கும் வயதை எல்லாம் நாம் தாண்டியாகிவிட்டது’ என்று நால்வர் அணி தலைமை ஒரே வரியில் ‘தாண்டிவிட்டது’ ருட்பார்டு கிப்ளிங் வாங்கி இருக்கிறாரே என்று கேட்கலாம். அவருக்கு நோபல் ஜங்கிள்புக் நூலுக்கு வழங்கப்படவில்லை... ரஷ்யாவை இந்தியாவிலிருந்து வேவு பார்ககும் பிரித்தானிய உளவு படை பற்றிய ஒரு துப்பறியும் நாவலான ‘கிம்’ நாவலுக்கே வழங்கப்பட்டது.... இதுதான் நோபல் குழுவின் பிரித்தானிய பக்தி. (சி.வி. ராமன் இயற்பியலுக்கு நோபல் பரிசு 1930 ல் பெற்றபோது தன் மிக பயங்கரமான ஒரு நாளை நோபல் பரிசு கமிட்டி அனுபவித்ததாக 1966_ல் நோபல் செயலர் அறிவித்தார். தனது ஏற்புரையில் ராமன் பரிசை இந்தியாவின் சிறையில் வாடும் தனது சக நண்பர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூற... பிரித்தானிய அரசிடம் நோபல் கமிட்டி மன்னிப்பு கேட்டதாம்) சுவீடனையே சேர்ந்த குழந்தைகளுக்காக எழுத்தாள-ரான ஆஸ்ட்ரிட் லிண்ட்ஜர்ன் ஆறுமுறை முன்மொழியப்பட்டும் பரிசு வழங்கப்படவே இல்லை.

இந்த நூற்றியோரு நோபல் இலக்கிய வாதிகளில் பதினோறு பேர் பெண் எழுத்தாளர்கள்... இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி மற்றும் பொருளாதார நோபல் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்தான். அதிலும் 2004_ல் எல்பிரிஜ் ஜெலினக் பரிசு பெற்றதை கண்டித்து 18 பேரில் ஒருவரான க்னட் அன்லந்த் ராஜினாமா செய்து மிகப் பெரிய புயலை கிளப்பியதும்... 2005_ல் ஹெரால்ட் பின்டரின் பரிசு அறிவிப்பு ஏதோ காரணமாக இரண்டுநாள் வரை தள்ளிப்போனதும்... இன்னமும் கூட நோபல் பரிசு என்பது சர்ச்சை பரிசுதான் என்பதை காட்டுகிறது.

எது எப்படியோ இந்த நோபல் ஒரு அங்கீகார-மாகவோ பெருமை மற்றும் உலக அளவிலான அந்தஸ்தாகவோ இருக்கிறது என்பது உண்மை-யானால், அது ஐரோப்பா சம்பந்தப்பட்டதாகவே இன்னமும் இருக்கிறது. நூற்றி ஒன்றில் ஆசியா, ஆப்பிரிக்கா இணைந்து பெற்றதை விட ஐரோப்பா, ஸ்வீடன் இணைந்து பெற்றது மூன்று மடங்கு அதிகம். உண்மையானால், அதை ஆமோதிப்பதுபோல ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தர செயலரான ஹொரஸ் எண்டாஃக் சென்ற ஆண்டு பகிரங்கமாக அறிவித்-தார்; ‘உலக இலக்கிய மய்யம் ஐரோப்பாதான்...’ இப்போது புரிந்திருக்கும் மேற்கண்ட தந்தி உங்களை வீடு தேடி வருவதற்கு நீங்கள் இலக்-கியவாதியாக மட்டுமே இருந்தால் போதாது...

பரிசு என்பதை விட்டுவிடுவோம். நோபல் பரிசு வழங்கும் சுவீடிஷ் அல்லது ஸ்வீடிஷ் அகாடமி இன்று உலக இலக்கிய அரசியல் மய்யமாக ஆகி இருக்க வேண்டும். அது தன் மட்டில் ஆயிரக்கணக்கான இலக்கிய நூல்களை நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியிட்டு பல நாடுகள் மொழிகள் கலாசாரங்கள் ஆதரிக்க முடியும். அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள் பல அவற்றை மீட்டெடுக்க முடியும்... சொல்லப்போனால் யுனெஸ்கோவை வழிபடுத்தும் நெறிப்படுத்தும் அமைப்பாக இந்நேரம் கொடி கட்டி பறந்திருக்க முடியும்... அதில் எதுவுமே நடக்காதது மட்டுமல்ல.

1. 1989_ல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தலைக்கு ஈரானின் அயத்துல்லா கொமேனி விலை வைத்தபோது... உலகமே எதிர்த்து குரல் கொடுத்தது... நோபல் குழு _ ஸ்வீடிஷ் அகாடமி... கப்சிப்...

2. கென்ய அரசு, எழுத்தாளர் கூகி வா திவாங்கோவை சிறைபடுத்தி பின் நாடு கடத்தி... பின் அவரது நூல்களை தடை செய்தது. ஸ்வீடிஷ் அகாடமிக்கு கென்யா எங்கே இருக்கிறது என்பது பற்றி கூட கவலை கிடையாது.

‘மானிட ஆளுமையின் மதிப்பாய் இன்னும் நம்பப்படும் இலக்கிய நோபல் பரிசும் அதனை முன்மொழிவதில் புராணீக புனிதம் காப்பதாய் சொல்லிக்கொள்ளும் ஸ்வீடிஷ் அகாடமியும் எழுத்துச் சிற்பிகளான எழுத்தாளர்களையும் அரசு நெருக்கடிகளிலிருந்து மீட்க ஓர் அடியை கூட எடுத்து வைப்பதில்லை. ஆனால் சிலநேரம் பரிசு எனும் பேரில் அவர்களை இனங்காட்டிக் கொடுக்-கிறது’ என்று இந்தப் பரிசை வேண்டாமென்று மறுத்த ஒரே எழுத்தாளரான ழீன்பால் சார்த்தர் சொன்னது உண்மை என்றே மேற்கண்டவைகளை வைத்துப் பார்க்கும் போது எண்ணத் தோன்றுகிறது.

நன்றி: 'திசை எட்டும்' சிறப்பிதழ்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com