Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
நூல் அறிமுகம்
காலநிலை
இரா. நடராசன்


காலநிலை, சி. ரெங்கநாதன்,
பாரதி புத்தகாலயம், ரூ.60 பக். 152

Book கேரளத்தில் ஒரு நாட்டுப்புற கதை உண்டு. ஒரு மகாராஜா தன்னை பார்க்க வந்திருந்த அயல்நாட்டு (ஐரோப்பிய) நண்பர்களை வழியனுப்பும்போது அவர்களுக்கு ஏலக்காய் செடிக்கன்றுகளை அவர்கள் ஊரில் நட்டு வளர்க்க ஏராளமாக பரிசளிப்பார். உடனே மந்திரி ராஜாவை அழைத்து ‘இப்படி கொடுத்தால் வருங்காலத்தில் நமது வெளி வாணிபம் கெட்டுவிடாதா?’ என கேட்பான். அதற்கு மகாராஜா பதிலளிப்பார்: நான் செடிகளை தான் கொடுத்தேனே தவிர தெற்மேற்கு பருவமழையை அல்ல... மந்திரி... வெறும் செடிகளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வான்?

தெற்மேற்கு பருவமழையின் முக்கியத்துவத்தை காலம் காலமாக மக்கள் உணர்ந்தே வந்துள்ளனர். என் தாத்தாவிடம் ஒரு பழக்கம் இருந்தது. தஞ்சை மண்டல விவசாயியான அவர் தனது வயல்புரத்தை கண்ணோட்டமிடுவது போலவே வானத்தின் இத்திக்கு முதல் அத்திக்குவரை ஒரு பார்வையிட்டு மாலை மங்குலில் ‘இன்னிக்கு மழை வரும்’ என்பார். ரொம்ப சிறுவனாக இருந்த நான் ஆச்சரியப்படும்படி அன்று மழை பெய்யும்... ‘எப்படி தாத்தா’ என்பேன்... ‘அதுவா.... பிரம்ம ரகசியம்’ என்பார் நக்கலாக. எவ்வளவு நச்சரித்தாலும் சொல்லமாட்டார். ‘அது கெடக்கு.. லூசு’ பாட்டி ஒரு நாள் சொன்னாள், ‘இதப்பாரு... நிலாவசுத்தி கோட்டை கட்டினா... மழைவரும்... அம்புடுத்தேன்’ மக்களிடம் பூமி கடிகாரம் பற்றிய நுணுக்கமான இதுபோன்ற தகவல்கள் ஏராளமாக இருப்பதை பார்க்கிறோம். மக்கள் அறிவியல் என்பது ஒரு பெரிய சமுத்திரம். உலக அதிசயங்களில் இந்த தென்மேற்கு பருவ மழை ஒன்று என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அது பற்றி இதுவரை நான் படித்த என் எல்லா பாட புத்தகங்களையும் விட சிறந்த புத்தகம் உங்கள் கையில் இப்போது இருக்கும் இந்த புத்தகம்தான் என்று என்னால் புரோநோட்டு எழுதித் தரமுடியும்.

நம் நாட்டில் புயல் சூறாவளி என்றால் ‘ரேடியோல சொல்லிட்டான்... மழை வரும்னு... கட்டாயம் வெயில்தான் காயும்’ என்று கேலி செய்த ஒரு காலம் உண்டு. இப்போது அப்படி அல்ல. தினமும் காலநிலை அறிக்கை... சாட்டிலைட் வரைபடம் என தட்பவெப்ப ஆய்வு மையத்திலிருந்து அதிகாரிகள் நேரடியாக புவியியலை மக்களிடம் பேசுவதையும்... மையம் கொண்ட புயலுக்கு திரிஷா, உஷா, நிஷா என்றெல்லாம் பெயர் வைத்து செல்லமாக மக்கள் உரையாடுவதையும் காண்கிறோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவத் தோழர்கள் வானிலை எஸ்.எம்.எஸ். மூலம் செய்தி கிடைத்து கரை சேர்கிறார்கள். இந்த அதிசயத்தை அறிவியல் சத்தமின்றி சாதித்துள்ளது.

1970 வங்காளதேசத்தில் பயங்கர புயல் ஒன்று தாக்கியதில் 20,00,000 பேர் உயிரிழந்தார்கள். உலக வரலாற்றில் ஒரு புயலுக்கு இத்தனை பேர் உயிரிழந்தது இதுவே முதல்முறை. கியூபாவை மையமாக வைத்து மிக்கேல் சூறாவளி வீசியபோது... அருகில் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். ஆனால் கியூபாவில் உயிரிழப்பு கிடையாது! காரணம் கியூபர்களின் இயற்கை பேரிடர் மேலாண்மை. அது குறித்து முக்கிய அறிவியல் நூல் ஒன்றை மொழிபெயர்க்கும் வாய்ப்பு பிடல்காஸ்ட்-ரோவின் 80வது பிறந்த ஆண்டை உலகம் கொண்-டாடியபோது எனக்கு கிடைத்தது. சுனாமி தாக்கிய பிறகு காலநிலை அறிவியலின் முக்கியத்துவத்தை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம்.

பருவமழை முதல் சூப்பர் சூறாவளி வரை காலநிலை குறித்து நாம் அறிவேண்டிய அனைத்தை-யும் மிகவும் எளிதான ஒரு நடையில் இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர்

சி. ரங்கநாதன் எழுதிச் சொல்கிறார். பல சுயசரிதை கட்டுரைகள் ‘வடகிழக்கு பருவமழை தன் வரலாறு கூறுதல்’ போன்ற கட்டுரைகள் அறிவியலை எப்படி சுவைபட எழுதினால் மக்கள் வாசிப்பார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளன. கணினி, செய்றைக்கோள், ரேடார், சூப்பர் கம்ப்யூட்டர் என ரங்கநாதன் எதையும் விட்டு வைக்கவில்லை.

தேர்ந்த அறிவியலாளர், நிர்வாக மேலாளர் பதவி வகித்தவர்கள் சாதாரண மக்களோடு தனது எண்ணங்-களை எளிய மொழியில் உரையாட வருவதே ஒரு வரவேற்கத்தக்க செயல்பாடுதான். மழையோடு மீனும் தவளையும் கொட்டும் டோர்னேடோ சூறைக்காற்று முதல் ஒரே காற்று இந்திய விவசாயத்தை செழிக்க வைத்து _ அதே காற்று ஆப்கானிஸ்தானை பாலைவனமாக்கும் வரை பல அதிசயங்கள் இந்தப் புத்தகம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை எளிய தமிழில் ஒரு குழு மொழி பெயர்த்துள்ளது. மாண-வர்கள் மட்டுமல்ல அனைவருமே ஒரு கதைப் புத்தகம் போல வாங்கி வாசித்து புவியின் ரகசியங்களை அறிந்துகொள்ள உதவும். தமிழில் எப்போதாவது வெளிவரும் நல்ல நூல்களில் இதுவும் ஒன்று.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com