Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
புத்தகம் திறக்கும் வாசல்
பூட்டிய அலமாரியினுள் கவிதைப் புதையல்
கிருஷ்ணா டாவின்சி


“எமிலி எலிசபெத் டிக்கின்ஸன்’’ என்கிற பெயர் உலக கவிதை இலக்கியத்-தில் அழியாப் புகழ் கொண்ட ஒன்று. ஆயிரக்கணக்கான அமர கவிதைகளை எழுதியவர் எமிலி டிக்கின்ஸன். கவிதை மனம் கொண்டவர்களுக்கே உரிய பிரத்யேக குணங்கள் இவரிடமும் இருந்தன. வாழ்நாள் முழுக்கத் தனிமையிலேயே வாழ்ந்தவர். பூட்டிய அறைக்குள்ளேதான் இவருடைய பல புகழ்பெற்ற கவிதைகள் பிறந்தன. இறப்பைப் பற்றிய பயமும், சாவில்லாத வாழ்வைப் பற்றிய கற்பனையும் இவரை மாறி மாறித் தாக்கியதின் சிந்தனைகளில்தான் அந்தக் கவிதைகள் படைக்கப்பட்டன.

Emily Elizabeth Dikkins அமெரிக்காவில் உள்ள மாஸவட்டஸ் மாநிலத்தில் 1830ஆம் வருடம் பிறந்தவர் எமிலி டிக்கின்ஸன். பள்ளியில் படிக்கும்போதே மிகச் சிறப்பான மாணவி என்று பெயரெடுத்தாலும், அவருடைய பல நடவடிக்கைகள் வினோதமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தார்கள். அதே நேரத்தில் இசையில், குறிப்பாக பியானோ வாசிப்பதில் எமிலி இளம் வயதிலேயே தேர்ச்சி பெற்றிருந்தார். சிறு வயதில் ஆம்ஹெர்ஸ்ட் என்கிற ஊரில் எமிலி வசித்த வீட்டுக்கு எதிரிலேயே ஓர் இடுகாடு இருந்தது. அங்கே அவர் அடிக்கடி கண்ட சவ அடக்க காட்சிகள் அவர் மனதை மவுனமாக பாதித்தன. இறப்பைப் பற்றிய கேள்விகள் அந்தச் சின்ன மனதிலேயே அப்போது எழுந்தன.

பள்ளிப்பருவத்தின் போது அவர் படித்த அகாடமியின் பிரின்ஸிபால் லியோனார்ட் ஹம்ப்ரே இளம் வயதுக்காரர் என்றாலும் பெரிய படிப்பாளி. அவர் எமிலியின் எழுத்துத் திறமையை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு அவருக்குத் தனிப்பட்ட முறையில் இலக்கிய பாடங்களை நடத்தினார். அவர் மீது மிகப்பெரிய பிரமிப்பை வைத்திருந்-தார் சிறுமி எமிலி. ஆனால் ஹம்ப்ரேவும் தன்னுடைய 25ஆம் வயதில் மூளை ரத்தக்கசிவினால் அகால மரணமுற்றது எமிLயை மன உளைச்சலுக்கு உள்ளாக்-கியது. தன் மன பாதிப்புகள் எல்லாவற்றை-யுமே கவிதைத்துவமான நடையில் அவ்வப்போது குறிப்புகளாக எழுதி வைத்தபடியே இருந்தார் எமிலி.

ஹம்ப்ரே மட்டுமின்றி எமிலிக்கு நெருக்கமாக இருந்த பல நண்பர்களும், உறவினர்களும் அதிக அளவில் அடிக்கடி இறந்து போனதும் அவர் மனநிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க ஆரம்பித்தன. சோபியா ஹாலண்ட் என்கிற நெருக்கமான தோழி டைபாயிடினால் கண் முன்னே இறந்து போனதைப் பார்த்து எமிலி ஆடிப்போனார். அவர் நடவடிக்கைகள் கன்னாபின்னாவென்று மாறின. கவலையுற்ற பெற்றோர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி எமிலியின் மனநிலை தௌ¤வாவதற்காக வேறு ஒரு ஊருக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்கள் அங்கே போய் தங்கிவிட்டு மறுபடி வீடு திரும்பினார் எமிலி. துன்பமான காலகட்டங்களில் வாழ்க்கையில் மலரும் வசந்தம் போல அப்போது எமிலிக்கு அருமையான பல நண்பர்கள் கிடைத்தார்கள்.

கல்லூரிப் பருவம் என்பது எமிலிக்கு குழப்பங்களைத் தருவதாகவே அமைந்தது. ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த கல்லூரிக்கு அவர் தங்கிப் படிக்கச் சென்றார். அங்கே திடீரென்று அவர் தீவிர கடவுள் மற்றும் மதப்பற்றாளராக மாறினார். மத வேலைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டார். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அவருக்கு அந்த வாழ்க்கை பிடித்தமில்லாமல் போனது. அதிலிருந்து விலகினார். வீட்டுக்கே சென்று அங்கே அமைதியாக செட்டில் ஆகி விடவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. குடும்பத்தினரும் அவர் வீட்டுக்குத் திரும்புவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். எமிலி சந்தோஷத்-துடன் வீடு திரும்பினார்.

ஏனோ, அவர் மனதுக்கு வீடும், அவருடைய தனியான அறையுமே மிகப் பிடித்திருந்தன. பெஞ்சமின் நியூட்டன் என்கிற அப்பாவின் நண்பர் அப்போது அறிமுகமானார். இலக்கிய ரசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்த அவர் எமிலிக்கு வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளையும், எமர்ஸன் தொகுத்த கவிதைகளையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அந்த உலகம் எமிலிக்கு வேறொரு பரவச உணர்வை ஏற்படுத்தியது. கவிதை எழுத வேண்டும் என்கிற பேராவலை அந்தப் புத்தகங்கள் ஏற்படுத்தின. அதற்காக அவர் நியூட்டன் மீது மிகுந்த அன்பும் நேசமும் கொண்டார். நியூட்டன் தொடர்ந்து எமிலிக்-குப் புதிய புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஷேக்ஸ்பியரின் படைப்புகள் எமிலியை மிகவும் வசீகரித்தன. அவர் முழு வீச்சுடன் கவிதைகள் எழுத ஆரம்பித்த பருவம் அது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நியூட்டன் விரைவிலேயே டி.பி. நோய்க்கு ஆளாகி இறந்து போனார். அவரை ஒரு குருவாகவும், வழி நடத்துபவராகவும், பிரியவே முடியாத இலக்கிய நண்பராகவும் நினைத்திருந்த எமிலி இடிந்து போனார். நியூட்டனின் இழப்பு அவரை மறுபடி ஒரு சோக உலகத்துக்குள் தள்ளியது.

வீட்டில் தன் அறைக்குள் அடைபட்ட எமிலி தன்னுடைய இலக்கிய நண்பர்களுக்குக் கடிதம் மூலமாகவே ஒரு தொடர்பு உலகத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தக் கடிதங்களெல்லாம் இன்றைக்கும் பெரும் இலக்கியமாகப் போற்றப்படுகின்றன. எமிலியின் தாய் எப்போதும் தன் குழந்தைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. எமிலியின் தந்தை தான் ஒரு தாய் போல் இருந்து குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார். அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட எமிலியின் தந்தை அப்போது தன் வேலை-களுக்காக வாஷிங்டன் போக வேண்டியிருந்தது. எமிலியின் தாயும் அப்போது படுத்த படுக்கையானார். எமிலியின் தனிமை அப்போது அதிகமாகியது.

ஒரு சிறந்த மகளாகத் தன் தாயையும் கவனித்துக் கொண்டார் எமிலி. அதே நேரம் அவருடைய படைப்புத் திறன் உச்சகட்டத்தை அடைந்தது. கவிதைகள் மட்டுமின்றி தன் தோழர்களுக்கு அவர் இடைவிடாமல் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்-களும், கவிதைகளும் இலக்கிய அந்தஸ்தை அடைந்தன. 1860களில் அவர் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதினார். எல்லாமே பிரசுரிக்கப்-பட்டன, ஆனால் பல எடிட்டிங்களுக்குப் பிறகு. காரணம் அந்தக் கால கவிதைப் பிரசுரங்கள் மிகவும் சம்பிரதாயமாகவே இருந்தன. எமிலி அப்போதே புகழ் பெற்ற கவிஞராக மாறினார்.

நாட்கள் செல்லச் செல்ல எமிலியின் துயரங்கள் அதிகமாகியது. தாய், தந்தை உட்பட ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் அடுத்தடுத்து இறந்தது அவரது கவிதை மனதைத் தாக்கியது. அவர் தன் வீட்டின் பூட்டிய அறைக்குள் அடைந்து கொண்-டார். வெள்ளை உடைகளையே அணிந்தார். அவரைக் காணவே முடியாத உள்ளூர் மக்களும் அவரை “வெள்ளை உடை தேவதை’’ என்றே அழைத்தனர். பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் இருந்தே அவர் தன் விருந்தினர்களுடன் பேசினார்.

தன்னுடைய 55வது வயதில் இறந்து போனார் எமிலி டிக்கின்ஸன். அவருடைய சகோதரி பூட்டிய அலமாரியில் இருந்து புதையல் புதையலாக கவிதை-களைத் கண்டெடுத்தார். அவை பிரசுரமாகி பெரும் பாராட்டைப் பெற்றன. எமிலியின் புகழ் உலகெங்கும் பரவியது. அவருடைய பழைய “எடிட்’’ செய்யப்பட்ட கவிதைகள் கூட முழு வடிவத்தில் வெளிவந்தன. அந்த “எடிட்டுங்குகள்’’ பகடி செய்யப்பட்டன. இறந்த பிறகும் அழியாப் புகழை அடைந்தார் எமிலி.

மனித ஆன்மா ஓயாமல் எழுப்பும் கேள்விகளின் குரலாய் தன் கவிதைகளின் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கவிதாயினி எமிலி டிக்கின்ஸன்.