Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
நூல் அறிமுகம்
வரலாற்றை நேர்மையாக பதிவு செய்த நாவல்
சோலை சுந்தர பெருமாள்


‘நதியின் மடியில்’ (நாவல்) ப. ஜீவகாருண்யன்
வெளியீடு : அருள் புத்தக நிலையம், குறிஞ்சிப்பாடி,
பக்: 196 ரூ.86

ஆரியர்களுக்கும் முந்தைய வரலாறு எழுத்து வடிவத்தில் இல்லை என்று கூறப்பட்டாலும் அது உண்மையல்ல. ஏனெனில் மொகஞ்சாதரோவிலும் ஹரப்பாவிலும் ஆயிரக்கணக்கான முத்திரைகள் கிடைத்துள்ளன. அவற்றில் எழுத்துகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள நம்மால் இன்னும் இயலவில்லை. அந்த முத்திரைகளைப் படிக்க முடியாவிட்டாலும் நம்முடைய புராதன நகரங்களிலிருந்து மனித வாழ்வு சம்பந்தப்பட்ட எத்தனையோ அரிய பொருட்கள் நிறைய கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு நாம் அன்றைய மக்களின் வாழ்க்கையினை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

(ரிக்வேதகால ஆரியர்கள் _ ராகுல சாங்கிருத்யாயன்)

..... ரிக்வேதத்திலிருந்து தாணுவின் மகள் விருத்திரன், வரசினன், சுசுணன், சம்பரன் ஆகிய நால்வரும் கி.மு. 1700 ல் சிந்து வெளித் தமிழகத்தின் முதன்மை பெற்ற மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். அகி, வலன், சுமுரி, துனி, குயவா போன்ற குறுநில மன்னர்கள், படைத்தளபதிகள், படைவீரர்கள் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன.

ஆராயி என்ற பெயருள்ள வீரப்பெண்மணி இமயம் முதல் குமரிவரை இருந்த உண்மைத் தமிழகத்தை நிலைநிறுத்தக் கூடியவளாக இருந்திருக்கிறாள். அவளுடன் கிராகி என்ற பெயருள்ள வீரப்பெண்மணியும் காணப்படுகிறாள். குயவா என்ற மாபெரும் வணிகனின் இரண்டு மனைவிகளும் போர்முனை சென்றவர்கள். மேலும் பல தமிழ் வீராங்கனைகளையும் காண முடிகிறது.

(அரப்பாவில் தமிழர் நாகரிகம் குருவிக்கரம்பை வேலு)

குழுக்கள் குலங்களாக மாறிய பழங்குடி மக்களின் சமூக வளர்ச்சி முன்நோக்கி நகர நகர வாழ்முறை நகர நாகரிகச் சமூகமாக மாறியிருக்கிறது. இந்த மாறுதலுக்கிடையே வேலைப்பிரிவினை நிகழ்ந்திருக்கிறது. காலப்போக்கில் இந்த வேலைப்பிரிவினையே இறுகி சாதிசமூகமாக மாறிவரும் நிலையில்தான் ஆரியர்கள் சாதி சமூகத்தை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். இதற்கான விளக்கங்கள் சங்க இலக்கியங்களிலும் ஓரளவு பதிவாகியுள்ளன.

இப்படி வளர்ச்சி அடைந்த சமூகத்திற்கு புரோகிதர்கள் அல்லது குருக்கள் தலைமையிடத்தில் இருந்திருக்கின்றனர்.

முதன்முதலில் ஆரியர்கள் சப்த சிந்துவினுள் நுழைந்தபோது இனக்குழுக்களாக இருந்தவர்களும் குலங்களாக ஒருங்கிணைந்திடும் தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குலங்களிடையே பரிவர்த்தனை நடந்து ஒருமுகமாகத் திரண்டிருக்கிறார்கள். திரண்டவர்கள் புரோகிதர்களை, குருக்களை தங்களுக்கு மேலானவர்களாக இருக்க அனுமதித்திருக்கிறார்கள். இதன் ஊடே இனக்கலப்பை நடத்தி யுகாந்திரங்களின் போக்கில் ஆரிய மரபு தனது சுயத்தை இழந்துபோனது. ஆனாலும் ‘தாங்கள் அனைவருமே ஆரியவழி பிராமணர்கள்’ என்று மற்றவர்களை அவர்களால் நம்ப வைக்க முடிந்தது. அதன் வழியே ரிக்வேதம் காலாவதியாகிப் போவதைத் தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் நேர்ந்தது. ரிக் வேதத்தைக் காப்பாற்றிய தொடர்ச்சியில் யஜுர், சாம வேதங்களைக் கட்டமைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் முடிந்தது. யஜுர் சாம வேதங்களை உருவாக்கிய வெகுகாலங்கழித்தே அவர்கள் அதர்வண வேதத்தைக் கட்டமைத்தனர். அவைகளும் பலமிழக்கும் தறுவாயில் வேதஸ்மிருதிகளைப் படைத்தனர். இதனால்தான் இதிகாசங்களில் பிராமணர்கள் சத்திரியர்களாகவும், சத்திரியர்கள் பிராமணர்களாகவும் படிநிலை ஏற்ற இறக்கம்’ கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஊடாட்டங்களுக்கிடையே இந்த மண்ணில் பூர்வீக இனங்களின் படிநிலையைச்சாதி சமூகமாக இருத்திக் கொண்டு தங்களுக்கான தலைமை இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முழுமையடைந்திருந்த நில உடமைச் சமூகம் கை கொடுத்தது. கொடுத்துக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் தான் மேற்குறிப்பிட்ட அனைத்துச் செய்திகளையும், பெயர்களையும் கதையாக, கதை மாந்திரிகளாக தன்னுள் அடக்கிய ஆச்சரியத்துடன் ஜீவகாருண்யனின் ‘நதியின் மடியில்’ நாவலை வாசிக்க நேர்ந்தது.

மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு நாவலின் படைப்பாளி, இது வரையிலும் வெளிப்பட்டுள்ள சான்றுகளின் தரவுகளை நிரல்படுத்திக்கொண்டு கதைக்களத்தையும், கதை மாந்தர்களையும் புனைவுக்கு உட்படுத்தியிருக்கிறார். எதிலும் கவனச்சிதறல் நிகழ்ந்திடாமல் உணுப்பாய் செய்திருக்கும் படைப்பு இது. நாவல் மிகவும் நேர்த்தியுடன் வடிவம் கொண்டு துவங்குகிறது.

மேய்ச்சல் சமூகத்தைச் சேர்ந்த அங்காளி பங்காளிகளான பிப்ரு, நமுசி என்னும் இளைஞர்களின் குடும்பத்தாரிடம் கம்பளி, பருத்தி ஆடைகளைக் கொள்முதல் _ பண்டமாற்று _ செய்த சிறுவியாபாரிகள் இருவர் இளைஞர்களுக்கு சிந்து நதிக்கரை நகர வாழ்வின் அதிசயங்களை அறிமுகம் செய்கிறார்கள். இளைஞர்கள் நதிக்கரை நகர வாழ்வை, அதன் பெருமைகளை, சுகங்களை நேரில் அறிந்து தங்கள் கிராமத்தை நகரமாக்கும் விருப்பத்துடன் நகரம் நோக்கிப் புறப்படுகிறார்கள்.

பலநாள்கள் கணக்கில் காடுகளிலும், சமவெளிகளிலும் பயணம் மேற்கொள்கிறார்கள். துவக்கத்திலேயே நாவலில் கலைத்தன்மை மெருகு கொள்கிறது. வேட்டைக்காரனாக இருந்த சிவபெருமான் வேட்டைக்குச் செல்லும்போது கூடவே பைரவரை _ நாயை அழைத்துச் செல்வது போல ‘குரா’ என்ற வேட்டை நாயும் அவர்களுடன் பயணிக்கிறது.

நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரை அடைய படகுப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணம் இளைஞர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது. கூடவே படகுத்துறையிலேயே அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் அற்புத மனிதராக நகரத்தலைவர் வச்சிரனும் அவர் மனைவி ‘தாரி’யும் அறிமுகமாகின்றனர்.

தலைவரின் காதளவு உயரத்தில் தலைவருக்குச் சற்றுக் குறைந்த கறுப்பில் அவர் மனைவி கருணை ஒளிரும் கண்களுடன் லட்சணமாக இருந்தார். பழுப்பு நிற மெல்லிய பருத்திச் சேலையின் ஊடே அதே நிறத்தில் கச்சிதமான மார்புக் கச்சை. இடுப்பிலிருந்து இறங்கி இறுகிய இடையை வளைத்துச் செருகிற அழகில் கசங்காத சேலைக்கட்டு. கழுத்து, காதுகளில், கால்களில் முறையே தங்கத்தில் பதித்ததாக முத்துப் பதக்கம், தங்க ஓலைச்சுருள்கள், கனம் கூடி வளைந்ததாக வெள்ளிக்கால் தண்டைகள், கைகளுக்கு இரண்டாக வழுவழு தந்த வளையல்கள். இடது தோள் பரப்பைத் தொட்டுவிடும் முயற்சியில் முல்லைப் பூச்சரத்துடன் கனம் கூடியதாகக் கறுத்தத் தொண்டை ஆகியவை அவரது கச்சிதமான உடலழக்கு மெருகூட்டின.

(பக்கம் _ 34)

இத்தகைய சொற்சித்திரத்துடன் நகரத் தலைவரின் மனைவியை நேரில் காண்பதுபோல் நமக்கு அறிமுகம் செய்கிறார் நாவலாசிரியர்.

‘நகர அமைப்பின் மேற்கில்_மேட்டில் உயர்ந்து அகன்று கிடக்கும் இந்தப் பெரிய மாடிவீடுகள் பிரபுக்களுடையவை. சிறியவை கொல்லர், குயவர், தச்சர், நெசவாளர்களுக்கு உரியவை’ (பக்கம் _ 37) என்று தலைவரின் வாய்வழி விளக்கத்தின் மூலம் வியப்பை ஏற்படுத்திய நகரம் பூபிகனின் நேரடி காட்சி விவரிப்பில் இளைஞர்களை நிறைய யோசிக்க வைக்கின்றது. சிறிய கால இடைவெளியில் தலைவரின் மகள் தாணு _ பிப்ரு இடையே முளையாக, அரும்பாக, பூவாக மெல்ல காதல் வளர்கிறது.

நகரின் முக்கியப் பண்பாட்டு நிகழ்வான நதிக்கரை விழாவிற்கு நதிக்கரை மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள்.

நீர்விளையாட்டு, வழிபாடு _ லிங்க வழிபாடு, நாட்டியம் என நதிக்கரை விழா மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஆடுகள், கன்றுகள், கோழிகள் மற்றும் பன்றிகளின் இறைச்சியுணவு பொது விருந்தாக முன்னிரவு முழு நிலவு வெளிச்சத்தில் தீப்பந்தங்களின் உதவியுடன் விமரிசையாக நடக்கும். இவற்றுள் நீர்விளையாட்டுக்கும் முன்னதாக தலைவரின் உரை. நாட்டியத்திற்கும் முன்னதாக வழிபாட்டுச் சடங்குகள். தலைவர் தனது தலைமை உரையை குருவின் அனுமதியுடன் ஆரம்பித்தார். (பக்கம் _ 95)

விழாவின் மூன்று முக்கிய நிகழ்வுகள் முடிவதற்க்கும் முன்பாகவே நதிக்கரையின் அந்தத் தோப்புத் துறையில் விபரீதம் நிகழ்ந்து விடுகிறது. இயற்கைக் கடன்கழிக்க மறைவு தேடிச்சென்ற ஐந்து விவசாயப் பெண்களை பிளவுபடாத பெருங்குளம்புகள் கொண்ட காற்று மிருகங்களின் மேல்வந்த தீப்போல் சிவந்ததேகம், செம்பட்டை முடி, நிலப்பாவை கொண்ட கண்கள், எடுப்பாக கூர்ந்த மூக்கு, புதர் அடர்த்தி தாடி மீசை, இடுப்பிலும் மார்பிலும் கரடுமுரடான தோல் ஆடைகள் அணிந்த ‘உயர்ந்த’ மனிதர்கள் அபகரித்துச் சென்று விடுகின்றனர். நதிக்கரை விழா தடைபடுகிறது.

பிப்ருவுடன் சேர்ந்தவளாக தாணு காற்று மிருக மனிதனின் குழந்தையுடன் சூழ்ந்து நிற்பவர்களிடம் விடைபெறும் போது ‘ஆராயி என்ன ஆனாள்?’ என்ற கேள்விக்கு நாவலில் பதில் இல்லாமல் போகிறது.

‘பிப்ரு, தாணு, காற்று மனிதனின் குழந்தை இந்த மூன்று மனிதர்களைச் சுமந்து தெற்கு நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்த அந்த அப்பாவிக் காற்று மிருகம் கூடிய விரைவில் தனது நேசத்திற்குரிய ‘பாய்ச்சல் நண்பர்கள்’ தங்களின் நாடோடி எஜமானர்களுடன் தேசம் முழுதும் நிரம்ப இருக்கும் உண்மையை அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை’ இந்தக் கடைசி வரியோடு நாவல் முடிகிறது.

படைப்பாளியான ப. ஜீவகாருண்யன் வரலாற்றை நேர்மையாக செழுமையுடன் நல்லிலக்கியமாக பதிவு செய்திருக்கிறார். இலக்கிய உலகம் உண்மையான புரிதலோடு அவரின் கடுமையான உழைப்பையும் அதன் வேர்வை வெளிப்படுத்தியிருக்கும் கலை நேர்த்தியையும் இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை பேசவே செய்யும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com