Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
மனிதர்கள் மனிதத்தனத்தால்தான் மதிக்கப்படுகிறார்கள்
பிரபஞ்சன்


‘படிக்க, பரிசளிக்க, பயன்பெற’ என்ற தாரக மந்திரத்துடன் கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக பதிப்புப் பணியில் எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பாலமாக அமைந்துள்ளவர் கவிதா பப்ளிகேஷன்ஸ் சேது சொக்கலிங்கம். இவரின் மணிவிழா 24.6.2009 அன்று சென்னையில் நடைபெற்றது. பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் புடைசூழ வந்திருந்து வாழ்த்தினர். மணிவிழா காணும் திரு. சேது சொக்கலிங்கம், திருமதி தனலெட்சுமி தம்பதிகளை ‘புதிய புத்தகம் பேசுது’ இதழ் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறது. இந்த விழாவில் வெளியிட்ட மலரில் எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் கட்டுரையின் சில பகுதிகளை மீள் பிரசுரம் செய்கிறோம்.

புத்தகப் பதிப்பு மிகவும் சுலபமாகிப் போன ஒரு காலகட்டம் இது. எழுதத் தொடங்கிய ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஓர் எழுத்தாளர் தன் எழுத்துகளைப் புத்தகமாகப் பார்த்துவிடக் கூடிய வாய்ப்பு இப்போது கூடி வந்திருக்கிறது. காசு உள்ளவர்கள் சில ஆயிரங்களைச் செலவிட்டால் தம்மை நூலாசிரியர்களாக மாற்றிக்கொள்ள எந்தச் சிரமமும் இப்போது மேற்கொள்ள வேண்டியதில்லை. தான்மட்டும் அல்லாமல், புத்தகத்துக்குப் புத்தக மதிப்பை மீறிய பல புதிய மரியாதைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கிறதும் நாம் கண்டதுதான். சில ஆண்டுகளுக்கு முன்னால், நூலாசிரியர்கள் பிள்ளைகளுக்கு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற நடைமுறை வந்தபோது, பல அலுவலர்கள் புத்தகம் எழுத அல்லது எழுதுவிக்க முயன்றதையும் நாம் பார்க்க நேர்ந்தது. இப்போது அது வேறு ரூபத்தில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்காகப் பிறர் எழுதிய புத்தகங்களைத் தம் பெயரில் மாற்றிப் பிரசுரித்து வேலைக்குச் சேர்ந்த பேராசிரியர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

புத்தகம் அதன் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட தளங்களில் பிரவேசித்துள்ளது. அண்மைக் காலத்து அவலங்களில் ஒன்று. எழுதுபவர்களே பதிப்பாளர்களாகவும் இருந்த ஒரு காலம் இருந்திருக்கிறது. இதோ என் கண்முன்னே இருக்கிற அபிதான சிந்தாமணியைக் கொண்டே இது பற்றிப் பேசலாம். ஆ. சிங்காரவேலு முதலியார் சுமார் இருபது ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய The Encyclopedia of Tamil Literature என்று சொல்லப்படும் மிகவும் முக்கியமான அந்தத் தொகுப்பைப் பிரசுரிக்க முடியாமல் மிகவும் துன்புற்று இருக்கிறார்.

நூல் பதிப்புக்கு உதவி கோரிய அவரது துண்டறிக்கையை மதுரைத் தமிழ்ச் சங்க ஸ்தாபகர் பாலாநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைசாமித் தேவர் கண்ணுற்று உதவிக்கு வந்திருக்கிறார். அவர் கைப்பிரதியை நகல் எடுக்கச் செய்து, சென்னையிலேயே பதிப்பிக்கும் பணி நிகழும்போது நூலாசிரியரும் அதில் ஈடுபட வழி வகுத்திருக்கிறார். இப்படியாக மிகுந்த துன்பத்தையும் சஞ்சலத்தையும் நூலாசிரியருக்குத் தந்த அபிதான சிந்தாமணி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது பிறந்த ஆண்டு 1910.

நூலாசிரியர்களே பதிப்பிக்கவும் செய்து, பதிப்பாளர்களான முதல் தலைமுறை அது. தமிழ்ப் பண்பாடு, வரலாறு என்று பின்னால் தமிழ் மக்கள் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திய பல வரலாற்று நூல்கள், பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத் துறை தொடங்கும் முன்பே எழுதப்பட்டு ஆசிரியர்களாலேயே பதிப்பிக்கவும் பெற்றன. இன்று நூறாண்டு கண்ட பல பதிப்பகங்கள் அதன் பின்னரே தோன்றின.

எழுத்தாளர் க.நா. சுப்ரமணியம் ஓர் அனுபவத்தைச் சொல்வார். க.நா.சு. ஒரு நாவலைப் பதிப்பிக்க அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரிடம் தந்துள்ளார். அதில் கதாநாயகன் சிகரெட் பிடிப்பதாக வருகிறது. அந்தப் பகுதி பதிப்பாளருக்கு தர்மம் அற்ற காரியமாக இருந்திருக்கிறது. ஒரு கதாநாயகன் சிகரெட் பிடிப்பதா? வேண்டுமென்றால், வெற்றிலை பாக்கு போடலாமே என்பது பதிப்பாளர் கருத்து. ஆனால் கதாநாயகர், சிகரெட்டை விடத் தயாரில்லை. முடிவாக, அந்த நாவல் வெளிவரவே இல்லை என்று க.நா.சு. சொல்லி இருக்கிறார். இதில் என்னைக் கவர்ந்த விஷயம், பதிப்பாளர்களுக்கும் அறம் சார்ந்த விழுமியங்கள் இருந்த ஒரு காலமும், படைப்பாளர்களுக்குத் தம் கொள்கை சார்ந்த நேரிய பிடிவாதங்களும் இருந்த ஒரு காலமும் இங்கு நிலவி இருந்தது என்பதுதான். அப்படியான ஒரு சூழலில்தான் ஆரோக்கியமான படைப்புகள் உருவாக முடியும்.

பதிப்புத் தொழில் வெறும் பொருளாதாரக் காரணிகளால் நிகழ்த்தப்படும் ஒன்றாக இருக்க முடியாது. படைப்பு என்பதன் பெருமைக்குச் சற்றும் குறையாதது அதைப் பதிப்பிக்கும் தொழில்.

ஒரு நூலின் பெருமை அதன் உள்ளடக்கத்தில் இருப்பது போல, அதன் சிறப்பு அதை உருவாக்கும் பதிப்பு முயற்சியிலும் இருக்கிறது. ஆறுமுக நாவலர், சாமிநாதையர், தாமோதரப் பிள்ளை ஆகியோர் பதிப்புகளில் இந்த அக்கறையைக் காணலாம். ஒரு புத்தகத்தின் மதிப்பு அதன் அட்டையிலிருந்து தொடங்கி பின் அட்டையில் முடிவடைகிறது. புத்தகத்துக்கு இருக்க வேண்டிய அழகும், பொறுப்புணர்ச்சியும் பதிப்பாளர்களின் ஈடுபாடே முதல் காரணமாய் இருந்து, தோன்ற வைக்கிறது.

க்ரியாவும், அன்னமும் அகரமும், தொடக்கக் காலத்திலேயே நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகிய அம்சங்களை உணர்ந்து செயல்படுகின்றன.

கவிதா பப்ளிகேஷன் உரிமையாளர் நண்பர் திரு. சேது சொக்கலிங்கம் அவர்கள் என் பதிப்பாளராக இருப்பது எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தரும் அனுபவமாக இன்று வரை நீடிக்கிறது. இது தொடர்ந்து நீடிக்கும். சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரை நான் சந்தித்த போது, அவர் தம் தொழிலில் கால் ஊன்றி வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நேரம். எழுத்தாளர்கள் மேல் அவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் அக்கறையும் என்னை அச்சந்திப்புகளின்போது மிகவும் ஈர்த்த விஷயங்களாக இருந்தன. அவர் மேல் எனக்கு ஏற்பட்ட முதல் ஈர்ப்புக்கு இவையே காரணமாக அமைந்தன. அதன்பிறகு என் புத்தகங்களை அவர் பதிப்பிக்கத் தொடங்கினார். எங்களுக்குள் நிலவும் உறவு பதிப்பாளர் _ எழுத்தாளர் உறவாக, அவரைச் சந்தித்த அந்த முதல் நாள் தொட்டு இருந்தது இல்லை. இரண்டு சகோதரர்களுக்குள் ஏற்பட்ட உறவாகவே எங்கள் நட்பு நீடித்தது.

சேது சொக்கலிங்கம் அவர்களின் பதிப்புப் பணி வட்டத்துக்குள் வாஸந்தி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, சிற்பி, ஜெயகாந்தன், மு. மேத்தா, ஜெயமோகன் என்று பலரும் அடங்குவர். ஓஷோவின் முக்கியச் சிந்தனைகளைத் தமிழ்ப் பதிப்புக்குள் கொண்டு வந்தவர் அவர். பாரதி, பாரதிதாசன் கவிதைகள் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக, அடக்க விலைக்கும் கீழே அழகு குறையாமல், பிழைகளின்றி அக்கவிஞர்களின் கவிதைகளைத் தமிழுலகுக்குத் தந்தவர் அவர்.

பதிப்புத் துறையில் அவர் மிகப்பெரிய சொத்தாக ‘மரியாதைக்குரிய மனிதர். மனிதாபிமானம் கொண்ட பதிப்பாளர்’ என்கிற பெருமையை இன்று அடைந்திருக்கிறார். இதற்குக் காரணமாக நான் கருதுவது இவற்றைத்தான்.

ஒன்று, ஒரு பதிப்பகத்தின் மரியாதை என்பது, அப்பதிப்பகம் வெளிக்கொணரும் தகுதி வாய்ந்த எழுத்தாளர்களின் தரமான புத்தக வரிசைகளால் ஏற்படுவது. அந்த வகையில் திரு. சொக்கலிங்கம் தகுதி வாய்ந்த எழுத்தாளர்களால் தம் பதிப்பகங்களுக்கு மரியாதை தேடிக் கொண்டிருக்கிறார். இதுவே அவருடைய மூலதனம்.

இரண்டாவது, தம் எழுத்தாளர்களின் வாழ்க்கையின்பால் அக்கறை காட்டி, குடும்ப உறுப்பினர் போல் செயல்படுவது. இது, இப்போதெல்லாம் அபூர்வமாகிக் கொண்டிருக்கும் உயர் குணங்களில் ஒன்று.

மூன்றாவது, அவரது பேர் உழைப்பு. ஒரு சிறுவனாகப் பதிப்புத் துறைக்குள் நுழைந்து, ஒரு குறிப்பிடத்தகுந்த பதிப்பாளராக இன்றைய வளர்ச்சிக்குப் பின்னால், அவருடைய வியர்வையும் இரத்தமும் இருக்கிறது என்பதை அவருடைய பழைய நண்பர்கள் அறிவார்கள். மிகக் கடுமையான உழைப்புக்குப் பிறகே, இந்த நிலைமையை அவர் அடைந்திருக்கிறார். இது ஓரிரவில் ஏற்பட்டதன்று. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அவரது கடும் உழைப்பு, இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.

நான்காவதாக, என்றும் மாறாத இனிய சுபாவம். வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அதன் அதன் போக்கில் எதார்த்தமாக எடுத்துக் கொள்வது. எதையும் பெரிசுபடுத்தாமல் இயல்பாக இருந்து கொள்வது, யாரையும் பகை கொள்ளாத நடுநிலைப்போக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர்கள் மேல் அவர் கொள்ளும் எதிர்பார்ப்புகளற்ற அன்பு. இவையே சேது சொக்கலிங்கம் என்பது என் கணிப்பு.

எங்கள் வாழ்வில் முப்பது _ நாற்பது வயது இளைஞர்களாக நாங்கள் சந்தித்தோம். இப்போது அவருக்கு அறுபது நிறைகிறது. இப்போது அவர் அதாவது அறுபது நிறையும் இளைஞர். எண்பதுகளின் போதும் அவர் இதேபோல, இன்று போல, முன்பனிக் காலத்து மாலைக்காற்று போல இனிமையும் அமைதியும் தவழ வாழ்வார் என்பது சர்வ நிச்சயம்.

மனிதர்கள் அவர்கள் மனிதத்தனத்தால்தான் மதிக்கப்படுகிறார்கள். வேறு எதனாலும் அல்ல.