Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
நேர்காணல்
சமச்சீர் கல்வியை வேண்டுமென்றே தள்ளிப் போடுகிறார்கள்
கே.எஸ். கனகராஜ்


கோவை மில் தொழிலாளியின் மகனான இவர், கல்லூரியில் முதலாண்டு படிக்கும்போதே இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தவர். பின்னர் மாவட்ட துணைத் தலைவர், மாவட்டச் செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து இன்று மாநிலச் செயலாளராக உள்ளார். கோவை மேலாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. முடித்தவர். இந்திய மாணவர் சங்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து மாற்றுக் கல்வி குறித்த புத்தக வெளியீடுகளில் முக்கிய பங்காற்றியவர். இடைவிடா பயணத்திற்கிடையே ‘புதிய புத்தகம் பேசுது’ இதழுக்காக சந்தித்தோம்.

கேள்விகள் உதவி : இரா. நடராசன்
பேட்டி : முத்தையா வெள்ளையன்
படங்கள் : சோழ. நாகராஜன்

Kanagaraj ஆரம்பக்கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற தனிச்சட்டம் இயற்றுவது பற்றி தங்கள் கருத்து...

ஆரம்பக்கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும். தாய் மொழியில்தான் ஒரு மனிதனுடைய உண்மையான உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த முடியும். தாய் மொழியில் கல்வி கற்பது என்பது உண்மையிலேயே அவர்களுடைய திறனை அதிகரிப்பதற்காக, கற்றல் திறனை முழுமையாக, இயல்பாக வெளிப்படுத்துவதற்கு உதவி செய்யும். முன்னேறிய நாடுகள் பலவற்றில் ஏற்றுக்கொண்ட அடிப்படையான விஷயம் இது. உலக நாடுகள் பலவற்றிலும் தாய்மொழியில்தான் கல்வி கொடுக்கப்படுகிறது.

மாற்று மொழிகளை பொறுத்தவரை, ஆங்கிலமோ அல்லது வேறு மொழிகளையோ தாய்மொழி மூலமாக கற்க கூடிய ஏற்பாட்டை பள்ளிகள் செய்து கொள்ளலாம். இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் அரசு பள்ளிகளில் தாய்மொழியில் சொல்லித் தரப்பட்டாலும் ஆங்கிலத்தை மொழியாக கற்பிக்காமல், பாடமாகதான் கற்பிக்கிறார்கள். இதை பாடமாக கற்பிப்பதால் மாணவர்கள் மற்ற பாடத்தில் பின் தங்குவது போல் ஆங்கிலத்திலும் பின்தங்குகிற நிலைமை ஏற்படுகிறது. மொழியாக சொல்லிக் கொடுக்கும்போது, அந்த மொழியை கையாளுவது, பேசுவது, எழுதுவது என்று திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். இது போன்ற ஏற்பாடுகள் இல்லாததால் பிளஸ்டூ முடித்தால் கூட மாணவர்களால் ஆங்கிலத்தை சரியாக கையாள முடியவில்லை. தாய் மொழியில் கற்பித்தல் என்பது மேம்படுத்தப்பட்டதாக இருக்கணும். மற்ற மொழிகளை எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும். தாய் மொழியில் கற்றுக் கொண்டதை மற்ற மொழிகளில் வெளிப்படுத்த எப்போது வேண்டுமானாலும் இயலும். தாய்மொழியில் கற்பது என்பது அறிவியல் பூர்வமானது.

அரசு பள்ளிகளின் தரம் எஸ்.எஸ்.ஏ. வந்த பிறகும் முன்னேற்றம் தெரியவில்லையே?

அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. வந்த பிறகு தரம் என்பதை விட பள்ளிகளின் அடிப்படை வசதியில் முன்னேற்றம் அடைந்திருக்கு. ஆனால் தேவைக்கு ஏற்ப முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றே சொல்ல முடியும். நம் நாடு விடுதலை அடைந்த பிறகு ஒட்டுமொத்தமாக இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி தருவது என்றும், அந்த இலக்கை பத்து வருடங்களுக்குள் அடைவது என்று அன்றைக்கு முடிவு செஞ்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்த இலக்கை தொடமுடியலை. இன்றைக்கு வருகிற எஸ்.எஸ்.ஏ. திட்டங்கள் கூட அந்த இலக்கை எட்டக்கூடிய வகையில் இல்லை. சில இடங்களில் எஸ்.எஸ்.ஏ. வந்த பிறகு மத்திய அரசின் உதவி மூலம் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உதவி கிடைப்பதால் சில அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கு. இதனால் பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கு. அதே நேரம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையான அளவுக்கு கட்டிடங்கள் இல்லை. இன்னும் நிதி ஒதுக்கீடுகள் தேவையாக இருக்கு. எஸ்.எஸ்.ஏ திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி 75 சதவிகிதமும், மாநில அரசின் நிதி 25 சதவிகிதமும் தருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த நிதியை மத்திய அரசு 50 சதவிகிதமும், மாநில அரசு 50 சதவிகிதமும் என்று மாற்ற முயற்சி செஞ்சாங்க. இன்னும் கூட இந்த முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மாநிலங்கள் இந்த நிதியை முழுமையாக கொடுப்பதில் தொய்வு ஏற்படும். எஸ்.எஸ்.ஏ.வை கொண்டு வருவது போல் கொண்டு வந்து மத்தியஅரசு நிதியை குறைத்து கொள்வதுதான் இந்த ஏற்பாடு. எஸ்.எஸ்.ஏ. நிதியால் கட்டிடங்கள், கழிப்பறைகள் அதிகமாக கட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது.. ஆனால் ஓராசிரியர் பள்ளிகளை மாற்றக்கூடிய வகையில் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற ஏற்பாடுகளுக்கு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. புதிய பள்ளிகளை தொடங்க வேண்டிய உள்ளது. இந்த நேரத்தில் நிதியை குறைப்பது என்பது பின்னோக்கி செல்வதாக இருக்கிறது.

அதேநேரம் பள்ளிகளின் கட்டிட எண்ணிக்கை உயருவதால் மட்டும் பள்ளிகளின் தரம் உயர்ந்து விடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இப்போது தொன்னூறு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர் என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. இது அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லை. எங்களை பொறுத்தவரை குறைந்தது முப்பது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று கேட்கிறோம். இந்த அரசு அறிவிப்பு என்பது ஓராசிரியர் பள்ளி, இரு ஆசிரியர் பள்ளி ஆகியவைகளை ஊக்குவிக்கிற தன்மையாக இருக்கிறது. இதை மாற்றாமல் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது என்பது சாத்தியமே இல்லை.

செயல்வழி கற்றல் என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

செயல்வழி கற்றல் என்பது வரவேற்கத் தகுந்த முறை. பழைய முறையிலிருந்து மாறுபட்டு, புதிய முறையில் பல அனுபவங்கள் மூலமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. செயல்வழி கற்றல் முறையில் செயல்கள் மூலமாக கற்றுக் கொள்வது, குழுகுழுவாக கற்பது, ஆசிரியர்கள் மாணவர்களோடு அமர்ந்து கற்றுத்தருவது உபகரணங்களைப் பயன்படுத்தி கற்றுக் கொள்வது இது போன்ற ஏற்பாடுகள் இருக்கிறது. இது கற்றலில் முற்போக்கான அம்சம். இந்த மாதிரி முறைகளை தரவேண்டும் என்று தான் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த முறையை அறிமுகப்படுத்துவதிலும், செயல்படுத்துவதிலும் தமிழக அரசின் செயல்களில் விமர்சனம் இருக்கு. செயல்வழி கற்றல் ஒரு ஜனநாயகபூர்வமான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அரசின் உத்தரவு என்ற பெயரில் ஒரு கல்வி முறையிலிருந்து இன்னொரு கல்வி முறைக்கு உடனடியாக மாறுவது என்பது இல்லாமல் ஒரு பரந்த விவாதம் நடந்திருக்க வேண்டும். அந்தப் பரந்தபட்ட விவாதம் என்பது கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகளோடு அரசு நடத்தி இருக்க வேண்டும். செயல் வழி கற்றல் முறையை பலப்படுத்துவது என்பது இன்றைக்கு இருக்கும் செயல்வழி கற்றலில் உள்ள பலவீனங்களை களைவது, பழைய கல்வி முறைகளில், இருக்கும் நிறைவான செயல்களையும் சேர்த்து கொள்வது, செழுமைபடுத்துவதற்கு கல்வியாளர்களோடு ஆலோசனை கேட்டு புதிய முறைகளை கொண்டு வருவது, ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது போன்றவை செய்யப்பட வேண்டும். இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் செயல்வழிக் கற்றலை கற்பிப்பது என்பது சிரமமான காரியம் தொன்னூறு மாணவர்களை ஒரு வகுப்பில் வைத்துக் கொண்டு, அந்த மாணவர்களை குழுக்களாக வைத்து ஓர் ஆசிரியர் பாடம் கற்பிப்பது என்பது இயலாத காரியம். யதார்த்தம் இப்படி இருக்கிறது. இந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய உபகரணங்களை சேர்ப்பது, விஞ்ஞான பூர்வமான கற்றல் முறைகளை சேர்த்துக் கொள்வது என்று செயல்வழி கல்வியை முழுமையாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இது குறித்து ஒரு விவாதத்தை ஆசிரியர் அமைப்புகளோடும், கல்வியாளர்களோடும், மாணவர் அமைப்புகளிடமும் நடத்தி ஒரு ஜனநாயகப்பூர்வ முறையில் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது இந்தக் கல்விமுறையை சரியானது என்றுதான் கருதுகிறோம்.

இன்று வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தல் வன்முறை குறைந்து இருந்தாலும், பொதுவாக கற்பது தினமும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லையே?

அதற்கு இப்போது இருக்கிற பாரம்பரியமான கற்பித்தல் முறைதான். இந்தக் கற்பித்தல் முறை விஞ்ஞான பூர்வமானதாக இல்லை. இந்தக் கற்பித்தல் முறை என்பது ஒட்டுமொத்தமாக பார்த்தால் மனப்பாடம் செய்வதுதான். மாணவனுடைய திறமைகளை வெளிக்கொணருகிற, ஜனநாயக பூர்வமாக, விஞ்ஞான ரீதியாகவும் கற்று தருவதில்லை என்கிறபோது மாணவர்கள் கல்வியோடு கலக்க முடியவில்லை. வெறுமனே மனப்பாடத்தை மட்டுமே சார்ந்திருப்பது, அதிகமான பாடச்சுமை, வகுப்பறையில் ஜனநாயகம் இல்லாதது, கற்றலில் ஓர் இனிமையான செயல்பாடுகள் இல்லாதது என்று பல விஷயங்களில் பலவீனமாக இருக்கிறது. இவை களையப்படும் போதுதான் கற்றல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அரசு உயர்நிலைப் பள்ளிக் கூடங்களில் அறிவியல் என்பது மனப்பாடம் சார்ந்ததாகவே கற்பிக்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு ஆய்வகத்தை பயன்படுத்த வாய்ப்பே தரப்படுவதில்லை. இயற்பியல் தராச�� பற்றி சொல்லும்போது, தராசை மாணவர்கள் கண்ணாலே பார்க்காமல்தான் படிக்க வேண்டியிருக்கிறது. குளோரின் வாயு தயாரிப்பு பற்றி படிக்கும்போது, ஒரு பரிசோதனையும் செய்யாமல்தான் படிக்க வேண்டியிருக்கு. அப்படித்தான் கற்பிக்கவும் படுகிறது. தேர்வில் மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியிருக்கு. இதே குளோரின் வாயு தயாரிப்பில் அந்த மாணவன் ஈடுபட்ட பிறகு தேர்வை எதிர் கொள்ளும்போது எளிமையாக இருக்கும். வெறும் புத்தகத்தை மட்டுமே கற்பித்தலில் எப்படி மாணவன் மகிழ்ச்சிகரமாக இருக்க முடியும்?

மனனம் மட்டுமே திறனாக, அது மட்டுமே எதிர்கால வாழ்க்கையை முடிவு செய்கிற விஷயமாக, மனப்பாடம் மட்டுமே ஒரு மாணவனுடைய அறிவுத்திறனை, புத்திசாலித்தனத்தை முடிவு செய்வதில் அடிப்படையாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் என்றால் ஒவ்வொருவத்தருக்கும் ஒரு திறமை இருக்கும். அதில் பத்து பேர் மனப்பாட திறனோடு இருப்பார்கள். மற்ற பத்து பேர் விளையாட்டு திறனோடு இருப்பார்கள். அடுத்த பத்துபேர் கலை இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த மாதிரி கலவையோடுதான் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் இருப்பார்கள். மாணவர்கள் வாழும் சூழலிலிருந்து சில திறன்களை கற்றுக் கொள்வார்கள். அதை வெளிப்படுத்தும் இடமாக பள்ளி இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்குள்ள திறமையை கண்டறியும் இடமாக, அந்த மாணவனுக்கே உணர்த்தும் விதமாக பள்ளிகூடங்கள் இருக்க வேண்டும். அடுத்ததாக அந்தத் திறமைகளை மேம்படுத்துகிற வாய்ப்புகளை பள்ளிக்கூடங்கள் உருவாக்கி தர வேண்டும். இந்த மாதிரி விஷயங்கள் கற்றலில் சேர்க்கப்படும்போது, மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும்.

பருவ வயதை எட்டுகிற மாணவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்க இந்துத்துவா அமைப்புகள் எதிர்க்கின்றனவே?

அறிவியல் பூர்வமாக எந்த விஷயத்தை செய்தாலும் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பாங்க. இதை-யெல்லாம் விட்டுட்டு ஜோசியத்தையும், வேதங்களையும்தான் அவர்கள் சொல்லிக் கொடுக்க சொல்வார்கள்.

இன்றைக்கு இருக்கிற சமூக சூழலில் உடலியல் மற்றும் பாலியல் குறித்து மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. சினிமா, டி.வி. போன்ற ஊடகங்கள் ஏற்படுத்துகிற பாலியல் குழப்பங்களுக்கும் அல்லது தூண்டுதலுக்கும் இரையாகி விடாமல் காப்பதற்கு பாலியல் குறித்து அறிவு தேவைப்படுகிறது. பாலியல் அறிவு என்றாலே பாலியல் உறவு குறித்து சொல்லித் தருவது என்று பிரசாரம் செய்கின்றனர் இது தவறானது.

முதலில் தன்னுடைய உடல், உடல் பற்றிய செயல்பாடு, குறிப்பிட்ட பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றம், இதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் அதை எப்படி எதிர்கொள்வது பற்றியெல்லாம் குறிப்பாக மாணவிகளுக்கு சொல்லித்தர வேண்டிய தேவை உள்ளது. இதை ஒரு சமூக பொறுப்பாக இந்திய மாணவர் சங்கம் பார்க்கிறது. இந்த மாதிரி விஷயங்களை அறிவுப்பூர்வமாக கற்பிப்பது பாலியல் குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். பாலியல் குறித்து மாணவிகள் கற்கும்போது, காலங்காலமாக உடல் ரீதியாக அடிமைபடுத்தியதிலிருந்து விடுபட, விவரங்கள் தெரியவர, அவர்கள் ஆணாதிக்க எதிர்ப்பை நோக்கி, பெண் விடுதலையை நோக்கி செல்ல உதவும். இந்திய மாணவர் சங்கத்தின் பயிற்சி வகுப்புகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் வகுப்புகளை நடத்துகிறோம். இந்த வகுப்புகள் மிகப்பெரிய வரவேற்பை பெறுவதை காண முடிகிறது. தம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த உண்மைகளை இந்தச் சமூகம் வெளிப்படையாக கற்றுதரவில்லை என்ற குறை இருக்கிறது. அது குறித்து ஏராளமான பயத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக ஒரு மாணவனோ, மாணவியோ புரிந்து கொள்ளும்போது வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.

அறிவியல் கல்வி என்பது பல்கலைக்கழக அளவில் கூட மனப்பாடக் கல்வியாக இருக்கிறதே?

இந்தியாவில் இருக்கும் கல்விமுறை குறித்து இன்றைக்கு மிகப்பெரிய விவாதம் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வியில் கற்பித்தல் என்பது அரசின் கல்விக் கொள்கையை சார்ந்திருக்கிறது. கல்வியை குறிப்பிட்ட அளவுக்கு மாணவர்களுக்கு தந்தால் போதும் என்கிற ஏற்பாடு அரசின் வர்க்கம் சார்ந்த நிலைப்பாடாக இருக்கிறது. அறிவியல், வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் கூட விஞ்ஞானபூர்வமாக கற்பிப்பதில்லை. எல்லோருக்கும் கல்வி என்ற நோக்கம், கல்வியை ஒட்டுமொத்தமாக மக்கள் வளர்ச்சிக்கான கருவியாக பயன்படுத்த வேண்டும் என்கிற மனநிலை இங்குள்ள அரசுக்கு இல்லை. இன்றைக்கு இருக்கிற கல்விமுறையை பெருமுதலாளிகளுக்கு தேவைப்படுகிற Skilled Labourகளை உருவாக்கக்கூடிய விஷயமாகத்தான் பார்க்கிறாங்க. ஒரு விரிவான தளத்தில் கல்வியை கொண்டு போக விருப்பப்படவில்லை.

இதனால்தான் சமூக அவலங்களுக்கு எதிரான கோபத்தை இந்தக் கல்விமுறையால் ஏற்படுத்த முடியல. பகுத்தறிவோடு செயல்படுவது, மூடப்பழக்கவழக்கங்களை எதிர்ப்பது என எதையும் இக்கல்வி முறையால் செய்ய முடியல. அதே போல தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிரான மனப்பான்மையை இக்கல்விமுறையால் உருவாக்க முடியவில்லை. உத்தபுரம் சம்பவம் நடந்தபோதும், இதர சம்பவங்களிலும் ஆதிக்க சாதியைச் சார்ந்த படித்த இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்று நாம் பார்த்தோம்.

சமச்சீர் கல்வியில் அனைத்து வகை தேர்வுகளையும் ஐநூறு மதிப்பெண்ணுக்கு மாற்றி அதோடு விட்டு விட்டார்களே?

தமிழ்நாட்டில் பல பள்ளி கல்விமுறை இருக்கு. பள்ளிக் கல்வி இங்கு சமச்சீராக இல்லை. உலகில் வேறு எந்த நாட்டிலும் பள்ளிக் கல்வி இந்தியாவைப் போல ஏற்றத்தாழ்வோடு இல்லை என்கிறார் கல்வியாளர் வசந்திதேவி. தனித்தனியாக பள்ளிக் கல்வி வாரியம் இருக்கு. நான்கு விதமான வாரியங்களுக்கு கீழே இருக்கிற பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு விதமான பள்ளிக்கல்வி சொல்லித்தரப்படுகிறது. ஒவ்வொரு வகை பாடத்திட்டமும், கற்றல்முறையும் தேர்வுமுறைகளும், பள்ளிக்கூட தன்மையில் வேறு விதமாக இருக்கிறது. இவற்றில் எல்லாவற்றிலும் ஒரு சமச்சீரான ஏற்பாட்டை கொண்டு வர வேண்டும் என்பதுதான் சமச்சீர் பள்ளிக் கல்வியின் நோக்கமாக இருக்கமுடியும். வெறுமனே அங்கு இருக்கும் கேள்வித்தாள்களை ஒரே மாதிரியாக மாற்றுவது என்பதாக இருக்கக்கூடாது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கிற ஏற்பாட்டை நோக்கி போக வேண்டியிருக்கு. அப்போது பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், கற்பித்தலுக்காக பயன்படுத்துகிற உபகரணங்கள், பள்ளிக்கூடத்தின் தன்மைகள் என்று எல்லாவற்றையும் சமமாக்க வேண்டும். பள்ளிக் கல்வி வாரியங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எங்களைப் போன்ற அமைப்புகள் முற்போக்கான கல்வியாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.

இதன் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக்கல்வியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு முனைவர் முத்துகுமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் கல்வியாளர் ஷி.ஷி. ராஜகோபலன் போன்றோர்களும் இருந்தனர். அந்தக் குழு தமிழகத்தின் பல இடங்களில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது. ஆய்வு செய்தது. இதற்குப் பிறகு சமச்சீர் பள்ளிக் கல்வியை தமிழகத்தில் கொண்டு வருவது சாத்தியம் என்கிற அறிக்கையை தமிழக அரசிற்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் கூட சமச்சீர் கல்வி தமிழ்நாட்டில் சாத்தியம் என்று கூறியது.

முனைவர் முத்துகுமரன் தலைமையில் அளித்த அறிக்கையை தமிழக சட்டமன்றத்தில் விவாதித்து கல்வியாளர்களோடும், மாணவர் அமைப்புகளோடும் ஒரு பரந்துபட்ட விவாதத்தையும் ஆறுமாதங்களுக்குள் நடத்தி அடுத்த கல்வி ஆண்டில் கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான புத்தக வெளியீட்டாளர்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாக தள்ளிப் போடுகிற நிலையை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

இதை நிறைவேற்ற வேண்டிய தமிழக பள்ளிக்கல்வி துறை மாறாக, அதை கிடப்பில் போடுவதற்கு ஒரு நவீன வழியை கண்டுபிடித்துள்ளது. முனைவர் முத்துக்குமரன் குழுவின் அறிக்கையை அமல்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்று ஆராய்வதற்கு இன்னொரு குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவிற்கு எந்தக் கால நிர்ணயமும் செய்யப்படவில்லை. இதை வைத்து பார்க்கும்போது இந்த ஆட்சிக் காலம் முடிய காலம் கடத்துவார்கள் என்ற முடிவுக்கே வர முடிகிறது. இந்தப் பிரச்சனைக்காக இந்திய மாணவர் சங்கம் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினோம். இந்த முற்றுகைக்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். அப்போது ஒரு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டோம். இதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர், “காலக்கெடுவெல்லாம் நிர்ணயிக்க முடியாது. நாங்கள் விரிவாக ஆய்வு செய்வோம். அந்த முடிவுகள் வந்த பிறகுதான் அமல்படுத்துவது பற்றி சொல்லமுடியும்’’ என்கிறார்.

வசதி படைத்தோருக்கு ஒருவிதமான பள்ளிக்கல்வி ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி என்கிற நிலையை மாற்ற, சமச்சீர் பள்ளிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்த உள்ளோம்.

புத்தகச் சுமையை குறைப்பதும் பாடச்சுமையைக் குறைப்பது வேறுவேறாக பார்க்கப்படுகிறதே?

கற்பித்தல், கற்றல் குறித்து அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லாததுதான் காரணம். தேர்வுக்காக மட்டும் புத்தகங்களை தயார் செய்தால் பாடச்சுமை குறையாது. தற்போதைய கல்வி முறையை மாற்றும்போதுதான் இதை மாற்ற முடியும். ஐந்து பாடங்கள் இருந்த நிலையில் அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மனப்பாடம் செய்து எழுதினால் அறிவு வளர்ந்து விடும் என்று புத்தகங்கள் எண்ணிக்கையை, பக்கங்களை அதிகப்படுத்தி, பெரிய அளவுக்கு சுமையாக மாற்றி இருக்கிறார்கள்.

கல்வி மிகப்பெரிய வியாபாரமாகவும், நன்கொடை என்ற பெயரில் அப்பாவி மக்களை சுரண்டுவதாக இருக்கிறதே. இதை மாற்ற தங்களது செயல்திட்டம் என்ன?

கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகமய பொருளாதார கொள்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றியதன் விளைவு இது. அரசின் பொருளாதார கொள்கைதான் கல்வியை வியாபாரமாக மாற்றி இருக்கு. தனியார்மயம், தாராளமயம் என்பதெல்லாம் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கு. இதனால் கல்வி துறையும் பாதிக்கப்பட்டிருக்கு. இன்றைக்கு அரசு கல்வி நிறுவனங்களை துவக்குவது, எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதெல்லாம் கிட்டதிட்ட முற்றிலும் கைவிடப்பட்ட சூழல்தான். தமிழ்நாட்டில் அரசின் பொறியியல் கல்லூரி ஆறு மட்டும்தான் இருக்கிறது. தனியார் பொறியியல் கல்லூரிகள் 335 இருக்கின்றன. இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்களில் 64% தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. கல்வித் துறையில் தனியார் ஆதிக்கம் என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டன. காட்ஸ் ஒப்பந்தத்தில் கல்வி என்பது சேவை என்று இல்லாமல் கல்வி என்பது வியாபாரம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை பின்பற்றுகிற நாடாக இந்தியா இருப்பதால் கல்வி என்பது தொழிலாக இருக்கிறது. மத்திய அரசு அமைத்த தேசிய அறிவாற்றல் குழு (National Knowledge Commission) உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 2015க்குள் 15 சதமாக அதிகரிக்க 1500 பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதுவும் தனியார் முயற்சியில் செய்யப்பட வேண்டும் என அரசுக்கு அறிக்கை கொடுக்கிறது.

இன்றைக்கு 300 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கில் கல்லூரிகள் இருந்தும், நாட்டில் வெறும் 8 சதம் பேரே உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். நிலைமை இப்படியிருக்க, இன்னும் தனியாரை அனுமதிப்பதால் ஏழை மக்களுக்கு உயர்கல்வி கிடைக்காத சூழலே ஏற்படும்.

ஆயிரக்கணக்கில் பெருகியுள்ள தனியார் கல்லூரிகளை சமூக கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைக்காக நாடு தழுவிய பிரசார பயணத்தை நடத்தி ஒரு கோடி மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சமர்ப்பித்தோம். மத்திய அரசு மௌனமாகவே உள்ளது.

கேரளாவில் உள்ள இடது முன்னணி அரசு அங்குள்ள தனியார் கல்லூரிகளை சமூக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை, கட்டணம், பாடத்திட்டங்கள், போன்றவை சமூக கட்டுப்பாட்டில் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தை அமல்படுத்த விடாமல் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். நாடு முழுவதுமுள்ள தனியார் கல்லூரிகளை சமூக கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரு மத்திய சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஆனால் நமது மத்திய அரசோ வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இங்கு அனுமதிக்க ஒரு புதிய மசோதாவை தயாரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறது. அந்த மசோதா நிறைவேறினால் அது நமது இறையாண்மையை பாதிக்கின்ற செயலாக இருக்கும். எனவே அதற்கு எதிரான போராட்டத்தில் தேசபக்த உணர்வோடு ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது..

சாலையோரத்தில் விற்கப்படும் உணவு வகைகளை சோதனை செய்கிறார்கள். அதற்கு சட்டம் இருக்கிறது. நாடு முழுவதும் வழங்கப்படும் கல்வி குறித்து, ஆய்வு பண்ணுவதற்கு எந்தச் சட்டம் இல்லை. தமிழ்நாட்டில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவது குறித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியபோது ஓர் ஆய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னோம். அதன் பிறகு ஒரு ஆய்வு குழு அமைத்து எல்லாக் கல்லூரிகளிலும் சோதனை நடந்தது. அப்போது 31 கல்லூரிகள் கட்டாய நன்கொடைகள் வாங்குகிறார்கள் என்று அரசு அறிக்கை கூறியது. அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னால் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார்கள். அது ஏ.ஐ.சி.டி.சி. விவகாரம் என்றார்கள். ஏ.ஐ.சி.டி.சி.யை கேட்டால் யுஜிசி தான் செய்ய வேண்டும் என்ற பதில் கிடைத்தது. யுஜிசி கேட்டால் திரும்பவும் கீழே இருக்கிற அமைப்புகளை கை காட்டுகிறார்கள். கடைசியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் உயர்கல்வியை அதிகமாக மக்களுக்கு அளிப்பது தனியார் கல்லூரிகள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை சமூக கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம்.

இன்றைக்கு கல்வித்துறையில் ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன. இதைப்பற்றி விசாரிக்க, ஆய்வு நடத்த தேசிய கல்வி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். இது வெறும் புகார்களை மட்டும் விசாரிப்பதாக இல்லாமல் பரந்த எண்ணத்தோடு அமைய வேண்டும். இதையெல்லாம் செய்தால் இவைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இந்த அரசின் பொருளாதார கொள்கை மாறாத வகையில் வியாபாரத்தை தடுக்க முடியாதது என்பதுதான் உண்மை. எனவே, கல்வி வியாபாரத்தை எதிர்த்த போராட்டத்தை அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்த போராட்டத்தோடு இணைத்து பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

தொழிற்கல்வி நிலையங்களில் மாணவர் அமைப்புகள் செயல்படவில்லையே?

தொழிற்கல்வி நிலையங்கள் பெரும்பாலும் தனியார் நிலையங்களாகத்தான் இருக்கிறது. இந்த புள்ளி விபரங்களை முதலிலேயே சொல்லி இருக்கிறேன். அந்தக் கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் செயல்படுகிறதா என்பதை விட அங்கிருக்கும் மாணவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. இது குறித்து நாடு முழுவதும் ஓர் ஆய்வினை நடத்த உச்சநீதிமன்றம் முன்னாள் தேர்தல் ஆணையர் லிண்டோ தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு இந்தியாவின் பல நகரங்களில் கருத்து கேட்டது. சென்னையிலும் நடந்தது. இந்தக் குழு ஆய்வு அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பள்ளி, கல்லூரி உட்பட நாடு முழுவதும் எல்லா கல்வி நிலையத்திலும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. லிண்டோ அறிக்கையில் தேர்தல் நடத்தப்படும் முறைகள் குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. ஆனாலும் மாணவர்களின் ஜனநாயகத்தை கல்வி நிறுவனங்களில் உறுதிப்படுத்த, ஜனநாயக பண்புகளை மாணவர்களிடம் இளம் வயதிலேருந்து வளர்த்தெடுக்க இந்தத் தேர்தல் பயன்படும். உச்ச நீதிமன்றம் அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் எல்லா மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது. அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறியது. இன்றைக்கு வரைக்கும் பல மாநிலங்கள் அது பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் கிட்டதட்ட எல்லா தனியார் கல்லூரிகளிலும் தேர்தல் நடத்தப்படுவதில்லை. அப்படியே நடத்தப்பட்டாலும் ஜனநாயக ரீதியாக நடத்தப்படாமல் நியமனமே நடக்கிறது. வருகின்ற மாணவர்களை ஒரு முழுமையான மாணவர்களாக மாற்றி அமைப்பது என்பதெல்லாம் தனியார் கல்லூரிக்கு நோக்கம் கிடையாது.

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையின் செயலாளர் கூறும்போது இன்றைக்கு தமிழ்நாட்டு தனியார் பொறியியல் கல்லூரியிலிருந்து வெளிவரும் மாணவர்களில் இருபத்தி இரண்டு சதவிகிதத்தினர்தான் வேலைவாய்ப்புக்கு தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். Skilled Labourகளை தயாரிக்கும் நிறுவனமாகத்தான் தமிழ்நாடு உயர்கல்வி இருக்கிறது. பொறியியல் கல்லூரி ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்கிறது? கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு, பன்முகத்திறனை வளர்த்து கொள்வதற்கு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள, முழுமையான பொறியாளராக மாறுவதற்கு என்று எல்லாவற்றுக்கும் என்ன செலவு செய்கிறது? செலவழிக்கபடும் இலக்கை எந்தக் கல்லூரியும் பூர்த்தி செய்வதே கிடையாது. மாணவர் அமைப்புகள் செயல்பட்டால் இதுபோன்ற பிரச்சனைகள் வெளியே தெரியும். தங்களுடைய வியாபாரம் பாதிக்கும் என கல்லூரி நிர்வாகங்கள் நினைக்கின்றன.

மாணவர்களின் திறனை, ஆற்றலை, ஆளுமையை, தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்காத கல்வி வளாகங்களாக தனியார் கல்லூரி வளாகங்கள் இருக்கின்றன. ஐந்து மாணவர்கள் கூட்டாக சேர்ந்து நடக்கக்கூடாது. மாணவர்கள் மாணவிகளோடு பேசக்கூடாது. விடுமுறை எடுத்தால் அபராதம் கட்டணும். அசைன்ட்மென்ட் சமர்ப்பிக்கவில்லை என்றாலும் அபராதம் செலுத்த வேண்டும். கல்லூரிக்கு அரசு பேருந்தில் வந்தாலும் பஸ் கட்டணம் செலுத்தணும். உணவு வீட்டிலிருந்து எடுத்து வந்தாலும் கல்லூரி கேண்டினுக்கு பணம் கட்டணும். இதையெல்லாம் மாணவர்கள் செய்யவில்லை என்றால் சரியான ஆட்கள் மூலம் கவனிக்கப்படுவார்கள். இந்தச் சூழலில் வளர்கிற மாணவர்கள் எப்படி தன்னம்பிக்கையோடும், ஆளுமையோடும் வெளியே வருவார்கள்? கேம்பஸ் இன்டர்வியூ இல்லை என்றால் தனியாக ஒரு நேர்முகத்தேர்வுக்கு போகின்ற ஆளுமையும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய பண்புகளை மழுங்கடிக்க கூடியதாகதான் கல்வி வளாகங்கள் உள்ளன. இதில் அரசு தலையிட்டு மாணவர் ஜனநாயகத்தையும் மாணவர் பேரவை தேர்தல் நடைபெறுவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தனியார் தொழிற்கல்லூரிகளின் இத்தகைய போக்கினாலும், கட்டுக்கடங்காத கட்டண வசூலாலும் தனியார் தொழிற்கல்லூரிகளின் மாணவர் போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளன. அவற்றை எஸ்.எப்.ஐ. தலைமை ஏற்று நடத்தியும் வருகின்றது. தனியார் கல்லூரிகளில் எங்கள் அமைப்பை கொண்டு செல்ல தீவிரமாக முயற்சி செய்து வருகின்றோம்.

இன்றைய கல்வி வேலைவாய்ப்பை மையமாக கொண்டு இருக்கிறது என்றாலும் இதன் பின்புலத்தில் தனியார் மயத்திற்கு மாணவர்களை கொண்டு செல்லும் பயிற்சி போல தெரிகிறதே...

ஆமாம். அதுதான் உண்மை. இது அரசின் பொருளாதார கொள்கையை சார்ந்ததுதான். எல்லாருக்கும் கல்வி தர வேண்டும் என்பதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அதை நோக்கி செல்லவில்லை. மெக்காலே கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கல்வி உடலால் இந்தியராகவும், உள்ளத்தால் ஆங்கிலேயராகவும் இருக்க உதவியது. இந்தத் தயாரிப்பில் உருவான மனிதர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார்கள்.

இன்றைக்கு வரைக்கும் இந்தக் கல்விமுறைதான் இருக்கிறது. அன்றைக்கு இந்தக் கல்விமுறை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தது. இன்றைக்கு ஆளும் வர்க்கத்திற்கு விசுவாசமாக உள்ளது.. நேருவின் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தபோது இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் எல்லாம் அரசின் நிலையை பார்த்துவிட்டு எவ்வாறு முதலீடு செய்வது என்று பயத்தில் இருந்தார்கள். அப்போது அரசு சோவியத் உதவியுடன் பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்தது. இதைப்பார்த்து பெரு முதலாளிகள் தொழிற்சாலைகளை நிறுவ வரும்போது நிறைய பொறியாளர்கள் தேவைப்பட்டனர். புதிய பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. அந்த நிறுவனங்களில் பொறியாளர்களுக்கு அடுத்த வேலைகளை செய்ய தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்பட்டனர். பாலிடெக்னிக்குகளும், ஐ.டி.ஐ.களும் நாடு முழுக்க உருவாக்கப்பட்டன. இந்தத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பெருகும்போது நிர்வாக பிரிவுகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டனர். அப்போது கலை அறிவியல் கல்லூரிகள் பெரிதாக உருவாக்கப்பட்டன. 80களில் Bachalor of Commerce என்ற புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டது.

உலகமயம் அறிமுகமான தொடக்கத்தில் உலகம் முழுக்க இருக்கிற நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு தகவல் தொழில்நுட்பம் முக்கியமான துறையாக வளரும்போது, அந்தத் துறையில் நிறைய ஆட்கள் தேவைப்பட்டபோது அந்தத் துறை ஊக்குவிக்கப்பட்டது. கல்வி வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் அன்றைக்கு தொழிற்சாலையை துவக்கியவர்கள் எல்லாம் இன்று கல்லூரிகளை துவக்கி விட்டார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் தன்மைக்கு ஏற்ப ஒரு கருவியாகத்தான் கல்வி பயன்பட்டிருக்கிறது. கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான கருவி என்று கல்வியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கல்வியைப் பற்றி பேசும்போது ஒட்டுமொத்த சமூகத்தைப் பற்றி பேசுகிறோம் என்று பாவ்லோஃப்ரையர் குறிப்பிடுவார். எல்லோருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த மனிதவளத்தை மேம்படுத்தும் விதத்திலும், கல்வியை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் தன்மையிலும் கல்வி வழங்கப்படவில்லை. எனவே, அதை நோக்கிய போராட்டம் தேவைப்படுகிறது.

பெண்கல்வி இன்றும் கிராமப்புறத்தில் மறுக்கப்படு கிறதே?

ஆண்டாண்டு காலமாக இந்தச் சமூகத்தில் இருக்கக்கூடிய நிலைமையின் பிரதிபலிப்புதான் இந்த நிலைமை. இன்றைக்கு பெண்கள் நிறைய படிக்க வந்தால் கூட, கிராமபுறத்தில் அந்த எண்ணிக்கை ரொம்பக் குறைவாக இருக்கு. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பெண்கள் வயதுக்கு வந்தாலே திருமணத்தை நோக்கி செல்வது என்ற நிலை உள்ளது. இது நிலபிரபுத்துவ கண்ணோட்டத்தின் மிச்ச சொச்சம்தான்.

இளவயது திருமணத்தை தடுக்க மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், அரசு நிறுவனங்கள், எல்லாம் முயற்சி எடுக்கின்றன. இதற்கு நிலப்பிரபுத்துவ கண்ணோட்டம் மாறணும். அடுத்ததாக அரசு கூடுதலாக பெண் கல்விக்கு நிதி உதவி ஒதுக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் மாணவிகள் தங்கள் ஊரில் உயர்நிலை பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு, மேல்நிலைப் படிப்புக்கு பக்கத்து ஊருக்கு செல்ல, பேருந்து வசதிகள் குறைவாக இருக்கு. இதனால் வீடுகளிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு பெண்களை அனுப்புவது குறைவாக இருக்கு. இதற்கு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவிகள் கல்லூரிக்கு செல்ல நகரங்களுக்கு செல்ல வேண்டும் நகரங்களில் அரசு விடுதிகள் குறைவாக இருக்கு. தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக உள்ள சூழலில் பெண்களுக்கு திருமணத்துக்கு செலவு செய்யணுமா? கல்விக்கு செலவு செய்யணுமா? என்று பார்க்கும்போது பெரும்பாலான குடும்பங்கள் திருமணத்திற்காக செலவு செய்வது சரி. கல்விக்கு செலவு செய்ய வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். கல்வி வியாபாரமாகி போனதில் இந்தப் பிரச்சனை வருகிறது.

பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரைக்கும் இலவச கல்வி தர வேண்டும் என்பது இந்திய மாணவர் சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கை. இது அரசு கல்வி நிலையங்களில் மட்டுமில்லாமல் தனியார் கல்வி நிறுவனங்களிலும் தர வேண்டும். மாணவிகளுக்கு அரசு விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும். சென்னையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. மாணவிகளுக்கு அரசு விடுதி என்று பார்த்தால் இரண்டு விடுதிகள்தான் இருக்கிறது. இந்த இரண்டு விடுதிகளிலும் ஐந்து பேர் தங்க வேண்டிய அறையில் 12 முதல் 14 பேர் தங்கியுள்ளனர். அந்த விடுதிகளில் எந்த அடிப்படை வசதியும் எதுவும் இல்லாமல் படிக்கிற சூழல் இருக்கு. தமிழ்நாடு முழுவதும் மாணவிகளுக்கான அரசு விடுதிகள் மிகக் குறைவு. அதன் பராமரிப்புகளும் குறைவு. அரசு விடுதியில் உணவுக்கென ஒதுக்கும் தொகையும் மிகக் குறைவு. பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகளுக்கென ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டும். இந்த மாதிரி முயற்சிகள் எடுத்தால்தான் பெண் கல்வியை மேம்படுத்த முடியும்.

கட்டாய நன்கொடை அரசு பள்ளிகளில் உள்ளதே?

அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை பெரிய பிரச்சனையாக இன்று உருவெடுத்திருக்கு. இதற்கு எதிராக போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்திகிட்டு இருக்கோம். பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகு அரசு பள்ளிகள் நன்கொடை வாங்கக் கூடாதுன்னு அரசு அறிவித்துள்ளது. ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கு. ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு தரப்பில் பெரிய பலவீனம் இருக்கு. அரசு ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக அங்கு உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படுகிற ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதற்காக பெற்றோர்களிடமும் பணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழி வகுப்புகளை துவங்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. ஆங்கில வழி வகுப்பு துவங்க இன்றைய சமூக சூழலில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழ்வழி வகுப்புகளுக்கும், ஆங்கில வழி வகுப்புகளுக்கு என்று மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. அதற்கேற்ற ஆசிரியர்களை அரசு நியமிப்பதில்லை. இருக்கிற ஆசிரியர்களே சொல்லித் தர வேண்டியுள்ளது. அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டியுள்ளது. பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஆய்வக வசதிகளை மேம்படுத்துவது போன்ற தேவைகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.

பல இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் முறையாக செயல்படுவதே கிடையாது. பெரும்பாலும் இந்தக் கழகத்தை நிர்வகிப்பவர் அந்தப்பகுதி ஆளுங்கட்சி பிரமுகராக இருப்பவர்தான். இவருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை வரவு செலவு காண்பிக்கப்பட வேண்டும். இந்த மாதிரி நடைமுறைகள் எல்லாம் பின்பற்றுவதே இல்லை. 10, 12 வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுக்க 50 ரூபாய் கேட்கிறார்கள். இது மாதிரி தேவைகளுக்கு கட்டாய நன்கொடை வசூலிக்கிறார்கள்.

திருச்சி மணச்சநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டாய நன்கொடை பற்றி புகார் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையிடும் போது கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து தொன்னூற்று எட்டாயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. இதை இந்திய மாணவர் சங்கம் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியபோது பெற்றோர்களே எங்களுடைய நடவடிக்கைக்கு எதிராக இருந்தார்கள். பிறகு பெற்றோர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலவழி கல்வி இருக்கு. அந்தக் கல்வியை சொல்லி தருகிற ஆசிரியர்களுக்கு எப்படி சம்பளம் தருவது? அரசாங்கம் சம்பளம் தருவதில்லை என்கிறார்கள். தலைமை ஆசிரியரிடம் பேசும்போது ஆங்கில வழிக் கல்வியை எடுத்து விடுகிறோம். பற்றாக்குறை ஆசிரியர்களோடு பாடம் நடத்துகிறோம். இதைச் செய்தால் வசூலை நிறுத்தி விடுகிறோம் என்கிறார். எப்படியாவது குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டும் என்பதால் நீங்கள் தடுக்காதீர்கள் என்கிறார்கள் பெற்றோர்கள். இந்த நிலையை உருவாக்கிய அரசாங்கத்தின் மீது பெற்றோர்களுக்கு கோபம் இல்லை. அந்தக் கோபத்தை வெளிக்கொணர எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். இதுதான் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கல்விநிலையங்களின் நிலை.

கும்மிடிபூண்டி, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை போன்ற இடங்களில் இந்திய மாணவர் சங்கம் கட்டாய நன்கொடைக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். அப்போது உடனே நன்கொடைகள் திரும்பி கொடுக்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள். வேலையை விட்டு நிறுத்தியவுடன் அந்தப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இப்போது ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திகிட்டு இருக்கோம். ஆனால் தேர்தல் சமயத்திலும், அரசு விழாக்களில் தமிழக முதல்வர் பேசும்போது தமிழகத்தில் இலவசக் கல்வியை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியாக உள்ளது. அரசு பள்ளிகள் முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இந்த ஆண்டு பத்து சதவிகிதம் முதல் ஐம்பது சதவிகிதம் கட்டணத்தைப் உயர்த்தி இருக்கிறார்கள். பிப்ரவரி மாதமே சேர்க்கையை ஆரம்பித்து விடுகிறார்கள். மெட்ரிக்குலேசன் கட்டணம் தமிழ்நாட்டில் நிர்ணயிக்கப்படவே இல்லை. சிட்டிபாபு என்ற கல்வியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இந்தக் குழு ஓர் அறிக்கை கொடுத்து இருக்கிறது. இந்த அறிக்கையில் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆசிரியர்கள் எண்ணிக்கை, தரம் அடிப்படை வசதிகள், உள் கட்டுமானங்கள் போன்றவைகளை வைத்து எப்படி கட்டணம் நிர்ணயம் செய்யலாம் என்று அரசுக்கு ஆலோசனை தருகிறது. அந்த அடிப்படையில் கட்டண நிர்ணயத்தை அரசு செய்யணும். இன்றைக்கு வரைக்கும் செய்யவில்லை. அதனாலே மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஏராளமான கட்டணங்களை வசூல் செய்கின்றன. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறோம். தமிழகத்தில் தற்போது புதிதாக ‘ரெசிடென்சியல் பள்ளிகள்’ என்ற உறைவிட பள்ளிகள் பரவி வருகின்றன. எட்டாம் வகுப்பிலிருந்து +2 வரை அல்லது +1, +2 மட்டும் எனச் செயல்படும் இப்பள்ளிகள் கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் அதிகம். இப்பள்ளிகளில் இலட்சக்கணக்கில் நன்கொடை வாங்கிக்கொண்டு மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மாணவர்களை மாற்றிவிடுகிறார்கள். இது கல்வியில் மிகப்பெரிய சமச்சீர் இன்மையை கொண்டு வந்துள்ளது. எனவே இப்பள்ளிகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசு கலை கல்லூரிகள், நல விடுதிகளை மேம்படுத்த வேண்டுமென மாநிலந்தழுவிய இயக்கத்திற்கு திட்டமிட்டு வருகிறோம்.

ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் பின்லாந்தில் 18 மாணவருக்கு ஓர் ஆசிரியர், ஆஸ்திரேலியாவில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், அமெரிக்காவில் 22 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று உலக கல்வி அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் எத்தனை மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும்?

இங்குள்ள மக்கள் தொகை, சமூகச் சூழலை கணக்கில் கொண்டு முப்பது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான் கோரிக்கை. இப்போது அரசாங்கம் 90:2 என்று விகிதத்தை மாற்றி இருக்கிறார்கள். இது ஒரு மோசமான நடைமுறை. முழுமையாக மாணவர்களோடு கலந்து, பேசி, அவர்களை புரிந்து கொள்வது, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது இல்லாமல் போய்விடுகிறது. நமது நாட்டில் வருகைப் பதிவேடு எடுத்து முடிக்கும் போதே, பாதி பீரியட் முடிந்து விடுகிறது. எனவே, இதை மாற்றக் கோரி போராடி வருகிறோம்.

தேர்வுகள் குறித்து...

அந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்கட்டும். இன்றைக்கு தேர்வுகள் குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கு, தேர்வுகள் மாணவனின் உண்மையான திறன்களை மதிப்பிடுவதாக இல்லை. அவர்களை ஊக்கப்படுத்தி அடுத்த திறன்களை கற்றறிய ஆர்வம் ஏற்படுத்துபவையாகவும் இல்லை. தேர்வுமுடிவுகளை தொடர்ந்த தற்கொலைகள் இன்னும் அவலம். தேர்வுகள் பொதுவாக பயத்தையே உருவாக்கி வைத்துள்ளன. பாடப்புத்தகத்தின் முதல்பக்கம் உள்ள ‘தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்’ என்ற வாசகத்தில் தீண்டாமை என்ற வார்த்தைகளை மட்டும் அடித்துவிட்டு, அதற்குப் பதிலாக முறையே காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என எழுதி வைத்திருந்த பல மாணவர்களை நான் பார்த்துள்ளேன்.

பயத்தை உருவாக்கும் தேர்வுகள் நமக்கு தேவையில்லை. தேர்வுகள் மகிழ்ச்சிகரமானதாகவும், தேர்வு முடிவுகள் குதூகலமானதாகவும் எல்லோருக்கும் இருக்க வேண்டும். எனவே, இன்றைய தேர்வுகளில் சீர்திருத்தம் அவசியம் தேவைப்படுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com