Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
அஞ்சலி
விரும்பியபடியே வாழ்ந்த கமலாதாஸ் (1934-2009)


Kamaladas கமலாதாஸ் ஓர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர்தான். அவரது தாயார் கேரளத்தில் பெரிதும் போற்றப்பட்ட கவிஞரான பாலாமணி அம்மாள் ஆவார்; மரபுக்கவிஞர். அந்தப் பாரம்பரியத்தில் வந்த கமலா, தனது தாயாரின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு முன்செல்லாமல், தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக்கொண்டு, மலையாள இலக்கியத்தை ஒரு உலக்கு உலுக்கியெடுத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலில் அவர் கலாசாரம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பெண்கள் இப்படித்தான் பேசலாம், எழுதலாம் என்று மறைமுகமாக விதிக்கப்பட்டிருந்த ஆணாதிக்க சமூகத்தின் கட்டுத்திட்டங்களை உடைத்தெறிந்தார். பெண்ணின் உடல் பற்றி, பாலியல் பற்றி சர்வசாதாரணமாய் பேசினார். ‘காமம் அவரது எழுத்துகளில் வடிகிறது,’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இருந்தாலும், அவரது எழுத்து பரவலாய் கவனிக்கப்பட்டது. இஸ்மத் சுக்தாயுக்குப் பிறகு இவ்வளவு தைரியமாக அப்படியரு குரல் ஒலித்தது என்றால், கண்டிப்பாய் கமலாதாஸிடம் இருந்துதான். கூடவே கமலாதாஸின் ஆங்கில அறிவும் அபாரமானது; அவர் ஆங்கிலத்தில் கவிதை, சிறுகதை, நாவல்கள் போன்றவைகளைப் படைத்த காரணத்தால், அவரால் பெருந்தொலைவு சென்று அடைய முடிந்தது.

கமலாவின் பள்ளிப்படிப்பு என்றால் முதலில் கொல்கத்தாவிலும், பின்னர் அவரது சொந்த ஊரான புன்னையூர்குளத்திலும் நடந்தது. திருச்சூர் கான்வெட்டில் படித்தது, அவரது ஆங்கிலப் புலமையை வளர்த்தெடுத்தது. தனது பதினைந்தாம் வயதில் தனது பள்ளிப்படிப்பை முடிக்காத காலத்திலேயே தன்னைவிடவும் வயதில் மிகவும் முதிர்ந்த மாதவதாஸை கல்யாணம் செய்துகொண்டு, கமலா தாஸானார்.

ரிசர்வ் வங்கியில் உயரதிகாரியான தனது கணவருடன் பம்பாயில் சென்று குடும்பம் நடத்த, பதினாறு வயதிலேயே தனது மகனைப் பெற்றெடுத்தார். இந்த வீரியமும், கலகத்தன்மையும்தான், அவரை எழுத்தாளராய் வளர்த்தெடுத்தது என்றுகூட சொல்லலாம்.

அவர் எந்தப் பூடகமும் இல்லாமல், நேரடியாகப் பேசும் தன்மையை உடையவர்: “எனக்கு மூன்று குழந்தைகள் அடுத்தடுத்துப் பிறந்தன. மூன்றாம் குழந்தை பிறந்த பிறகே, தாய்மையின் தன்மையை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அடைந்தேன்.’’ அதனால்தான், இரவு வரை தாய் என்ற வகையில் தனது குடும்பப்பொறுப்புகளை முடித்துவிட்டு, அனைவரும் தூங்கிய பிறகு, காய்கறி நறுக்கும் மேஜையை இழுத்துப் போட்டுக்கொண்டு, தனது எழுத்துப் பணியைத் துவங்குவார்.

அவரது கவிதைகள் பெண் மனதுடன் சேர்த்து பெண்ணின் உடலைப் பற்றிப் பேசியபோது, மலையாள இலக்கிய உலகம் மிரண்டுபோய் நின்றது. பலரது ஒழுக்கக் கேடுகளைச் சந்திக்கு இழுத்து வந்து அவர் அம்பலப் படுத்த, அவரது எழுத்து பெரும் களேபரத்தை ஏற்படுத்தியது. அவரது இலக்கியத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாதவர்கள் கொலை மிரட்டல் விடும் அளவுக்குச் சென்றார்கள்.

அவர் எழுதிய ‘என் கதை’ என்பது மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட அதை அவரது சுயசரிதை எனலாம். இவ்வளவு அப்பட்டமான ஒரு பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம் எப்போதுமே இந்திய இலக்கியவெளியில் பதிவு செய்யப்பட்டதில்லை. ‘என் கதை’ பதினைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் ஜப்பானிய மொழிபெயர்ப்பு அந்த நாட்டுப் பல்கலைக்கழகத்தில் துணைப்பாடமாக இடம்பெற்றது.

இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் கவிதைப் பகுதியின் எடிட்டராய் பணிபுரிந்தார். தொடர்ந்து கேரள மாநில திரைப்பட சொசைட்டிக்குத் தலைவராகவும், கேரள வனவாரியத் துறையின் தலைவராகவும், கேரள சாகித்திய அகதெமியின் துணைத்தலைவராயும் பணிபுரிந்தார். ஆசான் விருது, வயலார் விருது என பல உள்நாட்டு விருதுகளை வென்ற அவரது எழுத்துகள், நோபல் பரிசுக்குக்கூட பரிந்துரை செய்யப்பட்டது. கமலாவின் ‘ருக்மணி’ என்ற நாவலும், ‘ஜானுவம்மா சொன்ன கதை’ என்ற குறுநாவலும், ‘மழை’ என்ற சிறுகதையும் திரைப்படமாக வெளி வந்துள்ளன.

கமலாவின் உயிர்த்துடிப்பான நடவடிக்கைதான் அவரது படைப்பாட்டலுக்கான உந்து சக்தியாகும். அவர் அனுபவத்தைப் பெற, ‘லோக் சேவா’ என்ற அரசியல் இயக்கத்தைத் துவங்கி, நாடாளுமன்றத் தேர்தலில்கூட போட்டியிட்டு தோல்வியுற்றார். கணவனின் இறப்புக்குப் பிறகு, அவர் இஸ்லாமைத் தழுவினார். அப்போது, “நான் விளையாட விரும்பும் ஒரு விளையாட்டு பொம்மையைப் போல, எனக்குச் சுதந்திரம் தேவைப்பட்டது என்பது என்னவோ உண்மைதான். நானும் போதும் போதும் என்கிற அளவுக்கு அதை அனுபவித்துவிட்டேன்; இப்போது எனக்குத் தேவை பாதுகாப்பு. அது இஸ்லாத்தில்தான் கிடைக்கிறது,’’ என்று சொல்லி தனது பெயரைக் கமலா சுரையா என்று மாற்றிக் கொண்டார்.

மொத்தத்தில் கமலா தனது அனுபவத்தை அப்படியே எந்தவித ஒளிவுமறைவு இன்றி நேர்மையுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் ஒரு பொறுமையற்ற கலைஞராய் தனது வாழ்க்கை முழுவதும் திகழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com