Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
நூல் அறிமுகம்
“ஒரு நூற்றாண்டு சமூக வரலாறு”
ஓடை துரையரசன்


V.R.Krishnayyar நீதி வானில் ஒரு செந்தாமரை நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்,
அ. மகபூப் பாட்சா, சோக்கோ அறக்கட்டளை,
மதுரை,
பக். 376, ரூ. 200

நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாறு வழக்குரைஞரும் மதுரை சோக்கோ அறக்கட்டளையின் அறங்காவலருமான அ. மகபூப் பாட்சா அவர்களால் எழுதப்பட்டுச் சோக்கோ அறக்கட்டளையினரால் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 370 பக்கங்களில் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாறு எளிய இனிய நடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூலின் பின் பகுதியில் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் சில அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. நூலும் மிக நேர்த்தியாகக் கரிசனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆங்கிலத்தில் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாறு “VRK A LIVING LEGEND’’..... (UNIVERSAL LAW PUBLISHING COMPANY PVT Ltd. - NEW DELHI) எனும் தலைப்பில் கிருஷ்ணசாமி என்பவராலும், “VR. Krishna Iyer SPLENDOUR OF HUMANITY AND JUSTICE (KONARK PUBLISHERS Pvt Ltd Delhi - 92) எனும் தலைப்பில் இ.எக்ஸ். ஜோசப் என்பவராலும் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

V.R. Krishnayyar அ. மகபூப் பாட்சா அவர்களால் நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரே சீராகச் செல்லும் நீரோடையைப் போல இந்நூலில் விவரிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நூல்களிலும் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் சமூக அரசியல் தளங்களில் அவர் ஆற்றியுள்ள செயல்பாடுகளைக் கொண்டு தனிமனித வாழ்க்கை வரலாறாகச் சொல்லும் முறைதான் மேலோங்கி நிற்கிறது. ஆனால் அ. மகபூப் பாட்சா அவர்களின் இந்நூல் வாழ்க்கை வரலாற்றை எழுதுமுறையில் ஒரு முன்மாதிரியாக உள்ளது. 1915ஆம் ஆண்டு, நவம்பர் 15ஆம் நாளில் இருந்து, சற்றேறக்குறையச் சென்ற ஆண்டு (2008) இறுதி வரை ஒரு நூறாண்டுச் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாறு முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது.

நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் நிகழ்வுகள், அந்தக் காலகட்டத்தின் சமூக அரசியல் பின்னணியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது நூலின் தனிச்சிறப்பாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் மாணவராக இருந்ததில் இருந்து, இன்றைய நாட்கள் வரை, ஒரு நாவலைப் போல இனிமையாகச் சொல்லப்படுகிறது. கேரள மாநிலத்தில் பொதுவுடைமை இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான சகாவு கிருஷ்ணப்பிள்ளையுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்திருக்கிறார். இன்னும் தோழர்கள் இ.எம்.எஸ்., கே. தாமோதரன், ஏகேஜி ஆகியவர்களுடன் தோழமையுடன்கூடிய அரிய நட்பைப் பேணியிருக்கிறார். பொதுவுடைமை இயக்கத்தினர், தொழிற்சங்கத்தினர் தொடர்புடைய வழக்குகளை எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி நடத்தியிருக்கிறார். செய்தித் தாள்களை தரையில் விரித்துத் தோழர்களுடன் கட்சி அலுவலகங்களில் தூங்கியிருக்கிறார். இப்படிப் பல செய்திகளைப் பாட்சா சுவையாகச் சொல்கிறார்.

1940ல் காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் வெளியேற்றப்படுவது, கல்கத்தாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது கட்சிக் காங்கிரஸ் _ அதன் முடிவுகள் _ விளைவுகள் சேலம் சிறைப் போராளிகள் _ இப்படிப்பட்ட நிகழ்வுகளைச் சொல்வதோடு இந்த நிகழ்வுகளின் போதெல்லாம் பொதுவுடைமைவாதிகளுடன் இணைந்து செயல்பட்டதால் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் கைது செய்யப்படுவதையும் அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறார் பாட்சா அவர்கள். 1957ல் முதல் பொதுவுடைமை அரசு வாக்குச் சீட்டுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டதையும் அதை முளையிலேயே வேரோடும், வேரடி மண்ணோடும் கிள்ளியெறிய இந்திய தேசிய காங்கிரஸ், இந்திராகாந்தி போன்றவர்கள் செய்த சதிகள் பற்றியும், “விருமாசன சமரம்’’ என்றழைக்கப்பட்ட அந்நிகழ்வையும் வரலாற்றில் கருப்பு தினமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 1959ஆம் ஆண்டின் ஜூலை 31ஆம் நாளையும் இந்நாட்களில், குறிப்பாகக் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியிலிருந்த நாட்களில் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் ஆற்றிய பங்கினையும் மிகத் தெளிவாக மகபூப் பாட்சா விவரிக்கிறார்.

“மனிதனின் உயிரைவிட சடங்குகளும், வழிபாடுகளும் உயர்வானதென நினைப்போர் மேல் வெறுப்பேற்படுகிறது’’ எனச் சொல்கிற வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆரம்ப நாட்களில் இருந்தே சமூகக் கொடுமைகளுக்கெதிராகவும், மூடப்பழக்க வழக்கங்களுக்கெதிராகவும், நீதிமன்றங்களில் நிலவுகிற நிலமானிய மரபுகளுக்கெதிராகவும், பொதுவுடைமை எதிர்ப்புப் போக்குகளுக்கு எதிராகவும் அறிவு பூர்வமாகச் செயலாற்றியுள்ளார். உள்துறை அமைச்சராக இருந்தபோது “சித்திரவதையை எங்கள் அரசு அங்கீகரிக்கவில்லை’’ எனக் காவல்நிலையத்துக்கே சென்று காவல் ஆய்வாளரை எச்சரிக்கிறார். மரண தண்டைக்கு எதிராகவும், விசாரணைக் கைதிகளுக்கு கைவிலங்கிடுவதற்கெதிராகவும், இன்றுவரை போராடிவருகிறார். (பினாய்க்சென் போன்ற மனித உரிமைப் போராளிகளுக்காக தள்ளாத இந்த 94 வயதிலும் போராடி வருகிறார்)

ராஜாஜியின் ‘குலக்கல்வித் திட்ட’ எதிர்ப்பில் தொடங்கி எப்போதும் எந்நிலையிலும் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் தோழனாக, சமூக நீதிப் பாதுகாவலனாக இருந்து வருகிறார். இதற்காகவே இரண்டு முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கிறார். இப்படி எத்தனை நிகழ்வுகள்?

நாட்டைக் கலக்கிய அலகாபாத் தீர்ப்புக்கு விதித்த நிபந்தனையுடன் கூடிய கிருஷ்ணய்யர் அவர்களுடன் கலந்துரையாடி, அவரது மனச்சாட்சியாக இருந்தே _ அவை தொடர்பான செய்திகளை மிக விரிவாகப் பாட்சா பதிவு செய்துள்ளார். நாட்டைக் குலுக்கிய குஜராத் _ கலவரமாகட்டும், உலகைக் கலக்கிய ஈழப் பிரச்சனையாகட்டும் எதுவாக இருந்தாலும் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நின்று போராடி வருகிறார்.

தனது வாழ்வின் எல்லா நிலைகளிலும், சமூக அரசியல் செயல்பாட்டாளராகத் திகழ்கிற நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் எப்போதும் இடதுசாரிகளுடன் சகபயணியாகவே சஞ்சரித்து வருகிறார் என்பதை மகபூப் பாட்சா மிகத் தெளிவாக கூறுகிறார். “ஒரு சட்டமேதை ஒரு நீதிபதி, ஒரு வரலாற்றறிஞர், ஒரு மனித உரிமைப் போராளி’’ என வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் பன்முகப் பரிமாணங்களை மகபூப் பாட்சா மிகத் தெளிவாகக் கூறுகிறார். படிக்க வேண்டிய நூல். குறிப்பாக நீதித்துறையினர் இந்நூலைக் கற்கவேண்டியது அவசியமும் தேவையுமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com