Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
கனவை நனவாக்கிய கறுப்பர் இலக்கியம்
முனைவர் கி. இராசா

உலகத்தின் பார்வையைத் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட அரசியல் ஜனநாயக வளர்ச்சியை அமெரிக்கா தற்போது காட்டியுள்ளது. எந்தக் கறுப்பர் இனம் இதற்குக் காரணமாக இருந்ததோ, அந்தக் கறுப்பர் இனம் தங்களது இலக்கிய வளர்ச்சியையும் எழுச்சியையும் 1920களிலேயே தொடங்கிவிட்டது. இலக்கியம், இசை, கலை, வாழ்க்கை ஆகியவற்றில் புத்துணர்சியைப் பாய்ச்சிய இந்த நவீன இலக்கிய முயற்சி ‘ஹார்லம் மறுமலர்ச்சி’ (Harelm Renaissance) என்றழைக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த கறுப்பர் இதழ்களும், நிறவேற்றுமை பாராட்டாத வெள்ளையர் இதழ்களும் கறுப்பு இனமக்களின் படைப்புக்களைப் பெருமளவில் வெளியிட்டன. தங்கள் இலக்கியத்தை வளர்ப்பதற்காக ஃபையர் (fire), ஹார்லம், குய்ல் (Quill), பிளாக் ஓபல் (Black opal) ஆகிய சிற்றிதழ்களைக் கறுப்பினப் படைப்பாளர்கள் நடத்தினர். விரைவில் ‘கறுப்பின மக்களின் முன்னேற்றத்துக்கான தேசியக் கழகம்’ (National Association for the Advancement of coloured people) ஒன்று அமைக்கப்பட்டது. அதன் சார்பாக க்ரைசிஸ் (Crisis) ஆபர்சூனிட்டி (opportunity) ஆகிய சிற்றிதழ்கள் வெளிவந்தன.

தங்களுடைய படைப்புகளுக்கு ஆதரவு பெருகவே, ‘ஹார்லம்’ இதழை நடத்திவந்த கறுப்பர் இனப் படைப்பாளிகளின் நவீன இலக்கியப் பிதாமகன் ஆலன்லாக் (Alain lock) மார்ச் 1925இல் ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்தார். இந்த முயற்சியின் தொடர்ச்சியாகக் கறுப்பர் படைப்புக்களைத் தொகுத்து ‘புதிய நீக்ரோ’ (The New Negro) என்ற தொகுப்பை வெளியிட்டார். இத்தொகுப்பில் கறுப்பர் இனமக்களின் உணர்வுகள் கொட்டித் தீர்க்கப்பட்டிருந்தன.

இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பான கவிதைத் தொகுதிதான் இன்றுவரை வெள்ளை நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கறுப்பர் இனமக்களின் மனத்தில் அரித்துக் கொண்டிருக்கும் பல அடிப்படையான கேள்விகளுக்கு அடித்தளமாக அமைந்தது என்றால் அதில் ஆச்சரியமில்லை!

கறுப்பர் இலக்கியப் படைப்பின் அடுத்தகட்டம், படைப்புப் போட்டிகளாக மலர்ந்தது. ‘கிரைசிஸ்’, ‘ஆபர்சூனிட்டி’ ஆகிய இரு இதழ்களும் கறுப்பர் படைப்புகளுக்குள் இலக்கியப் போட்டியை நடத்தின. கறுப்பின மக்களைப் பற்றிய படைப்பிலக்கியங்களை எழுதியப் படைப்பாளர்களுக்கும், அவற்றை வெளியிட்ட பதிப்பாளர்களுக்கும் அந்தக் காலத்திலேயே ஆயிரம் டாலர் அளவுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் படைப்பாளர்களே பின்னால் ‘ஆப்பிரிக்க _ அமெரிக்க எழுத்தாளர்கள்’ (Afro American Writers) என்றழைக்கப்பட்டனர். இவர்களுள் ஃபிரடெரிக் டக்ளஸ் (Frederick Dougles), டேவிட் வாக்கர் (David Walker), வில்லியம் பிரௌன் (William wells Brown), மார்டின் டெலானி (Martin R. Delany), பிரான்சிஸ் ஹார்ப்பர் (Francis E.W. Harper) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களைத் தொடர்ந்து லாரன்ஸ் டன்பார் (Lawrence Dunbar), வெல்டன் ஜான்சன் (James weldan Johnson), சார்லஸ் செஸ்ட்ரட் (Chares W. Chestnutt), டுபாய்ஸ் (W.E.B.Du Bois) ஆகியோரது கவிதைகளும் கட்டுரைகளும் தாய்நாட்டுக்கு ஏங்கும் உணர்வையும் தங்களது சொந்த அடையாளத்தைத் தேடும் நாட்டத்தையும் வெளிப்படுத்தின.

‘ஹார்லம் மறுமலர்ச்சி’ என்பது கூடுதலாகப் போனால் பத்து ஆண்டுகளே நீடித்திருக்கக் கூடும். முதல் உலகப்போர் முடிந்த காலகட்டத்தில் தொடங்கி இந்த ‘ஹார்லம் மறுமலர்ச்சி’ சற்றேறக்குறைய 1929 வாக்கில் முடிவுக்கு வந்தது எனலாம். குறைந்தகால அளவே செல்வாக்குச் செலுத்தினாலும் ‘ஹார்லம் மறுமலர்ச்சி’ என்பது கறுப்பர் இனத்தவரின் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் என்றும் மறக்க முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் பலபகுதிகளிலும் வாழ்ந்துவந்த கறுப்பர் இனத்தவரை ஒருங்கிணைக்கும் சக்தியாக அது விளங்கியது தான் அதன் சாதனை! இதனால் உலகமும் இவர்களது வாழ்க்கை நிலையை, உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு வழியேற்பட்டது.

இதற்குச் சரியான ஒரு சான்றைச் சொல்ல வேண்டுமென்றால், 1970 நவம்பரில் ‘Black world’ என்ற இதழ் வெளியிட்ட ‘Harlem Renaissance Revisited’ என்ற சிறப்பிதழைச் சொல்லலாம். அர்ணா பாட்டம்ஸ் (Arna Bontems), டாரதி வெஸ்ட் (Dorathy West), ஜியார்ஸ்கெண்ட் (George Kent) போன்ற இக்காலக் கறுப்பர் இன எழுத்தாளர்கள் ஹார்லம் மறுமலர்ச்சி எழுத்தாளர்களைப் பற்றிய நினைவுகளைச் சமகால வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த இதழ் அமைந்தது. இதேபோன்று 1971இல் வெளிவந்த ‘Harlem Renaissance’, 1972 இல் வெளியான (Renaissance remembered) ஆகியவற்றையும் இந்த வரிசையில் குறிப்பிடலாம்.

சரி, ‘ஹார்லம்’ என்றால் என்ன?

அது காலனியா? ஊரா? நகரமா? நாட்டின் பகுதியா?

‘ஹார்லம்’ என்பது ‘ஒரு நகரத்துக்குள் உருவான மற்றொரு நகரம்’!

தம் இனத்தவரை இனம் கண்டுகொள்ள கறுப்பர் இனத்தவர்கள் உலகில் உருவாக்கிய முதல் நகரம்!

ஹார்லம் _ அமெரிக்காவின் பரபரப்பான மன்ஹாட்டன் நகரப்பகுதியில் கறுப்பர் இனத்தவர் தங்களுக்கென அமைத்துக் கொண்ட நகரம்.

அதுவரை நீக்ரோக்கள் குடியிருப்புகளைப் பற்றி உலகம் எண்ணியிருந்த மனக்கோலங்கள் மறைந்தன. கறுப்பர் இனமக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக, அவர்களுடைய சமுதாய மேம்பாட்டிற்குரிய களமாக ஹார்லம் விளங்கியது. ஹார்லத்திற்கு அமெரிக்காவின் பிறபகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், மேற்கிந்தியத் தீவுகளிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும் கூட கறுப்பர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். 1914இல் 14,000 என்ற எண்ணிக்கை 1925 வாக்கில் 1,75,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. ‘அமெரிக்க கறுப்பர்களின் பண்பாட்டுத் தலைநகரம்’ (Cultural Capital of Black America) என்ற சிறப்புப் பெயரையும் ஹார்லம் பெற்றது. அமெரிக்கக் கறுப்பர்களின் வாழ்க்கையையும், அதன் உட்பொருளையும் அறிய வேண்டுமென்றால் ஹார்லத்தின் நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்க்க வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்கு ‘ஹார்லம்’ முக்கியத்துவம் பெற்றது. ஹார்லம் மறுமலர்ச்சி 1925இல் உச்சக்கட்டத்தை எட்டியது எனலாம். இந்த நேரத்தில்தான் ‘சர்வே’ எனும் இதழ் ஹார்லம் சிறப்பிதழை வெளியிட்டு ‘புதிய நீக்ரோக்களின் மெக்கா’ எனப் புகழ்ந்து தள்ளியது!

ஹார்லம் மறுமலர்ச்சிக்குப்பின் புதிய நீக்ரோ இயக்கத்தை (New Negro Movement) நாம் ஏற்கனவே குறிப்பிட்ட Harlem இதழின் ஆசிரியர் ஆலன்லாக் தொடங்கிவைத்தார். இதனைப் பண்பாட்டு இயக்கமாக _ நீக்ரோ இனத்தவரை ஒன்று சேர்க்கும் இயக்கமாக _ அவர்களை அமெரிக்கர்களுடன் சரிநிகர் சமானமாகக் கருதும் இயக்கமாக அவர் வளர்த்தார். ஆலன் லாக்கின் கொள்கைப்படி, ‘நீக்ரோ’ _ ‘அமெரிக்கர்’ ஆகிய பெயர்கள் வெறும் அடையாளங்களே; இவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லை. இந்தத் தத்துவத்தை முன் வைத்து ஆலன்லாக் தன் இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். ஆலன்லாக் இவ்வாறு உணர்வதற்கும், உணர்ந்ததை இலக்கியத்தில் பதிவு செய்வதற்கும் மூலகாரணமாக அமைந்தது கறுப்பர் இலக்கியத்தின் கறுப்புநிலாவான துபாய்ஸ் (Dubois) கண்டுசொன்ன ‘கருமை மனப்பான்மை’ என்ற உண்மையாகும்.

‘அமெரிக்காவில் வாழும் கறுப்பர் இனத்தவர் இரண்டு மனம் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்’ என்று சொன்னார். இதை அவர் ‘இருமைத்தன்மை’ (ambivalence’) என்று குறிப்பிட்டார். ஹார்லம் இயக்கம் 1920இல் தோன்றுவதற்கு முன்னதாகவே 1903இல் ‘Souls of Black Folk’ என்ற நூலில் கறுப்பர் இனத்தவரின் இந்த இருமைத் தன்மையை அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் தங்களை அமெரிக்கராகவும் பார்க்கின்றனர். நீக்ரோவாகவும் பார்க்கின்றனர். இவர்களிடம் இருவித ஆன்மாக்கள், இருவித எண்ண ஓட்டங்கள், ஒன்றிற்கொன்று முரண்பாடான இரண்டு கருத்துநிலைகள். இத்தகு இருமை மனஉணர்வுகளால், இவர்கள் தங்களைத் தங்கள் கண் கொண்டு பார்க்காமல் மற்றவர்களின் கண்களால் தங்களைப் பார்க்கிறார்கள். பாவம் இவர்கள் இரங்கத்தக்கவர்கள்!’’

இந்த இருமைத்தன்மையை துபாய்ஸ் ‘Double consciousness’ என்று குறிப்பிட்டார். இதற்கு மேலும் ஒருபடி சென்று இந்த 20ஆம் நூற்றாண்டின் சிக்கலே நிற வேற்றுமைதான்’’ (The Problem of the Twentieth Century is the Problem of Colour) என்று அவர் அழுத்தமாகச் சொன்னார். நிறவேற்றுமை என்பது மேலெழுந்தவாரியாகப் புலப்படவில்லை என்றாலும், அது உணர்வுகளில் ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்ற உண்மையை கறுப்பர் இன எழுத்தாளர்கள் எடுத்துக்காட்டத் தவறவில்லை. இதற்கு இவர்கள் எழுதிய பின்வரும் மூன்று நாவல்கள் ஆவணங்களாக அமைகின்றன:

Mallance thurman எழுதிய The Black of the Berry, George schuyter எழுதிய Slaves Today, Dubois எழுதிய Dark Princes

இந்த மூன்று நாவல்களும் நிறவேற்றுமைச் சிக்கலை இருமை மனப்பான்மையை மூன்று வேறுவேறு நோக்கில் பார்க்கின்றன.

முதலில் The Black the Berry நாவலில்

இடாஹோ (Idaho) ஒரு கறுப்பர். இவருக்கு வாய்த்த மனைவி இடைநிறத்தவள் (Light skinned) ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்கும்போது அது வெள்ளைநிறத்தில் இருக்க வேண்டும்; அந்த வெள்ளைநிறம், பிள்ளை வளர வளர, கூட வேண்டும் என்ற தணியாத வெறி இடாஹோவுக்கு இருந்தது. இதனால் எப்படியாவது வெள்ளை நிறத்தவருடன் சங்கமித்துவிடலாம் என்ற முரட்டு ஆசை அது. இனவெறிச் சிக்கலிலிருந்து மீளுவதற்கு இது ஒருவழி என்று இடாஹோ தப்பாக நினைத்துக் கொள்கிறார். ஆனால் இவரது ஆசை நிறைவேறவில்லை. இவரது மூத்தமகள் எம்மா (Emma) அட்டக் கறுப்பு. எம்மாவோ கறுப்புநிறத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டவள். தந்தைக்கும் மகளுக்கும் நடந்த போராட்டத்தில் எம்மா வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறாள். தன்னுடைய இனத்தைச் சார்ந்த பலரும் தன் அப்பாவின் மனப்போக்கு கொண்டிருப்பதைப் பார்த்துக் கொதிக்கிறாள். அவர்களுடையம நிலைப்பாடு பிடிக்காமல் அவர்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறாள்; மனஅமைதி பெறுகிறாள்.

தங்கள் அடையாளத்தை இழந்து தங்களுக்குத் தாங்களே அந்நியமாகிப் போன ஒரு கூட்டத்திலிருந்து, தன் அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அந்தக் கூட்டத்திலிருந்து தன்னை அந்நியமாக்கிக் கொண்ட ஒருத்தியின் கதை இது. எம்மாவின் ஏக்கங்கள் ‘ஒரே இனத்திற்குள்ளான நிற ஏற்றத்தாழ்வுகள்’ (Indranacial colour prejuidice) என்றழைக்கப்பட்டது.

இனி ‘Slaves Today’ நாவல் கதையைப் பார்க்கலாம்: அமெரிக்காவிலிருந்து விடுவிக்கப்பட்ட கறுப்பர் இனத்தவர் ஒன்றுகூடி சைபீரியாவுக்குச் சென்று அங்கு குடியரசாட்சி அமைக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைவதற்குரிய ஒரு பூலோக சொர்க்கம் போல அதை ஆக்குவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அது கனவாகவே ஆனது. தெளிவான சிந்தனையும் சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் மிக மோசமான வாழ்க்கையை அமெரிக்காவில் அடிமைகளாக இருந்து விடுதலைபெற்று சைபீரியா சென்ற கறுப்பர்கள் சந்தித்தனர். இவர்களுக்கும் மண்ணின் மைந்தர்களாக அங்கேயே வாழ்ந்து வந்த பழங்குடிக் கறுப்பர்களுக்குமிடையே புதிய இன நிற வேறுபாடுகள் தோன்றின. வந்தேறிகளான பூர்ஷ்வா கறுப்பர்கள் (இப்படித்தான் நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்) அங்கிருந்த பழங்குடிக் கறுப்பர்களை அடிமை கொண்டனர்.

இதுஒரு உண்மைக்கதை. நிறவெறி என்பது வெள்ளையர்களிடம் மட்டுமல்ல, அது கறுப்பர்களிடமும் இருக்கிறது என்ற உண்மையை அறிந்து அவர் மனம் கசந்தது. இதனை நேரடியாகக் கண்டறிவதற்காக அவர் சைபீரியாவுக்குச் சென்றார். சைபீரியாவில் அப்போது அமெரிக்காவிலிருந்து விடுவிக்கப்பெற்ற நீக்ரோக்கள் குடியேறிக் கொண்டிருந்தனர். இவர்கள் தங்களை அமெரிக்கா _ சைபீரியர்கள் என்றழைத்துக் கொண்டனர். ஏற்கனவே அங்கிருந்தவர்களை ஆப்பிரிக்க _ சைபீரியர்கள் என்றழைத்தனர். அமெரிக்க சைபீரியர்கள் எஜமானர்களாயினர்; மண்ணின் மைந்தர்கள் புதிய எஜமானர்களுக்கு அடிமைகளாயினர். இவ்வாறு ‘கேவலம் வன்னிவும், மென்னிவும் (Dark skin. Light skin) என்ற மெலிதான நிறவேற்றுமையால் பிரிந்து கிடக்கும் இவர்களை இணைத்து வைப்பதென்பது நகைப்பிற்குரிய செயல்’ என்று ஷ§ட்டர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

அடுத்து துபாஸ் எழுதிய ‘Dark Princes’ நாவலின் கதையைப் பார்ப்போம்.

மாத்யூ டௌன்ஸ் என்ற கறுப்பின இளைஞனின் தேடலாகவே கதை மையம் அமைகிறது. தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய இனத்தவரிடையே வாழப் பிடிக்காமல் தலைநிமிர்ந்து வாழும் ஆசிய நாடொன்றுக்குப் போய்விடலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறான் மருத்துவக் கல்லூரி மாணவன் டௌன்ஸ்.

முதலில் அவன் பெர்லினுக்குப் பயணமாகிறான். பெர்லின் காபி கிளப் ஒன்றில் நடுத்தர நிறமுடைய ஒரு பெண்ணைக் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கிறான். அவள் இந்தியாவிலுள்ள யோத்பூரின் இளவரசி கௌடில்யா என்று தெரியவருகிறது. அவள் இந்திய விடுதலைக்காக, இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள தீவிரவாத கும்பலில் பயிற்சி பெறுவதற்காக பெர்லினுக்கு வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்கிறான். இந்தப் பயிற்சி தனக்கும் உதவக்கூடும் என்ற எண்ணத்துடன் தீவிரவாதிகளைச் சந்திக்கின்றான். ஆனால் அவர்கள் இவனது கறுப்பு நிறத்தையும், அடிமை நிலையையும் குத்திக்காட்டுகின்றனர். இதனால் ஒத்த நிறமுடையோர் மீது அவனுக்கு வெறுப்பு வேர்விடுகிறது. தன்னுடைய இனத்தைவிட்டு நீங்கிவந்த தவற்றை உணர்கிறான். மீண்டும் அமெரிக்கா திரும்பி தன்னுடைய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட வேண்டும் என்று உறுதி கொள்கிறான்; கூலி வேலை செய்கிறான். அப்போது இளவரசி கௌடில்யாவை மீண்டும் சந்திக்கின்றான். அவளுடைய அறிவுறுத்தலால் விடுதலைக்கு _ மீட்சிக்கு தீவிரவாதமே வழி என்று முடிவு செய்கிறான்.

நாடு திரும்பி அவன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதால் பத்தாண்டுகள் கடுங்காவல் சிறையில் அடைக்கப்படுகிறான். டௌன்ஸின் வரலாற்றை அறிந்த சிகாகோ கறுப்பர்களின் அரசியல் ஞானத் தந்தை Sammy scott என்பவரின் செயலாளரான Sara Andrews, அவனுடைய விடுதலைக்கு ஏற்பாடு செய்கிறாள். அவனைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்துகிறாள்; டௌன்ஸ் சட்டசபை உறுப்பினராகிறான். சாரா அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். குடியரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகின்ற அளவுக்கு டௌன்ஸ் வளர்ந்து விடுகிறான்!

இந்தச் சமயத்தில் இளவரசி கௌடில்யா அவன் வாழ்வில் குறுக்கிடுகிறாள். வேலை பார்க்கும் பெண்ணாகத் தன் கையை நம்பி வாழும் தன்னம்பிக்கை மிக்கவளாக மாறிவிட்ட கௌடில்யா, அரசியல் சூதாட்டத்திலிருந்து அழிவிலிருந்தும் டௌன்ஸைக் காப்பாற்றுகிறாள். இறுதியில் இருவரும் இணைகின்றனர்.

இந்த நாவலை _ ‘நாவல்’ என்று சொல்லுவதைக் காட்டிலும் ஓர் இனத்தின் அரசியல் வரலாற்றின் படப்பிடிப்பு என்று சொல்லலாம்.

இங்கு சொல்லப்பட்ட மூன்று நாவல்களும் ஹார்லம் மறுமலர்ச்சியை மூன்று கோணங்களில் பார்த்தன என்பதுதான் இவற்றின் சிறப்பம்சம். முதலாவது நாவலான Black the Berry, ஓர் இனத்திற்குள்ளேயே ஊடுருவியிருந்த நிற வேற்றுமையை எடுத்துக்காட்டியது; இரண்டாவது நாவலான Slaves Today, அதிகாரவர்க்கமாக மாறிய கறுப்பர் இனத்தவர் மண்ணின் மைந்தர்களாகிய தம் சகோதரர்களையே அடிமைகளாக நடத்திய கேலிக்கூத்தை வெளிப்படுத்தியது; மூன்றாவது நாவலான Dark Princes, தங்களைப் போன்ற மென்னிறம் கொண்ட (Brown skinned) மக்கள் வாழும் மூன்றாம் உலக நாடுகளில் நிற உணர்வு எவ்வாறு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி, உலகஅளவில் விழிப்புணர்வு தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

எது எப்படி ஆயினும், Dark prince நாவலில் அமெரிக்க அரசியலில் கறுப்பர் தலைமையேற்பதாக துபாய்ஸ் கண்டகனவு இன்று உண்மையாகிவிட்டது!

இது கறுப்பர் இலக்கிய ஆக்கத்திற்குக் கிடைத்த வெற்றிதானே!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com