Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
அக்டோபர் 2007

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை (கவிதைத் தொகுப்பு)
க. அம்சப்ரியா

பக்கங்கள் 72, விலை ரூ. 40
மயூரா பதிப்பகம்
37, தொட்டராயன் கோவில் வீதி, காட்டூர், கோயம்புத்தூர் - 641 009.
தொ.பேசி : 93607 89001

கவிதையொன்றின் பிறப்பு கவிஞனின் அழுத்தமான சங்கடத்திலோ, ஆர்ப்பரிக்கிற மகிழ்ச்சியின் தொடர் உச்சத்திலோ கிளம்பிவிடக்கூடும். மயூராவின் கூற்றுப்படி வாசித்த வேறொரு படைப்பின் நீட்சியாக எழுதப்படுகிறவைகளாவோகூட இருக்கலாம். ஆனால் ஒரு கவிஞனின் கவிதைகள் தொகுப்பின் வழியாக குவிகிறபோது தொகுப்பின் அவசியம் என்னவென்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

தான் மொழியின் நீள் எல்லையை அடையாளம் கண்டுகொண்டதை தம்பட்டம் அடித்துக் கொள்ளவோ, அல்லது கவிதைக் களத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டதன் அடையாளத்தை வெளிப்படுத்தவோ வெளியாகும் தொகுப்புகளுக்குப் பஞ்சமில்லை.

மயூரா.ரத்தினசாமியின் கவிதைத் தொகுப்பு அவ்வாறானதல்ல என்பதை முகங்கள் கவிதையே எடுத்துச் சொல்லிவிடுகிறது. வெகு இயல்பாக தொடங்கிவிடுகிற கவிதை பெற்றோர்களின் மன எல்லையையும், குழந்தைகளின் எதிர்பார்ப்பற்ற உலகத்தையும் வெளிப்படுத்திவிடுகிறது. ஒரு முக்கிய நிகழ்வும், அதன் வீரியமும் யாராலோ, எங்கோ ஏதாவதொரு வடிவ உத்தியால் வெளிப்படுத்தப்படுகிறபோதுதான் அச்செயலின் பன்முகத்தன்மை தன்னை விரித்துக்கொள்கிறது. ‘முகங்கள்’ கவிதை அப்படியான வெளிப்பாடுதான். தொகுப்பில் வருகிற நிகழ்வுகள் நாம் எதிர்கொண்டவைகள்தானெனினும் கவிஞனின் சொற்களால் உச்சநிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்கிறது.

எளிமையும், பூடகத் தன்மையும், அதே சமயம் மொழி ஆழமும் ஒருங்கே செறிந்த கவிதைகளாக இக்கவிதைகள் வலம் வருகின்றன. இத்தொகுப்பில் நடுப்பாதையில் சிதைந்துவிடுகிற நாய்கள், சினேகிதமாகிவிட்ட நாய், காவல் நாய்கள் என்று நாய்களைப் பற்றிய விவரக்குறிப்புகள் உண்மையில் நாய்களைப் பற்றியதல்ல. அதில் இருக்கிற அரசியல், கவிதைகளை சமூகம் சார்ந்த அக்கறைக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது.

ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய தொகுப்பல்ல இது. மென்று மென்று அசைபோட்டு ருசிக்கலாம். நின்று நிதானித்து இப்பாதையில் செல்லலாம். அவசரமாய் கடந்தவிடக்கூடிய பாதை அல்ல அது. சமூக அவலங்களும், ரசிப்புக்குரிய காட்சிகளுமாய் இப்பாதை நீண்டுகிடக்கிறது. தொகுப்பில் நெருடுகிற விஷயம் இத்தொகுப்பு பற்றிய உரைகள். நல்லதொரு தொகுப்பிற்கு யாருடைய சிபாரிசோ, கருத்தாக்கங்களோ அவசியமற்றது.

முன்னுரைக்கோ, அணிந்துரைக்கோ ஒரு சிறந்த தொகுப்பு அடிமையாகி விடக்கூடாது. அது கவிதைகளின் தோல்வியாகவே முடியும். இம்மரபு இனியாவது உடைபடுதல் நலம்.

மண்ணே மலர்ந்து மணக்கிறது (கவிதைத் தொகுப்பு)
மகுடேசுவரன்
மண்ணே மலர்ந்து மணக்கிறது, ஆசிரியர்: மகுடேசுவரன்,
யுனைடெட் ரைட்டர்ஸ், 63, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 14,
விலை:ரூ.35

தீவிர இலக்கியப் பரப்பில் தன் போக்கில் கவிதைகளால் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர்களில் மகுடேசுவரனுக்கு தனிச்சிறப்பு உண்டு. இலக்கியக் கோட்பாடுகளின் எந்தச் சாயலிலும் வீழ்ந்துவிடாதபடியான வெளிப்பாடு இவருடையது. இவருடைய மனிதர்கள் தினமும் நாம் கடந்து போகிற மனிதர்களாவோ, நம்மைக் கடந்து போகிற மனிதர்களாகவோதான் இருக்கிறார்கள்.

மனிதத் தன்மையின் அடையாளத்தை இழந்து, வியாபார நகரமாக மாறிக் கொண்டிருக்கிற திருப்பூரின் தெருக்களும், மனிதர்களும் இவருடைய முந்தைய தொகுப்புகளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதுதான். அண்மைக்காலத்தின் வரவு, மண்ணே மலர்ந்து மணக்கிறது. இத்தொகுப்பின் மூலம் வெளிப்படும் மனிதர்கள் வேற்றுலகவாசிகளோ, சமூகம் தாண்டிய அதிசயப் பிறவிகளோ அல்ல. நமக்குள் இருக்கிறவர்களில் சொல்லவிடுபட்ட மனிதர்களைப் பற்றியதுதான் இத்தொகுப்பு.

தனது அறைக்கு வாசகர்களை வரவேற்கும் கவிதையில் துவங்குகிறது மலர்ந்து மணக்கும் மண்வாசனை. யாருமற்ற தனிமை அறையில் உலாவரும் எலி கவிதைக்குள் பிறாண்டத் துவங்கிவிடுகிறது.

குட்டி இளவரசி, மதுக்கடைக்காரன், மதுவருந்தாதவன், யுக புருசனாக வரும் கௌதம முனி, ஏற்றுமதியாளன், இரவு விழிப்பவன், யாருக்கும் தீங்கிழைக்காத ஒருவன், படம் பார்க்க வந்தவள், மூதாதை, வெறுங்கையுடன் நோயாளியைப் பார்க்க வருகிறவர்கள், திருமணப்பத்திரிகை நீட்டுகிற நண்பன், பொறுக்க முடியாதவர்கள், இவர்கள் மனிதர்களாகவும், மனிதர்களோடு மறைமுகமாக தொடர்புடையவர்களாகவும் கவிதைகளுக்குள் சுதந்திரமாகவும், வருத்ததத்தோடும், மிக்க மகிழ்ச்சியோடும் உலா வருகிறார்கள்.

குறிப்பாக படம் பார்க்க வந்தவள் வக்ரத்தை தோலுரித்து, சுயத்தை உதறிக் காயப்போடுகிற கவிதை. படம் பார்க்க வந்தவள் எப்போதோ தென்படக்கூடியவள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, வெளியேறுகிறவர்களின் மனநிலை¬யையும் உள்ளடக்கியதாகத்தான் இக்கவிதையைப் பார்க்க வேண்டும். இக்கவிதைளில் உள்ள மனிதர்களுக்குள் தகிப்பும் போராட்ட குணத்தின் மூர்க்கமும் பதுங்கிக் கிடப்பதை நுட்பமான வாசிப்பில் உணரலாம்.

செக்கிங் பணிக்கு பெண்கள் தேவை.... கவிதையில் ஆடம்பரச் சொற்களோ, வெற்றுக் குரலோ இல்லை. ஆனால் நல்ல கவிதைக்கான சிறப்பைப் பெற்றுவிடுகிறது. தன் சமூகத்தையும், சந்திக்கிற மனிதர்களையும் புறம் தள்ளிவிட்டுப் படைக்கிற எந்தப் படைப்பும் காலத்தால் நின்றுவிடுவதில்லை. எந்த அரும் சாதனையையும் படைப்பதுமில்லை. திட்டமிட்டு வைக்கிற பூச்செடியைவிடவும் எதேச்சையாக முளைக்கிற ஒரு விதை மரமென்றாகி, முக்காலத்திலும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இந்தத் தொகுப்பு அப்படித்தான்! இன்னின்ன கவிதைகள் அற்புதங்களென்று எடைபோட்டு, வாசகர்களின் மடியில் கொட்டிவிட முடியாது. எளிமையான சொற்களால், அடர்த்தியான உலகத்தை வெளிப்படுத்தும் தொகுப்பாக இத்தொகுப்பென்றால் மிகையல்ல.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com