Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
நவம்பர் 2008

தலைக்கு மேல் நிழல் : ஒரு பார்வை
பொன். குமார்

பாரதியாரால் தொடங்கப்பட்டு பெருங்கவிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று தமிழகத்தில் ஆழமாய், அழுத்தமாய் வேரூன்றி விருட்சமாக வளர்ந்துள்ளது ஹைக்கூ. ஹைக்கூவினைத் தொடர்ந்து சென்ரியு, ஹைபுன், லிமரைக்கூ என்னும் வடிவங்களும் தமிழகத்தில் பரவி வருகின்றன.

ஹைக்கூவினர் எண்ணிக்கையில் பெருகி இருந்தாலும் ஹைபுன் முயற்சியில் சிலரே ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மு,முருகேஷ், அன்பாதவன், சோலை.இசைக்குயில், நிலா கிருஷ்ணமூர்த்தி பல்லவிகுமார் ஆகியோர் இணைந்து "அறுவடைநாளின் மழை" என்னும் கூட்டு ஹைபுன் தொகுப்பையும் அன்பாதவன் "மாயவரம்" என்னும் தனி ஹைபுன் தொகுப்பையும் தந்துள்ளனர். கூட்டணியில் மாறுபாடு ஏற்பட்டு அன்பாதவன், ந.க.துறைவன். சோலை.இசைக்குயில், நிலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து அளித்துள்ள தொகுப்பு "தலைக்கு மேல் நிழல்"

ஹைபுன் என்பது உரைநடையில் தொடங்கி ஹைக்கூவில் முடியும் ஒரு வடிவமாகும். ஹைபுன் என்பது உரைநடையும் ஹைக்கூவும் இணைந்த ஒரு அர்த்தநாரி வடிவம். ஒரு துண்டு உரைநடை. அது கதை, கவிதை, வாய்மொழிச் சொல்லாடல்கள் குறிப்புகள் மற்றும் விவரங்கள் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். இறுதியில் முத்தாய்ப்பாக உரைநடைக்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாயாய் பொருத்தமான ஒரு ஹைக்கூ என முன்னுரையில் புரிதலுக்காக எழுதி புரிதலை ஏற்படுத்தியுள்ளார்.

பெண்ணடிமை தீருமுன்னமே மண்ணடிமை தீர்ந்துவிட்டது. கைம்பெண் மரத்தில் அடிக்கப்படுகிறாள். பெண் உரிமை பேசவும் கணவன் அனுமதி தேவை. முன்பு எப்போதோ கோயிலுக்குள் சென்று வந்ததற்கு இப்போது விசாரணை. மடத்தலைவர்கள் எல்லாம் ஆண்கள். ஆசி பெற செல்லும் பெண்கள் களங்கப்படுகிறார்கள். பெண் கடவுளின் கோயிலுக்குள் செல்ல ஆண்களுக்குத் தடையேதும் இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். ஆதரவு தருபவர்கள் பெண்கள் அர்ச்சகர்களாக அனுமதிப்பார்களா?

கோயிலுக்குச் சென்றன
பெண் படைத்த குழந்தைகள்
தள்ளி வைக்கப்படும் தாய்
என்பது சோலை.,இசையின் ஹைபுன்.

"பாட்டி இராத்திரி மொட்டை மாடியில் படுத்திருந்தப்போ வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் மத்தாப்பூப் போல மெல்ல உதிர்ந்து பூமிக்கு வர்றதைப் பார்த்தேன். அது நல்லதா கெட்டதா" கேட்டான் பேரன். "நல்லதா கெட்டதான்னு எனக்குத் தெரியலே. ஆனா நட்சத்திரம் உதிர்ந்து வர்றப்ப மூணு பூவுங்க பேரு சொல்லனும்டா" பாட்டி.

மீண்டும், "எதுக்குப் பாட்டி?" பேரன். "எதுக்குன்னு எனக்குத் தெரியாது. எங்க தாத்தா பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்தை உனக்கு சொன்னேன்." என்றாள் பாட்டி. மரபினை உடைத்து கேள்வி தொடுக்கிறான் பேரன். விடைதெரியாமல் விழிக்கும் பாட்டி. ந.க.துறைவனின் ஹைபுன் இது.

உன் பூஞ்சிரிப்பில் வீணை. ரகஸியக் கிசுகிசுப்பில் குழல். கொஞ்சலில் வயலின். சீரான பாத அடியில் தபேலா. தொடர் முத்தத்தில் மிருதங்கம். இசையைக் கருவியாக்கும் திறனின்றி விற்பவனுக்குக் கற்றுக்கொடு காதலிசையை.

யாருமற்ற தனிமையில்
அறைக்குள் நடனம் பயிலும்
ஊதுபத்தியின் நறுமனம்
இந்த ஹைபுனை எழுதியவர் அன்பாதவன். நான்காவதாக இடம் பெற்றவர் நிலா கிருஷ்ணமூர்த்தி. அவரின் ஹைபுன் இது.

புழுதிப் படலத்தை கிளப்பிப் போகும் நகர்க்காற்று, அதிர்ந்து ஓடும் வாகன இரைச்சல், இடைவிடாத ஒலிப்பான்களின் சங்கீதம், ரூபாய் நாணயங்கள் கை நிறைய, நாணய தொலைபேசியில் எண்களை சுழற்றும் விரல்கள், படபடக்கும் இதயத் துடிப்பு, திமிறி ஓடும் புரவியாய் மனசு, இணைப்பு கிடைக்கும் வரை இடைவிடாத முயற்சி, பதற்றமாகி படபடக்கும் இதயம். கிடைத்து விட்ட இணைப்பில் "ஹலோ" குவியலாய் கூவும் குரல். செவிப் பறைக்குள் அதிராமல் சங்கீதம். தொடரும் இருவரின் பேச்சு. நொடிகள் தொடங்கி மணக் கணக்கில் நீள்கிறது காதல் சம்பாசணைகள். கண்விழிக்கும் நட்சத்திரங்கள் நிலவன் வருகையை முன்னறிவிப்பதாய்,

தொலைபேசியில் காதலி
முற்றுப் பெறுவதில்லை
கவிதைகள்

கவிஞர்கள் சமூக அக்கறை மிகுந்தவர்கள். ஹைபுன்கள் வடிவமாயினும் சமூக கருத்துக்களையே ஹைபுன் மூலம் தெரிவித்துள்ளனர். புதுவடிவத்தை வரவேற்பதில் உள்ள ஆர்வமும் அவ்வடிவத்தை வளர்க்க வேண்டும் என்னும் கரிசனமும் கவிஞர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. உரைநடையில் தொடங்கி ஒரு ஹைக்கூவில் முடிவதெனினும் சில உரைநடை பகுதிகள் உரையாடலுடன் அமைந்துள்ளது.

சோலை.இசைக்குயில், ந.க.துறைவன், நிலா கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் புறம் சார்ந்தவைகளை எழுதியுள்ளனர். அன்பாதவன் மட்டும் அகம் சார்ந்ததை எழுதியுள்ளார். இவர் கூடுதலாக வடிவங்கள் பலவாவும் எழுதியுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் என்னும் வடிவங்களில் ஹைவ்கூ மட்டுமே பெரும்பான்மையரால் எழுதப்பட்டு வருகிறது. இரண்டாவதாக எழுதப்பட்டு வருவது லிமரைக்கூ, சென்ரியுவிற்கும் ஹைக்கூவிற்கும் வேறுபாடு தெரியாததால் சென்ரியுவையும் ஹைக்கூவாகவே சிலர் எழுதி வருகின்றனர். ஆனால் ஹைபுன் வடிவமோ சிலராலே எழுதப்படுகிறது. சிலராலே வாசிக்கப்படுகிறது. சிலராலே விமர்சிக்கப்படுகிறது. அதிகமானோரால் வாசிக்கும் போதே வெற்றி பெறும். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இத்தொகுப்பில் இணைந்துள்ள கவிஞர்கள்.

சோலை.இசைக்குயில் 28, ந.க.துறைவன் 30, அன்பாதவன் 38, நிலா கிருஷ்ணமூர்த்தி 40 என மொத்தம் 136 ஹைபுன்கள் உள்ளன. அழகாக வடிவமைத்து தரமாக வெளியிட்டுள்ளது உதயக்கண்ணன் வெளியீடு. ஹைபுன்களின் முன்பகுதியான உரைநடையைத் தவிர்த்துவிட்டு இறுதிப்பகுதியை வாசித்தோமானால் ஒவ்வொன்றும் ஹைக்கூவாகும் தகுதி பெற்றுள்ளன. "புதிய அனுபவத்திற்கான மனநிலையுடன் படியுங்கள்" என அழைப்பு விடுத்துள்ளனர் கவிஞர்கள். வாசித்து முடித்தவுடன் ஒரு புதிய அனுபவம் ஏற்படுவதை உணர முடிகிறது.
வெளியீடு : உதயகண்ணன் வெளியீடு, 10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600011. விலை : ரூ.50.00.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com