Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே 2009

முதலில் இறந்தவன் ஆனாயே...!
சூர்யநிலா

"எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு?" என்று முதுசொல் ஒன்று உள்ளது. ஆனால் இலக்கியவாதிகளைப் பார்த்து யாரும் அப்படிச் சொல்ல முடியாது. அவர்கள் மரபிலிருந்து பிறப்பின் கூற்று வழியாக இலக்கியத்தோடு உருவாகிறார்கள். வாழ்வியலுக்குத் தேவையான படைப்பிலக்கியங்களை நமக்காக விட்டுச் செல்கிறார்கள்.

தனது சிறுவயதில் 'மகாகவி'யாக பரிணாமித்து 39- வயதிலேயே வாழ்க்கையின் அனைத்து தரப்பினருக்காகவும் பாடி நிறைவாழ்வு எய்யாமலேயே நம்மைவிட்டுப் போனவன் பாரதி.

வெறும் வேடிக்கை மனிதரைப் போல
என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று மார்தட்டியவன் வீழ்ந்துதான் போனான் குறைந்த அகவையிலேயே. பட்டுக்கோட்டையார், தமிழ்ஒளி போன்றவர்களும் பாரதியைப் பின்பற்றி குறைவாழ்வு எய்தவர்கள்தான். ஆனால் இவர்களது படைப்புகள் காலத்தால் அழிக்க முடியா காவியங்களாக இன்றும் ஒளிவீசி வருகின்றன. இவர்களின் வீச்சோடு எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர்தான் அப்பாஸ். இவரின் வித்தியாசமான அதே சமயம் ஆழமான மொழிநடையை நவீன சிற்றேடுகள் அரவணைத்தன. ஆரோகணித்தன.

ஒரு மொழி நேர்கோட்டில்தான்
பயணம் செய்யவேண்டுமா?
ஏன் ஹேர்பின் கொண்டை ஊசி வளைவு
களாக அம்மொழியிருக்கக் கூடாதா?
நான் எனது கவிமொழியை
வழக்கத்திலிருந்த பழம்முறையினை
மாற்றி நவீனப் பாதைக்கு இட்டுச் செல்கிறேன்"

இது அப்பாஸின் மூன்றாவது தொகுப்பான 'ஆறாவது பகல்' கவிதை நூலின் முன்னுரை இதிலிருந்து சற்றும் தடம் மாறாமல் தனது கவிமொழியை ஆழமாக மெருகேற்றி வந்தார் அப்பாஸ்.

புற்றீசலாக தொகுப்புகளை 'சவலைப்பிள்ளை'களாக வெளியிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு, நடுவே அப்பாஸ் தனது கவிதைகளை வெளியிடவும், தொகுப்பாக்கவும் அவசரத் தன்மை காட்டாமல் வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தனது முதல் தொகுப்பிற்கான 'வரை படம் மீறி...'க்கு அடுத்து 'வயலட் நிற பூமி'க்கு நிரம்ப அவகாசம் எடுத்துள்ளார்.

இறுதியாக வெளிவந்துள்ள 'உயிர்எழுத்து' பதிப்பகத்தின் 'முதலில் இறந்தவன்' நூலிற்கும் நான்கு வருடங்கள் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இப்படி நிதானமாக அடியெடுத்து வைத்தல் இலக்கியப் படைப்புகளுக்கு ஆரோக்கியமானது. படைப்பு எண்ணிக்கைகளுக்காக ஏனோ தானே எழுத்துக்களை நூலாக்குவோர் பணவிரயத்தையும், படிப்பவர்களின் காலவிரயத்தையும் ஏற்படுத்துபவர்களாயிருக்கிறார்கள்.

நவீன கவிதைகள் சொற்சிக்கனத்திற்கு உட்பட்டவையாகயிருக்க வேண்டுமென்ற கருத்தை உள்வாங்கியவர் அப்பாஸ். அவரது பெரும்பான்மையான கவிதைகள் ஏழு அல்லது பத்து வரிகளுக்குள்ளேயே முடிந்துவிடுபவை. ஆறாவது பகல், முதலில் இறந்தவன் மற்றும் சிலகவிதைகளே பொருளின் தன்மைக்கேற்ப நீண்டுள்ளன.

இரவில் மிதக்கிறது
பிரக்ஞையின் பகல்
தன் குப்பிகளைத் திறந்து கொண்டு
மெல்லிய சுவாசத்தில்
வளரும் மரமொன்றில்
புதிய புதிய பறவைகள்

என்பது அவரது சொற்சிக்கன கவிதைகளில் ஒன்று. பசவராஜ், டேனியல், கேசவன் என்று நண்பர்களோ அல்லது இடுகுறி பெயர்களோ அவரது பல கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.

11-5-2003-இல் எங்களது 'எழுத்துக்களம்' இலக்கிய அமைப்பின் சார்பில் அப்பாஸின் 'ஆறாவது பகல்' கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்தை சேலம் தமிழ்ச்சங்கத்தில் நடத்தியிருந்தோம். அப்பாஸ். க.அம்சப்ரியா, உயில் எழுத்து சுதீர்செந்திர், மகுடேசுவரன், பா.சத்தியமோகன், க.மோகனரங்கன் ஆகியோர் பங்ககேற்று பேசியக் கூட்டமது. அப்பாஸின் 'ஆறாவது பகலை', யவனிக ஸ்ரீராமும், சதீர்செந்திலின் 'ஒன்றுமற்ற ஒன்று' நூலினை க.அம்சப்ரியாவும் ஏனைய மற்ற நூல்களை மகுடேசுவரன், க.மோனரங்கனும் ஆய்வு செய்து பேசினார்கள். (சுதீர்செந்தில் அப்போது செந்தில்குமார் என்ற நிஜப்பெயரில் எழுதி வந்துள்ளார்). அக்கூட்டத்தில் அப்பாஸ் தனது ஏற்புரையில் பேசியது.

"நவீன தொகுப்புகளின் விமர்சனங்கள் குறைந்த கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்களையும், படைப்பாளிகளையும் வரவழைத்து கூட்டம் நடத்துவதை பெரிய விசயமாக எண்ணுகிறேன். நவீனத்தை பெரிய உச்சமான படைப்பிலக்கியமாக, தவமாக எண்ணி, என்னைப் போன்றவர்கள் ஈடுபட்டு வரும் சூழலில் அதற்கு வெகுஜன ஆதரவு கிடைக்காதது வருத்தமில்லையென்றாலும் ஆதங்கத்தைத் தோற்றுவிக்கிறது. எங்கேயோ கோவில்பட்டியில் இருக்கும் என்னை வரவழைத்து இப்படியான ஒரு கூட்டத்தை நடத்தியிருப்பது மனதுக்கு ஆறுதலளிக்கின்றது. சூர்யநிலா போன்ற நண்பர்களின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது."

இவ்வாறு பேசியபின் சேலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர் மு.முகைதீன் அவரது தொகுப்பினை வாங்கி கையொப்பம் பெற்றதையும், அவரது தொகுப்பு பதினைந்து விற்பனையானதையும் நெகிழ்ச்சியுடன் பிறகு எங்களிடம் சொன்னார். கோவில்பட்டி சென்ற மறுநாள் என்னைத் தொடர்பு கொண்டு பேசிய அப்பாஸ், "நீங்கள் கொடுத்த நினைவுப்பரிசினை (அவரது நூல் புகைப்படத்துடன் லேமினேஷன் செய்தது) ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி பத்திரப்படுத்தி வைத்துவிட்டாள். வீடடில் துணைவியார் மிகவும் மகிழ்ந்தார்கள்." என்றார்.

கடந்த ஜனவரி இறுதி வாரத்தில் எனது "இன்று நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு" கவிதைத் தொகுப்பின் கவிதைகள் குறித்து நீண்டநேரம் செல்பேசியில் பேசியபடி விமர்சித்தார். 'கவிதைகளை அவசரமாக முடிக்கிறீர்கள்.' 'சில கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன.', என்றபடி பேச்சின் நிறைவில் "இந்த குற்றால சீசனுக்கு எங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள், குடும்பத்துடன் காரிலேயே போய் வந்து விடலாம்" என்றார். நானும் "சரிங்க... அதற்கு முன் உங்களின் 'முதலில் இறந்தவன்' நூலின் விமர்சனக் கூட்டம் வைக்கிறேன். நீங்கள் மார்ச்/ஏப்ரலுக்குள் இங்கு வரவேண்டியதாகவிருக்கும். " என்றேன்.

சிரித்துக் கொண்டார். அந்தச் சிரிப்பு, 'எங்கே வரப்போகிறேன்?' என்பதாக அமைந்துவிட்டது. இறுதியாக 2003-ஆம் ஆண்டினில் சேலத்திற்கு முதலும் கடைசியுமாக வந்தவர்தான்.

39-வயதில் பாரதி, 49-வயதில் அப்பாஸ் என்ற ஆளுமையுடையக் கவிஞர்கள் மறைந்து விடுகிறார்கள். சமகால கவிஞர்கள் வரிசையில் 'முதலில் இறந்தவன்' அப்பாஸ்தான்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com