Keetru Punnagai
Punnagai Logo
மே 2009

சுகந்தி சுப்பிரமணியம்
க்ருஷாங்கினி

சுகந்தியின் கவிதைகள் இரு தொகுதிகளாக வெளி வந்துள்ளன. முதல் தொகுதி 1988 அன்னம் வெளியீடாக, புதையுண்ட வாழ்க்கை 2003ல் யுனைடெட் ரைட்டர்ஸின் வெளியீடாக. "புதையுண்ட வாழ்க்கை' கவிதைகளுடன் இன்னமும் சில கவிதைகளும் இணைந்து 'மீண்டெழுதலின் ரகசியம்' என்ற தலைப்பிலும் வெளிவந்துள்ளது. இன்னமும் பதிப்பிக்கப்படாத நிறைய கவிதைகளும் சிறுகதைகளும் வெறும் குறிப்புகளுமாக ஏராளமாக இருக்கின்றன என்று சுப்ரபாரதிமணியன் சுகந்தியின் கணவர் என்னிடம் கூறினார். அவைகளை பதிப்பிப்பது சுகந்திக்கு செய்யும் பணியாக இருக்கும் என்று நானும் கூறினேன்.

சுகந்தியின் வாழ்வு பற்றி இதுவரை பலரும் கூறி அறிமுகமானதுதான். இவரின் கவிதைகளையும் நாம் அதே அணுகுமுறையில்தான் பார்க்கவேண்டும். சுகந்தியின் கவிதைகள் சிறு அறைகளுடையவை. சிறு அறைகளுக்கானவை. அதுவும் ஜன்னல்களும் கதவுகளும் இருந்தாலும் அடைபட்டுக் கிடக்கும் தனிமைசார் அறைகளுக்கு ஆனவை. அறையிருக்கும் வீடு மிக பிரம்மாண்டமானது. வீட்டைச் சுற்றிலும் மிகப் பெரிய பரந்த வெளியும், புல்தரையும் பலவித மரங்களாலும் சூழப்பட்டவை. வானம் எப்போதும் மேகங்களுடன் நகர்ந்து திரியும் சித்திரம் கொண்டது. பறவைகள் தன் போக்கில் பறந்து திரியும் பொழுது சுகந்தியின் கண்களுக்குக் குறுக்காகவும் சென்று மறையும். சுகந்தியின் மௌனம் வார்த்தைகளால் சில சமயம் நிரம்பி சூழ்ந்து பேரோசையை உள்ளடக்கியும், சில சமயம் வெற்றுப் பேரிரைச்சலாய் காதைக் கிழிக்கும் ஓசையைக் கொண்டதாகவும் வாழ்வின் தடங்கள் முழுக்க விரவியிருக்கிறது.

பேச்சற்ற தனிமை, அதுவே உடன் பேசும் ஒரு துணையாகிறது. நட்புக்காகவும், உண்டான நட்பு தொடர்ந்து நிலை பெறவும் ஏங்கும் மனம் கொண்ட குழந்தை உள்ளம் சுகந்திக்கு. சுகந்தியின் மன அழுத்தமே அவரைச் சுற்றி பெரும் சுவராய் எழும்பி தனிமையில் அவரை உறையச் செய்கிறது. எனவே கவிதைகள் பலவும் சற்றே எதிர்மறை முடிவுகளையும் ஆரம்பங்களையும் கொண்டவையாக அமையப் பெற்றுள்ளன. எனவே தனிமையும் சுவாசத் திணறலும் பரவலாகக் காண முடிகிறது. ஆனால் அவ்வப்போது திறந்துவிடும் ஜன்னல்களும் கதவுகளும் பெரும் காற்றை அறை முழுக்க நிரப்பி சுகந்தியை குதூகலித்துக் கொண்டாடச் செய்கிறது. ஜன்னல் திறப்புகளில் பறவைகள் கடந்து செல்லும் பொழுது தனக்கு இறக்கை முளைத்ததாக உணர்கிறார். சுவாசத் திணறலின் போது தனிமையே தானே தன்னிடமிருந்து விலகி பெரும் சுவராய்த் தன்னையே நெருக்குவதாகவும் உணர்கிறார்.

தான், பெண் மற்றுமுள்ள எதிர்படும் பெண்கள் அவர்களின் துக்கங்கள், வெறுமைகள் இவரின் கவிதைகளில் பதிவாகி இருந்தாலும் தோழிகள் ஒரு கட்டத்தில் மீண்டும் இவரைத் தனிமையில் விட்டுவிட்டுச் சென்று விடுவதாகவும் பதிவு செய்துள்ளார். நட்புக்கு தொடக்கமாக ஒரு முறுவல் அல்லது ஒரு குழந்தை அல்லது ஒரு மழை அல்லது இல்லாது போன ஏதாவது ஒரு பொருள் கடனாக யாசித்தல்கூட தொடக்கமாக இருக்கலாமே என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

டப்பாக்களில்
அரிசியும், பருப்பும், மிளகாயும் புளியும்
.................................................................................... (பக்கம் 12)

சுகந்தியின் நாட்கள் சில காணமல் போய், மீண்டும் சுகந்தி இவ்வுலகிற்கு வரும் சமயம் பலவும் மனதிலிருந்த நழுவி வெளியேறிவிடுகின்றன. அவற்றை மீட்டெடுக்க பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டி வருகிறது. இது சார்ந்த சிலவரிகள்.

என் குழந்தையின்
தொப்புள் கொடியை
அறுத்தது யார்? (பக்கம் 15)

எங்களூர் நதி
எங்கே போய்க் கொண்டிருக்கிறது? (பக்கம் 7)

சுகந்தியின் கவிதைகளில் மாதவிடாய்க் காலத் தனிமையும், பிள்ளைப் பேறு காலத் தனிமையும் கூட அவசர அவசரமான ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கின்றன. தனது வெளி விஸ்தாரப் படுவதாகவும், அதே சமயம் வலிகள் நிறைந்தவைகளாகவும் ஆகி விடுகின்றன.

பெண்ணே உனக்கென்று
தனியிடம் உருவானது (பக்கம் 10)

சுகந்தியின் கவிதைகளில் பிரசவ அறைகளும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தனி அறைகளாகப் பதிவாகின்றன. அதில் பக்கத்துப் படுக்கைக்காரி, நர்ஸ், தனக்கு முன்னால் இருப்பவள் என ஒரு பெண்கள் கூட்டத்தை உள்ளடக்கியதாக சற்றே ஆசுவாசம் கொள்ள வைக்கிறது.

மெல்ல வந்து கொண்டு
இருந்தது வலி (பக்கம் 25)

"அறை' தலைப்பிட்ட மற்றொரு கவிதையும் தனிமையான அறையைச் சொன்னாலும், அது பாதுகாப்பாக இருக்கிறது என நேர்மறையில் ஆரம்பித்து எதிர்மறையில் முடிகிறது சுகந்தியின் கவிதையில். இது போன்ற எதிரெதிர் நிலைகளட சில கவிதைகளில் பதிவாகி உள்ளன. (பக் 108)

பேச்சு வழக்கில் இரு கவிதைகள பதிவாகி உள்ளன. (பக்109) அவைகள் வேறு தளங்களில் இயங்கும் கவிதைகளாகவும், அது போன்ற வேறு கவிதைகளை காணக் கிடைக்காமலும் இருக்கின்றன.

மன பிறழ்வு, பிறழ்வின்மை என இரு நிலைகளில் தொடர்ந்து வாழ்ந்து வந்தவர் சுகந்தி என்ற போதிலும் அதற்கான கவிதைகள் பதிவுகள் கிடைக்கப் பெற்ற போதிலும் கவிதை வரிகள் சரியான பாதையிலும், அடுத்தடுத்த வரிகளைச் சென்றடைந்தும் தேர்ந்தெடுத்த முடிவை நோக்கிப் பயணம் செய்தும் நிறைவடைகிறது. உதிரிவரிகளாகப் பிறந்து பின் செப்பனிடப்படுகின்றன கவிதைகள்.

அன்பையும், தன்னைப் புரிந்து கொள்ளும் நட்பையும் தேடி அலைகின்றன கவிதைகள். பெண் என்ற நிலை பரவலாக எல்லா கவிதைகளிலும் பதிவாக்கப்படுகிறது. மொத்தக் கவிதைகளையும் படிக்க நேர்ந்தால் அவரின் வரிகளின் பதிவின் காலம் நமக்குள் காணக் கிடைக்கும். உதிரிவரிகளுடனும், எழுத்துக்கள் அப்படி அப்படியேவாகவும் குறிப்புகளோடு பார்க்க ஆவலாயிருக்கிறேன்.

குறிப்பு : கவிதைகள் "மீண்டெழுதலின் ரகசியம்" தமிழினி பதிப்பாக 2003ல் வந்த தொகுப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.