 |
சுகந்தி சுப்பிரமணியம் கவிதைகள்
உயர்ந்த ஒன்றாகி
உயர்ந்த மலையொன்றுடன்
பரபரத்த மனசொன்று
முட்டி மோதி வீழ்கிறது
உயர்ந்த மலையொன்று
மனமாகிறது இங்கே
உயர்ந்த எண்ணங்களோடு
போட்டியிடுகின்றன எதிர்கொள்பவை.
சொல்லத்தான் வேண்டும்
நீங்கள் இருப்பதை.
விஜயம் என்னவென்றால்
மனதுக்கு சொல்லி முடியாத
அலைச்சல்.
எப்போதும் துணை புரிய
நானிருக்கிறேன் என்றது ஒளிவட்டம்
எதுவும் இங்கே
அடையாளங்களோடு
சொல்லப்படுகின்றது.
நீ யார் உனக்கு என்ன
நீ எங்கே
எல்லாம் விசாரித்த பின்
வசதியாய் மனதில் நிற்க
ஒரு வேலையுடன் வருகின்றாய் நீ
எதிர்கொள்ளும் விஜேசங்களில்
ஞாபகங்களுடன் விளையாடும்
உறவுகள்.
உயர்ந்த ஒன்றாகி
நிற்கிறாய் நீ.
*
ஒரு மணிநேரம்
இன்னும்
பாதுகாக்கப்படுகிறாய் நீ
அவசரமில்லாது மிக மௌன கணங்களாய்
உருவெடுத்து கலைக்கிறது.
சின்னக் குழந்தையின்
உயர எழும்பும் அழுகையாய்
என்னைச் சிதறடிக்கிறாய் நீ.
வானிலிருந்து கொட்டும் மழை
சிறிய கைகளில் வழிந்து
தரையடையும் கணநேர ஓசையால்
உன் சிரிப்பு தடைபடுகிறது
இன்னும்
ஒரு மணி நேரத்தில்
நீ கலைக்கப்படுவாய் என
எச்சரிக்கப்படுகிறாய்.
மௌனப் புன்னகையோடு
எதிர் கொள்கிறாய்
மொழியும், மதமும், இனமும்,
அரசியலும், சினிமாவும்,
பத்திகைகளும்
உன்னைப் பந்தாடுகையில்
சிலிர்த்துப் போகிறாய் ஏன்?
சலனங்களோடே மௌனமாய்
போராடுகிறாய்.
குருவியின் கீச்சுக் குரலில்
சிநேகம் தெரிய
சிரிக்கிறது குழந்தை.
குழந்தை முகம் பார்த்து
கண்ணீர் வழியும் வரை
சிரிக்கின்றாய்
இன்னும் ஒரு மணிநேரத்தில்
கலைக்கப்படலாம் நீ.
*
எதிர்ப்பு
எதிர்ப்பதே வேலையாகிப் போன
உனக்கு எதிராய்
எனக்கு எதிராய்
அவனுக்கு, அவளுக்கு,
அவர்களுக்கு, இவர்களுக்கு,
அவைகளுக்கு, இவைகளுக்கு
எதிராய்
இந்த சமூகம்.
யாரது
நாம்தான்
என்னவாம்
ஒன்றுமில்லை
எதிர்ப்பது மட்டும்தான்
நமது செயலாகிறது.
*
எதைச் சார்ந்து?
எதைச் சார்ந்து இருப்பது
அல்லது
எப்போது யாரைச் சார்ந்து இருப்பது?
திருமணமாகும்வரை பெற்றோரும்.
ஆனபின் கணவனும் பாதுகாக்க
இடையில் இடையில்
மூக்கை நுழைக்கும் சமூகத்திற்கு
சொரணையே இல்லை.
என்மேல் ஆவியிருப்பதாக
எல்லோரும் நம்பினார்கள்.
ஏன் நீயும்தான்.
எனக்கு இரண்டு யோசனை
இருந்தாலும்
பாட்டியுடன் துதிக்கையாட்டும்
யானை பார்க்க கோவிலுக்கு சென்றேன்.
அது
தன் கம்பீரத்தை இழந்து
பத்துக் காசுக்காய் குனிந்தது.
என் கணவரோடு கவிதைப்பட்டறை
சென்றேன்.
இலக்கியமும், மார்க்சீயமும்
என் காதுகளை சுத்தப்படுத்தியது.
எனது தோழிகள்
என்னை விரோதியாக்கினர்.
தோழர்களோ பத்தடி தள்ளிநின்று
பேசினர்.
எல்லாவற்றுக்கும் மேலாய்
எனது தனிமை என்வீட்டில்
எனைச் சார்ந்து இருக்கிறது
........................................................
*
கட்டுப்பாடுகளோடு காலம் கடத்த
எனக்கு முடியாது போயிற்று
பெண்விடுதலையைப் பேசி
அதன் முழு அர்த்தமும்
தெரியாது போயிற்று.
தெரிந்தவரைக்கும்
எனக்கு உபயோகமில்லை.
நீ சொல்லு எனக் கேட்டேன்
அவளிடம்.
எதிர்ப்பது என்றாள்.
எதை? யாரை?
சமூகத்தை, ஆண்களை என்றாள்.
*
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
நிற்காமல்.
நீ எனைத் துரத்துகிறாய்.
விழிகளுக்கு அப்பால்
ஓடுகிறேன்.
ஓடிக் களைத்தபின்,
நான் அடைந்த தூரம்
எனக்கு திருப்தி தரவில்லை.
கடமைகள் அழைத்தபோதும்
நிராகரித்தேன்,
ஆசைகள்
மனதைத் தொட
நிராசைகள் வெளியைத் தொட
என்னில்
வெறுமை சூழ்கிறது.
மீண்டும் ஓடுகிறேன்
எனக்குள் நானே
எல்லாம் முடிந்து நானே
மீதமிருக்கையில்
என்னை நான்
வெளி உலகுக்கு கொடுத்தாயிற்று.
கொஞ்சம் மனசு மிச்சமிருந்தது.
அதையும் விடாது பிடுங்கியது
சமூகம்.
*
நுழைவாயிலுக்கு
சென்று திரும்பிவிட்டேன்.
வந்த பின்னர் இன்னும்
மரணத்தைப் பற்றின ஆசைதான்.
ஆனால் என் குழந்தைகளின்
கண்ணீரில் மனது ஊஞ்சலாடுகிறது.
எனக்கும் சூரியனுக்கும்
மரணம் பற்றின
அச்சம் நீங்கிவிடுகிறது.
எல்லோரும் ரிஷிகளாகிறார்கள்.
மௌனம் எப்போதும்
என்னைச் சிறையில்
அடைக்கிறது.
மரணம் ஒரு பெரிய விசயமல்ல.
உயிரின் ஆசையில்
மனத்திற்குள் சலசலப்பு
பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும்
கடிகாரத்தைப் போலவே
மனமும் மரணமும் ...
பரிசுகளும் பாராட்டுகளும்
ஆறுதல்படுத்திக்கொண்டே
இருக்கின்றன.
ஆனால்
நானும் என் உடலும்
மௌனமாய்த் தொங்குகிறோம்,
- தூங்குகிறோம்/ மரணத்தை
நீக்கிச் செல்லும்
உதயசூரியன் வேதனையைத்
தூண்டிவிடுகிறது.
மூளை இறந்தபடி வாழ்கிறேன்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|