Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே 2009

சுகந்தி சுப்பிரமணியம் - ஓர் அஞ்சலி
கலாப்ரியா

என்ன விதமான வாழ்க்கை வாழுகிறேன் என்று வெட்கமாக இருந்தது, சுகந்தி இறந்து போன செய்தி இன்றுதான் தெரிந்ததும். மு.கு.ஜெகன்னாத ராஜா இறந்து போன செய்தியும் மிக மிக தாமதமாகவே தெரிந்தது. உண்மையில், அவர் இறந்து ஒன்றிரண்டு தினங்கள் ஆகியிருந்த போது, ராஜபாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். அவர் வீட்டின் தெரு முனையில் ஒரு பிரஸ் இருக்கும் அது எப்போதும் கண்ணில் படும். உடனேயே அவர் நினைவு வரும்.அன்று, கணப்பித்தம் க்ஷணப் பித்தம் மாதிரி ராஜாவைப் பார்த்து விட்டு வருவோமோ என்று தீவிரமாகத் தோன்றியது. வாயிலிருந்து கெட்ட வாசனை வீசி, வேண்டாண்டா என்று தடுத்து விட்டது. அன்று ஜகன்னாத ராஜா உயிருடேனேயே இல்லை என்கிற விஷயம் தெரியவந்த போது, கணநேரம் இருள் கவ்வி ஒரு வகை பயப் பந்து வயிற்றில் சுழன்று மறைந்தது. அருமையான மனுஷர். பல நல்ல சாதனைகளைச் செய்திருக்கிறார். அவருடன் 25 வருடங்களுக்கு முன் டில்லி சென்றது மறக்க முடியாத அனுபவம். ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவில் அவரும் சிட்டியும்தான் என்னை உறுப்பினர் களாகச் சேர்த்தார்கள். அந்தப் பயணத்தின் போதுதான் சாரு எனக்கு அறிமுகமானார். அந்த சந்திப்பை வைத்து ஒரு கதை கூட கணையாழியில் எழுதி இருக்கிறார்.

சுகந்தியின் கணையாழிக் கவிதைகளின் பிரியமான வாசகன் நான். ஜெயமோகன் அவரது வாழ்க்கை பற்றியும் சுப்ரபாரதி மணியன் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களது நெருக்கத்தின் காரணமாக சற்று அதிகமாகவும் எழுதியிருக்கிற மாதிரி தோன்றுகிறது. நானும் மரணம் வரை சென்று வந்தவன் என்பதால், மாத்திரைகளின் துணையோடு வாழ்பவ னென்பதால் சுகந்தியை 95-ல் சந்தித்த போது ஒரு இனம் புரியாத ஒட்டுதல் ஏற்பட்டது. சுகந்தியும், என் மனைவி, குழந்தைகளும், திலகவதியும் அன்று ரொம்ப அந்நியோன்மாய் பேசிக் கொண்டு இருந்தார்கள். நான் சுகந்தியுடன் நிறையப் பேச நினைத்தவன் அந்த நெருக்கத்தின் காரணமாக, பேசாமலி ருந்தேன், என் மனைவி சற்றுப் பேச்சை நிறுத்திய சமயம் ஒரு திடீர் மௌனம் சூழ்ந்தது. சுகந்தி கேட்டார். "சார் என்ன பேசவே மாட்டேங்கிறேங்க". நான் அப்போதும் பேசவில்லை. சிரிக்க மட்டும் செய்தேன். அவருடைய கவிதைகளில் பெண் வாழ்வு சரியாகவே பிரக்ஞை பூர்வமாகவே சொல்லப் பட்டிருக்கிறது. சிலர் சொல்கிற மாதிரி பிறழ்வு பூர்வமான தில்லை. அவருடைய கவிதைத் தலைப்புகள் முக்கியமானவை. (மீண்டெழுதலின் ரகசியம்) அவரைப் பற்றி தெரிந்திருந்தாலும், அவருடைய குழந்தைகளின் முகங்களிலிருந்து அவர்கள் வாழ்க்கையை உணர முடிந்தாலும், (மணியன் முகத்திலிருந்து இதைக் கண்டுணர முடியாது, அவர் இன்னொரு அற்புதப் பிறவி.) அதன் பாதிப்பில் சுகந்தியின் மனோநிலை இருந்தி ருந்தாலும், அவருடைய எழுத்து சரியான தளத்திற்கு வந்து விடுகிறது. எனக்கு அவர் கவிதை வரிகளில் ஞாபகத்தில் அதிகமாய் இருப்பது.


தோல்விகள் தொடர்கையில் நான் என்னுடனே
நட்புக் கொண்டே...

இதன் சாத்தியம் எனக்கு என்றுமே வசப் பட்டதில்லை. என்றாலும்கூட இதில் ஒரு வசீகரமும், நம்பிக்கையும் தென்படுவது தற்செயலல்ல. அவருக்கு முந்திய பெண் கவிஞர்களான மீனாட்சி, திரிசடை, இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு 90களின் பெண் கவிதைகளுக்கு ஒரு நல்ல முன்னு தாரணமாய் அமைந்தவை சுகந்தியின் கவிதைகள். சுகந்தியின் நீட்சியாக பல கவிதைகள் வெளிவந்துள்ளன.

எனக்கு கானல் நீர் படத்தில் பானுமதி பாடுகிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்
இதில் வளர்ந்தது சமுதாயம்-இங்கு
வந்ததின் பின்னே கேள்வியிலேயே
வாழ்வதுதான் நியாயம்.

நன்றி : www.andhimazhai.com


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com