Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே - ஜூலை 2008

வடுவேட்டை (பொ.செந்திலரசு / கவிதைகள்)
தமிழ்ச்செல்வன்

"இறக்குமதியாகும் இசங்களின் நவீனம் உடுத்தி இனத்தில் முகம் காட்டும் எழுத்தின் வரையறைகள் எக்காலத்திற்கும் ஏற்பான கலைக்கோட்பாடு" என்பது என் எண்ணம். இந்த எண்ணத்தின் வெளிப்பாடாய் பொ, செந்திலரசுவின் "வடுவேட்டை" தொகுப்பு வந்திருக்கிறது.

இவரின் எழுத்து, ஜன 2007 "நடவு" சிற்றிதழின் முதல் கவிதையாக... இத்தொகுப்பின் 18வது கவிதையாகி இருக்கும் "சாமிக்குதிரை" மூலம் எனக்கு அறிமுகமானது.

காற்றைக் கிழிக்கும்
கனைப்புகளினூடே
காது நிறைந்த
போர்க்கள சப்தங்கள்...
ராஜிய வெற்றிகளை...
அசைபோட்டு பின்னாளில்...
தேசிங்குராசன் கனவுகளோடு
தினம் தெருவோரம் சுவரொட்டித் தின்கிறது...
எங்களூர் சாமிக்குதிரை.

என முடியும் இக்கவிதை எனக்குள் வந்து என்னைத் தின்றது அரேபிய வணிகம் வழி வந்து ஈழம் புகுந்து கங்கையும் கடாரமும் கொண்ட ஒரு குதிரை. காவிரியில் தாகத்திற்கு குனிந்தபோது கன்னட அரசியல்வாதிகளிடம் அடி வாங்கியதாய் இனத்தின் கதைச் சொல்கிறது செய்திகள் மேயும் என் மனக் குதிரை. கடிவாளம் கழற்றப்பட்ட மகிழ்ச்சியில் எதிர்திசை திரும்பி இன்னொரு கதை சொல்லும் இக்கவிதை உள்ள தொகுப்பு என்ற முன் முடிவுகளோடு வடுவேட்டைக்கான வலி வாசக அனுபவமாகிறது.

இத்தொகுப்பில் உள்ள எழுத்தின் மையம், சில இசங்கள் அல்லது இதழ்களின் கோட்பாடாகப் பார்க்க முடியவில்லை. வன்மம், வலி, வடு... படைப்பாளியின் வழக்குரைஞர் தொழிலோடு இணைந்த வாழ்வின் பிரதி பிம்பமாவதால் இயல்பாகிறது எழுத்து.

"கலை இலக்கிய விமர்சகர்" இந்திரன் தேர்வு என்ற பதிவுடன் ஜனவரி 2008 "உயிர் எழுத்து" இதழில் வந்த "வெளிப்படுத்தலின் ரகசிய"மான கவிதை

குரோதம் பிணைந்த சங்கிலியில்
குரைத்துக் கொண்டிருக்கிறது
நம் நட்பு குற்றச்சாட்டின் கோப்பை வழிய...

இத் தொகுப்பின் முதல் எழுத்தைத் தொட்டவுடன் 2004_ல் வெளிவந்த இவரின் "உணர்வு நதி" தொகுப்பிற்குமான இடைவெளி கடக்க முடியாத பாதையாகிறது. இங்கே "நீல் ஆம்ஸ்ட்ராங்" நிலவில் கால்பதிப்பதற்கு முன் சொன்ன கவித்துவமான வரிகள் நினைவுக்கு வருகிறது. "என்னைப் பொறுத்தவரை இது எனது அடுத்த அடி. மனித இனத்திற்கோ மிகப் பெரிய தாவல்" என்பது போல் "உணர்வு நதி" என்ற பழைய வடிவங்களை உதிர்த்து விட்டிருக்கிறார். இவரின் முந்தைய தொகுப்பான உணர்வு நதியின் உலகம் வேறானது. வடு வேட்டையின் வார்த்தையும், வரிகளும் வன்மம், வலி, குரோதம், எதிர்படும் மனிதன் இயல்பு, மனித முரண் என அகவயமாய் அதிகம் உலவுகிறது.

புத்தகம் புகுந்து புத்தகம் தொகுத்துவிடும் எழுத்தாளர்களின் நடுவில் தன் இருப்பிடத்தையும், எதிர்படும் மனிதர்களையும் எழுத்தாக்கி விடுகிறார். சந்தர்ப்பம் வழங்காமலேயே தீர்ப்புகள் வனைந்து முனை முறிகிறது எனும் நட்பைப் பற்றிய கவிதையில் கொலை வாளாய் நீதியரசரின் எழுதுகோல் காட்சியாகிறது. "நீதிமன்றக் குறிப்பு"களில்

குற்றவாளியின் கண்களில்
வன்முறை நிகழ்த்தும்
எதிரே மாட்டப்பட்ட
மகாத்மாவின் புன்னகை... என மோனலிசாவின் புன்னகைக்கு மட்டுமல்ல. மகாத்மாவின் புன்னகைக்கும் பன்முகப் பார்வை உண்டு என்பதை ஆவணப்படுத்துகிறார்.

அடுத்து நீதிமன்ற வளாகம் நுழைந்த "பேனா வியாபாரி" அடுத்தடுத்த இடங்களில் நீதிமன்றம் வந்து போவது இவர் எழுத்து, படித்த புத்தகங்களின் பாதிப்பு இல்லை. இவர் பார்வைகளின் பதிவு எனச் சொல்வதால் இவை தனக்கான எழுத்து என்பதற்குச் சாட்சியாகிறது.

நவீன கவிதைக்கான செறிவு சிலவிடங்களில் இருண்மையாகிவிடுகின்ற சிக்கலில் சில பல வரிகளில் சிக்கிக் கொண்டாலும்,

சக்கரத்தில் மிதிபடும்
சாலைப் பள்ளத்து நீரென
எனது சாயம் சிதறும்...

என வரும் காட்சிப்படுத்தல் நிழல் இடமாய் மனதில் விழுந்து,

வெறுமனே கண்கள் உருட்டி
நாக்கு நீட்டி
வைக்கோல் அடைத்து
எங்கும் நகரா
சோளக்கொல்லை பொம்மையென
என் அதிகாரங்கள்

என நவீன இண்மைக்கு நடுவே கிராமத்து அழகியல் சொல்லும் இது போன்ற எழுத்துக்களை இன்னும் இணைத்திருக்க வேண்டும்.

அதிகம் பேசாத அறிமுகமற்ற மனிதர்கள் எளிதாக எழுத்தாகிவிடுகிறது இவருக்கு. சிதறிய மைத்துளிகளென மனிதர்கள் கூடும் இடங்களில் எழுத்தின் வாசனையை அழைக்கும் பேனா வியாபாரி... பெருந்திரள் கூட்டத்திலிருந்து விலகி நமக்கு அறிமுகம் ஆகும் ஆளுமையுடன் வந்து நண்பனாக்கி விடுவதில் ஏற்புடை எழுத்தாகிவிடுகிறது.

இன்னொரு கவிதையில் பேருந்தில் பயணிக்கும் சகபயணி அதுவும் "பிரம்மப் பைத்திய"மாக...

அவனுக்கும் எனக்கும்
எப்போதாவது நிகழ்ந்துவிடுகிறது
பேருந்து பயணம்
அவன் தனக்குதானே பேசி
வர்ணங்கள் பிசைந்த
உலகங்கள் வனைகிறான்...

நிமிடங்களில் நம்முடன் நிற்பவர்களைச் சலனப்படுத்தும் பிரம்மபைத்தியமாய் மாறத்தானே எழுதியும் இயங்கியும் வருவோம் என்ற அதிர்வைத் தந்து தடுமாறிப்போகிறது இந்தப் பயணப்பாதை.

ஒரு தொகுப்பில் ஐந்து கவிதைகள் நம்மைக் கவர்ந்து விட்டலே அது தவிர்க்க முடியாத தொகுப்பாகிறது. இத்தொகுப்பில் சுற்றித்திரியும் ஆறு, அவரவர் அறைகள் ஆகும் அடுக்குமாடி வீடு, ஒற்றைக் கால் பாய்ச்சலில் விரையும் தட்டச்சுப்புரவி என பத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஆகச் சிறந்த பதிவுகள் ஆகின்றன. இத்தொகுப்பின் எல்லா கவிதைகளும் ஏதேனும் ஒரு இதழில் பதிவு செய்யப்பட்டு மொத்தமுள்ள 53 கவிதைகள் 27 இதழ்களில் வெளிவந்துள்ளது. அதுவும் கணையாழி, காலச்சுவடு, உயிர்எழுத்து, நவீன விருட்சம் என எழுத்து இயக்கமான இதழ்களாய் இருக்கும்போது, விமர்சனம் வேண்டாததாகிவிடுகிறது. மேலும் பிரக்கைஞ, பிரத்யேகம், நிர்தாட்சன்யம், குரூரம் என வந்து போகும் வடமொழி மயக்கம் அந்த எழுத்து பதிவான இதழ்களில் வாடையாகிவிடுகிறது.

இத்தொகுப்பு, தன்னிடம் காசிருக்கிறது என்பதற்காகவோ, கவிதை இருக்கிறது என்பதற்காகவோ வெளிவராமல் அடுத்த கட்ட நகர்வு, நவீன கவிதைக்கான பதிவு என எழுத்தின் பரிணாமத்தை வெளிப்படுத்தியிருப்பதால் "வடு வேட்டை" பொ. செந்திலரசுவை அடையாளப்படுத்தும் தழும்பாகி விடுகிறது.

இறுதி முடிவாய், கவிதாசரண் இதழில் "சு.வில்வரத்தினம்" பற்றிய "வீ.அரசு" அவர்களின் கட்டுரையில் "இவர் எழுத்தில் ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரை நீக்கிவிடலாம் என்ற முயற்சி தோல்வியில் முடிகிறது" எனக் குறிப்பிடுகிறார். விமர்சகனின் இந்த தோல்விதான் படைப்பாளியின் வெற்றி என்ற பார்வை உள்வாங்கிக் கொண்டால் பொ.செந்திலரசு கவனம் பெற்ற கவிஞராகிவிடுவார் என்ற நம்பிக்கையைத் தந்து மரியாதைக்குரிய முகவடுவாகிறது இந்த வடுவேட்டை

வடுவேட்டை: கவிதைகள்
நூலாசிரியர் : பொ.செந்திலரசு
பக்கங்கள் : 64 விலை : ரூ. 35.
வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,
41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர்,
சென்னை -600 011.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com