Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே - ஜூலை 2008

பகுதிநேரக்கடவுளின் நாட்குறிப்பேடு: அமிர்தம் சூர்யா
(சி. கனகசபாபதி நினைவுப்பரிசு பெற்ற நூல்)
பொன். குமார்


பொதுவாக கவிதை என்றழைக்கப்பட்டாலும் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதை என பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் சிறந்து விளங்குபவர் உண்டு. நவீனத்தில் சிறந்து விளங்குபவர்களில் ஒருவர் அமிர்தம் சூர்யா. அமிர்தம் சிற்றிதழை நடத்தியவர். "உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை" என்னும் கவிதைத் தொகுதியையும் "முக்கோணத்தின் நாலாவது பக்கம்" என்னும் கட்டுரை தொகுதியையும் தந்தவர். தற்போது அளித்திருக்கும் தொகுதி "பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு" இரண்டு தொகுப்புக்குமான இடைவெளி ஆறு ஆண்டுகள்.

உறங்கும்
வெற்றிடத்தை எழுப்பி விட
அறிவு தானமாய்
புத்தக மனிதர்களையும்
மனித புத்தங்களையும் சேமித்து
தன்னை நிரப்பிக் கொண்டே
கொடுத்தும்
நெருக்கடி நேரங்களில் ஞாபக சக்தியால்
துழாவி துழாவி எடுத்துக் கொள்ளவும்
முடிந்த நம் கபால உண்டியலை
அந்த மயான சிறுவன் தன் சகாக்களோடு
கால்பந்தாய் எட்டி உதைத்து
விளையாடுவது எவ்வளவு
அழகு பாரேன்

என்னும் முதல் கவிதையே மூளையை கிளர்ச்சியுறச் செய்கிறது. இருக்கும் போது அறிவு ஜீவியாய் இருந்தாலும் இறந்தபின் மண்டையோடு ஒரு கால்பந்தாக மாறிவிடுவதை எண்ணும் போது மனம் ஒரு வெறுமையான நிலையையே அடைகிறது. புத்தக மனிதர்கள், மனித புத்தகங்கள் என உவமை, உருவகம் இரண்டையும் கையாண்டுள்ளார்.

ஆசுவாசப்படுத்தலில்... தேனீர், தியானமும் நிழல் நாட்குறிப்பேடும்... என்னும் தலைப்பில் தேனீர், தியானம், நிழல், நாட்குறிப்பேடு என நான்கு கவிதைகள் நான்கும் நான்கு விதமாய் கட்டமைக்கப்பட்டுள்ளது. பொருளில் வேறுபட்டிருந்தாலும் நான்கும் ஆசுவாசப்படுத்தலில் ஒன்றுபட்டுள்ளது.

"அன்று நீ நகரமான தினம்" ஒரு வித்தியாசமான கவிதை. கவனிப்பதற்குரிய கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு மாடவீதிகளை விவரித்து வீதிகள் கூடும் மயானத்தில்
திசைவீதிகள் ஆரங்களாய் மாற
சிவ கோபுரத்தை அச்சாணியாய் செருகி
நகர சக்கரத்தை கழற்றிவிடும்
கரங்களில் தெரியும்
பசியின் உக்கிரம்
அதன் ருசியை உணர்ந்த
முதல் தருணம் நினைவிருக்கிறதா
அன்று தான்
நீ நகரமான தினம்
என்கிறார். ஒரு நகரம் உருவாவதற்கு முதல் தகுதி பசி என பகடி செய்கிறார். நகரம் ஒரு புறம் நாகரீகத்தின் வளர்ச்சி எனினும் மறுபுறம் பிச்சைக்காரர்களின் புகலிடமாகவும் பசியின் பிறப்பிடமாகவும் உள்ளது. இதுவொரு யுத்தியில் எழுதப்பட்டுள்ளது.

துக்க விசாரிப்பு நம் வழக்கங்களில் ஒன்று. இறப்பு வீடுகளில் கட்டாயம் நடைபெறும் துக்க வீடுகளில் ஒப்பாரி சோகத்தை வெளிப்படுத்தும். விசாரிக்க சென்றவர்களை சோகம் அப்பிக்கொள்ளும்.

ஒவ்வொருவரையும்
மரிக்காமல் பின் தொடர்கிறது...
ஒப்பாரியின் கடைசி வரி
என்பது விசாரிக்கச் சென்றவர்களுக்கு உண்மை எனத் தெரியும். நன்கு உணர்த்தியுள்ளார். ஒப்பாரியின் கடைசி வரி உள்ளத்தில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். இதன் தலைப்பு... மக்கா எம்பூட்டு ஆதி சொத்து அம்போன்னு கொள்ளப் போதே என்பதாகும். இது ஒப்பாரியின் ஒரு வரியே. கவிஞர் எங்கோ கேட்டதை இங்கே பதிவித்துள்ளார்.

தன் மரிப்புக்கு தயாராகி வந்தவன்
நதியில் இறங்கினான்
எனத் தொடங்கும் "காத்திருக்கும் நதி" மரிக்க விரும்புவர்களை மறுத்து திருப்புகிறது. சடலமாக விரும்புவர்களை விரட்ட என முடித்து மனிதர்களை வாழ வலியுறுத்துகிறார். சடலமாக விரும்புகிறவர்களை வீடும் விரும்பாது. காடும் விரும்பாது.

சுயவசியம் தலைப்பில் தொடக்கம் உள்பட பத்து கவிதைகள்.

பழம் அரிந்த கத்தியின்
கூர்விளிம்பில்
வாசத்தை நக்கியபடி ஊர்கிறது
எறும்புகள்
என்னும் சிறுகவிதை நுட்பமானது. எறும்புகள் ஆபத்தறியாது வாழ்தலுக்கான அவசியத்தை உணர்த்துகிறது.

உண்ணி பற்றி ஒரு குறும்படம் ஒரு குறும்படத்தைக் காட்சிப் படுத்தியதாயிருந்தது. நவீன வரைபடம் கவிதையும் காட்சியாய் விரிந்தாலும் மனத்தில் பல எண்ண அலைகளை ஏற்படுத்திச் செல்கிறது.

காட்சிகளை அடுக்கியடுக்கி ஒரு கவிதையாக்கித் தந்துள்ளார். வரிகள் பலவாயினும் வாக்கியம் ஒன்றே. எல்லோருக்குமாய் சூரியன் படிக்கின்றான் என்பது குறிப்பிடத்தக்கது. வண்ணத்துப்பூச்சி தொடர்பான மற்றொரு கவிதை "வண்ணத்துப்பூச்சி வேட்டை"

ஒன்று மேயில்லை
எதனுடைய குறுக்கு வெட்டு தோற்றத்திலும்
அதனின் வலியைத் தவிர
என முடியும் "ஒரு மரத்தின் குறுக்கு வெட்டும் இரு குரல்களும்" மூலம் மரம் வெட்டுதல் கூடாது என மறைமுகமாய் வெளிப்படுத்தியுள்ளார். "இருத்தல் குறித்தான அரங்கில்" முதல் கவிதையும் மரம் குறித்தே பேசுகிறது.

உதிர்ந்த பழங்களைப் பெருக்கி
வீசுவாள் கூன் கிழவி
வீட்டுமனையாகிப் போன வயல்வெளியெங்கும்
மர பிரசவங்கள் மனதில் எண்ணி
என்கிறார். ஒரு கவலை தெரிகிறது. ஓர் அக்கறை வெளிப்படுத்துகிறது.

வீட்டைவிட்டு விரட்டப்பட்ட
தனது அரவாணி சிற்றப்பாவை
சின்னம்மா என்று ஒரு திருவிழாவில்
அறிமுகப்படுத்தி அவளிடம்
ஆசி வாங்கியவனின்
நண்பன் நான்
என்கிறது இரண்டாம் கவிதை. அரவாணிகளை சமூகம் அங்கீகரிக்கத் தொடங்கி விட்டது என அறியச் செய்கிறது அங்கீகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.

கி.ராஜநாராயணன், தமிழ்நாடன், சாருநிவேதா, வா.மு.கோமு, மு.ஹரி கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுத்துக்களில் ஆபாசத்தை பயன்படுத்தி சமுதாயப் பிரச்சனைகளை பேசினர். ஒரு சில எழுத்துக்கள் ஆபாசத்தை தூண்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அத்தகைய எழுத்தாளரில் ஒருவர் சரோஜாதேவி. எவரென தெரியாது. மூன்று தலைமுறையாய் எழுதி வருபவர்.

அப்பாவிற்கு பிறகு நான் எனக்கு பின் மகன்
இன்னும் தலைமுறை தாண்டியும் நரைக்காது
ஆபாச எழுத்தை வாசிக்கிற போதெல்லாம்
தன் ஆயுளைக் கூட்டிக்கொள்ளும் சரோஜாதேவி
என கவிஞர் ஆபாச எழுத்தாளர் அடையாளப்படுத்தியுள்ளார். இதுவொரு வகையில் எதிர்ப்பே.

ஆட்டச் சூழல், உள்ளடக்கம், வடிவமைப்பு இரண்டிலுமே மாறுபட்டுள்ள உரைநடையாய்த் தொடங்குகிறது. கண்ணாமூச்சி எங்கே / காட்டுக் அந்தாண்ட என விளையாட்டுப் பாடலை வைத்து ஆண், பெண் ஆலிங்க ஆட்டத்தைக் கூறியுள்ளார்.

"பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு" என்னும் இத்தொகுப்பில் முப்பத்து ஏழு கவிதைகள். சில கவிதைகளுக்கு பல கிளைக் கவிதைகள். சில எதார்த்தத் தொனியில் இருந்தாலும் சில இருண்மையாகவே உள்ளன. ஒரு நவீனக் கவிஞனின் மனநிலையை பல கவிதைகளில் காண முடிகின்றது. சமூகத்தைக் காட்டும் கவிதைகளைவிட அகவுணர்வுகளை வெளிப்படுத்துபவையே அதிகம். கவிதையின் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் வித்தியாசமான முயற்சிகளை பிரயோகித்து தன்னாளுமையை வெளிப்படுத்தியதுடன் கவிதை வளர்ச்சி பெறவும் உதவியுள்ளார். தலைப்பு உள்பட ஒவ்வொன்றிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார். சொற்களைச் சரியாகப் பிரயோகித்து கவிதைகளை சரியாக கட்டமைத்துள்ளார்.

மனக் கிளையில்
மொட்டு ஞாபகம் விரித்தால் உனை
சுற்றி சுற்றியலையும்
அதே வண்டு

என்பதில் படிமங்கள் உண்டு. இவ்வாறு தொகுப்பு நெடுக விரவியுள்ளது. குறியீடும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகானாதாலும் நெஞ்சிலிருந்து பேசவே செய்கிறது பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு. அழகாக அச்சமைத்துள்ளது அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்.

வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600011. விலை : ரூ.35.00.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com