Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே - ஜூலை 2008

உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை: ஒரு பார்வை
(சி. கனகசபாபதி நினைவுப்பரிசு பெற்ற நூல்)
பொன். குமார்


தமிழ்க் கவிதை உலகில் தனித்து இயங்கி வருபவர் கவிஞர் அம்சப்ரியா. சூரியப் பிரசவங்கள், யாராவது வருகிறார்கள் என்னும் இரு கவிதைத் தொகுப்புகளுக்கு அடுத்து மூன்றாவதாக தந்திருக்கும் தொகுப்பு உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை.

பேருந்துகளில் ஓரத்தில் இருக்கையில் அமர்ந்து பயணிப்பது ஒரு சுகம். காட்சிகளை ரசிக்கலாம். கனவு காணலாம். கவிஞர் குழந்தைகளின் கனவில் மிதக்கும் பயணம் என்னும் முதல் கவிதை மூலம் சிறுவர்களுக்காக பரிந்துரைத்துள்ளார். குழந்தைகளைக் கொண்டாடும் கவிஞராக உள்ளார். தொடர்ந்து "குழந்தைகளைச் சந்திக்காமல் திரும்பும் கற்பிப்பவர்கள்" மூலம் ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதை விட கற்றுக் கொள்வது ஆசிரியருக்கும் சிறப்பு. கவிஞர் காட்டும் "குழந்தைகளின் உலகம்" வித்தியாசமானது. இத் தலைப்பில் நான்கு சிறு கவிதைகள்,

என்றைக்கு வாய்க்கும்?
குழந்தைகளுக்கு
குழந்தைகளின் உலகம் என்னும் வினவல் சிந்தனைக்குரியது.

கவிஞரின் கவிதை உலகமே வித்தியாசமாக உள்ளது. கவிதைகளின் பாடுபொருள்கள் சமூகத்தைத் தாண்டி இயற்கையைச் சுற்றியே இயற்கையோடு பின்னிப் பிணைந்தேயுள்ளன. "செடி"யை வைத்து சித்தரித்த கவிதைகளே ஏராளம். கவிதை இரண்டில்

செடிகள் என்னுடன்
பேச ஆரம்பித்த அப்பொழுதிலிருந்து
பறவைகள் சிநேகம் கொள்ள ஆரம்பித்தன என்கிறார். இது சிந்தனைக்குரியது. செடிகள் பேசுமா? பறவைகள் சினேகம் கொள்ளுமா? மனித மனம் பொறுத்தே, இரசிப்பின் அடிப்படையிலேயே நிகழும். கவிஞர் அம்சப்ரியாவிற்கு வாய்த்துள்ள மனம் அத்தகையது. செடியினால், செடி வளர்ப்பதினால் என்ன விளைவு என கவிதை தெரிவிக்கிறது. செடி வளர்க்க வேண்டும் என்னும் ஒர் உணர்வையும் உள்ளத்துக்குள் வளரச் செய்கிறது,

கானகத்திற்குள் அலையும் மனச்சருகு மரமும் மரம் சார்ந்த காடு குறித்தும் புனையப்பட்டது. இத்தலைப்பில் 4 கவிதைகள். மூன்றாவது சிறு கவிதையில்

பிரியமான
மனதில் படிந்திருந்த
அம்மரம் வெட்டுண்டு வீழ்ந்ததைக்
கண்ணுற்ற
நள்ளிரவுக் கனவில்
என் குரல் வளையை நசுக்கத் துவங்கின
கானகத்து மரங்கள் யாவும் என்றெழுதி மரங்களின் மீதான தன் பிரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். மனிதர்களின் மனக் குரலாய் ஒலித்துள்ளது. மரம் வெட்டுதல் கூடாது என்பதை கவிஞருக்கேயுரிய பாணியில் எழுதியுள்ளதே சிறப்பு.

என்றிருக்கும் அவன் என தலைப்பிட்ட கவிதை

என்னை உதறி கொடியில்
உலரப்போட்ட முழுப்பகலில்
நான் யாரோ போல் இருப்பதாக
சொல்கிறார்கள் அவர்கள் என முடிந்தாலும் கவிஞரின் எண்ணங்கள் மண்ணைச் சுற்றியிருக்கும் உயிரினங்களை எல்லாம் கவிதைகளில் ஆங்காங்கே காட்டியுள்ளார். பெரும்பாலான இடங்களில் குறியீடுகளாக பிரயோகப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. செடி, கொடி, மரம், பறவை, விலங்கு என அதிகம் காணமுடிகிறது. கவிஞர் சிருஷ்டித்த உலகிற்குள் எளிதாய் நுழைய முடிவதில்லை.

மானொன்று
தன்னை புலியென மாற்றி
வேட்டைக்குப் புறப்பட யத்தனித்து
இயலாத வேளையில்
நரியாய் உருவகித்து
தோற்று இறுதியிலது
வெறும் மானென்று மட்டுமே
நிலைத்துப் போக
மிச்சமாயிருந்தது நெடுங்காலமாய்
அதற்கென வாய்த்திருந்த
நெடும்பசி" என்பது காலங்காலமாய் போராடும் மனிதர்கள் குறித்தே புனையப்பட்டுள்ளது. மான், புலி, நரி என விலங்குகளைக் காட்டியுள்ளார். ஆயினும் பிரியங்களில் நனையும் மனம் கவிதை நன்று. ரசிப்பதற்குரியது. காட்சிப்படுத்தலோடு கவித்துவமும் அழகியலும் வெளிப்பட்டுள்ளன.

மரணம் குறித்து பல கவிஞர்கள் பல கவிதைகள் எழுதியுள்ளனர்.

நமக்குப் பிரியமானவர்களை
சமயங்களில் அது கௌவிப்போகிறது.
வெறுப்புக்குரியவர்களுக்கு நேர்கிற சாவு
நம்மை ஒரு போதும் சலனிப்பதில்லை என மரணம் நேர்கிற இடத்தை மனமும் மாற்றமடைகிறது என பல நிலைகளை வரிசைப்படுத்திக்காட்டியுள்ளார். எனினும் தலைப்பிடப்படாத கவிதையொன்றில்

ஒருவரின் மரணம்
மௌனங்களால்
ஆசிர்வதிக்கப்படவேண்டிய
உள் தவிப்பின் எச்சம் என இரங்கலை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்று இதயப்பூர்வமாய் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் பணிக்குச் செல்வபவர்கள் கவிதையில்

அதிகாலை கடந்து
அவசரத்தை இழுத்துக்கொண்டு
விரையும் மனிதர்களுக்கு
அகப்படுவதில்லை சூரியனும் நிலவும் என இயற்கை ரசிப்பிலிருந்து எவ்வளவு விலகி விட்டார்கள். எப்படி அந்நியமாகி விட்டார்கள் என கவிஞர் விவரித்துள்ளார். வாழ்க்கை மனிதனை விரட்டுகிறது என்பது கவிஞரின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது.

வீடுகள் பற்றி கவிதை வித்தியாசமானது. பல்வேறு வீடுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்னும் தொகுப்பு மூலம் கவிஞர் க. அம்சப்ரியா எவரும் இயங்காத ஓர் உன்னத தளத்தில் இயங்கியுள்ளார் என அறிய முடிகிறது. இயற்கையோடிணைந்திருக்க வேண்டிய வாழ்வு நிலை இன்று மாறிவிட்டதே என அவருக்குள் எழுந்த அங்கலாய்ப்பின் வெளிப்பாடாகவே உள்ளன கவிதைகள். மனிதரிடம் ரசிப்புத் தன்மை குறைந்து விட்டது என ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது. இயற்கை மீதான ஓர் அக்கறையுடன் சமூகம் குறித்த பிரச்சனைகளையும் முன் வைத்துள்ளார். குறியீடுகளைக் கையாள்வதில் கைதேர்ந்தவராகவே உள்ளார் என பல கவிதைகள் சான்றாக உள்ளன.

கவிதைக்கான மொழி நடையில் இனிமையோடு எளிமையும் வெளிப்பட்டுள்ளது. வெளிப்பாட்டிலும் அவருக்கென ஒரு தனித்துவத்தை கடைப்பிடித்துள்ளார். இருவாட்சி பதிப்பகம் அழகாக அச்சமைத்தும் அருமையாக வடிவமைத்தும் உள்ளது குறிக்கத்தக்கது. கவிதையோடு கூட்டமைத்து வாசிப்பிற்குத் தூண்டுகிறது. முன்னுரை அணிந்துரையின்றி கவிதைகளை தன்னம்பிக்கையோடு களம் இறக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதுவே க. அம்சப்ரியாவை பேசச் செய்யும் புகழுடைய வைக்கும்.

உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை / க. அம்சப்ரியா
வெளியீடு: இருவாட்சி, 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர். சென்னை 11. விலை : ரூ. 35


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com