Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே - ஜூலை 2008

கண்ணாடி அறைக்குள் கார்த்திகேயன்
(தேவமகள் அறக்கட்டளைபரிசு பெற்ற நூல்)
மயூரா ரத்தினசாமி


1.

தன்னிலை விளக்கங்கள் எப்போது கவிதைகளாகின்றன? சுற்றுப்புறமும் நாமும் உரையாடும் போது உரையாடலை தாண்டி அது வாழ்வின், வாழ்தலின் அரசியலை தொட்டுச் செல்வதாகவோ விடுவிப்பதாகவோ அமைந்தால் அதை கவிதை என்று சொல்லலாமா? உரையாடலாக நின்று விட்டவை, கவிதையாகப் பரிணமித்தவை எனப் பிரித்துப் பார்ப்பது நமக்கும் கவிஞருக்கும் ஏதாவது பிரயோஜனப்படும். அ.கார்த்திகேயனின் ‘காற்றில் மிதக்கும் ஆகாயம்’ தொகுப்பின் பெரும்பகுதி தன்னிலை விளக்கக் கவிதைகளால் நிறைந்தது.

மின் விசிறியும் கவிஞரும் தனித்திருப்பதை அழகான கவிதைகளாக்கியிருக்கிறார். Òகைவிடப்பட்ட பாவனையில் / நடுப்பகல் வேளையில் / யாருமற்ற / கண்ணாடி அறையினுள் / சுற்றிச் சுழன்றவாறு / இயங்கிக் கொண்டிருக்கிறோம் / நானும் / மின் விசிறியும். அவ்வளவு சீராய் / அவ்வளவு மௌனமாய் / அவ்வளவு மென்மையாய் / அவ்வளவு வேகமாய். அவ்வளவு தனிமை உணர்வுடனுமாய்.

யாருமற்ற கண்ணாடி அறை என்பது ஆழ்ந்த பொருள்படத்தக்கது. வெளியிலிருந்த எந்நேரமும் கண்காணிப்புக்குள்ளாவது கண்ணாடி அறை. அறைக்குள் மின்விசிறி சுழன்று கொண்டேதான் இருக்க வேண்டும். நின்றால் கண்ணாடி அறைமீது யாராவது கல்லெறியலாம். கண்ணாடிச் சில்லுகள் அவன் கழுத்து நரம்பை அறுத்துப் போகலாம். எல்லோருடைய கண்காணிப்புக்கு மத்தியில் நடுப்பகல் வேளையில் தனித்திருப்பவன் வேலையற்ற இளைஞனாகவும் இருக்கலாம். இப்படி கிளை பிரித்து கிளை பிரித்து வளர்ந்து கொண்டே செல்லும் இக்கவிதையில் கார்த்திகேயனை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

‘சின்னஞ்சிறு / ஒற்றைச்சொல் / அடியோடு மாற்றிவிட்டது / இன்றைய நாளின் / நிகழ் முறையை’. ‘நாவினால் சுட்டவடு’ என்பதற்கு மேல் இது கவிதையாக மலரவில்லை. மேற்சொன்ன இரண்டு கவிதைகளுக்கும் ஒரு புள்ளியில் இணைவதை வாசகர் உணரலாம். இதைப்போலவே நெருக்கடி, நகரத்தில் பிறந்தவன், காத்திருப்பு, குறுக்கீடு, சொல்ல நினைத்தது, ஆகிய கவிதைகள் தன்னிலை விளக்காக மட்டுமே நின்று விட்டன. கனம், அமரத்துவம், மின் விசிறியும் நானும், பழுத்த இலை ஆகிய கவிதைகள் தொகுப்புக்கு பலம் கூட்டுகின்றன.

‘ஓய்வெடுக்க வீழ்ந்த / பழுத்த இலையை / கருணையின்றி / விரட்டியடித்தது / காற்று’. இத்துடன் கவிதை முடிந்து விடுகிறது. ஆனாலும் கவிஞருக்கு ஒரு சந்தேகம். ‘ஏதேனும் / காரணமிருக்கும்; என முடிக்கிறார். கடைசி இரண்டு வரிகள் கவிதையின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகின்றன. வாசகனுக்கென்று எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்கிற தவிப்பினால் ஏற்படும் இது போன்ற விபத்துகள் கவிதையை உரைநடையாக மாற்றிவிடலாம்.

2.

(I) ‘வண்ணத்துப் பூச்சி பறப்பதைப் பார், நன்றாகப் பார், பார்த்துக் கொண்டேயிரு, அவ்வளவுதான் வாழ்க்கை’ (ஞானம்)
‘அந்த ரோஜாவை எனக்கு விதிக்கப்பட்ட விநாடி வரை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பேன்’ (கவனம்)
‘முடிவில் வெற்றிடமாக்கிக் கொண்டேன் என்னை’ (சூன்யம்)
மேற்கண்ட கவிதைகளில் ‘தத்துவங்களில் திருப்தி கொள்ளும் தன்மை’ தூக்கலாக இருக்கிறது.

(II) கவிஞரைப் பற்றிய முதல் பக்க குறிப்பில் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் கருத்துரிமைப் பாதுகாப்பு முயற்சிகள் அனைத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்’ என்று காணப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட (I) & (II) இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கருத்தியல்கள். இவ்விரண்டிலும் கார்த்திகேயன் பயணிக்கிறார் என்பது விசாரணைக்குரியது. இரண்டில் ஒன்று தான் நிஜம். அல்லது ஒன்றிலிருந்து புறப்பட்டு மற்றொன்றுக்கு வந்தவராக இருக்கலாம் கார்த்திகேயன்.

3.

மனைவியின் முகத்தில் யாரோ ஒருத்தியின் சாயலைத் தேடியலையும் ஆண் மனதை தொட்டுக்காட்டும் ‘சாயல்’ தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. விபச்சாரியிடம் போகவோ, இன்னொருத்தியை ‘செட்டப்’ செய்யவோ அஞ்சும் (இந்த அச்சம் சமூக மதிப்பீடுகளால் தோற்றுவிக்கப்பட்டது) ஆண் மனசு பிறர் சாயலை மனைவியிடம் தேடுகிறது. சொற்களின் விரயம் குறித்து கவனம் கொள்ள வேண்டிய கவிதையாகவும் இதைக் கொள்ளலாம். ‘வெகுசகஜமாய் உணரும் / சந்தர்ப்பங்களில் / வேறு யாரோ மாதிரி / தோற்றமளிக்கிறாய் நீ. ஒரு வேளை / யாரோ ஒருத்தியின் முகத்தை / எதிர்பார்த்துத்தான் / உன்னிடம் நெருக்கம் காட்டுகிறேனோ?. உற்றுப் பார்க்கிறேன் / முதன் முதலாய்ப் பார்ப்பது போல் / திகில் மட்டும் பரவுகிறது என்னுள் / ஏனோ.’

முதல் நான்கு வரிகளுக்கு அப்புறம் 23 வரிகளை நீக்கிவிட்டே இக்கவிதையை கொடுத்திருக்கிறேன். இதுவே போதுமானதாக இருக்கும்போது கவிதையின் அருஞ்சொற்பொருள் போல எதற்காக நீட்டி முழக்க வேண்டும். இப்படி வார்த்தைகளை விரயமாக்கிய கவிதைகள் நீர்த்துப்போகின்றன. ‘கனம்’, ‘அமரத்துவம்’ போன்ற கச்சிதமாக அமைந்த கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கார்த்திகேயனின் எழுத்துப் பணியின் ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட தடுமாற்றமாகக்கூட இதை கொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கவிதை பற்றிய புரிதல்களை நோக்கிய சீரான பயணம் கார்த்திகேயனிடம் தென்படுவதை உணர முடிகிறது. எழுதிய ஆண்டு பற்றிய குறிப்பு கொடுத்திருந்தால் இதை இன்னும் சரியாகச் சொல்ல முடிந்திருக்கும். ‘கவிதை எழுதாத, கவிதை வாசிக்காத, கவிதை பற்றித் தெரியாத ஒருவரோடு எனக்கு நெருக்கம் உண்டாகுமா’ (முன்னுரை) என்ற கவிஞரின் சந்தேகம் (மயக்கம்) கவிதை பற்றி அறியாதவர்களை ஏளனப்படுத்துவதாக உள்ளது. யாரிடமிருந்து நாம் கவிதையின் கச்சாப்பொருளைப் பெறுகிறோமோ அவர்கள் அக்கவிதையை வாசிப்பதில்லை, புரிந்துகொள்வதில்லை என்பதால் அவர்களை தீண்டத்தகாதோர் பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ‘முடிவில் என்னை வெற்றிடமாக்கிக் கொண்டேன்’ என்று அவரே கூறுவதுபோல கார்த்திகேயன் தன்னை திறந்து வைத்துக் கொண்டு கவிதைகளைப் படைக்க வேண்டும் என்பதே விருப்பம்.

நூல் : காற்றில் மிதக்கும் ஆகாயம்
ஆசிரியர் : அ.கார்த்திகேயன்
வெளியீடு : நவநீதம் வெளியீட்டகம், 10-சி, புதுத்தெரு நெ. 2, பொன்னம்மா பேட்டை, சேலம் 636 001.
விலை : ரூ. 40


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com