Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
ஜூலை 2007

ரசித்த புத்தகம்
க. அம்சப்ரியா

கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்

கதை சொல்லிகளில் மிக தேர்ந்தவர்களாக இருப்பது அம்மாக்கள்தான். அவர்களிடம்தான் சொல்லிமுடித்த பின்பும் மறுபடியும் சொல்வதற்கென்று கதைகள் பிறந்து விடுகின்றன. அம்மாக்களிடம் இருக்கிற கதைகளில் உலகப் பெண்களின் துயரங்களெல்லாம் தேங்கிக்கிடக்கின்றன.

அடையமுடியாத பெரும் இழப்புகளையெல்லாம் ஈடுசெய்து விட்டுப் போவது இந்தக் கதைகள்தான்.

நகரம் சார்ந்து வாழ்கிற இப்போதைய இளைஞர்களுக்கு கிடைக்காத பெரும் அற்புத அனுபவங்கள் யாவும் கிராமம் சார்ந்த இளைஞர்களுக்கு குழந்தைப் பருவகாலமும், விடலைப் பருவகாலமுமாய் அமைகிறது. கிராமம் சார்ந்து படித்துவிட்டு, நகரங்களுக்கு பணியின் காரணமாக பெயர்கிறபோது அந்தக் கிராமத்து நினைவுகள் இடைவிடாமல் சலனப்படுத்துகின்றன.

உறவுகளிடம் கொண்டிருக்கிற பனிக்கோபம், சரளமாக வந்து விழுகிற சபித்தல்கள், ஒரு காரியம் எனில் வீணாகவாவது வம்பு பிடித்தலென்று எளிய கிராமம் ஒன்றை இந்தத் தொகுப்பில் எளிதாகப் பார்க்க முடிகிறது.

நகரமயமாதலின் உச்சகட்டமாக விளைநிலங்கள் தொலையும் இக்கால கட்டத்தில் நாத்து நடவும், களையெடுப்பும், மாடுமேய்த்தலும் ஒரு தரமான கவிதைக்கான களனாகவும் மாறிவிடுகிறது.

திருமணங்கள் பற்றிய ஒரு கவிதையில் பொய்யான ஆடம்பரங்களில் தொலைந்த ஒரு கிராமத்து பண்பாட்டில் மெல்லிய விசும்பல். மைக்செட், வாழைமரம், சிறுவர்களின் குதூகலம், பெரியவர்களின் கேலிப் பேச்சுகள் என்று உறவுகள் கூடி செய்த திருமணங்கள் மண்டபங்களில், குறிப்பிட்ட நேரத்து காரியமாற்றுதலில் ஒன்றாகி, சாப்பிட்டு, மொய் எழுதிவிட்டு வருகிற சம்பிரதாயச் சடங்காகிப் போயிருப்பதை குறிப்பிடுகிற அதே கவிதையில் தொலைந்து கொண்டிருக்கிற கிராமத்து பாசன வழிமுறைகளையும் காண்கிறோம்.

வீடுகள் தோறும் குப்பைகளைப்போல் இறைந்து கிடக்கிறது. அம்மா_அப்பாக்களின் சண்டைகளும், சச்சரவுகளும். மனம் வெடித்துக் கிளம்புகிற ஆற்றாமைகளும், கிராமத்து இல்லாமைகளுமே அக்கோபத்திற்கு காரணமாகி விடுகின்றன. அப்பாக்களின் அத்துமீறிய சொற்கள் குழந்தைகளின் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

சண்டையிட்டவர்கள் சமாதானமாகிவிடலாம். பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அக்கணநேரம் அதிர்வுகளை சுமந்த கொண்டே இருக்கிறார்கள். கவிஞரின் பதிவில் அழுத்தமாக இது வெளிப்படுகிறது.

தொகுப்பு முழுமைக்கும் ஒரு கிராமத்தை சுற்ற ஆரம்பித்து, உறவுக்காரர்களையெல்லாம் சந்தித்துவிட்டு, அவர்களால் உபசரிக்கப்படுகிற சாபங்கள், வாழ்த்துக்கள், வசைகள் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு சொந்த வீட்டிற்குள்ளும் நுழைந்துவிடுகிறோம்! அங்கிருப்பவர்களும் மனிதர்கள்தானே...! அவர்களின் மன ஓட்டங்களையும் கிரகித்தபடி வெளியேறுகிறோம்! அங்கோ அண்ணாந்து பார்க்கிறோம்! ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் அழகையும் ரசிக்கிறோம்.

வேளாண்மையில் அறிவியல் ஏற்படுத்திய தாக்கம் அளவிடற்கரியது. கருவிகளின் வரவு உறவுகளை, அன்னியோனியத்தை நெடுங்காலத்திய பிணைப்பை யாவற்றையும் ஒன்றுமில்லாததாக்கிவிட்ட தாக்கமும் இந்தக் கவிதைகளில் மிளிர்கின்றது.

கதைகள் தீர்ந்தபோது அம்மா சொன்ன கதைகள் தீராமலே தீராத பெரும் சிறுகதைகளையும் பெரும் அனுபவங்களையும் தன்னகத்தே வசியப்படுத்தியுள்ள அற்புத வருகை.

தொகுப்பு : கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்
வெளியீடு : நறுமுகை, 29/35, தேசூர்பேட்டை, செஞ்சி - 604 202, விழுப்புரம் மாவட்டம்.
ஆசிரியர் : செந்தில்பாலா

விலை : ரூ.35



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com