Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

முக்காலத்திற்குமான ஆண்களுக்கெதிரான முதல் தகவல் அறிக்கை
(திலகபாமாவின் ‘கூந்தல் நதிக்கதைகள்’)
- அமிர்தம் சூர்யா

இவ்வாறாக ஒரு ஒற்றை வரி விமர்சனத்தை ஒரு ஆண் என்பதாலேயே வைக்கப்படுவது தவிர்க்க இயலாததுதான். ஆயினும் பால் பேதம் கடந்து விமர்சிக்க முயல்வது தர்மத்துக் கான சங்கடம் மட்டும் அல்ல சவாலும்கூடத்தான்.

பிரமாண்டமான தமிழ் இலக்கியப் பரப்பில் கவிதைத் தளத்தில் பெண்களின் இயங்குதலும் இருப்பின் வெளிப்பாடும் குறை வானதுதான். அதிலும் பல்வேறு குழுக்கள், "தமிழ் கலாச்சார பண் பாட்டு தளத்திற்குள்ளேயே பெண்ணியத்தை வென்றெடுக்க வேண்டும். உடல் மொழி எழுத்து என்பது ஆண்களுக்கான மறைமுக நுகர் பொருளாகும்" என்கிற வரையறையில் இயங்கும் திலகபாமாவின் ஏழாவது கவிதைத் தொகுப்பு. இது ஒரு 113 பக்கத்திலான நீள்கவிதை. இவர் நீள் கவிதையென்று குறிப்பிடாமல் "அநாதி சொரூபக் கவிதை" என பெயரிட்டுள்ளார்.

அந்தம் ஆதிக்குள் சிக்காத இறைவனை 'அந்தாதி' என்ற இலக்கிய வடிவத்தில் அடைக்க முயல்வது போல இத்தொகுப்பும் அந்தப் பாணியைக் கைப்பற்றியுள்ளது. இத்தொகுப்பில் 2 பெண்கள் செத்த காலத்து பிரஜையாய் பழைய பாஞ்சாலி: உயிர் காலத்து பிரதி நிதியாய் திருமதி. பாரதி. இரண்டு பெண்கள் தத்தமது காலத்து ஆணாதிக்க அம்சங்களை மாறி மாறி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். (ஆமாம் பேசிக் கொண்டே) பாஞ்சாலி எதில் முடிக்கிறாளோ அந்தச் சொல்லைக் கொண்டே பாரதி பேசத் துவங்குகிறாள்.

இருவரும் ஒன்றாகி எதிர்கால புள்ளியாகிறது. எல்லா காலத்திலும் பிரச்சனை ஒன்றே. வடிவங்களும் வகைமைகளும்தான் வேறு என்றும் இந்த இரு பெண்களின் "குரல்கள் புலம்பலல்ல. சந்தோசத்தை திறப்பதற்கான சாவிகள்" என்றும் "ஆளுமையான பெண்கள் முன் ஆண்கள் மனிதனாக இல்லாது போகிறார்கள்" என்றும் சீற்றம் காட்டுகிறார்கள்.

இத்தொகுப்பில் உணர்வு திண்ணி, கள்ளுண்ட பனையாய் அசையாது கிடக்க, நுரைமோதி செத்தகரை, அரிகிறேன் இருளை காய்கறிகளோடு என்பதான புனைவு மயக்கம் மிகுந்த, முரணுக்குள் அழகியலை வரைந்து பார்க்கும் தன்மைகள பகலின் மேல் பாதரசத்தை பூசியது போல் பளிச்சிடுகிறது.

ஆதாம்களின் (அதாவது ஆண்களின்) அதிகப்படியான ஒற்றை விலா எலும்புடைக்கிறேன் என்று சவால்விடுகிறார் திலகபாமா. இதன் மூலம் ஆண், பெண் இருப்பு ஒரு நேர்கோட்டில் சமன் ஆகுமா என்ற எதிர் பார்ப்போடு... "இன்னமும் முடியாத கூந்தலின் கதை தொடரும்" என முடிக்கிறார்.

ஆண்களின் விலா எலும்புடைத்தல் என்பது கலாச்சாரத் தளத்திலா? பண்பாட்டுத் தளத்திலா? அரசியல் தளத்திலா? இலக்கியத் தளத்திலா? சமூக இனப் பரப்பிலா? என்ற கேள்விகள் சென்னை மாநகர பேருந்து படிக்கட்டு பயணிகள் போல தொத்திக் கொண்டே செல்கிறது.
அதுசரி. இன்று ஏவாள்களுக்கு முளைத்திருக்கும் அதிகப்படியான விலா எலும்புகளை என்ன செய்வது என்பது உப கேள்வி. பெண்களுக்குள்ளிருக்கும் பெண்ணாதிக்கத்தை உடைப்பதா? போற்றுவதா? என்பதன் சுருக்கமே இந்த உப கேள்வி. குடும்ப அமைப்புக்குள்ளிருந்து கொண்டே பெண்ணியம் வென்றெடுப்பது என்பது தேனீக்களுக்கு தெரியாமல் தேனெடுக்கிற சவால்தான். அதை இன்னும் விரிவாய் கவிதையில் பேசியிருக்க வேண்டும் திலகபாமா. ஏனோ பேசவில்லை.

இலக்கியச் சூழலில் பேரிரைச்சலாய் விமர்சன மற்றும் புறக்கணிப்பு மௌன அலைகள் வந்து போனாலும் மூச்சுவிடும் பூமியின் கரையாய் இப்பிரதி அவ்வப்போது துளையிட்டபடியே உயிர்ப்பை நிறுவும் என்பதில் எனக்கு மூடநம்பிக்கையில்லை - நம்புகிறேன். மேலட்டை ஓவியத்தைக் கூட கவிஞரே வரைந்து தனது தனித் தன்மையை பிரதிபலிக்கிறார். பெண் கவிதை வெளியில் இந்நூல் புதிய முயற்சி என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆசிரியர் : திலகபாமா நூலின் பெயர் : கூந்தல் நதிக் கதைகள்
வெளியீடு : காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு கோடம்பாக்கம், சென்னை - 24. விலை :ரூ.60


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com