Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

எளிய மொழி : அரிய கணங்கள்
மயூரா ரத்தினசாமி

அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வுகள் சூட்சுமமான ஒரு கணத்தில் அசாதரணத் தோற்றம் கொண்டு நம்மை வசீகரிப்பதாலேயே நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அப்படியான கணங் களை நினைவூட்டும்படியான படைப்புகளை வாசிக்கும் போது மீண்டுமொருமுறை நகருக்குள் அக்காட்சியை ஓடவிட்டு உவகை கொள்கிறோம்; துக்கப்படுகிறோம்; பெருமூச்சு விடுகிறோம்; குறைந்தபட்சம் ஒரு கண மேனும் ஸ்தம்பிக்கிறோம். கனகராஜனின் கவிதைகள் அத்தகைய கணங்களை உள்ளடக்கியதாகக் கொள்ளலாம்.

எவ்வித அலங்காரங்களுமின்றி எளிமையான வார்த்தைகளில் சொல்லிக்கொண்டு போகிற போக்கில் கனமான விஷயங்களை நமக்குக் கடத்தி விட்டுச் செல்கிறார்.

எங்கள் கிராமத்தில் ஒரு பெண் இருந்தாள். இன்றும் இருக்கிறாள். ஊமையல்ல. ஆனால் நாக்கு திரும்பாது. அதனாலேயே அவள் யாரிடமும் பேசி நாங்கள் பார்த்ததில்லை. ஊமைக்கு எதிரில் மூக்கைச் சொறிந்தால் அவர்களுக்கு கோபம் வரும் என்று யாரோ எப்படியோ எங்களுக்குக் (தவறாக) கற்றுக் கொடுத்திருந்தார்கள். பள்ளி செல்லும் வழியில் அவளைக் கண்டால் மூக்கைச் சொறிவோம். "த... தே... ஏ...." என்று எங்களை விரட்டுவாள். அப்பொழுது எங்களுக்கு அது விளையாட்டாக இருந்தது. "நாக்கு காணாமல் போன கோயில் மணி பள்ளிக்கூட சிறுவன் கல்லடிபட்டு அவலமாய் ஒலிஎழுப்பும்" என்கிற வரிகள் மேற்கண்ட நினைவை எனக்குள் கிளர்த்தியது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவளது வலியை இக்கவிதை வழியாக எனக்குக் கடத்திவிட்டார் கவிஞர்.

இதே கவிதை, இன்னொரு பார்வையில், அதிகார மையங்களால் நாக்கு பிடுங்கப்பட்டுவிட்ட நிலையில் வாழ்க்கையை ஓட்டும் விளிம்பு நிலை மக்களின் அவலக் குரலாகவும் இக்கவிதையை அவதானிக்க முடிந்தது. கனகராஜனின் வரிகளைப் பிடித்துக்கொண்டு மேலே மேலே செல்வதற்கான வாயில்களை அவர் திறந்தே வைத்திருக்கிறார். இதோடு சேர்த்த ஊமைச் சங்கரனின் மௌனக்குரல் ஒளிந்திருப்பதை பதிவு செய்வதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தமிழ்க்கவிதை பல்வேறு நிலைகளை- பரிணாம வளர்ச்சி என்றும் சொல்லலாம் - கடந்து இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. வாசகனின் தீவிரமான பங்களிப்பை வேண்டி நிற்கின்றது இன்றைய கவிதை.

கவிஞனையும் மிஞ்சி கவிதைக்குள் பிரவேசிக்க வேண்டிய தேர்ச்சி வாசகனுக்கு வேண்டும் என்கிற புரிதலோடுதான் நாம் கவிதையை அணுக வேண்டியுள்ளது. எழுதி பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் உயிர்ப்போடு நிற்கும் கவிதையையும் கனகராஜன் படைத்துள்ளார். இன்றைய வாழ்நிலையோடும் பொருந்திப்போவது வியப்பளிக்கிறது.

இழவு ஆள் கவிதை ஒரு சிறந்த சிறுகதைக்கான மிகுந்த உள்ளடக்கம் கொண்டது. தனக்கு கடிதம் வராத நாட்களை மிகுந்த வலியுடையதாக உணரும் கவிஞர் அந்நாட்களில் தன்வீடே தனக்கு அந்நியமாகி விடுவதாகக் குறிப்பிடுகிறார். ஆபீஸ் அலுப்பு தீர தினமும் ஒரு கடிதம் வந்தால் போதும், அதை வாசித்துவிட்டார் போதும், வராவிட்டால், கடிதம் எழுத நண்பர்கள் வாய்க்கப் பெறாதவனா இருக்கலாம். தன்னைப் பகிர்ந்து கொள்ள கடிதத்தை விட்டால் வேறு வழியற்றவனாக இருக்கலாம். செல்போன் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய தினங்களில் கடிதத்தைப் பற்றிய நினைவூட்டல் அதன் மீதான வாஞ்சையைக் கூட்டுகிறது. எதனாலும் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடமாக உணர வைக்கிறது.

14 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இன்னும் வாசிப்பு அனுபவத்தைத் தூண்டுகிற கவிதைகளைப் படைத்த கனகராஜன் சமீப காலமாக ஏன் எழுதுவதில்லை என்கிற கேள்வியை முன்வைக்கும்போதே...

எனக்கு நானே
எப்போதும்போல
கிடைப்பதில்லை....
என்கிற அவரது வரிகளையே அதற்கான பதிலாகவும் சமாதானமாகவும் கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த கவிதைகளை வாசிக்கும்போது... அவருக்கு அவர் எப்போதும் போல கிடைக்கவேண்டும் என்கிற அவா எதிர்பார்ப்பாக பரிணமிக்கிறது.

நூல் : பழையசோறு ஆசிரியர் : கனகராஜன்
வெளியீடு : வானம், பக்கங்கள்:40 விலை : ரூ.20
தொடர்புக்கு : கனகராஜன், 1/9, விவேகானந்தா காலனி, சமத்தூர், பொள்ளாச்சி -642123. அலைபேசி : 99943 16088


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com