Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

இளநீர், நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு
த. பழமலய்

பொன். குமார் 1991ஆம் ஆண்டு கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தவர். தொடர்ந்து ஹைக்கூ, கவிதைகள், விமரிசனங்கள் என எழுதி 1996-2005 ஆண்டுகளுக்கு இடையில் பன்னிரெண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

இலக்கியம் வெறும் வாசிப்புக்கு மட்டும் உரியதாக அல்லாமல், வாழ்க்கைக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும் என உணரும் கவிஞர் இலக்கிய உலகில் இருந்து வெளியேறிவிட முடியாதவர். இலக்கிய உலகில் சஞ்சரிப்பதில் உள்ள இனிமை அப்படி.

பன்னிரண்டாவது நூலான 'தன்னிடத்தை நிரப்பியிள்ளது நாற்காலி' யில் உள்ள கவிதைகள் அனுபவம் சார்ந்தவை. பொய், புனைவு எனச் சொல்ல ஒன்றும் இல்லாதவை. இருக்கலாம். நம்ப வைக்கிறார். அதுதானே கலை.

ஏதோ பணியிலிருந்து ஓய்வு பெற்ற தாத்தா, விட்டத்தில் தூக்கு மாட்டி இறந்து போன ஆயா, குடிகார அப்பா, அம்மா, புதுப்பிக்கப்படாத சிற்றூர், கோணலாகவும் குறுகலாகவும் சந்துகளை உடைய சேரி, வெண்ணங்குடி முனியப்பன், மாரியம்மன், வடுகபட்டி வைப்பாட்டி வீடு போகும் கவுண்டர், ஊர் மேயும் எஜமானிகள் - பண்ணைக்காரிச்சிகள், ஆளுக்காரன், அடிக்கடி தாவினால் பிடிக்காது என்பதற்காகக் காயடிக்கப்பட்ட முன்னங்கால் கட்டப்பட்ட ஆட்டுக்கடா, எருமை, வெடிவைத்து தகர்த்தும் உளி கொண்டு உடைத்தும் சில்லுகளாக சிதறும் ஊருக்குக் கம்பீரமாய் இருந்து ஊர்க் கொடிக்குன்று, இன்று தாத்தா இல்லாமல் வெற்றிடத்தில் தன்னிடத்தை நிரப்பியுள்ளது நாற்காலி என இயல்பாக விரியும் காட்சிகள்.

கவிஞருக்குக் 'காலச் சுழற்சியில் கைவிட வேண்டியிருக்கும்' என்று இலட்சியம் எதுவும் இல்லாத வாழ்க்கை. ஆனாலும் தேடுதல் இல்லாமல் ஒருவரால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடியாது.

உண்மையில் எப்படி
இருந்திருப்பார் ராமர்?
இல்லை உண்மையில்
ராமர் இருந்திருப்பாரா? என்று கேள்விகள் கவிஞருக்கு.

பின்னாளில்
ஆறாம் நபரும்
தன் மகனெனத் தெரிய
சந்தோஷித்தாள் தாய், பாஞ்சாலி கர்ணன் மேல் ஆசைப்பட்டதற்குக் குந்தியின் சமாதானம் இது.

'கொஞ்சங்களின் கலவையாகத்' தன்னை அறியும் பொன். குமார் அதையும் கூர்ந்து பார்த்துக் கவிதைகள் சொல்லிச் செல்வதைக் கேட்க சுவையாக இருக்கிறது. அது இந்த வாழ்க்கையின் சுவை.

எந்நிலையிலும் புரியாமலே
கண்டுகொள்ள முடியாமலே
முடிந்துவிடும்
வாழ்க்கையின் சுவை.

பக்கிரி, பயித்தம். தெரு நாய்கள், கூண்டுக் கோழிகள் எதிலும் கவிதை இருக்கிறது.

அந்த விசரிலே
அவருடைய
தோட்டக் கிணற்றில்தான்
எப்போதும்
வற்றாமலிருக்கும் நீர்... போன்றது அது. பொன். குமாருக்கு அதைச் சொல்லத் தெரிகிறது. நினைத்தால் ஆக முடியுமா நம்மால் பைத்தியம்?

நாய் படுத்திருந்தாலும்
இன்னும் துரத்துகிறது
பயம்
அருகாமை வீட்டார்கள்
தூரத்து நெஞ்சத்தார்கள்
வாராத பிள்ளையைப்
பற்றியே இருந்தது
அனைவரது விசாரிப்பும்
அக்கினி நட்சத்திர நாளில் இத்தொகுதியைப் படிப்பது இளநீர் குடிப்பது, நுங்கு தின்னுவது, வெள்ளரிப் பிஞ்சு கடிப்பது என இயல்பையும் இனிமையையும் தருகிறது. குளிர் தரு, தரு நிழல்.

தன்னிடத்தை நிரப்பியுள்ளது நாற்காலி
பொன்.குமார்
மருதா வெளியீடு, ராயப்பேட்டை, சென்னை - 14.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com