Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

நிழல்களைத் தேடி : ஒரு பார்வை
பொன். குமார்

மும்பை வாழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் புதிய மாதவி. கவிதை, கதை, கட்டுரை என மூன்று தளங்களிலும் சிறப்பாக இயங்கி வருபவர். இருப்பினும் கவிஞராகவே அறியப்பட்டவர். அவரின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு 'நிழல்களைத் தேடி'

எனக்கான என் கவிதையின் இருத்தலை
நிச்சயப்படுத்தும் என் பயணத்தில்

'நிழல்களைத் தேடி.' என மூன்றாவது நூல் என முன்னுரையில் எழுதி தன் கவிதைப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். 'மாநகரக் கவிதைகள்' முதல் கவிதையிலும்,
அந்த இருக்கையில்
எப்படியும் எழுதிவிட வேண்டும்
இறங்கும் இடம் வருவதற்குள்
எனக்கான
என் கவிதையின் இருத்தலை என தன் லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இக்கவிதை மாநகர பேருந்தின் இன்னலை எடுத்துக் கூறுகிறது.

பெண்ணியம் பேசுவதில் புதிய மாதவியின் பங்கு குறிப்பிடத் தக்கதாயுள்ளன என முந்தைய தொகுப்புகள் பறைசாற்றுகின்றன. 'நிழல்களைத் தேடி.'யிலும் பெண்ணியச் சிந்தனைகள் விரவிக்கிடக்கின்றன.

பெண்ணுரிமை பேசும்
உன் எழுத்துகள்
என்னுரிமையை
எப்போதும்

இருட்டிப்பே செய்கின்றன என மனைவியின் கூற்றாக 'கணவனின் தோழியர்' கவிதையை அமைத்து பெண்ணுரிமை கோரியுள்ளார். பெண்ணுக்கு சுதந்திரம் அவசியம் என்பதைவிட பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கும் நாடே முன்னேற்றமடையும். 'அப்பாவின் மீசை' ஒருபுறம் பெண்ணியம் பேசுகிறது. மறுபுறம் ஆண்டையிடம் அடிமையாகியிருக்கும் அப்பாவை விமரிசிக்கிறது.

ஓர் ஆண் மகனாயிருந்தும் வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல் ஒரு பெண்ணிடம் காட்டுவது கோழைத்தனமே. 'அப்பாவின் மீசை' குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பெண்களை ரசிப்பர். வருணிப்பர். மனைவியிடமே சொல்வர். ஆண்களுக்கு அதிலொரு அலாதி பிரியம். 'கருவின் கழிவுகள்' கணவன்மார்களை நேரடியாகவே தாக்குகிறது. 'எழுதாத கவிதை' கலைக்கப்பட்ட கரு தாயைக் குற்றம் சாட்டுவதாக உள்ளது.

பெண்ணியத்தின் இரண்டு மொழிகள் பேசப்படுகின்றன. ஒன்று பெண் மொழி. இரண்டு பெண்ணுடல் மொழி. முன்னது மிதம் எனில் பின்னது தீவிரம். உடல்மொழியில் உடல் வலியைக் கூற வந்தவர்கள் எல்லை மீறியதால் உடல் மொழியின் மீதான விமர்சனங்களும் எழுந்துள்ளன. 'உடல் மொழியின் கீறல்' மூலம்

உடல்கூட ஆயுதம்தான்
கண்ணகிக்கு
ஈழத்துக் கண்மணிக்கு
மணிப்பூரின் பெண்மணிக்கு

உங்களுக்கு? என உடல் மொழியாளர்களுக்கு எதிராக வினா தொடுத்துள்ளார்.

தமிழர்களின் அடையாளமாக தமிழர்களின் விழாவாக இருந்தது பொங்கல். பண்பாட்டுடன், காலத்துக்கு ஏற்ப கொண்டாடும் விழாவாக இருந்தது. விவசாயப் பெருங்குடிகளே கொண்டாடி வந்தனர். இன்று தமிழர்கள் பிழைப்பைத் தேடி வெளியில் சென்றுவிட்டதால் பொங்கல் விழாவும் மெல்ல மாறி வேறு வடி வத்தில் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் வருகிறது போகிறது
தமிழன் திருநாள் வருகின்றதா?
வந்தால் சொல்லுங்கள்
அன்று
வாழ்த்துரைக்கும் என் கவிதை என 'வந்தால் சொல்லுங்கள்' கவிதையில் வருத்தப்பட்டுள்ளார். தமிழன் நிலை எவ்வாறு மாறிவிட்டது என எடுத்துக் காட்டியுள்ளார்.

கிராமங்கள் அருகி நகரங்கள் பெருகி வருகின்றன. நாகரிகமும் வளர்ச்சி யடைகின்றன. நவீனமும் வாழ்வில் நுழைந்துவிட்டது. ஆனாலும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை இன்னும் தொடர்வது வருத்தத்திற்குரியது, இந்நிலையை ‘பீ’ என்னும் ஆவணப்படம் காட்சிப்படுத்திக் காட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. 'யாருக்கு விடுதலை' மூலம்
எப்போது எந்திரமயமாகும்
எங்கள் துப்புரவுத் தொழிலாளி
தோள்களில் சுமக்கும்
மனிதக் கழிவுகளின் ஈரம்? என வினாவெழுப்பி விடுதலைக் கோரியுள்ளார். 'அம்மாக்களின் அவஸ்தை' கவிதையும்
இரண்டு நிமிஷத்திற்கு
ஒரு இரயில்
அறிவித்தார் அமைச்சர்
அச்சப்பட்டார்கள்
என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்து நிற்கும்
அவஸ்தையை நினைத்து என்பது கழிவறைகளின் கட்டணம் அதிகரித்ததையே காட்டுகிறது. கிராமவாசிகளை விட நகரவாசிகளுக்கு இந்த அவஸ்தை புரியும். இப்படியும் ஒரு கவிதை எழுத வேண்டுமா என ஒருபுறம் எண்ணத் தோன்றினாலும் மக்கள் அவஸ்தைகளை எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகிறது.

'நிழல்களைத் தேடி' என்னும் இத்தொகுப்பில் 'நிழல்களைத் தேடி' கவிதை நெடியது. கவிஞரின் கவிபுனையும் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.

என் நிழல்
என் சாயலில்லாத என் நிழல்
என் நிழல்
எனக்குச் சொந்தமில்லாத என் நிழல் எனத் தொடங்கும் இக் கவிதை சொல்லாடல் மிக்கதாயிருப்பதுடன் சிந்திக்கவும் செய்கிறது. கவித்துவம் மிளிர் கிறது.

வெளிச்சத்தை விலக்கி வைத்து
நிழல்கள்
இருட்டில் தவமிருக்கின்றன என்பதும்
என்னை இழந்த இருட்டில்
என் நிழல் தேடி அலைகிறது என் நிஜம் என்பதும் குறிப்பிடத்தக்க வரிகள். நிழல் என்னும் ஒரு சொல்லையே திரும்ப திரும்ப கையாண்டாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொருள் தரும்படி அமைந்துள்ளது பாராட்டிற்குரியது. நிழலை வைத்து பல பரிமாணங்களைக் காட்டியுள்ளார். நிழலை வெளிச்சப்படுத்தியுள்ளார். புதிய மாதவிக்கு பெயர் சொல்லும் கவிதையாக 'நிழல்களைத் தேடி' விளங்கும். அவருக்குப் பல புகழ்களை, பாராட்டுக்களை, பரிசுகளைத் தேடித் தரும்.

கதை, கட்டுரை, கவிதை என எத்தளத்தில் இயங்கினாலும் பெண்ணியம், தலித்தியம் ஆகிய இரண்டையும் புதிய மாதவி முன்னிறுத்துவதை அறிய முடியும். 'நிழல்களைத் தேடி'யும் அவ்வாறே அமைந்துள்ளது. புதிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதோடு பழைய பண்பாடுகளையும் காக்க வேண்டும் என கவிதைகள் வழி அறியமுடிகிறது.

மக்கள் பிரச்சனைகளை முன்வைக்கும் கவிஞர்களில் புதிய மாதவி முன்னணியில் உள்ளார் என பாடுபொருள்கள் உறுதி கூறுகின்றன. ஆயின் ஒரே பொருளில் பல கவிதைகள் தொகுத்து இருப்பது பலவீனம். கவிஞர் கவிதைகள் கட்டமைக்கும் விதம் சுட்டுதலுக்குரியது. சொற்கள் எளிமையாயினும் வெளிப்பாட்டில் ஒரு நேர்மையிருப்பது சிறப்பு. 'நிழல்களைத் தேடி' என்னும் இத் தொகுப்பு கவிஞரிடமிருந்து பல தொகுப்புகளை எதிர்பார்க்கச் செய்கிறது.

நிழல்களைத் தேடி (கவிதைகள்), புதிய மாதவி
வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, சென்னை -600 011.
விலை : ரூ.60


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com