Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

மனக் கோழி
பொன். குமார்

தார்ச்சாலையில் குமிழ்விட்டுக் கொப்பளித்து நிற்கும் சித்திரை மாத வெயிலையும் பொருட்படுத்தாது, உடலெங்கும் உப்புப் பூ பூக்க கிட்டிப்புல் உப்புப் கோடு விளையாண்ட கிராமத்து வீதிகளும் இன்னும் எத்தனையோ உணர்வுகளுடன் இரத்தமும் சதையுமரிய உறைந்து கிடக்கும் கிராமத்து மண்ணும், வெள்ளை உள்ளமுடன் உலவும் மனிதர்களும் கொஞ்சங் கொஞ்சமாய் நிறமிழந்து கொண்டிருக்கும் இயற்கை எழிலுமே எனது கவிதைகளின் வேர்களாய் எனக்கும் விரவிக்கிடக்கின்றன என்னும் முன்னுரையுடன் வந்துள்ள தொகுப்பு 'மனக்கோழி'. ஆசிரியர் தமிழ்முருகன். கவிஞரின் நான்காம் தொகுதி இது. அதீத ஆர்வம் இலக்கியத்தில் கொண்டிருந்தாலும் ஆர்ப்பாட்டமின்றி இயங்கி வருபவர்.

அரசு ஊழியர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை எல்லா மட்டத்திலும் லஞ்சம் தன் எல்லையை விரித்துள்ளது. லஞ்சத்துக்கு கை நீட்டாதவர்கள் குறைவு. 'விஷ விரல்கள்' மூலம்
எந்த நிமிடத்திலும்
எவர் கையிலும் முளைக்கலாம்
அந்த விரல்கள்
லஞ்சத்திற்காய் நீளுகின்ற
அஞ்சு விரல்கள்
என சாடியுள்ளார்.

லஞ்சத்திற்கு நீளும் விரல்களை விஷம் என்கிறார். விஷத்தை முறிக்கும் வழி காணாது சமூகம் முழித்து நிற்கிறது. கவியரங்கில் வாசிக்கப்பட்ட இக்கவிதை மலையாளத்திலும் மொழிபெயர்த்து ஒரு கவியரங்கில் வாசிக்கப்பட்டது. 'கையும் கரன்ஸியும்' கவிதை கரன்ஸியைக் குற்றம் சாட்டுகிறது. கரன்ஸி யின் சுயமுகத்தைக் காட்டியுள்ளார். கரன்ஸியை ரத்த வெறி பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'மச்சம்' கவிதை இருபொருள்பட அமைந்துள்ளது. 'கறுப்பு' என்பது மச்சத்தையும் குறிக்கிறது. பணத்தையும் சுட்டுகிறது. 'கணக்கு' கவிதையிலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனிதர்கள் ஒவ்வொரு சொல்லிலும் பணத்தை எண்ணிப்பார்த்தே இயங்குகின்றனர். மனத்தை பாராமல் பணத்தை பார்ப்பவர்கள் ஆகிவிட்டார்கள் மனிதர்கள். கறுப்பு பணத்தாளர்களுக்கு, கையூட்டாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்து சமூக கரிசனத்தைக் காட்டியுள்ளார். இன்னொன்றில் இவர்களை 'நாகரீகத் திருடர்கள்' என்கிறார்.

'நன்றி'யில் நாயை மேல் என்கிறார். நன்றிக்கு காரணம் வாலே என்பது வித்தியாசமான சிந்தனை.

வால் மனிதன்
வாழ்ந்ததாக
வரலாறு சொல்கிறது
ஆறாம் அறிவு
ஏறிய போதே
வால் குறுக
வார்த்தை நீண்டது
என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோரும் மனிதர் எனினும் வாழ்வுநிலை வேறாக உள்ளது. குணங்களும் முரண்பாடாயுள்ளது. இருநிலைகளை 'ஒரு தாய் மக்கள்' கவிதையில் காட்டி இறுதியாக,
எப்படிப் படைத்தாளோ
இப்படி முரண்பட்ட
குழந்தைகளை
இந்தியத் தாய் என வினவி வருந்தியுள்ளார். அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதே கவிஞரின் விருப்பமாக உள்ளது.

இந்தியத் தாய்க்கு
இருக்கின்றன
இருநூறு கோடிக் கரங்கள்
இருந்தாலும்
என்ன பயன்
விழுந்து கிடக்கும் தாய்
ஊன்றி எழுப்ப
உதவாத கைகள்
'பொய்கள்' என கோபமுற்றுள்ளார். இங்கு தாயின் மீது பரிவு கொண்டவராயுள்ளார்.

மனக்கோழி கவிதை குறியீடாக அமைந்துள்ளது. மனத்தைக் கோழியாக உருவகப்படுத்தி ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

ஓடுடைத்து
வெளிவந்த குஞ்சுகளுக்கு
கோழியின் முகமில்லை.
இரை கொடுத்து வளர்த்த கோழியையே
இரையாக்க முயன்றபோதுதான்
கோழிக்குப் புரிந்தது
தன் குஞ்சுகள்
கழுகென்று... என்கிறார். மனிதனின் ஆசைகளே, மனிதனைக் கொன்று விடும் என்கிறார். கவிதையின் தலைப்பு 'மனக்கோழி', 'மாடு' கவிதையும் மனித மனத்தையே குறிக்கிறது.

எல்லோருடைய மனசுக்குள்ளும்
ஒரு மாடு படுத்திருக்கிறது
செரிமானமாகாத பல உறவுகளை அசை போட்டபடி... என்றார். மனித இயல்புகளை மன உணர்வுகளை கவிதையாக்கித் தந்துள்ளார்.

'ஒட்டடை'யில் மனதைச் சிலந்தியுடன் ஒப்பிட்டுள்ளார். மனச் சிலந்தி பின்னும் வலையில் சிக்கிக் கொள்கிறோம் என்கிறார்.

உலக நாடுகளை தன் அதிகாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது அமெரிக்கா. முதல் கட்டமாக வளமிக்க நாடுகளுக்கு வலை வீசியுள்ளது. அதிகாரத்தை நிலைப்படுத்த உயிர்களையும் கொல்லத் துணிந்து செயல்படுகிறது. 'முரண் கயிறு' மூலம் கண்டித்துள்ளார். 'வெள்ளை மாளிகையின் கருப்புச் செயல்கள்' என முரண்பாட்டைக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்திற்கு, ஆதிக்கத்திற்கு எதிரான குரலை உரக்க எழுப்பியுள்ளார். சகநாட்டுக்காக ஆதரவு தெரிவித்தவர் அண்டை நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். கவிதையின் தலைப்பு 'பதுங்குகிற குழி' மனிதர்கள் மனிநேயமற்றவர்களாகவும் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டும் வாழ்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

'யார் அவர்கள்?' கவிதை உறவுகளை விசாரணை செய்கிறது.

நான்
தண்டிக்கப்படும் போது
தலை காட்டுவதேயில்லை
நீங்காமல் எனக்குள்ளேயே
எங்கோ
நின்று கொண்டிருக்கும் அவர்கள்
என் பங்காளிகள்?
பகையாளிகளா? என உறவைக் குறித்த வினாவை முன்வைத்து வாசகர்களை எண்ணிப் பார்க்கச் செய்கிறார். சுய அனுபவமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்தவைகளை நினைவுகூரச் செய்கிறது.

சமூகத்தில் ஊடுவியிருக்கும் அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு கோபப்பட்டு உக்கிரம் கொண்ட ஒரு கவிஞராக தமிழ்முருகன் இத் தொகுப்பின் வழி அறியப்படுகிறார். சிலவேளைகளில் விரக்தியும் வேதனையும் வருத்தமும் கொண்டுள்ளார் எனவும் கவிதைகள் பறைசாற்றுகின்றன. இத்தொகுப்பில் கிராமிய முகத்தை இழந்து நகரத்தின் பாதிப்பை பெற்றுள்ளார். சொற்களை அழகாகக் கையாண்டு கவிதை அமைப்பில் தனக்கான ஒரு பாணியைப் பின்பற்றியுள்ளார். அகம், புறம் என இருநிலைகளில் கவிதை அமைந்திருந்தாலும் புறத்தின் தாக்கமே கவிஞரிடம் அதிகம் வெளிப்பட்டுள்ளது. 'மனக் கோழி' கவிஞரின் மனக்குமுறலாயுள்ளது.

குமுறிக் கொட்டிய பிறகே தெளிவாகிறது வானம் என்னும் கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப கவிஞர் குமுறிக் கொட்டித் தெளிவாகிவிட்டார். வாசிப்பவரைக் குமுறச் செய்துள்ளார்.

நூலின் பெயர் : மனக்கோழி, ஆசிரியர் : தமிழ்முருகன்.

வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, சென்னை - 600 011. விலை : ரூ.40


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com