Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

குழந்தைகளின் அகப்புற உலகம்
விழி.பா. இதயவேந்தன்

கவிதைகளுக்கான களம் என்பது நமக்கு முன்பாக பரவிக் கிடக்கின்றன. உலகைப் பற்றியும் உலகில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாய் மேலைநாட்டு இசங்கள் நம் மண்ணில் ஊடுறுவி பல்வேறுவிதமான போக்குகள் கவிதையில் வெளிப்படுகின்றன. கவிதைகளின் சூட்சுமங்கள் அறிந்து அதனைத் திறமையாக வெளிப்படுத்துவது தனிக்கலை.

என்றாலும் நம் தமிழ் மண்ணில் தமிழ்க் கவிதைச் சூழலில் கவிதைகள் புனைவது அல்லது கவிதைகள் செய்வது என்பது நம்மின் மன ஓட்டமும் கூடவே உள்ளூர ஏற்படும் மன அதிர்வுகள் / நினைவுகளின் தொகுப்புமே கவிதையாய் முகிழ்ந்துவிடுகிறது. பெரியோர்கள் பற்றிய பதிவுகள் நிறைய இருப்பினும் சிறியோர்கள் பற்றி மிகக் குறைந்தே பதிவுகள் வெளியா கின்றன.

பிற இந்திய மொழிகளில் குறிப்பாக அயல்நாடுகளில் குழந்தை உலகமே தனித்து இயங்குகின்றன. குழந்தைகள் தங்களுக்கான உரிமைகளை எடுத்துக்கொண்டு அறிவுப்பூர்வமாக உயர்வதற்கான பல்வேறு வழிவகைகள் உள்ளன. மாறாக நமது தமிழ் மண் சார்ந்த சூழலில் குழந்தைகள் எல்லைகள் என்பது பெருங்கவனமற்று உள்ளது. இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் மற்றவர்களை விட்டு தனித்துப் போய்விடுகிறார்கள். அதற்கு அவர்களின் செயல்பாடுகள் மட்டுமே பொறுப்பாகக் கொள்ள முடியாது. சமூகச் சூழலே காரணமாகிவிடுகிறது.

இங்கு குழந்தைகள் காட்டும் பிரம்மாண்டத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் செஞ்சி தமிழினியன். 'ராக்காச்சி பொம்மை' எனும் முதல் தொகுப்பு கிராமத்தின் பல்வேறு விழுமியங்களை / மதிப்பீடுகளை சுட்டிக் காட்டியது போல் தற்போது 'சொப்புக் கடை' என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் குழந்தைகள் பற்றிய புதிய உலகிற்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்.

புதிய உலகம் என்பதை விட புதிய உறவை நாம் இத்தொகுப்பின் மூலம் தேடி அடையலாம். காரணம் நாம் இழந்துவிட்ட குழந்தைத் தன்மையும் குழந்தைகள் பற்றிய அகப்புறக்கூறுகளையும் நாம் இயல்பாய் கவிதையோடு கடக்கலாம்.

எனக்குள் இருக்கிற
குழந்தை தொலைந்து
அவளுக்குள் உள்ள
குழந்தையை விரட்டுகிறான்

சிறுவயதில் எத்தனையோ விளையாட்டுக்கள் நிகழ்வுகள் எல்லாம் ஒருசேரக் காண்கையில் நாம் குழந்தையாய் இருந்தபோது தொலைந்த அடையாளத்தை மீட்கவும் நம் குழந்தைகளுக்கு கிடைக்காத விளையாட்டையும் காலவேகத்தில் வைத்து பெரிதாய் யோசிக்க வைக்கிறது.

காசு கொடுத்து வாங்கிய பொம்மை உடைபடும்போது நமக்குள் நொறுங்கிப் போகிறோம். குழந்தையின்னா அப்படித்தான் என்றும் பின்னால் போலியாய் சமாதானப்பட்டுவிடுகிறோம். கவிஞரின் அழகு உடைந்த பொம்மைகளில் தெரிவதைப் பார்க்கலாம்.

உடைக்காமல் நாங்கள்
பாதுகாத்த பொம்மையைவிட
அவள் உடைத்த பொம்மைகள்
அழகானவை

கவிதைகள் முழுக்க பெரும்பாலும் கணவன், மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகள் பற்றியே பின்னப்பட்டிருந்தாலும் பால்யகால நண்பர்கள் உறவினர்கள் எனவும் கிராமிய வாழ்வில் தொடர்புகளோடு பலர் வரு கிறார்கள்.

என்னைப் போலவே
என் குழந்தையும் சொல்கிறாள்
அவள் அம்மாவின் பெருமை

குழந்தைப் பிறப்பால் ஏற்படும் சந்தோசம் ஒருபுறம். குழந்தை பிறப்பைவிட தானும் பிறந்ததை கவிஞர் கூறுவது நெகிழ்வாகக் கொள்ள முடிகிறது.
நீ அசைந்தாய்
நானும் புதிதாய்
பிறந்தேன்
அப்பாவாக

குழந்தைகள் படிப்பை விட்டுவிட்டு வேறு வேறு காரியங்களில் மனம் லயித்துவிடும் சமயத்தில் பெற்றோர்களுக்கு இயல்பாகவே மனம் சங்கடப்படுவதுண்டு. விளையாட்டை விட்டு படி படி என நாம் சொல்லிக் கவனத்தைத் திருப்பிவிடுகிறோம். காரணம் இழந்துவிட்ட நமது கல்வி அவர் களுக்காவது கிடைக்கட்டுமே என்று தலைமுறை ஆசை நம்மை உசுப்பி விடுகிறது.

எனக்குள் இருக்கிற
குழந்தை தொலைந்து
அவளுக்குள் உள்ள
குழந்தையை விரட்டுகிறேன்

குழந்தைகள் விளையாட்டில் பெரியோர்களை இழுத்து விளையாட வைப்பது பிள்ளைகளின் தனிப்பட்ட சாமார்த்தியம். இத்தொகுப்பில் பல இடங் களில் விளையாட வைக்கிறார்கள் குழந்தைகள். பொம்மைகளைக் கொண்டே ஓரு புதிய உலகை நிர்மாணிக்க வைக்கிறது கவிஞர் தமிழியனியனின் கவிதைகள். பொம்மைகள் உடைபடும்போது இடிபடும்போதும் நாமும் குழந்தைகளோடு சேர்ந்து நொறுங்கிப்போகிறோம்.

வளர்ந்த குழந்தைகளின்
வீட்டில்
பொம்மைகள்

பொம்மைகளாக இருப்பதில்லை.
கமர்கட்டு வாங்கித் தின்ற காலங்கள் கடந்து பைவ் ஸ்டார் சாக்லெட்டுகளைத் தூக்கிவீசும் குழந்தையின் மனோநிலையும் நாம் கவனிக்க வேண்டியவை. அதே போன்று கிராமத்துக் கடைகளில் பிசுக்கு வாங்கிய அனுபவம். உடைந்த கண்ணாடியை சுவற்றில் பதிக்க வைத்து அழகு பார்க்கும் அனுபவமும் மலைக்கற்களில் அச்சமூட்டும் பீதியும் நமக்குள் நிகழ்ந்த சிறுவயது நினைவோட்டங்கள் என பல சம்பவங்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கிறது.

எத்துனைதான் குழந்தைகளிடத்தில் வித்தைகளிருந்தாலும் அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்காமல் 'சனியனே' என இகழ்வதை 'ஊ' வருது என அடிக்கடி பயமுறுத்துவதையும் கவிஞர் கண்டிக்கிறார்.

பழமலய்க்குப் பின்னர்தான் கிராமத்து நினைவுகளை வழக்கங்களை கவிதைக்குக் கொண்டு வரலாம் என்னும் போக்கு பரவலானது. அவர் காட்டும் காட்சிகள் தமிழ்க் கவிதைக்குப் புதியவை என முன்னுரையில் பெருமாள் முருகன் கூறுவது இவரின் தற்காலக் கிராமியம் சார்ந்த கவிதைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

கிராமத்தின் நுட்பமான பதிவுகளும் குழந்தைகள் சார்ந்த பல்வேறு மனநிலைப்பாட்டின் அதிர்வுகளோடும் 'சொப்புக்டை'க் கவிதைகள் நமக்குக் காட்சியளிக்கின்றன. குழந்தைகள் வரைந்த ஓவியங்களும் அட்டைப்படம் மற்றும் அச்சுக்கட்டமைப்பும் புத்தகத்தை மேலும் கவனிக்க வைக்கிறது.

கவிஞர் தமிழினியனின் இத்தொகுப்பை படித்து முடித்ததும் குழந்தைகள் சார்ந்த சூழலில் சிக்குண்டுக் கிடக்கும் நமக்கு நமது குழந்தைகளுக்கான சொப்புக்கடையைத் தேடிப்பார்க்கவும் அறிவுப்பூர்வமான ஒரு சந்ததியை உயிர்ப்பூட்டவும் நம்மை மறுபுணரமைப்பு செய்து தயார்படுத்த வேண்டியிருக்கிறது.

குழந்தைகளை ஊருக்கு
அனுப்பிவிட்டு
உறங்க முடியாமல்
தவிக்கிறது மனசு.

சொப்புக்கடை கவிதைகள் செஞ்சி தமிழினியன் பக்கங்கள் : 80 விலை : ரூ. 50
வெளியீடு : நறுமுகை, 29/35, தேசூர்பாட்டை செஞ்சி - 604 202


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com