அபூர்வங்களைப் பூக்கும் கணங்கள்
அதிஸ்யா
நவீன கவிதைகளின் வீச்சும், எல்லையும் பரந்துபட்ட தன்மையில் விரிந்து கொண்டிருக்கும் அதே வேளையில் சமூகக் கவனம் சிறுத்துக் கொண்டேதான் வருகிறது. அழகியலும், சமூகக் கவனமும் ஒன்றிணைந்து ஒரு கவிதையை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் நிலை வாய்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது.
சமூகம் பற்றிய பார்வையில் கூடுதல் கவனம் செலுத்துகிற இளம்கவிஞர்களின் மொழிநுட்பக் குறைபாட்டால், கவிதையில் சாதாரண நிலையிலேயே நின்றுவிடுகிறார்கள். ஆயினும் மாறுபட்ட சிந்தனையோட்டமும், சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கடமையை பொறுப்பாகச் செய்வதும் கவிதையை உயர்த்திவிடுகிறது.
இளம்கவிஞர் முகிலனின் இரண்டாவது தொகுப்பு. இறகுதிர் காலம். தரமான அட்டையும், நல்ல அச்சமைப்பும் தொகுப்பை புரட்டத் தூண்டி விடுகின்றன. இவர் அடையாளப்படுத்தும் சமூகப் பிரச்சனைகளும், அதற்கான தீர்வும் சொல்லிவிடுகிறபோது இந்தக் கவிதைகள் பாராட்டலாம் அல்லது ஓகோவென்று வியக்கவும் வைத்து விடுகின்றன.
மரங்களைக் காப்பாற்றக் கூறுகிற யோசனையும், தான் அனாதையாகி விட்ட தன் அவலத்தைக் கூறும் மரத்தின் நிலையும், ஊருக்குள் வர மறுக்கும் தேரும், ஆடைக் குறைப்பைப் பற்றிய கவிதையும் கவிஞரின் மாறுபட்ட சிந்தனைக்கு உதாரணங்கள்.
இத்தொகுப்பில் காதல் கவிதைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நுட்பம் செறிவாக உள்ளதாகக் கூறலாம். சிறுகவிதைகளில் பல கவிதைகள் அபூர்வமான சிந்தனைக் களத்தில் விரிந்துள்ளன. எழுத எழுத வசப்படும் என்பதை உணர்ந்திருக்கும் முகிலன் அதற்கான பயணத்தைத் தொடங்கிவிட்டதை இத்தொகுப்பில் உணரலாம்.
நூலின் பெயர் : இறகுதிர்காலம்
ஆசிரியர் : முகிலன்
வெளியீடு : முகிலன், பி-37, இராமசாமி நகர், உடுமலைப்பேட்டை - 642 126. தொடர்புக்கு : 98658 40134.
விலை : ரூ.40
விற்பனை அச்சும் அமைப்பும் : வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. 9444867023
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|