Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

கவிதையரு போர்வாள்...
க. அம்சப்ரியா

வாசிப்பில் சலிப்பூட்டும்படியாகவும், திரும்பத் திரும்பk கூறியது கூறலாகவும் மாறி, ஒரு கட்டத்தில் கவிதை ஆர்வலர்களால் ஒதுக்கப்படுகிற நிலைக்கு ஆளாகியிருந்தது துளிப்பா வடிவக் கவிதைகள். தமிழ்க் கவிதைச் சூழலில் இந்நிலை மாற்றி, நம் மண்ணின் பிரச்சனைகளையும், சூழ்ந்துள்ள இருளைப் போக்கவும் இடைவிடாமல் அந்தத் தளத்தில் இயங்குபவர்களாக மு, முருகேஷ், புதுவைத் தமிழ் நெஞ்சன், சீனு. தமிழ்மணி, நிலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைச் சொல்லலாம்.

முதற் படைப்பிலேயே ஒவ்வொரு துளிப்பாவிற்குள்ளும் ஒரு கையெறி குண்டையும், ஒரு போர் வாளினையும், ஒரு புரட்சிக் குரலையும் பதுக்கி வைத்திருக்கிறார் ம. ஞானசேகரன்.

ஜப்பானிய வடிவம் துளிப்பா. துவக்க கால துளிப்பாக்கள் பெரும்பாலும் இயற்கை ரசிப்பு, மேலோட்டமான முரண்பாடுகள், காதல் வர்ணிப்பு என்றே பாடுபொருள்களில் கொண்டிருந்தன. கவிதை எழுதுகிற ஆர்வக் கொந்தளிப்பில், படித்த துளிப்பா நூல்களின் பாதிப்பில் பலரும் இவ்வடிவத்தை கையில் எடுத்துக் கொண்டனர். இன்றைக்கும் தொடர்ந்து துளிப்பா தளத்தில் இயங்கும் கவிஞர்களின் பல தொகுப்புகள் துளிப்பா வடிவத்தோடு மட்டுமே நின்றுவிட, வெளியீட்டு விழாக்களின் ஆடம்பரத்திலும், முகஸ்துதி யாளர்களின் கதராடை அணிவகுப்பிலும் துளிப்பாக்கள் ஜீவித்திருக்கின்றன.

ம. ஞானசேகரனின் இத்தொகுப்பு இந்த அவலங்களைத் தாண்டி, மண் வாசனையோடு வெடித்துள்ளது. கவிதையரு போர் வாள் என்பதை உண்மையென்றும் மெய்ப்பித்துள்ளது.

இவரின் கவிதைகள் எடுத்துக் கொண்ட துளிப்பா வடிவத்திற்கான பாடுபொருள்களாக மூடநம்பிக்கையை சாடுதல், பார்ப்பனீயத்தின் மீதான எதிர்க்குரல், பெண் உரிமை, ஆணாதிக்கம், உலகமயம், பொய் விடுதலை, அமைதிப்படையின் வன்மங்கள் என்று மக்களின் தளங்கள் யாவற்றிலும் ஊடுருவிப் பாய்கிறது.

மதங்களின் மீதான எதிர்ப்பு என்று கிளம்புகிறவர்கள் யாவருமே இந்து மதத்தின் மீதான எதிர்ப்பாகவும், மற்ற மதங்களின் மீது மேலோட்டமான சிந்தனையுமாகவே இருப்பது புதிராகத்தான் இருக்கிறது. மூட நம்பிக்கைகள் பிறப்பது மதங்களின் மீதான மட்டற்ற பிடிப்புதான். அந்தப் பிடியிலிருந்து வெளியேற முடியாதவர்களை, அந்த மதங்களின் கோட்பாடுகளும், கொள்கைகளும், வழிமுறைகளும் நச்சுக் கொடிகளாகச் சுற்றிய படியிருக்கின்றன. மதங்களின் மீது எதிர்ப்புக்காட்டுகிறவர்கள் சிறுபான்மை, பெரும்பான்மையற்று எங்கெல்லாம் மூடநம்பிக்கைகளும், அர்த்தமற்ற பழக்க வழக்கங்களும் புழங்குகிறதோ அங்கெல்லாம் ஒரு தீப்பந்தத்துடன் செல்வது முறையானதும் சரியானதாகும்.

நேர்மையும், உண்மையுமான அக்கறையாக இந்தக் கவிதைகள் பயணிக்கும் திசையாக 'விற்பனைக்குப் புத்தன்' விரிகிறது. அனைத்து மதங்களின் பொய்த்திரையையும் விலக்கி, தத்துவ தரிசனத்தை மெய்ப்பிக்கிறது.

அடி வாங்கிக் கொண்டிருக்கிற போது பூக்களின் அழகைப் பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது. அழுகையாக கிளம்புகிற துக்கம், வலுவான கவிதை ஆயுதங்களாக மாறுகிறது இக்கவிதைகள்.

அர்த்தமற்ற அழகியலும், பொய்ப் புரட்சி பிதற்றல்கள் இரண்டுமே கவிதைக்கு ஆபத்துதான். இந்த இரண்டு விபத்துகளும் இல்லாமல் தொகுப்பு தப்பித்திருக்கிறது.

தொகுப்பில் ஒரே குறைபாடு, அதன் முன்னுரையாக இடம் பிடித்துக் கொண்ட அணிந்துரைகளும் விமர்சனங்களும். முப்பத்தியெட்டு பக்கங்களைப் பிடித்துக் கொண்ட இந்த உரைகள், ஒரு வாசகன் எளிதாக உள்ளே நுழைய தடையாக இருக்கக் கூடியவை. அர்த்தமுள்ள கட்டுரைகளாக வந்திருக்க வேண்டியவை முன்னுரையாக இடம் பிடித்தக் கொள்ளும்படியாக அமைந்து விட்டது.

இந்த உரைகளும், மதிப்பீடுகளும் இல்லாமலே வாசக மனத்தில் எளிமையாக இடம் பிடித்துக் கொள்ளும் தன்மையானதுதான் இத்தொகுப்பு.

நூலின் பெயர் : விற்பனைக்குப் புத்தன், ஆசிரியர் : ம. ஞானசேகரன்
வெளியீடு : போதி பதிப்பகம், 8, காமராசர் தெரு, முத்தரையர் பாளையம், புதுச்சேரி - 605 005. விலை : ரூ.60


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com