Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2008

இதற்குப் பெயர் என்ன?
விடுதலை இராசேந்திரன்

தந்தை பெரியாரின் வரலாற்றை விவரிக்கும் - தந்தை பெரியாரின் ஒப்புதலோடு வந்த நூல் ‘தமிழர் தலைவர்’. இதன் முதல் பதிப்பை வெளியிட்டது ‘தமிழ் நூல் நிலையம்’. இது மறைந்த குத்தூசி குருசாமி அவர்களின் பதிப்பு நிறுவனம்; பதிப்பகத்தின் முகவரியாகக் கூட குத்தூசி குருசாமி அவர்களின் இல்ல முகவரிதான் அச்சிடப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 1939 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ‘உரிமை வெளியிடுவோருக்கே’ என்றும் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது.
இதை அப்படியே ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்’ என்ற பெயரில் 10 பதிப்புகளுக்கு மேல் வெளியிட்டு விட்டார்கள்.

பெரியார் நூல்களுக்கு அறிவுசார் சொத்துடைமை கோரும் கி.வீரமணி, தமிழ் நூல் நிலையத்தின் பதிப்பை, சுயமரியாதைப் பிரச்சார நிறுவன பதிப்பாக வெளியிட்டது அறிவு நாணயமா? தங்களிடமுள்ள பெரியார் எழுத்து பேச்சுகளை திருடிக் கொண்டு போனதாக பெரியார் திராவிடர் கழகத்தின் மீது நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு மனுவில் கி.வீரமணி கூறுகிறார்: அதாவது, ‘சேப்டி லாக்கரில்’ தான் பத்திரமாக பூட்டி வைத்திருந்த பெரியார் கொள்கைகளைத் திருடிப் போய் - நாட்டு மக்களிடம் பரப்பும் திருடர்களைப் பிடியுங்கள் என்று சட்டத்தை நோக்கி ஓடுகிறார்! இருக்கட்டும்; ‘தமிழ் நூல் நிலையத்தின்’ வெளியீட்டை வீரமணி திருடலாமா? இது ‘மானமிகு’ திருட்டா? பதிப்பு மேல் பதிப்புப் போட்டு விற்பனை செய்யலாமா?

குத்தூசி குருசாமி குடும்பத்தார் இதற்காக சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் மீது ‘அறிவுசார் சொத்துடைமை கோரி’ வழக்கு தொடர்ந்திருக்க முடியும். பெரியார் கொள்கை பரவட்டுமே என்ற கொள்கை உணர்வும், பெருந்தன்மையும் அவர்களுக்கு இருந்தது. ‘வீராங்கனை’ விசுவாசிகள், ஆனூராரைக் குறை கூறுவதா? ‘குடி அரசு’ பிரச்சினையில், முகமூடி கிழித்தெறியப்பட்டு, மக்கள் மன்றத்தில், கேவலப்பட்டுக் கிடக்கும் ‘ஆயுள் செயலாளரை’ எவ்வளவு பெரிய ‘பேனா - விற்பன்னர்கள்’ வந்தாலும், இனி காப்பாற்ற முடியாது. ‘விடுதலை’யில் ‘உப்பு சப்பில்லாத’ சொத்தைக் கருத்துகளே - வாதங்கள் என்ற பெயரில் முன் வைக்கப்படுகின்றன. அவர்களின் நிலை மிக மிக பரிதாபகரமாகிவிட்டது என்பதற்கு தரம் தாழ்ந்த எழுத்துக்களே சாட்சியங்களாக நிற்கின்றன.

ஒரு அரசியல் கட்சியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, அமைச்சர் பதவியையும் வகித்து, ஒரு கட்டத்தில், இந்தப் பதவி அரசியலே வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு, கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு, பெரியார் தொண்டராக மாறிய பெருமைக்குரிய அதிசய மனிதர் ஆனூர் ஜெகதீசன்! சமுதாய இயக்கத்தில் இருந்து கொண்டே அரசியல்வாதிகளை மிஞ்சுமளவுக்கு ‘பந்தா’ காட்டும் “அடையாறு ஆலமரங்கள்” உலாவரும் தமிழகத்தில், அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டு, பெரியார் கொள்கைகளைப் பரப்ப தம்மை ஒப்படைத்துக் கொண்ட நேர்மையின் சின்னம், ஆனூர் ஜெகதீசன்! அவர் வீரமணியை ‘அவன் - இவன்’ என்று பேசியதாக கூச்சநாச்சமின்றி ‘பொய்களை’ பரப்புகிறது, ‘விடுதலை’. பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, குறுக்கு வழிகளில் தனது தொண்டர்களைத் ‘தட்டி எழுப்பி’ எழுந்து நிற்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

“ஒரு சினிமா நடிகரை புரட்சித்தலைவர் என்று அவர் பினனால் சுற்றித் திரிந்தவர்” என்றும், ‘ஜீவன்’ என்றும், கழுத்தில் செயின் போட்டிருக்கிறார் என்றும், கீழ்த்தரமாக எழுதுகிறார்கள். ஆனூராரை இழிவுபடுத்துவதற்காக எம்.ஜி.ஆரையும் சேர்த்து இழிவுபடுத்துகிறார்கள். அப்படி சினிமா நடிகரை ‘புரட்சித் தலைவர்’ என்று கூறியவரை, தலைமைக் கழக செயலாளர் பதவியில் அமர வைத்தது யார்? இவர்கள் தானே? அப்போது - இவர்களின் ‘சிந்தனை’ எங்கே போனது? பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்த போதும், பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை அரசு ஏற்கும் என்று அறிவித்த போதும், அன்று - எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடத்தியது, இதே திராவிடர் கழகம் தானே! அப்போது பாராட்டு மழையில் குளிப்பாட்டிய எம்.ஜி.ஆர்., இப்போது - அவர்களுக்கு ஒரு சாதாரண சினிமா நடிகராகிவிட்டார்.

இருக்கட்டும்; ஆனூர் ஜெகதீசனாவது எம்.ஜி. ஆரை புரட்சித் தவைலர் என்று ஏற்றுக் கொண்டார். ஆனால் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவியாகவோ’, ‘சமூகநீதிகாத்த வீராங்கனையாகவோ’ திராவிடர் கழகம் தூக்கிப் பிடித்தபோது தனது வாயால் கூற முடியாது என்று தன்மானத்துடன், உறதியாக நின்று காட்டினார். எம்.ஜி.ஆரையே சினிமா நடிகர் என்று எழுதும் மின்சாரங்கள், ஜெயலலிதாவை ‘சமூகநீதிகாத்த வீராங்கனை’களாக்கியதற்கு என்ன பதிலை கூறுவார்களாம்?

இன்றைக்கு அதிகாரத்தில் கலைஞர் இருக்கிறார் என்பதால், இப்போது எம்.ஜி.ஆர். சினிமா நடிகர் என்று கேவலப்படுத்தப்படுகிறார். அன்று எம்.ஜி.ஆர். அதிகாரத்தில் இருந்தபோது, இவர்கள் கலைஞரைக் கேவலப்படுத்தியவர்கள் தான் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. “வீரமணி ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுக்கட்டும்; அவரது ‘கட் அவுட்டுக்கு’ வேண்டுமானாலும் முண்டு கொடுக்கட்டும்” என்று, அன்று கலைஞரே, வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு, இவர்களின் ‘வீராங்கனை’ விசுவாசம், படு தீவிரமாக இருந்ததையும், மக்கள் மறக்கவில்லை.

ஆட்சிகள் மாறும்போதெல்லாம் புதிய புதிய அரிதாரங்களைப் போட்டுக் கொண்டு, வேடம் கட்டி ஆடும், இவர்களைவிட, தலைவரின் “தாறுமாறுகளுக்கு” பின்னால், பேனாவைத் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பவர்களைவிட, அரசியலையே தூக்கியெறிந்துவிட்டு, பெரியார் கொள்கையாளராக நெஞ்சுயர்த்தி, ஒரே லட்சியத்தை உறுதியாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆனூர் ஜெகதீசன், கம்பீரமாகவே உயர்ந்து நிற்கிறார்.

ஏன், கி. வீரமணி கூட “ஈழத்திலே கருணா என்பவன்; இங்கே சில அனாமதேயங்கள்” என்று பேசியிருப்பது, அவர்களின் விடுதலையிலே வந்திருக்கிறதே. (ஆக.26) இது என்ன உலகத்தரம் வாய்ந்த பேச்சா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com