Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2008

நீங்களும் செய்ய மாட்டீர்கள்; மற்றவர்களையும் செய்ய விட மாட்டீர்களா?
கி.வீரமணிக்கு ‘தமிழச்சி’ நேரடி கடிதம்

பிரஞ்சு நாட்டில் - பாரீஸ் நகரத்தைச் சார்ந்த பெரியாரிய பெண் - ‘தமிழச்சி’ தனது இணைய தளங்களின் வழியாக 6000த்துக்கும் அதிகமான பெரியார் கட்டுரைகளையும் வெளியிட்டு, உலகம் முழுதும் பெரியாரியலைப் பரப்பிய சாதனையாளர். பாரிசில் தமிழர்களின் மூடநம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, அதன் காரணமாக கடும் எதிர்ப்புகளை சந்தித்தாலும், துணிவோடு போராடிக் கொண்டிருப்பவர். பாரிசில், தமிழர்கள் நடத்திய ‘விநாயகர் சதுர்த்தி’ கொண்டாட்டங்களுக்கு எதிராக பிள்ளையார் ஆபாசங்களை அச்சிட்டு, நேரடியாக துண்டறிக்கைகளை வழங்கியவர். இவ்வாண்டு - பிள்ளையார் விழா கொண்டாட்டங்களுக்கு, எதிராக பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை ஆணைப் பெற்றுள்ளவர்.

பாரீஸ் நகரத்தில் பெரியார் கொள்கைகளுக்காக உயிரையே பணயம் வைத்துப் போராடும், இந்த பெண் போராளி - திராவிடர் கழகத்துடனும், அதன் தலைமையிடமும் தொடர்பு கொண்டு செயல்பட்டவர். திராவிடர் கழகத்தின் ‘விடுதலை’ ஏடும், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளராக அறிவித்து, முதல் பக்கத்திலேயே அவரது படத்துடன், பெரிய தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டது. அதே தமிழச்சி தனது இணையதளத்தில் - ‘தோழர் கி. வீரமணி அவர்களுக்கு’ பகிரங்கமாக கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். பாரீஸ் நகரத்துப் பெரியாரியப் போராளிப் பெண் அநீதிகளை எதிர்த்து, ஆவேசத்துடன் கொதிப்பதை அவரது எழுத்துக்களைப் படிப்போர் உணர முடியும்.

தோழர் கி.வீரமணி அவர்களுக்கு, “பெரியார் டைப்பிஸ்ட்” தமிழச்சி எழுதிக் கொள்வது,

தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துக்கள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்துனையும் அவர்களால் 1935 இல் உருவாக்கப்பட்டு, 1952 இல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும். இவைகளை அச்சில் வெளியிட்டு விளம்பரமும், வருவாயும் தேட தனிப்பட்ட சிலரும், சில இயக்கங்களும், பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரிய வருகிறது! அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்ற உங்களின் அறிவிப்பை விடுதலையில் காண நேர்ந்தது. அறிவிப்பு குறித்து விமர்சிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்...

தந்தை பெரியாரின் எழுத்துக்களை நான் இணையத்தில் பதிவு செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் வாழ்த்துக்களுடன் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தீர்கள். அதன் பின் இணையத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யும் உரிமையையும் எனக்குத் தந்தீர்கள். பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா என்ற அமைப்பை பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஏற்படுத்தியபோது உலகமயமாகும் பெரியார் என்று பூரித்து போய் “விடுதலை”யில் செய்தி போட்டீர்கள். உங்களுடன் தொலைபேசியில் பேசியபோது பெரியார் எழுத்துக்களை நாட்டு உடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததற்கு அதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள்.

மற்றொரு முறை சில பேச்சுக்கள் வந்தபோது, தோழர் கொளத்தூர் மணி அவர்களும், நீங்களும் என்னைப் பொறுத்த வரையில் ஒன்றுதான் என்று சொன்னதற்கு, கழகத்தில் இருந்து வெளியேற்றியவர்களுடன் எல்லாம் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்றீர்கள். மற்றொரு முறை இணையத்தில் பெரியார் கருத்துக்களைப் பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கும்படி சொன்னதற்கு அதெல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. உங்களைவிட அதிகமாக இருக்கிறது என்று 35 கட்டுரைகளை 3500 கட்டுரைகளுடன் இணைத்துப் பேசினீர்கள்.

சமீபத்தில் இணைய வானொலி “பெரியார் குரல்” ஆரம்பிக்கப்பட்டபோது தந்தை பெரியார் குறித்த ஒலி நாடாக்கள் கேட்டதற்கு உங்கள் புகழ் பாடும் ஒலிநாடாக்களே அதிகமாக வந்து சேர்ந்தது. இணைய வானொலியில் முதல் நாள் ஆன் செய்தபோது, “கடலூர் வீரமணி” குறித்த பாடல் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போய் உடனே பாடலை நிறுத்தச் சொன்னேன். “தோழரே! வீரமணியார் புகழ் பாட தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். நம்ப குறிக்கோள் தந்தை பெரியாரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்பதுதான்.

தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒலி நாடாக்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்றேன். எங்கே, எப்போது சந்தடி சாக்கில் உங்கள் புகழை பரப்ப முடியுமோ அங்கேயெல்லாம் புகுந்து வீரமணி புகழ் பாட வைத்து விடுகிறீர்களே! அப்போதே உங்களை பற்றிய மதிப்பு குறைந்து போய்விட்டது. (அதற்கு முன்பும் நல்ல அபிப்பிராயம் இல்லை) என் அனுபவத்தில் உங்களுடன் பேசியதில் உங்களிடம் செயல் திட்டங்களுக்கான எந்த அறிகுறியும் கிடையாது என்பதை உணர்ந்து கொண்டேன்.

கேள்விகள் கேட்பதற்கு நிறைய இருக்கின்றன. இப்படியெல்லாம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்? நான் இனி என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்று மிக தெளிவாகவே அறிந்து இருக்கின்றேன். இருப்பினும் சக தோழர்களை இழிவாக நினைக்கும் உங்கள் சிந்தனை என்னை கேள்வி கேட்கத் தூண்டுகிறது! எனக்குக் கிடைத்த அங்கீகாரம் ஏன் அவர்களுக்கில்லை? சக தோழர்களுக்கு உங்களிடம் இருக்கும் ‘வயிற்றெரிச்சல்’ கொஞ்சம் நாகரிகமாக சொல்லப் போனால் ‘காழ்ப்புணர்வு’க்கு ஒரு அளவில்லையா?

தந்தை பெரியார் விட்டுச் சென்ற கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்து நீங்களும் எதுவும் செய்ய மாட்டீர்கள். மற்றவர்களையும் எதையும் செய்ய விட மாட்டீர்கள் என்றால் திராவிடர் கழகத்திற்குள் சிறை வைத்திருக்கும் எங்கள் பெரியாரை முதலில் உங்களிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும்.

தோழர் கொளத்தூர் மணி தந்தை பெரியாரின் எழுத்துக்களை முன்னெடுத்து செல்லும் பணியில் எதை எதை அடமானம் வைத்து செயல்படுகிறார் என்று தெரிந்திருந்தும், வியாபார நோக்கத்திற்காகவும், வருவாய் ஈட்டவும் செயல்படுவதாக எப்படி அவர்களுடைய உணர்வுகளை ஒரு கருப்புச் சட்டைக்காரனாக இருந்து இவ்வளவு கேவலமாக விளித்து பேச முடிகிறது உங்களால்? அவர்கள் வியாபார நோக்கத்துடன் செயல்படுவதாக இருந்தால் புத்தகத்தில் பணத்தைக் கொட்டி தமிழ் மக்களிடம் சம்பாதித்து விட முடியுமா? அப்படியொன்று நடந்தால் அது உலக சாதனையாகத்தான் இருக்கும்.

தந்தை பெரியாரை உலக மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைப் போல் மாய தோற்றத்தை உண்டாக்கும் நீங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் தந்தை பெரியாரை கேரள மாநிலத்திற்குக்கூட கொண்டு செல்ல முடியாது. அறிவியலை நம்பும் பகுத்தறிவுவாதிகளின் கூட்டம் புத்தகத்தையும் தாண்டி இணையத்தை நோக்கி சிந்திக்க வேண்டும். இனிவரும் சந்ததியினருக்கு இணையம் மூலமே தொடர்புகள் இருக்கும்போது, அதை நாம் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும், கொள்கைகளை பரப்புவதற்கும் உபயோகப்படுத்த முற்பட வேண்டும்.

உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் இன்று இணையம் மூலமாக தான் நாட்டு செய்திகளை அறிந்து கொள்கின்றனர். தந்தை பெரியாரின் எழுத்துக்களை கலைஞர் நாட்டுமையாக்க முற்பட்டபோது தடுத்து விட்டீர்கள். உங்களுடைய செயல்களுக்கெல்லாம் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பித்துக் கொண்டாலும், “குடிஅரசு தொகுதி”க்கு இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் இழந்து விட்டீர்கள். அதனாலென்ன மானமிகு, மானமிகு வீரமணி என்று பார்க்கும் இடங்களிலெல்லாம் நோட்டீஸ் ஒட்டி உங்களுடைய மானத்தை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். பெரியாரை நிலைநிறுத்த என்ன செய்யப் போகிறீர்கள்?

எங்களுக்கு தெரிந்த ஒரே வழி தந்தை பெரியாருடைய எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதுதான். அது தான் உங்களுடைய ஒருதலைபட்சமான நிலைப்பாடுகளுக்கு நல்லது. எனக்குக் கிடைத்த அங்கீகாரம் சக தோழர்களுக்கும், தனி மனிதர்களுக்கும், இதர அமைப்புகளுக்கும் கிடைக்க வேண்டும்.

இப்படிக்கு
சுயமரியாதையை உங்களிடம் அடகு வைக்க விரும்பாத
“பெரியார் டைப்பிஸ்ட்” தமிழச்சி

பின்குறிப்பு:

என்னை ‘பெரியார் டைப்பிஸ்ட்’ என்றே விளித்திருக்கின்றேன். ஏனெனில் அதற்கான தகுதி எனக்கு உண்டு. 6000 கட்டுரைகளையும், தந்தை பெரியார் எழுதிய 8 புத்தகங்களும் டைப் செய்த தகுதியுமே இணையத்தில் எனக்கு ‘பெரியார் டைப்பிஸ்ட்’ என்ற பெயரை கொடுத்தது. இதைவிட சிறந்த மரியாதை எனக்கு கிடைத்து விடாது. ஆனால், மானமிகு, புண்ணாக்குமிகு என்று என்னை விளித்துப் பேசுவது அதீத தற்புகழ்ச்சியாக இருக்கும். நம்மிடம் இருப்பது மானமா? அகங்காரமா? அல்லது நாம் அவமானத்தின் அடையாளமா என்பதெல்லாம் நம்முடைய செயல்களை வைத்து அடுத்தவர் நம்மைப் பற்றி கணிக்க வேண்டிய சங்கதி என்பதை மட்டும் உணர்ந்து கொண்டால் போதும்!

பதில் வருமா?

“வேறு யாருக்கும் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து இந்த அளவு அங்கீகாரம், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குக் கிடைத்த அளவுக்குக் கிடைத்திடவில்லை.”
- ‘விடுதலை’யில் ‘மின்சாரம்’ கட்டுரை
-
இதுதான் உண்மை என்றால், ஒரே ஒரு கேள்வி. பெரியார் உயிரோடு இருந்தவரை அவரது அறக்கட்டளையில் கி.வீரமணியை உறுப்பினராகக்கூட, பெரியார் நியமிக்காதது ஏன்? மின்சாரங்கள் பதில் சொல்வார்களா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com