Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2008

உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர தீர்ப்பு!
விடுதலை ராஜேந்திரன்

கோயில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், பூசை உட்பட சடங்குகளில் அவர்கள் பங்கேற்பதை, பாலின அடிப்படையில் தடுக்கக் கூடாது என்றும், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பை (செப்.5, 2008) வரவேற்று பாராட்டுகிறோம். உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, சமூக வரலாற்றில் பதியத்தக்க இத்தகைய புரட்சிகர தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் துர்க்கையம்மன் கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மகள் அர்ச்சகராக பூசை செய்ய விரும்பினார். இப்படி, துணிவான ஒரு முடிவுக்கு வந்த அந்த பெண்ணின் பெயர் பின்னியக்காள் (வயது 45).

பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ள, ஆணாதிக்க-பார்ப்பன-சாதியமைப்பு சமூகம், அதை அனுமதித்து விடுமா? எதிர்ப்புகள் எழுந்தன. ஆணாதிக்க சாதி வெறியர்கள் இதைத் தடுக்க முயன்றபோது, உசிலம்பட்டி வட்டாட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு, பெண்ணுக்கு பூசாரியாகும் உரிமையில்லை என்று கூறி, ஆண் பூசாரி ஒருவரையும் தேர்வு செய்தது. உள்ளூர் சாதி ஆதிக்க பெண்ணடிமைக்கு அரசு எந்திரமும், துணை போயிருப்பது தான் வெட்கக் கேடானது. நீதிபதி தமது தீர்ப்பில் இதைத் தவறாமல் சுட்டிக் காட்டியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசு ஊழியரான ஒரு தாசில்தாரே பிற்போக்குசக்திகளின் மூடத்தனமான கருத்துகளுக்கு துணை போயிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டி, கண்டித்துள்ளார். “வணங்கப்படக்கூடிய கடவுள் - அம்மன் என்ற பெண் உருவத்தில் இருந்தும்கூட, ஒரு பெண் அர்ச்சகராக இருக்கக் கூடாது என்று கூறுவதுதான், துயரமாகும். வேத காலங்களில்கூட - பெண்கள், பூஜைகள், சடங்குகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, இந்த துர்க்கையம்மன் கோயில் ஆகம சாஸ்திர வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை. நாட்டின் தென் பகுதியிலுள்ள உள்ளூர் கலாச்சாரங்களின் அடையாளங்களான கிராமக் கோயில்கள் ‘மனுஸ்மிருதி’களிலிருந்து விலகியே உள்ளன’ என்று நீதிபதி சமூகப் பார்வையோடு சுட்டிக் காட்டியுள்ள கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும்.

சமூகக் கண்ணோட்டத்தில் இக்கருத்துக்களைப் பதிவு செய்த நீதிபதி, சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். இத்தகைய உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதன் வழியாக மட்டுமே அரசியல் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 51ய(ந) ஆகிய பிரிவுகள் செயல்பூர்வமாகிறது என்ற அர்த்தத்தைப் பெற முடியும். அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு பால் அடிப்படையில் குடிமக்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகிறது. சட்டப் பிரிவு 51ய(ந) பெண்களின் கவுரவத்தைக் குலைக்கக் கூடிய செயல்பாடுகளைக் கைவிடுதலை ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை கடமையாக வலியுறுத்துகிறது” என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகமங்களுக்குள்ளும், மனுஸ்மிருதிக்குள்ளும் கோயில்கள் கொண்டு வரப்படும்போது, அங்கே அரசியல் சட்டம் வழங்கியுள்ள பெண்ணுரிமைகள் மீறப்படுவதை தீர்ப்பு சுட்டிக்காட்டியிருப்பதோடு ஆகமங்களும், மனுஸ்மிருதிகளும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவையே என்பதை, இத்தீர்ப்பு துணிவுடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பெண் அர்ச்சகராகப் பதவியைத் தொடருவதற்கு மாவட்ட ஆட்சியாளர் உரியப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்றும், நீதிபதி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

ஆகமங்களுக்கு உட்படாத கிராம கோயில்களுக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ஆகம கோயில்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தபோதே, கழகம் இந்தக் கருத்தை சுட்டிக் காட்டியுள்ளதை குறிப்பிட விரும்புகிறோம். தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கோயில்களில் பெண்கள் ஊழியர்களாக பணியாற்றுவதற்கே தடை விதித்திருந்தது. மாநில அரசு தேர்வாணையம் இந்து கோயில் நிர்வாகத்துக்கான ஊழியர்கள் தேர்வில் பெண்கள், விண்ணப்பிக்கக் கூடாது என்று விளம்பரம் செய்திருந்ததை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையைத் தகர்த்தது. அதற்குப் பிறகு தான் கோயில் நிர்வாகங்களில், பெண்கள், பணியாற்றும் உரிமை கிடைத்தது. இப்போது, நீதிபதி கே. சந்துரு வழங்கியுள்ள தீர்ப்பு ஆகமக் கோயில்களுக்கும் விரிவாகும் போதுதான் பெண்கள் மீது மதம் விதித்து வரும் தடைகளைத் தகர்க்க முடியும்.

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்ற உரிமை கோரிக்கை ஆண்களுக்கானதாக மட்டுமே நின்று விட்டால், அது முழுமையான உரிமைக்கான கோரிக்கையாகவும் இருக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com