Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2007

அரசு திட்டங்களில் மத உணர்வு குறுக்கிடுவதா?
விடுதலை ராஜேந்திரன்

மீண்டும் ‘ராமனை’ வைத்து மதவாத சக்திகள் மிரட்டுவது, கண்டிக்கத்தக்கது என்றால், அந்த மிரட்டலுக்கு, மத்திய கூட்டணி ஆட்சி பணிவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து சுப்ரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசு தனது நிலையை விளக்கும் மனுவை தாக்கல் செய்துள்ளது. பா.ஜ.க.வினரும், ‘சங் பரிவார்’ களும் ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் மணல் திட்டு, ‘ராமன்’ கட்டிய பாலம் என்று கூறுவதை தொல்பொருள் ஆய்வுத் துறை மறுத்துள்ளது. இந்த மணல் திட்டு மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் அல்ல, அது இயற்கையாக உருவானது என்று தொல்பொருள் ஆய்வுத் துறை அறுதியிட்டுக் கூறுகிறது. மத்திய அரசு, இதைத் தனது மனுவில் கூறியுள்ளது. தொல் பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ள மற்றொரு கருத்து மிக முக்கியமானது.

ராமாயணத்தில் வரும் பாத்திரங்களோ அல்லது ராமாயணத்தில் வரும் சம்பவங்களோ, உண்மையாகவே நடந்தவை என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இல்லை” ((There was no evidence to prove the existence of the characters or the occurrence of the events in the Ramayana) என்று தொல்பொருள் ஆய்வுத் துறை திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதுமட்டு மன்றி, இந்திய புவியியல் ஆய்வு மய்யமும் (Geological Survey of India)2002லிருந்து 2005 ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் ஆய்வுகளை நடத்தி, ராமர் பாலம் என்று கூறப்படும் ஆதம் பாலம், இயற்கைப் படிமங்களால் உரு வானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. (Adam’s Bridge was a natural geological formation comprising compact clay, calcareous sandstone and fossibiferous lime stone) உச்சநீதிமன்றத்தில் - மத்திய அரசு, இந்த ஆய்வு மய்யங்களின் முடிவு களை முன் வைத்து பதில் மனுவை தாக்கல் செய்தது.

மதவாத பார்ப்பன சக்திகள் விஞ்ஞான அடிப்படையிலான ஆய்வுகளை செரிக்க முடியாமல் அலறினார்கள். மிரண்டு போன மத்திய அரசு முதலில் ராமாயணம் நடந்த கதையல்ல, அதன் பாத்திரங்களும் கற்பனையானவை என்ற பகுதியை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அடுத்த நாளே, மத்திய அரசு தாக்கல் செய்த முழுமையான பதில் மனுவையும் திரும்பப் பெறுவதாக ‘பல்டி’ அடித்து விட்டது. உண்மைகளை கூறியதற்காக இரண்டு தொல்பொருள் துறை அதிகா£கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். இது உண்மையான கண்டனத்துக்குரியது. மூன்று மாதம் வரை, திட்டம் கிடப்பில் போடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துவிட்டது.

மதவெறி சக்திகளின் மிரட்டலுக்கு, மத்திய அரசு, இப்படிப் பணிந்து போனது, வாக்களித்த மக்களுக்கே இழைக்கப்பட்ட துரோகமாகும். கடந்த காலத்தில் பா.ஜ.க. ஆட்சியின் இத்தகைய மதவெறி அணுகுமுறைகளைப் புறந்தள்ளி விட்டு, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றே மக்கள், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை வெற்றி பெற வைத்தார்கள் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. பரவலாக மக்களிடையே உள்ள உணர்வுகளுக்கு எதிராக, அரசு செயல்பட விரும்பவில்லை என்று கூறியிருப்பது, இன்னும் மோசமானது. பரவலாக மக்களிடையே உள்ள உணர்வு - ‘ராமர் பாலம்’ என்று ஒன்று இருந்தது என்று நம்புவதாகவே அரசு கூறுகிறது. இது தான் மக்களிடையே உள்ள பரவலான உணர்வு என்ற முடிவுக்கு இந்த ஆட்சி எப்படி வந்தது என்று கேட்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கை சேது சமுத்திரத் திட்டமாகும். மத உணர்வோடு மக்கள் எதிர்க்கிறார்கள் என்று எந்த அடிப்படையும் இல்லாமல், ஒரு கருத்தை மத்திய அரசு முன் வைக்கிறது. இதற்காக விஞ்ஞான பூர்வமாக தொல் பொருள் ஆய்வுத் துறையும் புவியியல் ஆய்வுக் கழகமும் ஆராய்ந்து அறிவித்த அறிவியல் உண்மைகளை திரும்பப் பெறுகிறது.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, இத்திட்டம் தொடங்கியது. ‘ராமன்’ கட்டிய பாலம் என்ற மதவெறிக் கண்ணோட்டம் - தமிழ்நாட்டில் மக்களிடையே கிடையாது. மத அரசியல் நடத்தத் துடிக்கும் சில சக்திகள் வேண்டு மானால் எதிர்க்கலாம். அது தமிழ்நாட்டுத் தமிழர்களின் பொதுவான கருத்து அல்ல. தமிழக அரசையோ, முதல்வரையோ கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை எடுப்பது நியாயமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது. தொடர்புடைய துறையின் அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் கூட கலந்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பார்ப்பன சக்திகள் வழக்கம் போல் ஆட்சி எந்திரத்தில் செல்வாக்குடன் இருப்பது உறுதியாகியிருக்கிறது!

இராமாயணம் ‘நடந்தது’ திரேதாயுகம் என்கிறார்கள். அதாவது 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது மனித இனமே உருவாகவில்லை. நவீன மனிதன் (Homo - Sapiens) உலகம் முழுதும் பரவ ஆரம்பித்ததே சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். பிறகு எப்படி, ராமன் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தைக் கட்டியிருக்க முடியும்?

அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான ‘நாசா’ செயற்கைக் கோள் மூலம் படம் பிடித்து ராமன் பாலம் இருப்பது உண்மைதான் என்று கூறிவிட்டதாக ஒரு புரளியைப் பரப்பி வந்தார்கள். அதை ‘நாசா’ ஆய்வு மய்யம் மறுத்துவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே - பார்ப்பன மதவாத சக்திகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனக் குரலை உயர்த்தவே செய்கின்றன. ஜெய்ராம் என்ற பார்ப்பன அமைச்சர், கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்கும், அம்பிகா சோனி பதவி விலக வேண்டும் என்று கூறியிருப்பதை சுட்டிக் காட்டுகிறோம். ஒவ்வொரு குடிமகனிடத்திலும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. கொல்கத்தாவில் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டி - கடந்த ஜுலை 11 ஆம் தேதி பேசிய பிரதமர் மன்மோகன்சிங் -

“இந்தியாவின் எதிர்காலம், ஜவஹர்லால் நேரு கூறிய அறிவியல் மனப்பான்மையை உள்ளத்தில் நாம் பதிய வைப்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது” என்று பேசினார்.

ஆனால், அறிவியல் உண்மைகளை மூடத்தன உணர்வுகளுக்காக விட்டுக் கொடுப்பதுதான் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதா, என்று கேட்கிறோம்?

பெரியார் இயக்கத்தின் ராமாயண - பார்ப்பன - மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரங்கள் சமுதாய முன்னேற்றத்திறகு உரமூட்டக் கூடியவை என்பது இப்போதாவது புரிகிறதா?

மத்திய அரசின் இந்த பின் வாங்கும் நடவடிக்கைகளால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய திட்டம் பறிபோவதை, தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்! தமிழ்நாட்டில் இராமகோபாலன்களின் இந்த மதவெறிப் பிரச்சாரத்தை தமிழக மக்கள் - மத நம்பிக்கையாளர்களாக இருந்தாலும்கூட எள்ளி நகையாடவே செய்வார்கள்.

வடநாட்டில் வேண்டுமானால் - மதவெறி சக்திகள் தோள் தட்டி, சூலாயுதம் தூக்கி நிற்கலாம்! அவர்களின் மிரட்டலுக்கு - தமிழ்நாடு பணிய வேண்டிய தேவையில்லை. அந்த மதவெறி சக்திகளை சுமந்து கொண்டு ‘இந்தியனாக’ இருக்கவும் தேவையும் இல்லை. இந்த மண்ணின் வாசனை தனித்துவமானது, தமிழகத்தின் இந்த உணர்வுகளை - இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com