Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2007

அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி- (3). அமெரிக்கா ஈரானைக் குறி வைப்பது ஏன்?
விடுதலை ராஜேந்திரன்

அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ஏதோ அணு மின்சாரம் தயாரிப்புக்கான ஒப்பந்தமாக மட்டுமே கருதிவிடக் கூடாது. இதற்கு வேறு பல பரிமாணங்கள் உண்டு.

இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு முன்பு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும், வங்காளப் பார்ப்பனருமாகிய பிரணாப் முகர்ஜி 2005 ஜுன் 28-ல் அமெரிக்காவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார். அது இராணுவ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் என்ன கூறுகிறது?

பன்னாட்டு ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க ராணுவமும், இந்திய ராணுவமும் இணைந்து பணியாற்றும். (இதன்படி - அமெரிக்கா, தன்னிச்சையாக - மேலாதிக்க வெறியோடு மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் துணைப் போக வேண்டியிருக்கும்)

ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உடன்பாடு.

இது தவிர, இப்படி ஒரு ராணுவ ஒப்பந்தத்தை 2005-ல் உருவாக்கிக் கொண்டு, அதன் தொடர்ச்சியாக 2007-ல் அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளார்கள். அமெரிக்க இந்திய ராணுவ ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் - அணுசக்தி ஒப்பந்தம் என்பதை பிரதமர் மன்மோகன்சிங்கே, ‘இந்தியா டுடே’ இதழுக்கு அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படி இந்தியாவுடன் ராணுவ ரீதியாக அமெரிக்க ஒப்பந்தம் போட ஏன் துடிக்கிறது?

ஆசியாவின் மிகப் பெரிய நாடான இந்தியாவை தனது வலைக்குள் கொண்டு வந்து, அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருக்கும் மற்றொரு ஆசிய நாடான சீனாவை அச்சுறுத்துவது; மேற்கு ஆசியாவில் ஈராக்கைத் தொடர்ந்து ஈரான் நாட்டில் தலையிடுவது. அதற்காக ஈரானிடம் - இந்தியாவின் நல்லுறவை முறிப்பது - இதுவே முக்கிய நோக்கம்.

ஈரான் மீது அமெரிக்காவுக்கு ஏன் அவ்வளவு கோபம்? இதற்கான விடையை சுருக்கமாகப் பார்ப்போம்.

மேற்கு ஆசியாவில் உள்ள நாடான ஈரான் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அணு மின்சாரத்தையும் தயாரித்து வருகிறது. அதற்குத் தேவையான மூலப்பொருள் செறிவூட்டப்பட்ட யுரேனியம். (யுரேனியத்தில் அடங்கியுள்ள மிகக் குறைந்த அளவில் உள்ள அணுசக்தியின் ஆற்றலை அதிகப்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு செறிவூட்டுதல் என்று பெயர்)

இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு, அணுகுண்டும் தயாரிக்கலாம். ஏற்கனவே, ‘அணு ஆயுத பரவல் தடை’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஈரான். எனவே ஒப்பந்தத்துக்கு எதிராக - ஈரான், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தி, அணுகுண்டு தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. சர்வதேச அணுசக்தி கழகத்திடம் அமெரிக்கா தொடர்ந்து புகார் கூறியது. சர்வதேச அணுசக்தி கழகத்தின் விஞ்ஞானிகள் ஈரானில் பல மாதங்கள் தங்கி, சோதனைகள் நடத்தினர். அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது என்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்க வில்லை. ஈரான் நாட்டில் அணு ஆயுதம் எதுவும் தயாரிக்கப்படவில்லை. அந்த நாட்டினால் எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் வெளிப்படையாகவே அறிவித்தனர். சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைவராக இருந்தவர் பெயர் முகம்மது எல்பராடி என்பதாகும். இரண்டு முறை இதன் தலைவர் பதவியில் இருந்த அவரின் பதவிக்காலம் 2005-ன் இறுதியில் முடிவடைய இருந்தது.

மூன்றாவது முறையும் பதவியில் நீட்டிக்க அவர் விரும்பினார். ஆனால், ஈரானில் அணு ஆயுதம் இல்லை என்று அறிவித்து விட்டதால், கோபமடைந்த அமெரிக்கா, அவர் பதவியில் நீட்டிப்பதை விரும்பவில்லை. அவரது பதவி நீட்டிப்பை எதிர்த்தது. திடீரென எல்பராடி தனது குரலை மாற்றிக் கொண்டார். ஈரானுக்கு ஆதரவாக உண்மையைப் பேசிய அவர், பிறகு குரலை மாற்றிக் கொண்டு, “ஈரான் சோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. நாங்கள் மேலும் பல இடங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும். வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி ஈரான், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிவித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி, சர்வதேச அணுசக்தி கழகத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தியாவும் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது. இந்தியாவின் இந்த முறைகேடான முடிவுக்குக் காரணம் - இந்தியாவும், அமெரிக்காவும் உருவாக்கிக் கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம்தான். அதன் பிறகு அமெரிக்க விருப்பப்படி செயல்பட முன் வந்த அணுசக்தி கழகத்தின் தலைவரின் பதவியும் - மூன்றாவது முறையாக நீடிக்க அமெரிக்காவும் அனுமதித்தது.

ஈரான் மீது அமெரிக்கா குறி வைப்பதற்கான முக்கிய காரணம் - அந்நாட்டின் எண்ணெய் வளமாகும்.ஈரானின் எண்ணெய் இருப்பு 12580 கோடி பேரல்கள். இது ஈராக்கைவிட அதிகம். சவுதி அரேபியாவுக்கு அடுத்து அப்பகுதியில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடு ஈரான் தான். அதே போல் 940 லட்சம் கன அடி எரிவாயுவும் ஈரானில் இருக்கிறது. உலகிலேயே ரஷ்யாவுக்கு அடுத்தபடி அதிக எரிவாயுக் கொண்ட நாடு ஈரான் தான். இதனால் தான் ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் அமுலாகும் போது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்குமிடையே உள்ள மோதல் போக்கு மறைந்து சுமூக உறவு உருவாகும் வாய்ப்புகள் இருந்தன. ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியான உறவுக்கு பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இந்த எரிவாயு குழாய் திட்டத்தை அமெரிக்கா வெளிப்படையாகவே எதிர்த்தது. ஈரானிடமிருந்து இந்தியா பெறவிருந்த இந்த எரிவாயுத் திட்டத்தை முடக்கி, ஈரானைத் தனிமைப்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா, இப்போது தனது நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஈரான்-இந்தியா குழாய் வழி எரிவாயுத் திட்டம், இப்போது பலிகடாவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அணு சக்தி தொழில்நுட்பத்தைத் தருவதாக அமெரிக்கா கூறுகிறது.

ஈரானின் எண்ணெய் வளம் அமெரிக்காவை ஏன் உறுத்துகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி! ஈரானின் எண்ணெய் வளம் - உலக எரி சக்தி சந்தையில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இது மேலும் வளரக்கூடிய வாய்ப்புகள் இருக் கின்றன. அமெரிக்காவின் பெரும் முதலாளிகள் பெருமளவில் இந்த சந்தையில் முதலீடு செய்து சந்தையைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்புகிறார்கள். ஆனால் ஈரானோடு வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்கா தடை செய்துள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவும், சீனாவும், ஈரானோடு வர்த்தகம் செய்கின்றன. இந்த நாடுகளின் வர்த்தகத் தொடர்புகளால் ஈரானுக்கு, பல கட்டமைப்பு வசதிகள் கிடைக்கின்றன. இதனால் - அடுத்த பத்தாண்டுகளில் ஈரான் தலைநகரில் ‘ஆசிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பு’ ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அந்த நிலை வரும்போது உலக எண்ணெய் விநியோகத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் உடையும். ஈரானும் தன்னுடைய எண்ணெய் வர்த்தகத்தின் பெரும் பகுதியை ஆசியாவின் பக்கமே திருப்பிவிட விரும்புகிறது. இதன் மூலம் எரிசக்தித் துறையில், அமெரிக்க ஆதிக்கம் குறையும்.

இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு நெருக்கடி உருவாகும் ஆபத்துகளும் இதில் இருக்கிறது. அது என்ன தெரியுமா? இப்போது எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்காவின் நாணயமான டாலர் தான் பயன் படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? இரண்டு முக்கியமான எண்ணெய் சந்தைகள் நியுயார்க்கிலும், லண்டனிலும் இருக் கின்றன. இந்த எண்ணெய்ச் சந்தைகளில், அமெரிக்காவின் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது.

அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயம் யூரோ. இதன் மதிப்பு, அமெரிக்க டாலரைவிட அதிகமாகிவிட்டது. ஏற்கனவே சில நாடுகள் டாலரை விட்டுவிட்டு ‘யூரோ’வில் எண்ணெய் வர்த்தகம் செய்யத் தொடங்கிவிட்டன. ஈரானும், தனது வர்த்தகத்தில் ஒரு பகுதியை ‘யூரோ’வில் நடத்துகிறது. இந்த நிலையில் தான் நாம் மேற்குறிப்பிட்டபடி, நியுயார்க், லண்டனில் உள்ள பெரும் எண்ணெய் சந்தையைப் போல் - ஈரானும்,தனது நாட்டில் டெஹ்ரானில் ஒரு எண்ணெய் வர்த்தக சந்தையை உருவாக்கி டாலரைத் தவிர்த்து, இதர நாணயங்களில், குறிப்பாக யூரோவில் வர்த்தகம் செய்ய திட்டமிடுகிறது. இது நடந்தால், டாலரின் தேவை வெகுவாகக் குறைந்து போய்விடும். ஏற்கனவே வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் டாலர் மேலும் வீழ்ச்சியடைந்து, அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிவிடும்.

ஈரான் மீது - அமெரிக்கா பகைமை பாராட்டுவதற்கு, இவை எல்லாம் காரணங்கள்! இந்தப் பின்னணில் தான், ஆசியப் பகுதியில் இந்தியாவை தனிமைப்படுத்தி, இராணுவப் பாதுகாப்பு அணுசக்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டு - இந்தியாவை தனது பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது அமெரிக்கா! இதன் மூலம் - ‘அணி சேரா கொள்கை’ என்று இதுவரை பசப்பி வந்த இந்தியா, இப்போது, அமெரிக்காவின் காலடியில் போய் விழுந்திருக்கிறது.

அமெரிக்க-இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டதால்தான், அணு ஆயுதங்களை நிரப்பிக் கொண்டு ‘நிமிட்ஸ்’ கப்பல் சென்னை துறை முகத்துக்கு வந்தது. ஈராக் மக்கள் மீது குண்டுகளை வீசியது இதே கப்பல் தான். இந்த ஒப்பந்தத்தின்படி வங்கக் கடல் பகுதியில் அமெரிக்காவின் தலைமையில், கூட்டுக் கடற்படைப் பயிற்சியை இந்தியா நடத்தி முடித்துள்ளது. அமெரிக்காவோடு, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டின் கடற்படைகளும் இதில் பங்கேற்றன. இதில் பங்கேற்க 13 யுத்தக் கப்பல்கள் வங்கக் கடலுக்கு வந்தன. இதில் பெரும்பாலானவை - இந்தியாவுடன் நட்புக் கொண்டுள்ள நாடுகளைத் தாக்க, அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டவையாகும்.

வங்கக் கடலில் - சிறீலங்காவின் ராஜபக்சே ஆட்சி, இந்திய கடல்படையுடன் கூட்டு ரோந்து நடத்த விரும்பியது. இதன் மூலம் தமிழ் ஈழப் போராளிகளை கடல்பகுதிகளில் ஒதுக்கிவிட முடியும் என்று, சிறீலங்கா அரசு திட்டமிட்டது. முன்னாள் உளவுத் துறை அதிகாரியும் - பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே. நாராயணன் ‘மூளையாக’ இருந்து உருவாக்கிய இத்திட்டம், தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது. அதே எம்.கே. நாராயணன் - இப்போது அமெரிக்க - இந்திய ஒப்பந்தங்களின் மூளையாக செயல் படுகிறவர்களில் ஒருவர். இப்போது வங்கக் கடல் பகுதியில் - அமெரிக்கப் போர்க் கப்பல்களே வரத் தொடங்கிவிட்டன. எம்.கே. நாராயணன், சூழ்ச்சிகரமாக காய்களை வேறு தளத்துக்கு நகர்த்தி விட்டார். தமிழர்கள் மீண்டும் ஏமாளிகளாக்கப்பட்டு விட்டனர்.

சரி, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்க பின்னணியாக இருக்க செயல்பட்டவர்கள் யார்? யார்?

(அடுத்த இதழில்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com