Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2007

இராமனைக் கொளுத்தச் சொன்னேன் - சொல்கிறேன்!
பெரியார்

ஆத்திகப் பிரச்சாரமும், பக்திப் பிரச்சாரமும் செய்யும் பார்ப்பனத் தலைவர் திரு. இராஜாஜி அவர்கள் ‘இராமன் கடவுள் அல்லன், அவன் ஒரு வீரன்’ என்று ‘சக்ரவர்த்தித் திரு மகனார்’ என்ற தமது கட்டுரையில் தெளிவாக எழுதியிருக்கிறார். சங்கராச்சாரியாரும், ‘இராமன் கடவுள் அல்லன், ஓர் ஆதர்சன புருசன். மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்தவன்’ என்று கூறி இருக்கிறார்.

காலஞ்சென்ற மறைமலை அடிகள், டி.கே.சி., திரு.வி.க., வி.பி. சுப்பிரமணியப் பிள்ளை, பி. சிதம்பரம் பிள்ளை முதலிய புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ‘இராமன் கடவுள் அல்லன், இராமாயணம் கடவுள் கதை அல்ல’ என்று கூறி இருக்கிறார்கள்.

வால்மீகியும் தமது இராமாயண இலக்கியத்தில், ‘இராமன் பெண்ணைக் கொன்றவன். பெண்ணைமான பங்கப்படுத்தியவன். மறைந்திருந்து எதிரிகளைக் கொன்றவன், துரோகக் காரியங்களுக்கு உடைந்தையாக இருந்தவன்’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். இவ்வளவு தானா?

காந்தியாரே, ‘நான் போற்றும் இராமன் இராமாயண இராமன் அல்ல என்றும், ‘காட்’ என்று சொல்லும் படியான உருவமற்ற, பெயர்ச்சொல் அல்லாத அதாவது, ஒரு வஸ்து அல்லாத சர்வசக்தியான இராமன் என்றும் கூறி இருக்கிறார்.

ஆகவே, நானும் இராமாயணப் பாத்திரங்களில் ஒன்றான இராமாயண இராமனிடம் கடவுள் லட்சணப்படி ஏதாவது கடவுள் தன்மையோ, ஒழுக்கமோ, நாணயமோ, சாதாரண அறிவோ இருக்கின்றதா என்றும், இல்லா விட்டாலும் துரோகம், வஞ்சகம், பேடித்தனம், பேராசை, உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல் முதலிய கூடா ஒழுக்கக் குணங்கள் என்பவைகளாவது இல்லாமல் இருக்கிறதா என்றம் துருவித் துருவி பார்த்து, இல்லை என்ற முடிவுக்கே வந்திருக்கிறேன்.

ஆகவே, அப்படிப்பட்ட ஒருவனை மக்கள் கடவுளாக, வழிகாட்டியாக, பிரார்த்தனை, பக்தி செலுத்தத் தக்கவனாகக் கருதக் கூடாது என்பதற்காகவே, “இராமாயண இராமனைக் கொளுத்துங்கள்” என்றேன்.

“இம்மாதிரிக் குணங்கள்” இல்லாத இராவணன் கொளுத்தப்பட்டான். ஆண்டுதோறும் கொளுத்தப்படுகிறான். இன்னும் ஆண்டுதோறும் மதுரை முதலிய இடங்களில் சமணர் கழுவிலேற்றப்பட்ட உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. மற்றும், தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான சைவக் கோயில்கள் உள்ள இடங்களில் ‘சூரசம்மார’ உற்சவங்கள் நடைபெறுகின்றன.

இவை குறித்து அனேகருக்கு வெகுநாட்களாக மனவேதனை இருந்து வந்தும், அவற்றைச் சரியானபடி வெளியாக்கித் தடுக்க இதுவரை மக்களுக்கு வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது.

இன்றைய தினம் எனது சமுதாயத் தொண்டின் முதலானதும், முக்கிய மானதுமான சாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால், இராமனின் முதல் செய்கையும், கடைசிச் செய்கையும் சாதியைக் காப்பாற்றப் பிறந்து, சாதியைக் காப்பாற்றிவிட்டுச் செத்ததேயாகும். நமது நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, பகுத்தறிவுப் பிரசாரவேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்க வேண்டுமானாலும், முதல் இலட்சிய சொல்லாக, சுலோகச் சொல்லாக, துவக்கக் குறியாக ‘இராமாயணம் - இராமன்’ அழித்து ஒழிக்கப்பட்டாக வேண்டும். இராமாயணப் பிரச்சாரம் ஒழுக்கக் கேட்டுப் பிரசாரம் ஆகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும், ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய், இரண்டணா ரேட்டுக்கு குச்சிக் காரியாக இருந்து தெருவில் போகிற சின்னப் பசங்களை எல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன், இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து, “ஏண்டா, எங்கம்மா இழுத்தால் திமிரிக்கிட்டு ஓடப் பார்க்கிறாய்?’ என்று பையனை அடித்தால் அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, தாய் அபிமானம், தாய் பக்தி கொண்டவனாகிவிடுவானா?

உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப் பற்றி என்ன கருதுவார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால், இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது. இம்மாதிரி ‘தியாகிகள்’ அதாவது, உயிருக்குத் துணிந்து உயிரினும் சிறந்ததான ‘மானத்’தைத் துறந்து (மற்றவற்றைத் துறந்தது என்பது மிக மிக அற்பமேயாகும்) மக்கள் பழியை எற்று, இக்காரியதைச் செய்யக் கூடியவர்கள் எளிதில் ஏற்பட மாட்டார்கள். ஏற்பட்டாலும் முன்வரமாட்டார்கள். முன் வந்தாலும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனுமதித்தால் மாற்றார் வாழவிட மாட்டார்கள். தமிழனுக்கு இன்று தன்மானம் தேவை. இது தாயினும் உயிரினும் சிறந்ததாகும். தாயை வெறுத்தாவது, உயிரைவிட்டாவது, மானத்தை - மனிதத் தன்மையை - ஒழுக்கத்தைக் காப்பாற்ற இராமனைக் கொளுத்தச் சொன்னேன், சொல்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com