Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2006

வட்டிக் கொள்ளை: குமுறுகிறார் வேலு. பிரபாகரன்

‘ஆனந்த விகடன்’ வார ஏட்டில் ‘கடவுள்’ திரைப்பட இயக்குனர் வேலு. பிரபாகரன் அளித்துள்ள பேட்டி

“நிஜமாகவே ரஜினி எங்கே வருவார், எப்போ வருவார்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவார். தரணும்னு நினைக்கிறதைக் கண்டிப்பா தருவார். அவரை இப்போதான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன். நம்ம ஊர்ல நல்லவங்களை எப்பவும் லேட்டாத்தானே புரிஞ்சுக்க முடியுது...!” நெகிழ்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன். சில வருடங்களுக்கு முன்பு, தமிழக அரசு விருது வழங்கும் மேடையில் பெரியார் பற்றி ரஜினி சில கருத்துக்களைச் சொல்லப் போக, பதிலுக்கு அவரைத் தன் அறிக்கைகள், பேட்டிகள், பேச்சுக்களால் கிழிகிழியெனக் கிழித்தவர் வேலு பிரபாகரன். வேறு பல சர்ச்சைகளின் போதும், ரஜினியைப் பற்றிய காட்டமான விமர்சனங்களை முன் வைத்து சலசலப்பு ஏற்படுத்தியவர். அந்த வேலு பிரபாகரனா இப்படி?!

“ஆமா! என் அளவுக்குக் காட்டமாக ரஜினியை யாரும் விமர்சிச்சிருப்பாங்களான்னு தெரியலை. அந்த நேரத்தில் அவரைப் பற்றி எனக்கு தெரிந்த பிம்பத்தை வைத்து அப்படிப் பேசினேன். காலம்தான் கற்றுத் தருகிற குரு என்பார்கள். அது என் விஷயத்தில் உண்மை. நான் பின்பற்றும் அடிப்படை பெரியாரிச கொள்கைகள் மாறவில்லை. இனியும் மாறாது. ஆனால், மனிதர்கள் பற்றிய மதிப்பிடுகள் மாறியிருக்கு. யார் உண்மை, யார் போலி என்பதை என் வாழ்க்கை இப்போது எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.” - படபடவெனப் பொரிகிறார் வேலு பிரபாகரன்.

“இப்போது, பெரியாராக முழு நீளப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் சத்யராஜ். ஞான. ராஜசேகரன் எடுத்துக் கொண்டு இருக்கும் ‘பெரியார்’ படத்தில் கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும் இல்லாமல், அவரது மற்ற பக்கங்களையும் சொல்லப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். படம் வந்த பிறகு அதைப் பற்றிப் பேசுவதுதான் சரி. ஆனால் அதற்கு முன்பே நான், பெரியாரின் உயிர்நாடியான கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டுமே வைத்து ‘காதல் அரங்கம்’ என்ற படத்தை எடுத்திருக்கிறேன். அதில் நான் பெரியார் வேடத்திலேயே வந்து அவர் கருத்துக்களைப் பேசுகிறேன்.

ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அவ்வளவு பொருளாதாரப் பிரச்சினைகள்! எவ்வளவோ பேரிடம் உதவி கேட்டேன். கதையைக் கேட்டு நெகிழ்ந்தவர்கள், பணம் என்றதும் விலகி ஓடிவிட்டார்கள். இந்த நெருக்கடியான சமயத்தில் தான் ரஜினியைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மனுஷனை எவ்வளவோ எதிர்த்துப் பேசியிருக்கிறேன். அறிக்கைப் போர் நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறேன்.

ஆனால், அதையெல்லாம் மறந்து, என்னைப் பார்த்த கணத்திலேயே, ‘உங்க படம் என்னாச்சு வேலு?’ என்று உண்மையான கலைஞனின் அக்கறையோடு கேட்டார். அத்தனை பிரச்சினைகளையும் கொட்டித் தீர்த்தேன். என் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தவர், ‘சொல்லுங்க வேலு... நான் என்ன பண்ணணும்?’னு கேட்டார். ‘நீங்க லேபுக்கு போன் பண்ணி, படம் ரிலீசானதும் வேலு பிரபாகரன் பணத்தைச் சரியா கொடுத்திடுவார்’னு ஒரு உறுதிமொழி மட்டும் கொடுங்க, போதும்’ என்றேன். ‘அதெல்லாம் எதுக்கு? எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க, நான் தர்றேன். எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். எவ்ளோ பெரிய மனுஷன். அவரைப் பத்தின படம், ஜனங்க பார்வைக்கு வந்தே ஆகணும்’ என்றார். நான் தொகையைச் சொன்னதும், அங்கேயே, அப்போதே அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து உதவினார் ரஜினி.

ஆடிப் போய் விட்டேன். வள்ளலாரின் சமாதிக்குப் போனபோது, தனி மனிதனுக்குச் செய்யும் மரியாதையாக எண்ணி, மறுக்காமல் நெற்றியில் விபூதி பூசிப் போன பெரியாரின் கடல் போன்ற குணத்தை ரஜினியிடம் அன்று நான் பார்த்தேன்.

மனசுவிட்டுச் சொல்கிறேன்... பெரியாரின் பேரையே நித்தமும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களிடம் என் சினிமா கனவுக்காக மூன்று லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கினேன். என் வீட்டின் பேரில்தான் அதை வாங்கினேன். அதற்குக் கட்டிய வட்டியிலேயே வீடு மூழ்கிப் போனது. என் வீட்டை அபகரித்துக் கொண்டது அந்த அமைப்பு. முழு ஆன்மிகவாதியான ரஜினியோ பகுத்தறிவைப் பரப்பும் எனக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மிகப் பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்.

‘கடவுளை மற... மனிதனை நினை’ என்றார் பெரியார். ரஜினி, என்னைப் போன்ற மனிதனை நினைத்திருக்கிறார். ஆன்மிகவாதி என்று மட்டுமே பார்க்கப்படுகிற அந்த நல்ல மனிதருடைய இன்னொரு அற்புதமான முகத்தை தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால்தான் இப்போது உங்களிடம் இதையெல்லாம் சொல்கிறேன்!” என்கிறார் வேலு பிரபாகரன் நெகிழ்ச்சி கொப்பளிக்கும் குரலில்!

“நான்தான்; பண்பாடு பேசுகிறேன்”

‘விடுதலை’ ஞாயிறு மலரில் (17.9.2006) விடையளித்துள்ள ‘தமிழர் தலைவர்’ கி.வீரமணி, பொது வாழ்க்கையில் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பண்பாடு இல்லாமல் போய்விட்டது என்று ஜனநாயக உணர்வோடு கண்ணீர் சிந்தியிருக்கிறார். பண்பாடு போய் பகை உணர்வு வளர்ந்துவிட்டது; அந்த உணர்வு தலை தூக்கலாமா? எதிரிகளாக நினைத்து பண்பாடு இழந்து சீறலாமா என்று கேட்கிறார். ஆகா, இவ்வளவு உயர்ந்த பண்பாடு கொண்ட தலைவராக தமிழ்நாட்டில் இவர் ஒருவராவது மிஞ்சி இருக்கிறாரே என்று, தமிழ் கூறும் நல்லுலகம் நெஞ்சை நிமிர்த்துமளவுக்கு, அவரது பதில் இருக்கிறது. இதோ, அந்த கேள்வி பதில்.

கேள்வி: 50 ஆண்டுகளுக்கு முன், தலைவர்களிடையே கடும் விமர்சனங்கள் இருந்த நிலைக்கும், தற்கால நிலைக்கும் என்ன வேறுபாடு?

வீரமணி பதில்: பண்பாடு அப்போ இருந்தது; இன்று பண்பாடு மறைந்து பகை உணர்வாக மாறி எதிர் கட்சியாக சீறுகிறது.

ஆனால், இந்த பண்பாட்டு அறிவுரைகள் தனக்கு மட்டும் பொருந்தாது. இது மற்றவர்களுக்காக தரப்பட்ட ‘வாழ்வியல்’ அறிவுரை என்பதை அவரே ‘உண்மை’ பத்திரிகையில் தந்துள்ள விடையில் தெளிவுபடுத்திவிட்டார். அதே வாரத்தில் வெளிவந்த ‘உண்மை’யில் (செப்.16) திருவாளர் வீரமணி ‘பண்பாட்டுக் காவலராக’ ‘பகை உணர்ச்சியைத் துடைத்தெறிந்தவராக’ எதிரிகளாகப் பார்த்து சீறி வாழாதவராக தந்துள்ள பதில் இது.

கேள்வி: அண்மையில் சேலத்தில் நடந்த ‘உலகத் தமிழர் பேரமைப்பு’ மாநாட்டுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? திராவிடர் கழகம் ஏன் கலந்து கொள்ளவில்லை?

பதில்: திராவிடர் கழகத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் (போட்டி அமைப்புகள்) கலந்து கொள்வதில் - திராவிடர் கழகம் கலந்து கொள்ளாது என்பது இயக்க முடிவு.

இதுதான் அவர் தந்திருக்கும் பதில். இயக்கம் எங்கே - எந்த ஆண்டில் கூடி இப்படி ஒரு முடிவை எடுத்தது என்பது தெரியவில்லை. அது இயக்கத்தினருக்கே தெரியாதபோது, நமக்கு எப்படித் தெரியும்? திராவிடர் கழகத்தால் வெளியேற்றப்பட்டவர்கள் வாழும் மண்ணில், வாழ மாட்டோம் என்று, இயக்கம் முடிவு எடுக்காமல் இருந்தால் சரி. தமிழர் தலைவருக்கு இனி பண்பாட்டுக் காவலர் பட்டத்தையும் சேர்த்துக் கொடுக்க முயற்சிப்பார்களாக!

குருஜி கோல்வாக்கர் யார்?

‘புருஷ சுக்தா’ என்ற வேதத்தின் சுலோகம் - பிராமணன், சத்திரியன், வைசியன் சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளையும் வலியுறுத்தி, பிராமணனே உயர்வானவன். அதாவது பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவன் என்று கூறுகிறது. அதை குருஜி கோல்வாக்கர் முழுமையாக ஆதரிக்கிறார்.

“புருஷ சுக்தாவில் நம்மை உருவாக்கிய கடவுள் யார் என்பது கூறப்பட்டிருக்கிறது; அதுவே நமது இனத்துக்கான அடையாளம். பிராமணர்கள் நமது கடவுளின் தலை; சத்திரியர்கள் கடவுளின் கை; வைசியர்கள் கடவுளின் வயிறு; சூத்திரர்கள் கடவுளின் கால்.”

“ஆரியர்களே - இந்த உலகத்தைப் படைத்தவர்கள்; ஆரியர்கள் தான் மனித சமூகத்தையே நாகரிக வாழ்க்கைக்கு கொண்டு வந்தவர்கள்; ஆரியர்களைத் தவிர மற்ற எல்லோரும் இரண்டு கால் கொண்ட விலங்குகள். இழிவானவர்கள் மிலேச்சர்கள் என்று ஆரிய இனத்தை உயர்த்தி, திராவிடர்களை இழிவுபடுத்துகிறார்” குருஜி கோல்வாக்கர்.

வர்ணாஸ்ரமம் என்பது மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் கூறு போடுகிறது. அது பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் - அதாவது பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று, மனுதர்மம் கூறுவதை ஆதரிப்பதோடு மட்டுமல்ல சாதியையும் ஆதரிக்கிறார், கோல்வாக்கர். மொழி பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வேண்டும். அப்படி ஆட்சி மொழியாகும் காலம் வரை இந்தி மொழிக்கு முன்னுரிமை தந்து வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ளலாம் - என்கிறார் குருஜி கோல்வாக்கர்.

குருஜி கோல்வாக்கரின் - இந்தக் கருத்துகளை மேடைகளில், பகிரங்கமாகப் பேசுவீர்களா? இந்து முன்னணியிலும் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களே! சிந்திப்பீர்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com