Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2006

சிங்கள வெறியர்களுடன் ராஜபக்சே ஒப்பந்தம்: போர் நிறுத்தத்தை மீறியது யார்?
கொளத்தூர் மணி

14.8.2006 அன்று முல்லைத் தீவின் ‘செஞ்சோலை’ குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி 55 தமிழ் குழந்தைகளைக் கொன்றது. அதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ‘மக்கள் உரிமை மீட்பு கூட்டமைப் பின்’ சார்பில் சேலத்தில் ஊர்வலமும், கண்டனப் பொதுக் கூட்டமும் 21.8.2006 அன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை வருமாறு:

போர் நெறிகளுக்கு முற்றிலும் மாறாக, தமிழ் குழந்தைகள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசிக் கொன்று அக்கொடுமையை நடத்தியிருக்கிறது. ஆனால், இலங்கை தரப்போ இது குறித்து பதிலளிக்கும் போது, ‘தவறாகப் புரிந்து கொண்டு, தவறுதலாக குண்டு வீசிவிட்டோம்’ என்றுகூட சமாதானமாகச் சொல்ல வில்லை என்பது மிகவும் வேதனையானது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1965 இல் போர் நடந்த போது, இந்திய விமானப்படை தொடர்பான விழாவை எங்கு நடத்தலாம் என்று இடம் தேடி யோசித்து கடைசியில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் என்ற இடத்திலுள்ள விமான ஓடு தளத்தில் நடத்தப்பட்டது. விழா ஏன் ஓடுதளத்தில் நடத்தப்பட வேண்டும்? என்ற வினா எழுப்பப்பட்டபோது, இந்தியாவின் விமானப்படை தளபதி இப்படிச் சொன்னார்: “பாகிஸ்தான்காரர்கள் அமிர்தசரஸ் விமான தளத்தைத் தாக்குவதாக எங்களுக்கு செய்தி வந்திருக்கிறது; பாகிஸ்தான் காரர்களின் குறி வைக்கும் அழகு(!) எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் சொன்னபடி இந்த இடத்தில் மட்டும் கண்டிப்பாக குண்டு விழாது. எனவே இங்கு நடத்துகிறோம்” - என்று கூறி விருந்தை அங்கு நடத்தினார். இது போன்றாவது தவறாக ‘செஞ்சோலை’ காப்பகத்தின் மீது குண்டு வீசி விட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. ஒரு விமானத்தில் இருந்து ஒரே ஒரு குண்டு மட்டும் ‘செஞ்சோலை’ மீது போட்டிருந்தால், தவறாக வீசியதாக இலங்கை சொன்னாலும் அது நம்பும்படி இருந்திருக்கும்.

ஆனால், நான்கு விமானங்களில் வந்து வட்டமடித்து, 16 குண்டுகளை திட்டமிட்டு வீசியதால்தான் குழந்தைகள் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். எனவே தெரியாமல் செய்த செயலாக அது இருக்க முடியாது. ஒருவேளை, போர் நெறிகளை மீறாமல், மிகவும் நிதானமாக போர் நடத்துகிற புலிகளை சீண்டிப் பார்க்க வேண்டும்; அவர்களை தாறுமாறாக நடக்க வைத்து அனைத்துலக சமூகத்திற்கு முன்னால் புலிகளை பயங்கரவாதிகளாக காட்ட வேண்டும் என்ற திட்டம்கூட இலங்கை ராணுவத்தின் வஞ்சக மனத்தில் இருந்திருக்கலாம்.

1948 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து இலங்கை விடுதலை அடைந்தது. 1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றது இலங்கை அரசு. 1972 இல் எழுதப்பட்ட புதிய அரசியல் சட்டப்படி, ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி; பவுத்தம் மட்டுமே அரசு மதம்’ என்று ஏற்படுத்தினார்கள். சரி, பவுத்தத்தைப் பின்பற்றும் உண்மையான பவுத்தர்களாகவாவது சிங்களர்கள் இருந்து முறையாக நடந்திருந்தால் கூட இங்குச் சிக்கல் வந்திருக்காது. புத்தரின் பிறந்த நாளுக்காகக்கூட பவுத்தர்கள் தங்கள் வீடுகளை அன்றைய தினம் வெள்ளையடிக்க மாட்டார்கள்; ஏனென்றால், வெள்ளையடிப்பதற்காக வீட்டை சுத்தம் செய்யும்போது சிலந்திக் கூடுகளில் உள்ள சிலந்திகள் இறந்து விடும்; அது புத்தர் பிறந்த நாளில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சுத்தம்கூட செய்ய மாட்டார்கள். அப்படிப்பட்ட பவுத்தத்தை தங்களின் அரசு மதமாக வைத்திருக்கின்ற சிங்கள அரசு தான் தொடர்ந்து இது போன்ற கோரப் படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றன.

இன்னும் சொல்லப் போனால், தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு முன்பு இருந்த சிங்கள அரசுத் தலைவர்கள் அனைவரும் பதவிக்காக பவுத்தர்களாக மாறியவர்கள். நம் ஊரில்கூட இது போன்று நடப்பது வழக்கம். வெற்றி பெற்ற கட்சிகளில் போய் பலர் வேக வேகமாக இணைவார்கள்; அல்லது வெற்றி பெற்ற பின்பு உண்மையான தாய்க் கழகத்தை அடையாளம் கண்டதாகச் சொல்லி போய் இணைபவர்களும் உண்டு. அதைத் போலத்தான் சிங்களத்தில் ராஜபக்சேவுக்கு முன்னால் இருந்த அரசுத் தலைவர்கள் எல்லோரும் தேர்தலுக்காக, பதவிக்காக பவுத்த மதத்திற்குச் சென்றவர்கள். தொடக்கக் காலத்தில் இருந்த நான் ஸ்டீபன் சேனநாயகா, பிறகு ஜான் கொத்தலவாலே, சாலமன் பண்டார நாயகே, ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, ரணில் விக்கிரமசிங்கே - இப்படி இவர்கள் அனைவரும் தேர்தலுக்காக, வாக்குகளுக்காக கிறித்துவ மதத்திலிருந்து பவுத்தர்களாக மாறியவர்கள் தான். தற்போதைய அதிபராக இருக்கும் ராஜபக்சே தான் உண்மையான பவுத்தர்(?) என்று சொல்லப்படுபவர். இந்த உண்மையான பவுத்தரின் அரசுத் தலைமையில் தான் இது போன்ற படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன.

அதிபர் ராஜபக்சே, ஜே.வி.பி. என்றழைக்கப்படுகிற ‘ஜனதா விமுக்த பெரமுனா’ (மக்கள் விடுதலைக் கூட்டணி) என்ற கட்சியோடும் ‘ஜாதிக ஹெல உறுமய’ என்கிற புத்த பிக்குகள் கட்சியோடும் கூட்டணி அமைத்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதே மேற்கூறிய கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது என்ன ஒப்பந்தம் என்றால், ஆளுக்கு எவ்வளவு இடங்கள் தேர்தலில் போட்டியிடுவது என்ற இடப் பகிர்வு ஒப்பந்தம் அல்ல. மாறாக, தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் நிபந்தனைகளே அதில் இடம் பெற்றன. அந்த நிபந்தனைகள் என்னவென்றால்,

1. எந்த இனக் குழுவுக்கும் ஒரு மாநிலத்தையோ, மாவட்டத்தையோ, நகரையோ, கிராமத்தையோ ஒரு விளையாட்டு மைதானத்தையோ கூட தனியாகப் பிரித்துத் தரக் கூடாது.

2. எந்த இனக் குழுவுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படக் கூடாது.

3. போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும்.

4. ஆழிப் பேரலை (சுனாமி) தாக்குதலால் அழிந்துவிட்ட பகுதிகளுக்கு உதவி செய்ய வெளிநாட்டு உதவியாளர்கள் வந்தபோது சில நிபந்தனைகளை இலங்கையிடம் வைத்தார்கள்.

‘ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் தமிழ் பகுதிகள் என்பதால், நாங்கள் பணத்தை சிங்கள அரசிடம் மட்டுமே கொடுக்க முடியாது; விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஒரு குழுவை இலங்கை அமைத்தால் அதன் மூலம் நாங்கள் நிதி உதவியை அளிக்கிறோம்’ என்பதே அவர்களின் நிபந்தனை. அந்த நிபந்தனையின் அடிப்படையில் ‘பிடாப்ஸ்’ என்ற ‘ஆழிப்பேரலை மறு சீரமைப்புக் குழு’ ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவையும் நாங்கள் கலைத்து விடுவோம் என்று ராஜபக்சே அந்த கூட்டணி கட்சிகளிடம் ஒப்பந்தம் போட்டார். இதன்படி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் ராஜபக்சே.

எனவே, தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அல்லது ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற சிறு நன்மைகளைப் போலத் தெரியும் பிரிவுகளைக்கூட ஏற்க மறுப்பவர்தான் ராஜபக்சே. இவர் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் ‘சரத் பொன் சேகா’ என்பவரை இலங்கை ராணுவத் தளபதியாக நியமித்தார். ‘வலிய சண்டைக்கு இழுக்கும் இயல்பைக் கொண்டவர் தான் இந்த சரத் பொன் சேகா’ என்று எல்லா பத்திரிகைகளும் எழுதின. இவர் ராணுவத் தளபதியாக வந்த பிறகுதான் வலுச் சண்டைக்கு இழுக்கும் தன்மைகள் அதிகமாயின.

ஈழத் தந்தை செல்வா அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை போடப்பட்ட பல ஒப்பந்தங்களில் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் சிங்கள அரசு நிறைவேற்றவில்லை. நார்வே நாட்டின் துணையோடு பிப்ரவரி 22, 2002 அன்று இரு தரப்புக்கும் இடையே கடைசியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. நமது நாட்டிலுள்ள பார்ப்பன பத்திரிகைகளால், அரசுகளால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்ற விடுதலைப் புலிகளால்தான் அந்த போர் நிறுத்த ஒப்பந்தம்கூட ஏற்பட்டது. 2002 இல் அங்கு நடக்க இருந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தாங்களாகவே முன் வந்து போர் நிறுத்தத்தை புலிகள் அறிவித்தனர். இரு தரப்பும் சேர்ந்து அறிவித்ததல்ல இது; புலிகள் ஒரு தரப்பாக போர் நிறுத்தத்தை அறிவித்து அதை பொங்கல் பண்டிகை வரை நீட்டிக்கவும் செய்தனர். இதன் பிறகு நார்வே, இலங்கை அரசிடம் பேசித்தான் இந்த போர் நிறத்த ஒப்பந்தமே போடப்பட்டது.

சிங்கள அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்த விதிகளின்படி, டிசம்பர் 24, 2002 அன்று யார், யார் (விடுதலைப்புலிகள் - சிங்கள இராணுவம்) எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கே திரும்பிப் போய் நிலை கொண்டுவிட வேண்டும்; அதன் பிறகு முன்னேறி எந்தப் பகுதியையும் இருவரும் பிடிக்கக் கூடாது. சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் அன்று இருந்த யாழ்ப்பாணம் போன்ற தமிழ் பகுதிகள் இன்று வரை அரசிடமே இருக்கிறது. அந்தப் பகுதிகளில் போர் நடத்தி விடுதலைப் புலிகளால் பிடிக்க முடியாதது அல்ல. போர் நிறுத்த ஒப்பந்தம் புலிகளைத் தடுத்ததால்தான் அவை அரசிடம் இருக்கின்றன.

அந்த ஒப்பந்தத்தின் மேலும் சில விதிகள் கூறுகின்றன: அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் வாழ்கிற பகுதிகளில் சிங்களப் படைகள் நிலை கொண்டிருந்தன. இந்துக்கள் கோயில்கள், கிறித்துவ ஆலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களிலும், பள்ளிக் கூடங்கள் மற்றும் தமிழர்களின் வீடுகளைக் கைப்பற்றி வாழ்விடங்களிலும் சிங்கள ராணுவம் அன்று இருந்தது. ஒப்பந்தப் படி, வழிபாட்டுத் தளங்களிலிருந்து 30 நாட்களிலும், பள்ளிக் கூடங்களிலிருந்து 90 நாட்களிலும், தமிழர்களின் வாழ்விடங்களிலிருந்தும் சிங்களப் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், சிங்கள அரசு இன்று வரை இவைகளை விட்டு வெளியேறவில்லை.

அதே போல், புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் புலிகள் மட்டுமே ஆயுதம் வைத்திருப்பர். அரசுக் கட்டுப் பாட்டுப் பகுதியில் அரசு மட்டுமே ஆயுதம் வைத்திருக்கும். இது இயல் பானது. ஆனால், அரசுக் கட்டுப்பாட்டு பகுதிகளில் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் கும்பல்களான கருணா குழு, பரந்தன் ராஜன் குழு போன்ற சில குழுக்கள் ஆயுதங்களுடன் இருக்கின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அந்த துரோகக் குழுக்களின் ஆயுதங்களை ராணுவம் தன் பொறுப்பில் களைந்து விடவேண்டும் என்கிறது ஒரு விதி. ஆனால், துரோகக் குழுக்கள் ஆயுதங்களுடன் திரிந்து கொண்டு புலிகளின் ஆதரவாளர்களைக் கொல்கிறார்கள்.

அடுத்து, மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட அங்குள்ள மக்களில் 30 விழுக்காட்டினர் மீன் பிடித்தொழிலை மட்டுமே கொண்டுள்ளனர். ஆனால், தமிழ் மக்கள் மீன் பிடிக்க வழியின்றி பட்டினியாகக் கிடக்கிறார்கள். இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தமிழ் மக்கள் பகல் நேரத்தில் ஒரு மாதத்திற்குள் கடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று மீன் பிடிக்கவும், 3 மாதங்களுக்குள் இரவு - பகல் எந்நேரமும் சென்று மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ஒரு விதி கூறுகிறது. இதையும் சிங்கள அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்ற நிபந்தனைகளை செயல்படுத்த அதிகபட்சமாக 120 நாட்கள்தான் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2002 இல் போடப்பட்ட இவ்வொப்பந்தத்தின் சிறு பகுதியைக் கூட நான்கரை ஆண்டுகளாகியும் சிங்கள ராணுவம் நிறைவேற்றவில்லை. தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களிலும், பள்ளிகளிலும், வாழ்விடங்களிலும் இன்றும் சிங்கள ராணுவம் நிலை கொண்டுள்ளன.

போர் என்று வருகிறபோது சிங்கள ராணுவம் அதன் எதிரி இலக்கான போராளிகளின் படை வீரர்களைத் தாக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் தனது மனைவியுடன் டிசம்பர் 24 2005 நள்ளிரவு கிறிஸ்துமஸ் வழிபாட்டை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஆலயத்திற்குள்ளேயே இருவரையும் சுட்டுக் கொன்றது. இங்கு நடைமுறையில் உள்ளது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் இறந்தால் அங்கு இடைத் தேர்தல் கிடையாது. அதற்கு மாறாக, வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரின் கட்சியின் சார்பில் வேறொருவர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார்.

அந்த முறையின்படி சுட்டுக் கொல்லப்பட்ட ஜோசப் பரராஜ சிங்கத்தின் இடத்திற்கு வன்னிய சிங்கம் விக்னேஸ்வரன் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என அக்கட்சி அறிவித்தது. அப்படி அறிவிக்கப்பட்ட விக்னேஸ்வரன் பதவி ஏற்பதற்கு முதல் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். இது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் காங்கிரசின் தலைவர் செந்தில் என்பவரும் சுடப்பட்டு இறந்தார். பத்திரிகையாளர்கள் நடேசன், உலகமறிந்த ராணுவ ஆய்வாளரான தராக்கி என்கிற சிவராமன் ஆகியோரும் தமிழர்கள் என்பதால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கோரக் கொலைகள் எல்லாம் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில், ஆட்சியின் கீழ் இருக்கிற பகுதிகளில்தான் நிகழ்ந்தன. ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இவை போன்ற எவையும் நிகழவில்லை.

இன்று கூட (21.8.2006) நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், ‘ஈழ நாடு’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருப்பவருமான சிவத்தம்பி மகராஜா என்பவரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இப்படி பொது மக்கள் மீது, மக்கள் தலைவர்கள் மீது, பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற சிங்கள ராணுவத்திற்கு ஆதரவாக இங்குள்ள பத்திரிகைகள் எழுதின. அது மட்டுமன்றி, புலிகள் ‘ஒப்பந்தத்தை மீறி போர் புரிகிறார்கள்’ என்று திரித்தும் செய்திகளை எழுதின. இப்போதுதான் சிறு மாற்றம் ஏற்பட்டு, நம் செய்தித்தாள்கள் நம் தமிழர்கள் இறந்ததை, தமிழ்க் குழந்தைகள் இறந்ததை பதிவு செய்கின்றன. தமிழர்களின் அவலங்களை, சிக்கல்களை இப்போது தான் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நம் தொலைக்காட்சிகளெல்லாம் சிங்களத் தொலைக்காட்சிகளிலிருந்து தரும் காட்சிகளைத்தான் நமக்குத் தந்தார்கள். இப்போது தான், புலிகளின் தேசியத் தொலைக் காட்சியிலிருந்து காட்சிகளை எடுத்துப் போட்டு நமக்கு செய்திகளை நம் தொலைக்காட்சிகள் தருகின்றன. நம் தமிழ்நாட்டு ஊடகங்களில் சிறிதளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், அதுவும்கூட தேவைப்படுகிற அளவுக்கான மாற்றங்கள் இல்லை.

நாம் விடுதலை பெற்ற இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்கிறோம். நம் அரசியல் சட்டம் கருத்துகளை எடுத்துரைக்கவும், கூட்டம் கூடவும், சங்கம் அமைக்கவும் - இது போன்ற பல உரிமைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. இவையெல்லாம் யாராலும் மாற்ற முடியாத அடிப்படை உரிமைகள் ஆகும். அதே போன்று, கருத்துகளை வெளிப்படுத்துவதற்கென்று பத்திரிகைகளுக்கும் உரிமை இருக்கிறது. புலிகளைப் பற்றிய பொய் செய்திகளைப் போட்டு கொச்சைப்படுத்தி எழுத ‘இந்து’ நாளேட்டுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மறுப்பதற்கு யாராவது முயற்சித்தால் பிரிட்டிஷ் காலத்து அரசின் சட்டங்களை வைத்துக் கொண்டு அதை சட்ட விரோதமாகக் காட்ட முயற்சிக்கிறார்கள்.

இப்படி நடப்பதில் காவல்துறையும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி, விடுதலை பெற்ற பிறகும் சரி, நமது காவல்துறையின் மூளை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை ஒத்ததாகவே இருக்கிறது. இத்தனைக்கும் இப்போது இருக்கின்ற எந்த காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி, அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை; அப்படியே பிறந்திருந்தாலும் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், உடல் வேண்டுமானால், சுதந்திரத்திற்கு பின்னால் வந்ததாக இருக்குமே தவிர, காவல்துறையினரின் மூளையில் மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியினரின் அடக்கு முறை சிந்தனை இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இந்தப் போக்கிலிருந்து கொஞ்சம் மாறிய சில காவல்துறை அதிகாரிகளின் மூளைகூட முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இருந்தபோது செயல்பட்டதைப் போன்று இன்னும் இருக்கிறது.

ஒரு விபத்து நிகழ்ந்து விட்டால் வழக்கமாக இப்படிச் சொல்வார்கள்: ‘அப்போதே அவன் அப்பா சொன்னார், அந்த பைக்கை வாங்காதே என்று; மீறி வாங்கி, அதை ஓட்டிச் சென்றான், விபத்தில் இறந்து விட்டான்’ அல்லது ‘கிணற்றில் போய் குதிக்காதே என்பதைக் கேட்கவில்லை; இப்போது கிணற்றில் விழுந்து இறந்து போய் விட்டான்.’ இதே போன்று தான். ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளின் கருத்தை வலியுறுத்துவது போன்று ஒரு தட்டியை பெரியார் தி.க. சார்பில் சேலத்தில் வைத்தோம். ‘இந்திய அரசே, சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்காதே; பயிற்சி கொடுக்காதே; அவர்களின் விமான நிலையத்தைச் சீரமைக்காதே என்று அப்போதே நாங்கள் சொன்னோமே? இப்போது என்ன நடந்தது பார்த்தாயா?’ என்ற கருத்தை வலியுறுத்தி பின் வருமாறு தட்டி எழுதியிருந்தோம்.

‘இந்திய அரசே! நீ கொடுத்த ஆயுதம், பயிற்சி, நீ சீரமைத்த விமான ஓடுதளம், எதற்குப் பயன்படுகிறது பார்த்தாயா?’ கூடவே அந்தத் தட்டியில் ‘செஞ்சோலை’யில் இறந்து கிடந்த குழந்தைகளின் படத்தையும் போட்டிருந்தோம். இது நம் காவல்துறையின் அறிவுக்குத் தவறாகப்பட்டிருக்கிறது. உடனே அதை அகற்றினார்கள்.

‘குழந்தை ஒன்று இறந்து போய் விட்டால், எப்படியெல்லாம் பெற்றோர் அந்தக் குழந்தையை தூக்கி வளர்த்தனர், இன்று இப்படி இறந்து கிடக்கிறதே!’ என்று கூறுவது வாடிக்கையானது. இக் கருத்தை வலியுறுத்தி ஒரு தட்டியில் பின்வருமாறு எழுதி மற்றோர் இடத்தில் வைத்திருந்தோம். ‘தம்பியின் தோளில், மடியில் வளர்ந்த தளிர்களே! இன்று கருகிப் போனீர்களே!’ குழந்தைகள் இறந்து போய்விட்டன என்று எழுதியதுகூட நம் காவல்துறை அதிகாரிகளுக்குத் தவறாகத் தெரிகிறது. இதையும் அகற்றிவிட்டார்கள். காவல்துறை அதிகாரிகளிடம் நாங்கள் கேட்பது, ‘இதையெல்லாம் அகற்றும் அளவுக்கான அறிவுக் கூர்மை(!) உங்களுக்கு எப்படி வந்தது என்பதுதான்.

நடந்துவிட்ட குழந்தைகளின் படு கொலைக்கு இரங்கல் தெரிவிக்கவும், அதற்குக் காரணமானவர்களை கண்டிக்கவும் இன்று நாம் ஊர்வலமாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி வந்தோம். ஆனால், இதற்கு வந்த காவலர்கள் ஏறத்தாழ நமக்குச் சமமான எண்ணிக்கையில் இருப்பார்கள். எங்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று தவறாகக் காட்டு வதற்காகவே இப்படி செய்கிறார்கள். எதற்காக உங்களுக்கு இது போன்று புத்தி போகிறது என்றே தெரியவில்லை.

புலிகளை எதிர்ப்பதில் தன்னை முன்னோடியாக காட்டிக் கொள்ளும் செல்வி ஜெயலலிதாவின் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஓ. பன்னீர் செல்வம் அவர்கள், சட்டமன்றத்தில் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வருகிறார். ‘ஈழத்தில் 61 குழந்தைகள் இறந்து விட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி விவாதிக்க அவையின் எல்லா செயல்களையும் ஒத்தி வைக்க வேண்டும்’ என்கிறார் அ.தி.மு.க.வின் ஓ. பன்னீர்செல்வம். அவைத் தலைவர் அதற்கு, ‘அரசின் சார்பிலேயே தீர்மானம் கொண்டு வருகிறோம்’ என்கிறார். இ.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் உட்பட பலரும் உரையாற்றிய பிறகு அரசால் அங்கு ஒரு இரங்கல் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

(அடுத்த இதழில்...)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com