Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2006

சிலப்பதிகாரத்தை தமிழர் போற்றலாமா?
முனைவர் இரா. மணியன்

சிலப்பதிகாரம் பார்ப்பனியத்தைப் பரப்பும் காப்பியமே என்ற பெரியார் கருத்தை ஆதாரங்களுடன் விளக்குகிறார் கட்டுரையாளர். அவர் எழுதியுள்ள ‘பெரியாரின் இலக்கியச் சிந்தனை’ நூலிலிருந்து ஒரு பகுதியைப் பெரியார் பிறந்த நாள் விழாச் சிந்தனையாக வெளியிடுகிறோம்.

சிலப்பதிகாரத்து வஞ்சினமாலை கூறும் செய்திகளில் பெரும்பாலானவை பகுத்தறிவிற்கு மாறானவையாகவும், நம்ப முடியாதனவாகவும், ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளாகவும், பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பளிப்பனவாகவும் உள்ளதைப் பெரியார் எடுத்துக் காட்டுகிறார்.

கருணையில்லாத கதாநாயகி “யானோ அரசன் யானே கள்வன்” எனக் கூறித்தான் நீதி தவறியதை நினைந்து வருந்தி மயங்கி இருக்கையிலிருந்து கீழே விழ்ந்து உயிர் துறந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் பாதங்களைத் தொழுத பாண்டி மாதேவியை நோக்கிய கண்ணகி, “பெருந்தேவியே, பிறனுக்கு முற்பகலில் கேடு செய்தான் ஒருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணுவான்” என்று கூறுகிறாள்.

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு”

- என்ற திருக்குறளுக்கு ஏற்ப கண்ணகி நடந்து கொள்ளவில்லை. பாண்டியன் தன் தவற்றை உணர்ந்து மயங்கி விழுந்து உயிர் துறந்தான் என்பதைக் கண்ணகி எண்ணிப் பார்த்து அவனை மன்னித்திருக்க வேண்டும். பாண்டியனின் பாதங்களில் வீழ்ந்த பாண்டிமாதேவி என்னானாள் என்பதைக்கூட கண்ணகி பார்க்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு பெண்ணைச் சால்புடையவளாக எப்படிக் கூற முடியும்! சான்றாண்மை இல்லாதவனை எவ்வாறு பெருமைமிக்கவளாகக் கருத முடியும் என்பதே பெரியாரின் சிந்தனை.

மேலும், நடுங்கி வீழ்ந்த கோப்பெருந்தேவியை விளித்து, ‘யான் ஒப்பற்ற கற்புடை மகளிர் பலர் பிறந்த பதியின்கண் பிறந்தேன்; யானும் ஒரு பத்தினியாயின் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன்’ என்று கண்ணகி கூறுகிறாள்.

கண்ணகி கூறும் பத்தினிப் பெண்களின் கதைகள் கூட மூடநம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தனவாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதனவாகவும் ஆணாதிக்கத் தன்மையையும், பெண்ணடிமைத்தனத்தையும் அறிவுறுத்து வனவாகவுமே அமைந்துள்ளன.

சினத்திலும் பார்ப்பனர்க்குப் பாதுகாப்பு மதுரையை ஒழிப்பேன் என்று சூளுரைத்த கண்ணகி, “கூடல் மாநகர மகளிரே, மைந்தரே, வானக் கடவுளரே, மாதவம் செய்வோரே நான் சொல்வதைக் கேளுங்கள்: என் கணவனுக்குத் தவறிழைத்த கோநகரைச் சீறினேன்; குற்றமிலேன்யான்” என்று கூறுகிறாள். தனக்குத் தானே நீதிபதியாக ஆகித்தான் குற்றமற்றவள் என்று தீர்ப்பளித்துக் கொள்கிறாள் கண்ணகி. பின்னர் தன் இடமுலையைக் கையால் திருகி எடுத்து, மதுரையை வலம்வந்து வட்டித்து எறிந்தாள்.

அப்பொழுது தீக்கடவுள் பார்ப்பன வடிவில் தோன்றுகின்றான். அவன் கண்ணகியை நோக்கி, “உனக்குத் தவறிழைத்த அந்த நாளிலேயே இவ்வூரை எரியூட்டும் ஏவலைப் பெற்றுள்ளேன். எரியும்போது பிழைக்க வேண்டியவர்கள் யார் யார் என்பதை மட்டும் கூறுக” என்று கேட்கிறான். அப்பொழுது, “பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை ஆகிய இவர்களைத் தவிர மற்றவர்கள் அழியட்டும்” என்று கண்ணகி கூறுகிறாள். கண்ணகி ஏவலால் மதுரை மாநகர் தீப்பற்றி எரிந்தது.

சிலப்பதிகாரக் கதையைத் திறனாய்ந்த பெரியார், கண்ணகி மதுரையை எரித்த செயலைக் கண்டிக்கிறார். “தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்தபோது, அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும்” என்கிறார் பெரியார். அப்போதே கோவலனைக் கண்டித்து மாதவியைத் தண்டித்திருந்தால், இத்தகைய வேதனைகளே வந்திராது என்பது பெரியார் கருத்துப் போலும்.

“கோவலனை அரசன் தண்டித்த மாதிரியானது, நம்நாட்டு இராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும்” என்று பெரியார் கருதுகிறார். அப்படி அவர் கருதினாலும், கண்ணகி மதுரையை எரித்து நிரபராதிகளைச் சுட்டு சாம்பலாக்கிய செயலையும் கண்டித்துள்ளார். இப்படி எரித்தால்தான் இவள் கற்புடையவள் என்று சமுதாயம் கருதுமா! “அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள் தனம் வேண்டுமா!” எனறு பெரியார் கேட்கிறார்.

மதுரையை எரிப்பதற்குக் கண்ணகி கையாண்ட முறை பகுத்தறிவுக்கு ஒத்து வருமா? அரசனின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கண்ணகியிடத்து அனுதாபம் கொண்ட பொது மக்கள் அங்கங்கே அரசனுக்குச் சொந்தமான மாளிகைகளை எரித்தார்கள் என்று சொல்லியிருந்தாலாவது யதார்த்தமாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, கண்ணகி மார்பைத் திருகி எறிவதற்கு அது என்ன நட்டு போட்டா முடிக்கி வைத்துள்ளது! திருகியதும் கைக்கு வந்துவிட. அப்படியே எறிந்தாலும் அது என்ன பாஸ்பரசா தீ மூட்டுவதற்கு! இப்படிப்பட்ட சிந்தனைகளைக் கொண்ட பெரியார், சிலப்பதிகாரம் பற்றிய ஒரு சொற்பொழிவில், “இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் ‘பாஸ்பரஸ்’ இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?” என்று கேட்கிறார்.

பார்ப்பனர்க்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?

மதுரையை எரிக்கச் செய்த கண்ணகி பார்ப்பனர்கள் மீது ஏன் பரிதாபம் கொள்ள வேண்டும் என்பது பெரியார் கேள்வியாகும். இவ்வாறு பரிதாபம் கொள்ளச் செய்தது பார்ப்பனர்களின் வருணாசிரமத் தர்மந்தானே! அரச இனத்தைச் சார்ந்தவர்களும், வணிகர்களும், சூத்திரர்களும் மட்டும் ஏன் சாக வேண்டும்? இப்படிச் செய்தது கண்ணகியின் முட்டாள்தனமா? அல்லது வருணாசிரமத் தர்மத்தை அவள் மூலம் நிலை நாட்ட முயன்றவர்களின் அயோக்கியத்தனமா? இப்படியெல்லாம் எண்ணிய பெரியார், “அக்கினி பகவானுக்குக் கண்ணகி, ‘பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு’ என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் சாம்பலானார்களாம். மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்.

இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கிற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம; தர்ம மனுநூல், இராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?” என்று வினவுகிறார்.

கண்ணகியின் அநீதி பாண்டியன் நெடுஞ்செழியன் முழுமையான விசாரணையை மேற்கொள்ளாமல் தீயவனை நம்பி நீதி தவறும் செயலைச் செய்தான். அவன் செய்தது குற்றம் தான். அதைவிடப் பெரிய குற்றத்தைக் கண்ணகி செய்யலாமா? கண்ணகி யாரை விசாரித்தாள்? பாண்டியன் நீதி தவறியதற்கும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற சமுதாயத்தினர்க்கும் என்ன சம்பந்தம்? சூத்திரர்களை எரிக்குமாறு ஏன் சொல்ல வேண்டும்? அரசனை நீதி வழுவுமாறு செய்த அந்த பொற் கொல்லனை மட்டும் அவள் தண்டித்திருந்தால் அவளை அறிவுடையவள் என்று கூறியிருக்கலாம். இப்படியெல்லாம் சிந்தித்த பெரியார், “இராமன் பார்ப்பான் - ஆகவே சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பனனை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம்! எவ்வளவு முட்டாள்தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம்! பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான்.

ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி; வணங்கத் தக்கவள்; தெய்வமானவள்! பாண்டியன் ‘குற்றவாளி’ - இது தானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் - இந்த மாதிரியான ஆபாசமும் அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்றா சொல்வது? இவைகளைத்தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!” என்று கடுமையாகச் சாடுகிறார்.

கண்ணகி தமிழ்ப் பெண்ணாக இருக்க முடியுமா என்ற ஒரு கேள்வியையும் கூட பெரியார் எழுப்புகிறார். “கண்ணகியைப் போல இன்று எந்த ஒரு பெண்ணாவது, அவள் எவ்வளவுதான் கற்புடைய கன்னிகையாக இருந்த போதிலும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரிக் காரியம் நடந்திருக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் நெருப்புக்கு ஆணை இடுகிறாள், ‘பார்ப்பனரை அழிக்காதே’ என்று. பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுபவள் ஆரியப் பெண்ணாக இருப்பாளா? தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்” என்று பெரியார் தமிழ் மக்களைக் கேட்கிறார்.

சிலப்பதிகாரத்தின் இருபத்திரண்டாவது பகுதியான அழற்படு காதை யுள்ளும் நால்வகை வருணங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு பூதம் தெய்வமாக உள்ளது என்றுரைத்து வருணபூதர் நால்வருடைய இயல்புகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இவையன்றி இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்கள் கோட்டை வாயில்களைக் காத்துக் கொண்டு இருந்தன என்றும், அவை நகர் காக்கும் தெய்வங்கள் என்று கூறப்படும் என்றும் பாண்டியன் இறந்த பின் அவை நகரைவிட்டு நீங்கின என்றும் அழற்படுகாதையின் தொடக்கத்திலேயே கூறப்பட்டுள்ளது. ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது, காவல் தெய்வம் கடைமுகம் அடைந்தன என்ற அழற்படு காதையின் முதல் இரண்டு அடிகளுக்கு உரைகூறப் போந்த நாவலர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் “கண்ணகியின் ஏவல் பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறு வெளிப்பட்டது. நகர் காக்கும் தெய்வங்கள் கோட்டை வாயில்களை காவாதொழிந்தன என்று கூறிக் காவல்தெய்வம் இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்களுமாம்” என்று விளக்கமும் அளித்துள்ளார்.

வருணப் பூதங்கள் காவல் தெய்வங்கள் பற்றிக் கூறும் ஒரு நூலை தமிழ் மக்களுக்குரிய நூல் என்று கூறலாமா? என்பதுதான் பெரியாரின் ஐயமாகும். “மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் சாதி - கீழ்ச் சாதி உணர்ச்சி தோன்றிவிட்டது” என்பதுதான் பெரியாரின் கருத்தாக உள்ளது. சாதியமைப்பே இல்லாத தமிழ்ச் சமுதாயம் இருந்த போது கடவுள் பற்றிய எண்ணமே இல்லாமல் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதே பெரியார் கருத்தாகும். அப்படிப்பட்ட சமுதாயத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் மனுதர்ம சாஸ்திரம் கூறும் வருணாசிரமத் தர்மத்தை - நால் வருணக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவே ஆரியர்கள் தெய்வங்களைக் கூறித் தமிழர்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்துத் தங்களது மேன்மைக்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் உரிய கதை என்று சொல்லி, அழகிய இனிய தமிழ்ச்சொற்களில் ஆரியர்களின் வஞ்சக எண்ணங்களை அறியாமல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் கதையில் வருணபூதம் நால்வருடைய இயல்புகளைக் கூறியுள்ளார் என்பது பெரியாரின் குற்றச்சாட்டு.

அழற்படு காதையுள் கூறப் பெறும் நால்வகை வருணப் பூதங்களைப் பற்றிய செய்திகள் மனுநீதி சாஸ்திரத்தில் கூறப் பெற்ற பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர சாதிப் பிரிவுகளை நினைவூட்டுகின்றன. முதலில் ஆதிப்பூதம் கூறப்படுகிறது. ‘பசுமை முத்துவடமணிந்த நிலவு போல் விளங்கும் ஒளியினை உடைய, நான்முகன் யாகத்துக்கென உரைத்த உறுப்புக்களோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப் பூதமாகிய கடவுளும்” என்று பூதக் கடவுளை விவரித்துள்ளனர். இப்பூதக் கடவுளைப் பிராமணப் பூதம் என்று கூறுகிறார் அரும்பதவுரையாசிரியர். இதுபோலவே அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்று கூறுகின்றபோது அவற்றையும் கடவுள் என்றே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைக் கூறும் நூலா? அல்லது மனுநீதியான வருணாசிரமத் தர்மத்தை விவரிக்க வந்த நூலா?” என்று பெரியார் வினவுகிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com