Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
செப்டம்பர் 2006

சாதி ஒழிப்புக்கு சரியான திட்டம்

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் இணையர்களுக்கு மாநில அரசு நிதி உதவியுடன் ரூ.50,000 மத்திய அரசு பரிசுத் தொகையாக வழங்கும் என்ற ஒரு சிறப்பான - புரட்சிகரமான திட்டத்தை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீனாகுமாரி அறிவித்திருப்பதைப் பாராட்டி வரவேற்கிறோம். இத்திட்டம் அமுலுக்கு வந்தால் சாதி மறுப்புத் திருமணங்கள் மிக அதிக எண்ணிக்கையில் நடக்கும்.

சாதியை ஒழிக்க ஒரே சாதிக்குள் திருமணம் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டும் என்று பெரியாரும், அம்பேத்கரும் வலியுறுத்திய கருத்துகள் வெற்றிமாலை சூடும். இந்தத் திட்டம் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதை, இதற்கு பார்ப்பனர்கள் காட்டும் கடும் எதிர்ப்பிலிருந்தே உணர்ந்து கொள்ள முடியும். ‘இந்து’ நாளேட்டில் பார்ப்பனர்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து அவாளின் ‘குருஷேத்திரமான’ ஆசிரியருக்குக் கடிதப் பகுதியில் கடிதங்களை எழுதிக் குவிக்கிறார்கள்.

“இந்தத் திட்டம், இனி திருமணங்களை வர்த்தகமாக்கிவிடும்; திருமணம் என்ற நிறுவனத்தையே இது குலைத்து விடும்; சமூகக் கட்டுமானத்தைத் தகர்த்துவிடும்; இது அரசின் ஏமாற்றுத் திட்டம்; ஏற்கனவே சீரழிந்துவரும் கலாச்சாரத்தை இது மேலும் மோசமாக்கிவிடும்” என்றெல்லாம் புலம்பித் தீர்த்துள்ளார்கள் (செப்.15 - ‘இந்து’).

வைதீகத் திருமணங்கள் ஏற்கனவே வரதட்சணை மூலம் வர்த்தகமாகிவிட்டன. கல்வி வளர்ச்சி பெருகிவரும் சமூகச் சூழலில் காதல் - சாதி மறுப்பு திருமணங்களும் அதிகரித்தே வருகின்றன. கடிதம் எழுதும் பார்ப்பனர்களுக்கு இவை தெரியாதவை அல்ல. ஆனாலும், அரசே நிதி உதவியுடன், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க முன்வரும் போது சாதி அமைப்பே தகர்ந்து விடுமோ என்று - ‘பூணூல் திருமேனி’ கூட்டம் புழுங்கித் தவிக்கிறது. கடந்த செப்.18 ஆம் தேதி புதுடில்லியில் சுப்பிர மணியசாமி இந்துக்களுக்கு ஆபத்துகள் வந்து விட்டதாக விளக்கும் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனன், காஞ்சி ஜெயேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்கள். நூலை வெளியிட்டுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், “சாதி அமைப்பைக் காப்பாற்ற வேண்டும், முகலாயர் காலத்திலும் பிரிட்டிஷார் காலத்திலும், சாதி அமைப்பு தான் சமது சமூகத்தைப் பிளவு படாமல் காத்தது” (Defending the caste system, Mr. Sudharsan said it prevented the disintegration of Society during the Mugal and British periods - ‘The Hindu’ – Sept. 19) என்று பேசியுள்ளார். அய்க்கிய முற்போக்கு கூட்டணி, சமுதாயத்தை சாதி அடிப்படையில் கூறுபோடு வதாக சுப்ரமணியசாமி, புலம்பியிருக்கிறார்.

சமுதாயத்தை சாதி அடிப்படையில் கூறு போடும் சாதி அமைப்பை வெளிப்படையாக ஆதரித்துப் பேசிக் கொண்டே ஆட்சியாளர்கள் சாதி அடிப்படையில் கூறுபோடுவதாகக் குற்றம் சாட்டுவது நல்ல நகைச்சுவையாகும். தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில், மத்திய அரசு ஆர்வம் காட்டி செயல்படுவதைத் தான் சுப்பிரமணிய சாமிகள், இப்படி இடித்துக் கூறுகிறார்கள். அதாவது, சாதி அமைப்பும், ஒடுக்குமுறையும் தொடர வேண்டுமாம். ஆனால் சாதியால் புறக் கணிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் வழங்கக் கூடாதாம்.

சாதிக்கு ஆதரவாக பார்ப்பனர்கள், பகிரங்கமாகவே வெளியே வந்துவிட்டார்கள். அதோடு, கொலை வழக்குக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பிணையில் வெளிவந்துள்ள காஞ்சிபுரம் ஜெயேந்திரனும் - தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்குப் பிறகு, பகிரங்கமாக - பழைய பாணியில் செயல்படத் துவங்கி விட்டதையும், மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆக, பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கும் திட்டமாக மத்திய அரசின் சாதி மறுப்புத் திருமண ஊக்குவிப்புத் திட்டம் இருக்கிறது. மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் மீனா குமாரியும், இதே துறையின் இணை அமைச்சரும் சீரிய பெரியாரியல்வாதியுமான சுப்புலட்சுமி அவர்களும், இத் திட்டத்துக்கு சிறப்பான உருவம் கொடுத்து, அமுல்படுத்தி, சாதி ஒழிப்பு வரலாற்றில், புதிய திருப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதே சாதி ஒழிப்பு லட்சியத்தில் நம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

‘அனுபவம் பேசுது’

“கோயிலுக்கு போவதாலும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதாலும் மட்டுமே இந்து மதத்தை வளர்த்து விடமுடியாது.”

- இப்படி ‘அருளுரை’யை காஞ்சி ஜெயேந்திரன், புதுடில்லியில் சுப்பிரமணியசாமியின் நூல் வெளியீட்டு விழாவில் வழங்கியிருக்கிறார். அப்படியானால் இந்து மதத்தை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? கோயிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்தால் மட்டும் போதாது. கோயிலுக்குள்ளேயே “கோட்சே” வேலைகளையும் செய்ய வேண்டும். மதச் சடங்குகளை நடத்தினால் மட்டும் போதாது, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ‘கிருஷ்ண பகவான்’, ரிஷிகள் காட்டிய வழிமுறைகளில் ஜெயேந்திரர்கள் வாழ்ந்து காட்டியதுபோல் ‘திருவிளையாடல்’களை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்து மதம் தழைத்து, செழித்து, பூத்து, குலுங்கும் என்கிறார் ஜெயேந்திரன்!

எல்லாம் ‘அனுபவம்’ பேசுகிறதய்யா!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com