Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
அக்டோபர் 2008

தலையங்கம் 'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'

ஆரியர் - திராவிடர் போராட்டத்தை சித்தரிப்பதே இராமாயணம் என்பது ஜவகர்லால் நேரு உட்பட பல ஆய்வாளர்களின் கருத்து. பெரியார் இந்தக் கருத்தை நாடு முழுதும் பரப்பினார். திராவிடர்களை வீழ்த்துவதற்கு ஆரியர்கள் பின்பற்ற வேண்டிய 'சூழ்ச்சி - சூது' முறைகளை - இராமன் என்ற கதாபாத்திரம் வழியாக ராமாயணம் விளக்குகிறது. 'சக்கரவர்த்தி திருமகன்' என்று இராமாயணத்துக்கு விரிவுரை எழுதிய ராஜகோபாலாச்சாரி பார்ப்பனர்களுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் 'இராமாயணத்தைப் படியுங்கள்' என்று அறிவுரை கூறினார். இராவணன் கற்பனைப் பாத்திரம் என்றாலும், அவர் திராவிட இனத்தின் குறியீடாக உயர்ந்து நிற்கிறான். அத்தகைய இராவணனையும், அவனது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த திராவிட மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கொளுத்தும் 'இராமலீலா'வை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடி தென்னாட்டு மக்களை, திராவிடர்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.

திராவிட மாவீரன் இராவணனை 'தீமையின் சின்னமாக' இழிவுபடுத்தும் இந்த ஆரியக் கூத்தில், கடந்த 'விஜயதசமி' நாளன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளது, தென்னாட்டு மக்களை - திராவிடர்களை இழிவுபடுத்தும் மாபெரும் அவமதிப்பாகும். கடந்த சில ஆண்டுகளாகவே சோனியாவும், அவரது பரிவாரங்களும், இந்த ஆரியக் கூத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

"டெல்லியிலே நடக்கும் ராமலீலாக்களை எதிர்த்து தென்னாட்டிலும், ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்" என்று அன்று கலைஞர், தனது 'முரசொலி' நாளேட்டில் 1954 ஆம் ஆண்டில் எச்சரித்தார்! (8.10.1954) பெரியார் மறைந்த - முதலாண்டு நினைவு நாளில் மணியம்மையார், திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், பெரியார் திடலில் 'இராமலீலா'வுக்கு பதிலடி தரும் வகையில், 'இராமன்' உருவ பொம்மைகளை தீயிட்டு பொசுக்கும் இராவணலீலாவை நடத்தினார். அவருக்குப் பிறகு கி.வீரமணி தலைமை ஏற்ற பிறகு, 'இராவண லீலா' நடத்தப் போகும் அறிவிப்புகள் வந்தனவே தவிர, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி, பின் வாங்கிக் கொண்டார்கள்.

1996 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் தோற்றம் கொண்ட பிறகுதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அரசின் தடைகளை மீறி 'இராமன்' உருவ பொம்மைகளை எரித்து, 'இராமலீலாவுக்கு' பதிலடி தரப்பட்டது. அதற்காக தோழர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகளை சந்தித்தனர். அண்மையில், ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்கள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரன், இராவணனை இழிவுபடுத்தும் நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று மறுத்துவிட்டார். இப்போதும் பல பழங்குடியினர், 'இராவணனை' தங்கள் மூதாதையராகக் கருதி வழிபட்டு வரும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் விதிசா மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் பெயரே 'ராவண கிராம்' என்பதாகும். இக் கிராமத்தில் வாழும் 1100 மக்களும், இராவணனை தங்கள் மூதாதையர் என்று கூறி வழிபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இராவணன் சிலை முன் கூடி, வழிபாடு நடத்துகிறார்கள். அதேபோல் போபாலிலிருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டாசூர் எனும் கிராம மக்கள் - ராவணனின் மனைவியான மண்டோதரி பிறந்தது தங்களது கிராமத்தில்தான் என்று நம்பி, இராவணனை தங்கள் கிராமத்தில் மருமகனாகக் கருதி, இராவணனைப் போற்றுகிறார்கள். இவற்றிற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும், 'ராமனை' பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிப்பது போல் - 'இராவணனை' போற்றும் நம்பிக்கையும் நாட்டில் நிலவுகிறது. இந்த உணர்வுகளை கிஞ்சித்தும் மதியாமல், 'இராவணனை' தீமையின் உருவமாக்கி, தீயிட்டுப் பொசுக்குவது என்ன நியாயம் என்பதே நமது கேள்வி?

இப்படி தென்னிலங்கை வேந்தன் 'இராவணனை' தீயிடும் ஆரியக் கூத்தில் பங்கெடுக்கும் மன்மோகன் சிங் ஆட்சி தான், ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்களர்களுக்கு ஆயுதங்களையும், ராணுவப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

இராவணன் - திராவிட மாவீரன் என்ற கருத்தை முன் வைத்து, தமிழ் ஈழத்தில் 'விடுதலை புலிகள்' நடத்தும் 'புலிகளின் குரல்' வானொலி 'இலங்கை மண்' எனும் தொடர் நாடகத்தை 53 வாரங்கள் ஒலிபரப்பியது. அந்நாடகத்தை விடுதலைப்புலிகள் நூலாகவும் வெளியிட்டுள்ளனர். அந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தமிழ் ஈழ மக்களின் தேசிய தலைவர் பிரபாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

"போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ்மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது. தலைகீழாகத் திரித்து விடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இராவணனுக்கு தீ வைத்து மகிழ்ச்சிக் கூத்தாடும் ஆரியர்களும், அவர்களது வலையில் சிக்கிக் கிடப்போரும், இராவணனை அழித்த முறையைப் போலவே தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கை ஒளி பிரபாகரனையும் அழித்திட 'சூழ்ச்சி வலை' விரிக்கிறார்கள். எம்.கே.நாராயணன்களும், சிவசங்கரமேனன்களும், 'இந்து' ராம்களும், 'துக்ளக்' சோக்களும், சுப்ரமணிய சாமிகளும், உளவு நிறுவனங்களும் மரத்தின் பின்னால் பதுங்கி 'விபிஷணர்களைப் பிடி; அவர்களை அமைச்சராக்கு; இதோ ரகசிய ஆயுதங்களைப் பிடி; வெளியில் சொல்லாதே' என்று 'ராமாயணம்' காட்டிய வழியில் இராவணனை வீழ்த்தும் படலத்துக்கு திட்டங்களைத் தயாரிக்கிறார்கள்.

தாய்த் தமிழ்நாட்டின் குடிமக்களை 'பயங்கரவாதம்', 'தீவிரவாதம்', 'ஆயுதக் கலாச்சாரம்' என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து, மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், இது 'இராமாயணயுகம்' அல்ல. 'இராவணயுகம்' என்பதை எதிரிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

இனி வரும் காலத்தில் இராமலீலாவுக்கு பதிலடியாக 'இராவண லீலா'வுக்கு தயாராக வேண்டிய நிலையை பார்ப்பனர்களே உருவாக்கி வருகிறார்கள். இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு மாவீரன் பிரபாகரன் வாழ்க என்று சேர்த்து முழக்குவோம்! இராமனுக்கு எதிராக தீ மூட்டுவோம்; அதில் இந்திய தேசிய பார்ப்பன வர்க்கத்தையும், துரோகத்தையும் சேர்த்துப் பொசுக்குவோம்!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com